Sunday 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

No comments:

Post a Comment