சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் இக்காலத்தில் பெண்களை இல்லத்து லக்ஷ்மிகளாக நடத்தாமல் வரதட்சினை உள்ளிட்ட பல வகைகளில் கொடுமைப்படுத்தும் குடும்பத்து வரன்களுக்கே இது போன்று நிலை ஏற்படும் என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண் என்பவள் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்பவள், இல்லத்து லக்ஷ்மி. “லக்ஷ்மியின் வடிவமான பெண்ணை பாதுகாக்காமல் தூஷிப்பவனில் இல்லத்திலிருந்து லக்ஷ்மி தேவி வெளியேறுகிறாள். பதிலாக அங்கு மூதேவி குடியேறுகிறாள்” என்று ஸ்ரீ தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் கல்வியில் முன்னேறி ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இக்காலத்தில் ராமன் இருக்குமிடம் அயோத்தி எனும் பழங்கால நிலைகள் மாறிவருவது வருந்தத்தக்கது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளைகளாக செல்லும் ஆண்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின்
நிலையை சொல்லும் என்றால், 7 ஆமிடம் களத்திரத்தின் நிலையை சொல்லும். 2 ஆமிடம்
ஜாதகரின் குடும்ப நிலையை சொல்லும்
என்றால், களத்திரத்தின் குடும்பத்தை பற்றிய விபரங்களை 7 க்கு 2 ஆமிடமான 8 ஆமிடம்
சொல்லும். லக்னத்திற்கு 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திலும், ராசிக்கு 7 ஆமதிபதி
சந்திரன் ராசியிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகரின் மேல் மனைவியின், ஆளுமையும்
ஆதிக்கமும் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் சூரிய சந்திரர்களே லக்னத்திற்கும்
ராசிக்கும் 7 ஆமதிபதிகளாகி லக்னம், ராசியில் வந்து அமைவது, மனைவி வந்த பிறகு ஜாதகர்
தாய், தந்தையை விட்டு விலகுவார் என்பதை குறிக்கிறது. லக்னத்தோடு தொடர்புடைய
கிரக காரக உறவுகளை ஒரு ஜாதகர் எந்த சூழலிலும் இழக்க மாட்டார். ஆனால் அவை 7 ஆம்
பாவாதிபதியாகி லக்னம், ராசியில் வந்து அமர்வதால் மனைவி வந்த பிறகு ஜாதகர் 7
ஆமதிபதியின் ஆளுகைக்கு ஜாதகர் முழுமையாக சென்றுவிடுவார். ஆனால் அந்த காரக உறவுகளை
விட்டுகொடுக்க மாட்டார். இங்கு கடக ராசிக்குரிய சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 12
ல் சுக்கிரன், செவ்வாயோடு மறைகிறார். இது தாயாரையும், சகோதரனையும் விட்டு ஜாதகர்
விலகுவதை குறிக்கும். சுக்கிரன் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் பாவாதிபதி சூரியன்
லக்னத்தில் வந்து அமர்வதால் மனைவியையும், தந்தையையும் விட்டு ஜாதகர் பிரிய
மாட்டார். ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் மனைவி வந்த பிறகு ஜாதகர் மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி சென்றுவிட்டார்.
ஒரே ஊரில் உள்ள தந்தை, தாயையும், சகோதரனையும் அவ்வப்போது வந்து
கவனித்துக்கொள்கிறார்.
ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதன்
லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் நீச நிலை பெற்று அமைந்துள்ளது. அதே சமயம் 2 ஆமதிபதி
குரு 7 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஜாதகரின் வீட்டின்
பொருளாதார சூழலைவிட மனைவி வீட்டின் பொருளாதார சூழல் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது.
2 ஆமிடத்தில் புதன் அமைந்துள்ளது ஜாதகர் புதனின் காரகதுவமான வியாபாரம் தொடர்புடைய கமிஷன், தரகு,
ஏஜென்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும் ஜாதகரின் வீட்டில் ஒரு கல்வியாளர் மூலம் வருமானம் வருவதையும் குறிப்பிடுகிறது.
ஜாதகரின் தாயார் ஒரு ஆசிரியை. சிம்ம ராசியும் சூரியனும் சுயமாக தொழில் புரிபவர்களை
குறிக்கும். சூரியன் லக்னத்தில் வந்து அமைந்ததால் ஜாதகருக்கு திருமணமான பிறகு இந்த
அமைப்பு ஜாதகரை தொழில்களை நிர்வகிக்கும் நிர்வாகியாக உயர்த்துகிறது. நிர்வாகம்
என்பது சூரியனின் காரகத்துவம். 7 ஆமதிபதி சூரியன் ஆனதால் திருமணமாகி மனைவி
வந்ததும் ஜாதகர் நிர்வாகியாகிவிட்டார்.
நவாம்சத்தில் 7 ஆமிட குரு வர்கோத்தமமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இது குடும்பம் அமைத்தபின் பொருளாதாரத்தை முன்னிட்ட விஷயத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜாதகர் தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகத் தயங்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி குரு, 7 ஆமிடத்தை சிம்ம ராசியில் 3 ஆம் பாவத்தில் நின்று பார்க்கிறார். இதனால் களத்திர பாவம் வலுவடைகிறது. இது மனைவி ஆளுமையும், ஜாதகரை கட்டுப்படுத்தும் வல்லமையும் மிக்கவர் என்பதையும் தெரியப்படுத்துகிறது. 7 ஆமதிபதிக்கு வீடு கொடுத்த சூரியன் 1௦ ல் திக்பலம் பெற்று நிற்பது மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாக உயர்வார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
இந்த ஜாதகர் திருமணமான பிறகு மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி மனைவி வீட்டாரின் தொழில்களை நிர்வகிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி புதன், 2 ஆம் பாவமான கடகத்தில் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளது வருமான வகைகளில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதையும், இவற்றோடு சந்திரன் சேர்க்கை அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அது என்பதையும் குறிப்பிடுகிறது. (புதன்=தரகு,கமிசன், ஏஜென்சி & சந்திரன்=வியாபாரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்). ராகு இவைகளோடு சேர்க்கை பெறுவது அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களோடு பலதரப்பட்ட நவீன சாதனங்களையும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501
வீட்டோட மாப்பிள்ளை ஜாதக அலசல் நன்று. வாழ்த்துக்கள்
ReplyDelete