Saturday, 16 February 2013

அவன்


அவன் ஒரு சிறுவன்
அவனது கை நிறைய பொம்மைகள்
ஒன்றின் தலையை பரிவுடன் கோதிவிடுகிறான்
ஒன்றை முத்தமிடுகிறான்
ஒன்றின் கையை பிடித்துத் திருகுகிறான்
ஒன்றின் காலை ஒடிக்கிறான்.

அவன் ஒரு அன்னை
தன் குழந்தையின் அழுகைக்கு ஓடி வந்து அணைத்துக்கொள்கிறான்
குழந்தையின் சிரமங்களை பாசத்துடன் சரி செய்கிறான்
தலை வாரி ஆடையுடுத்தி அலங்காரம் செய்கிறான்
நல்லிசை இசைக்கிறான்  
நல்ல பாடங்களை சொல்லித்தருகிறான்

அவன் ஒரு பைத்தியக்காரன்
ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் தாக்குகிறான்
கண்டதையும் வீசி எறிகிறான்
சகல பாஷையில் திட்டுகிறான்
உணவு கேட்டு கை நீட்டுகிறான்
பெற்றதை ஆர்வத்துடன் உண்ணுகிறான்

அவன் ஒரு வழிகாட்டி
உண்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்
நேரிய பாதையில் நடக்கக் கோருகிறான்
பாதையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான்
பயணத்தில் எதிர்படும் அற்புதங்களை கவனிக்ச் சொல்லுகிறான்
சுகமான பயணத்துக்கு துணை நிற்கிறான்

யாரிவன்?
அவனது பெற்றோர்கள் யார்?
அவன் எந்த ஊரைச் சார்ந்தவன்?
ஏனிப்படி நடந்து கொள்கிறான்
அதனால் அவனுக்கு என்ன பலன்?
அவன் பெயர் என்ன?

அவன் ஓர் அனாதை
அவனுக்கு பெற்றோர்கள் இல்லை
ஆகவே அவன் ஓர் பரதேசி
அவனுக்கு பிடித்த செயல்களை அவன் செய்கிறான்
அதனால் நம் கர்மங்களை அவன் கழிக்கிறான்
அவன் பெயர் இறைவன்!


ஆக்கம்
பழனியப்பன்

பிற்சேர்க்கை:

நாலாயிரத்தில் மூழ்கி
நம்மாழ்வாரில் பிரம்மித்தபோது
நான் எழுதிய கவிதை இது 

பிறிதொரு நாளில் புத்தகமாகலாம்
பிடித்திருந்தால்
பின்னூட்டம் இடுங்கள்!

No comments:

Post a Comment