Tuesday, 15 November 2016

கரை சேர்க்கும் தோணிகள்

ஜாதகத்தில் ஆச்சார்ய கிரகங்கள் என அழைக்கப்படும் குருவும் சுக்கிரனும் வலுவோடிருப்பது அவசியம். இவற்றில் ஒன்று தோஷப்பட்டிருந்தாலும் மற்றொன்றாவது  தோஷப்படாமல் அமைவது அவசியம். இல்லையேல் ஜாதகரது வாழ்வு சிரமம்தான். காரணம் இவ்விரு கிரகங்களிடம்தான் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான காரகங்கள் உள்ளன.

குருவும் சுக்கிரனும்தான் ஆச்சார்ய கிரகங்கள் என்பதால்  ஒன்றின் காரகத்தை மற்றொன்று எடுத்துச் செய்யும் என்றாலும் ஜாதகத்தில் வாழ்க்கைக்கு ஆதாரங்களான பாக்கியங்களை குருவைக்கொண்டும் அதை அனுபவிக்கும் பாக்கியத்தை சுக்கிரனை கொண்டும் அளவிடலாம். இவை இரண்டும் ஜனன ஜாதகத்தில் தோஷப்பட்டிருந்தால் அவை நீங்க வாய்ப்புள்ளதா எனவும் உள்ளதெனில் தோஷ நிறைவு காலத்தையும் கணக்கிட்டு ஜோதிடர்கள் பலன் கூறுவது மிக முக்கியம். இதற்கு தண்டனை கிரகமான சனியின் நிலையையும் திசா புக்திகளையும் நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகத்தில் குடும்ப பாவமான 2 ஆமிடத்தில் ஒரு நீச கிரகம் சந்திரன் அமைந்துள்ளது. 2, 7 க்குரிய செவ்வாய் 7 ஆமிடத்தில் தனது வீட்டிலேயே வக்கிரமாகியதால் வலுவிழந்துவிட்டது. குடும்ப காரகன் குரு சுகஸ்தானமான நான்காமிடத்தில்  நீசமாகி மாந்தியுடன் சேர்க்கை. சர லக்னமான துலாத்திற்கு பாதகாதியான சூரியன் தாம்பத்யத்தை குறிக்கும் 12 ஆமிடத்தில் அமைந்துள்ளது. இவை அனைத்துமே ஜாதகத்தில் குடும்ப வாழ்க்கைக்கு கடும் பாதகத்தை ஏற்படுத்துபவை. இவற்றில் குடும்ப பாவமும் குடும்ப காரகனும் கடுமையாக பாதிக்கப்பட்டதிலிருந்து படைத்தவன் ஜாதகருக்கு குடும்ப வாழ்வில்தான் தண்டனையை வைத்துள்ளார் என்பதை கூறிவிடலாம்.


குடும்ப வாழ்க்கை தொடர்புடைய ஸ்தானங்கள் என்றால் அவை குடும்ப ஸ்தானமான 2, சுக ஸ்தானமான 4, களத்திர ஸ்தானமான 7, உடல் ரீதியான உறவை குறிக்கும் 8, தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடம் ஆகியவைகளாகும். எனவேதான் இவ்விடங்களில் அமையும் செவ்வாயை கவனித்து செவ்வாய் தோஷம் அளவிடப்படுகிறது.

எனவே இந்த பாவங்களுடன் இவற்றின் பாவாதிபதிகள் மற்றும் இந்த பாவங்களில் அமைந்த கிரகங்கள் இவற்றோடு இந்த பாவங்களை பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து பிறகே குடும்ப வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க இயலும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஒரே ஆறுதல் களத்திர காரகனும் லக்னாதிபதியுமான சுக்கிரன் விரையாதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திலேயே ஆட்சியில் அமைந்ததுதான். மேலும் குரு நவாம்சத்தில் மீனத்தில் ஆட்சி பெற்றதும் ஒரு நல்ல அம்சம். திருமணத்திற்கு நவாம்சத்தை கண்டிப்பாக ஆராய்ந்தே பலன் கூற வேண்டும். பாவத்தில் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் விருச்சிகத்தில்  உள்ளதால் ஜாதகருக்கு சுக்கிரன் தொடர்புடைய (சுக்கிர திசை அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தின்) திசைகளில் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு சிறிதளவு உண்டு என்பதை அறியலாம்.

ஜாதகர் அனுஷம்-2 ஆம் பாதத்தில் விருச்சிக ராசியில் பிறந்துள்ளார். எனவே 12 வயது வரை சனி திசை. அதன் பிறகு 9, 12 க்குரிய புதன் திசை 29 வயது வரை. புதன் 2, 7 க்குரிய செவ்வாயின் நட்சத்திரத்தில்  அமைந்திருந்தாலும் செவ்வாய் வக்கிரமாகிவிட்டதாலும் புதனின் பாவங்களான மிதுனமும் கன்னியும் பாவிகளான சனி, கேது, சூரியனால் கெட்டுவிட்டதாலும் ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்க இயலவில்லை. அதனை அடுத்து பாக்ய, விரைய ஸ்தானத்தில் அமைந்த ஞானகாரகன் கேதுவின் திசை. கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்து அந்த ராகு லக்னத்திற்கு 3 , 6 க்குரிய நீச குருவின் வீட்டில் அமைந்துவிட்டதால் வலுவிழந்து போனது.

கேது சுக ஸ்தானாதிபதி சனியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் சுகஸ்தானத்தில் நீச குரு அமைந்து சுகஸ்தானாதிபதி சனி 4 க்கு 6 ல் அமைந்துவிட்டதால்  கேதுவால் சனியின் பாவ காரகத்தை எடுத்து செய்ய இயலவில்லை.

இவற்றை அடுத்து லக்னத்தில் ஆட்சியில் அமைந்த லக்னாதிபதியும் களத்திர காரகனுமாக சுக்கிரனின் திசை ஜாதகருக்கு 2௦௦9 ஜனவரியில் துவங்கியது. சுக்கிரனின் சுய புக்தியான 40 மாதங்களில் திருமணம் கை கூட வில்லை. இதற்கு கிரகங்கள் சுய புக்தியில் நன்மையை செய்தால் அது ஆயுளுக்கு தோஷத்தை தர வாய்ப்புள்ளது என்பதும் ஒரு காரணம். லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் இரு புறமும் நீச சந்திரனும் பாவியான சூரியனும் அமைந்து கடும் “பாவ கர்த்தாரி” யோகத்தை வழங்கிக்கொண்டிருப்பதும் மற்றொரு காரணம்.

சுக்கிர திசையில் சுய புக்தியை கடந்து பாதகாதிபதி சூரியனின் புக்தி. பாதகாதிபதி 12 ல் மறைந்தாலும் அது தாம்பத்ய ஸ்தானம் என்பதால் அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அந்த பாக்கியம் கிடைக்காமல் தடுத்துவிட்டார். சுக்கிர திசையில் சூரிய புக்தியை கடந்து வந்த நீச சந்திரனின் புக்தி சுக ஸ்தானாதிபதியான சனியின் அனுஷம் – 2ல் அமைந்ததால் ஜாதகருக்கு குடும்ப சுகம் அமைய வழி செய்து ஜாதகருக்கு 02.07.2014 ல் ஜாதகரின் நாற்பத்து ஒன்றாவது வயதில் திருமணம் செய்வித்தார். பாவ அடிப்படையில் சுக்கிரன் சந்திரனோடு தொடர்புகொண்டது முக்கிய காரணம். சுக்கிர திசையில் பாதகாதிபதியான சூரியனின் புக்தி முடியும் வரை ஜாதகருக்கு குடும்ப வகையில் பாதகம் ஏற்படாமல் ஏழரை சனியாக வந்து திருமணத்தை தடை செய்த சனி. சந்திர புக்தியில் ஜென்ம சனியாக வந்து ஜாதகரின் வாழ்வில் குடும்பம் அமைய காரணமாக நின்றது.

துலாம் லக்னத்திற்கு 4, 5 ஆதிபத்தியம் பெறுவதால் பரம யோகாதிபதி என்பதுடன் விருட்சிக ராசிக்கும் சனி காம ஸ்தானமான 3 க்கும் சுக ஸ்தானமான 4 க்கும் அதிபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சனி தடுப்பதற்கும் காரணமுண்டு கொடுப்பதற்கும் காரணமுண்டு என்பதை இதன் மூலம் அறியலாம். 

முப்பது வயதிற்கு மேல் வரும் சனியின் இரண்டாவது சுற்று ஏழரை பொங்கு சனி என அழைக்கப்படும். இது போராட்டத்திற்கு இடையில் ஜாதகரை வாழ்வில் முன்னேற வைக்கும்.

ஜாதகரின் திருமண நாளின் கிரக அமைப்புகள் கீழே.

               

ஜனன ஜாதகத்தில் நீசமான குரு கோட்சாரத்தில் உச்சமடைந்ததால் ஜனனத்தில் இருந்த நீச தோஷம் நீங்கியது. சந்திரனின் வீட்டில் குரு உச்சமடைந்ததால் ஜனன காலத்தில் நீசமடைந்திருந்த சந்திரனும் வலுவடைந்தது. பூச நட்சத்திரத்தில் குரு உச்சமானதால் நட்சத்திராதிபதி கிரகமான சனியும் வலுவடைந்தது.பாதகாதிபதியான சூரியன் ஆட்சியில் அமைந்த புதனுடன் மிதுனத்தில் இணைவு பெற்று  அதன் இரு புறமும் சுபர்களான குருவும் சுக்கிரனும் வலுவுடன் நின்றதால் சூரியன் தனது பாதக நிலையில் இருந்து மாற்றம் பெற்று சாந்தமானார். ஜனன காலத்தில் வலுகுன்றி நின்ற 2, 7 ஆமதிபதி செவ்வாய் தனது சொந்த சித்திரை நட்சத்திரத்தில் புதனின் வீட்டில் நின்று அந்த புதனும் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைந்தது. ராகுவும் கேதுவும் லக்னாதிபதி சுக்கிரனுக்கு நட்பு என்பதுடன் ராகு சனி போன்றும் கேது செவ்வாய் போன்றும் பலன் தரும் என்ற விதிப்படி ராகு கேதுக்களும் திருமணத்திற்கு சாதகமான நிலையிலேயே அமைந்துள்ளனர்.

ஒருவரது ஜாதகத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ஒரு நல்ல திசை அதுவும் ஆட்சார்யர்கள் என வருணிக்கப்படும் குரு மற்றும் சுக்கிரனின் திசைகளோ அல்லது இவற்றின் நட்சத்திரங்களில் நின்ற கிரகத்தின் திசைகளோ வந்துவிட்டால் அது ஜாதகரை கடைத்தேற்றிவிடும். 

இக்கிரகங்களே திக்குத்தெரியாத வாழ்க்கை எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் மனிதனை கடைத்தேற்றும் தோணிகள் என்றால் அது மிகையல்ல.

மீண்டும் மற்றுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501.

Sunday, 6 November 2016

சந்திராஷ்டமம் - சில சந்தேகங்கள்

நமது வாசகர் திரு.முத்துராமன் சந்திராஷ்டமம் பற்றிய சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நுட்பமான கேள்விகள் அவை. வாசகர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே பதிவிடப்படுகிறது.

1அமாவாசை திதியன்று வரும் சந்திராஷ்டமத்துக்கும், பௌர்ணமி திதியில் வரும் சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?

வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி. எனவே இரண்டிற்கும் கண்டிப்பாக வேறுபாடு உண்டு. மேலும் வளர் பிறையில் சுபாவ சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் & ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேராத தனித்த மற்றும் சுபர்களோடு சேர்ந்த புதன் ஆகியோர் சுபாவ பாவக்கிரகங்களைவிட வலுவோடிருப்பர்.

தேய்பிறையில் சுபாவ பாவிகளான செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன்  மற்றும் ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேர்ந்த புதன் ஆகியோர் முதலில் சொன்ன சுபாவ சுபர்களைவிட  வலுவோடிருப்பர்.

இதில் புதன் ஜனன காலத்தில் அமைந்த நிலையை பொறுத்தும் சந்திரன் இரு பிறை காலங்களிலும் மாறுபட்ட பலன்களை வழங்க வல்லன என்பது கவனிக்கத்தக்கது. 
 
2. நட்சத்திர சந்தி என்று நீங்கள் குறிப்பிட்டபடி எனக்கு எப்போதும் ரேவதி நட்சத்திரத்துக்குக் காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் என்று சொன்னால் அது அஸ்வினிக்கு சந்திராஷ்டமம் ஆகி பாதி நாள் கழிந்த பிறகே சரியானதுபோல் உணர்கிறேன்.

ஜனன காலத்தில் இரு நட்சத்திரங்களுக்கான சந்தியில் சந்திரன் நின்றால் இரு நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளும்  சந்திரன் மேல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரு நட்சத்திரங்களின் பாதிப்பைக்கொண்ட கலவையான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இதில் குறிப்பிட்ட இரு நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை சந்திரன் அதிகம் கிரகிக்கிறதோ அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் அக்குறிப்பிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டே பிரதானமாக பார்க்கப்படவேண்டும்.  

3. கே.பி.வித்யாதரன் தினப்பலன் கூறும்போது சந்திரன் நிற்கும் நட்சத்திர கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற நட்சத்திரங்களையும்  சந்திராஷ்டமத்துக்குச் சமமாகச் சொல்கிறார். அதாவது சந்திரன் அஸ்வினியில் இருந்தால் சிம்ம ராசிக்குச் சொல்லும்போது மகம் நட்சத்திரக்காரர்களையும் தனுசில் மூல நட்சத்திரக்காரர்களையும் எச்சரிக்கை செய்கிறார்.

வேறு சிலர் சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை நல்லவிதமாகவே பலன்  சொல்கிறார்கள்.

சந்திரன் நின்ற நட்சத்திர நாளும் சந்திராஷ்டமம் போல் கஷ்டப்படுத்துமா? நான் கவனித்த வரையில் தேய்பிறையில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் (ரேவதியிலிருந்து அஸ்வினிக்கு மாற்றம் பெறும் நாள்) என்னைப் படுத்தி எடுத்திருக்கிறது. வளர்பிறையில் வந்த ஜென்ம நட்சத்திர நாளில் ஏதும் பெரிதாகக் கஷ்டப்படவில்லை..

கே.பி.வித்யாதரன் சொல்வது சரியாக இருக்கக்கூடும். நான் இது பற்றி ஆய்வு செய்து பிறகு எனது கருத்தை பதிவு செய்கிறேன். இதர ஜோதிடர்கள் சொல்வது பொதுவானது. வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி என்பது உங்களது கேள்வியின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

4. உச்ச வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கும்போது பலன் மாறுமா? மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வரும்போது சந்திரன் நீசமாகிறது. அப்போதும் சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்குமா? அப்படியானால் துலாம் ராசிக்காரர்கள் நிலை?

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் நீசமாகி ஏற்படுகிறது. இதனால் இதர ராசியினரைவிட பாதிப்பு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புண்டு. துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் உச்சமாக அமைகையில் ஏற்படுகிறது. பொதுவாக பார்க்கையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனலாம். ஆனால் துலாம் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடம் கடகத்திற்கு பாதகஸ்தானமான 11 ல் உச்சமான சந்திரன் அமைவது தொழில் வகையில் அவசர முடிவெடுத்து அதனால் சிரமப்பட நேரிடுகிறது. தொழில்வகையில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தும்.  

5. சந்திராஷ்டம் போலவே அஷ்டம சனி காலமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானது. மீனத்துக்கு உச்சமான அஷ்டம சனி, கன்னிக்கு நீசமான அஷ்டம சனி. இதற்குப் பலன் எப்படி இருக்கும்?

ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு சனியின் அமைவிடம், ராசிக்கு சனியின் அமைவிடம் மற்றும் ஜனன ஜாதகத்தில் சனி அமைந்த இடத்திற்கு கோட்சார அஷ்டம சனி எந்த இடத்தில் அமைகிறது என்பதையும்  கவனிக்க வேண்டும். மேலும் சனியின் சுற்றுகளையும் அதாவது ராசி மண்டலத்தில் அஷ்டம சனி முதல் சுற்றாக வருகிறதா அல்லது இரண்டு மூன்றாவது சுற்றில் வருகிறதா என்பதோடு திசா புக்திகளையும் கவனிக்க வேண்டும்.

இதில் திசா புக்திகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
 
6. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சந்திரன் மறைவுஸ்தான அதிபதி. கோச்சாரத்தில் மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவுஸ்தானமான எட்டாம் இடத்துக்கு வருவதால் இந்த நான்கு ராசியினருக்கு சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்காதா? பெரிய பாதிப்பைத் தராதா?

கண்டிப்பாக பாதிப்பை தரும். குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும்.

7. ராகு, கேதுவுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும், குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? தற்போது மகரத்துக்கு ராகுவுடன் சந்திரன், கடகத்துக்கு கேதுவுடன் இணைந்த சந்திரன் சந்திராஷ்டமத்தைக் கொடுக்கிறது. கும்பத்துக்கு குருவுடன் இணைந்த சந்திராஷ்டமம்.

சுபர்களுடன் இணைந்த சந்திராஷ்டமம் மனோ ரீதியில் சிறிதாக சிரமப்படுத்தும். ராகு கேதுக்களுடன் சேர்ந்த சந்திராஷ்டமம் அதீத மனக்குழப்பத்தையும் எதிலும் பிடிப்பற்ற ஞான நிலையையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக சந்திராஷ்டமத்தின் பதிப்பை துல்லியமாக அளவிட இதர கிரகங்களுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை கொண்டு அளவிடுவதே சிறப்பாக இருக்கும். உதாரணமாக கடகத்தில் நீச செவ்வாயுடன் சந்திரன் அமைந்துவிட்டால் அது தனுசு ராசிக்கு பாதிப்பை தராது (திசா புக்திகள் மோசமாக இருந்தாலன்றி).

மேலும் ஒரு கிரகத்தில் செயல்பாட்டை அதற்கு கேந்திரங்களின் அமைந்த கிரகங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஒரு கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் அமைந்த கிரகங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் செயல்பாட்டை பாதிப்பதில் முக்கிய பங்குவகிக்கும். .மேலும் அஷ்டம சந்திரனுடன் ராசியாதிபதி அல்லது ஜனன லக்னாதிபதி அமைத்தால் சந்திரனால் ஏற்படும் மனோ ரீதியிலான  தடுமாற்றம் வெகுவாக குறையும். 

ஆய்வுகள் தொடரும்.

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி  எண்:  7871244501

Friday, 21 October 2016

செவித்திறன்

மருத்துவ ஜோதிடம் - பகுதி1
ஜோதிடத்தில் பல வகைகள்.

நிமித்தம்
சகுனம்
சாமுத்ரிகா லக்ஷணம்
மச்ச சாஸ்திரம்
கௌரி சாஸ்திரம்
கைரேகை
எண் கணிதம் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

இவற்றுள் இயற்கை & அரசியல் நிகழ்வுகளை கணித்தல், மருத்துவ ஜோதிட முறைகள் முக்கியமானவை.

இப்பதிவில் நாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவ ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

மருத்துவ ஜோதிட முறை பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானது. ஒருவரது உடலில் என்ன வகையான நோய் ஏற்படும் அது எந்த திசா-புக்தி & கோட்சாரத்தில் ஏற்படும். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.

பெற்றோரின் சர்க்கரை வியாதி தனக்கு வர வாய்ப்புள்ளதை அறிந்து உணவுக்கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலும் அதை தள்ளிப்போட தவிர்க்க முயற்சி செய்வது போலத்தான் இதுவும்.

பொதுவாக சூரிய கிரகணங்கள் பூமியில் அதிகமாக விழும் உத்ராயணத்தில் பிறந்தவர்கள் சூரிய ஒளி குறைவாக பூமியில் விழும் தக்ஷிணாயனத்தில் பிறந்தவர்களைவிட நல்ல உடல்கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பர். நமது அணியில்தான் இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற ஒல்லிப்பிச்சான்கள். மேற்கிந்திய அணியில் மட்டுமல்ல பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் ஒல்லிப்பிச்சான்களே இல்லை என்பதை அறியவும். அதுபோல் சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.

ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.

கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. சனியின் ஆதிக்க காலங்களான திசா-புக்திகள், கோட்சாங்களில்தான் வியாதியின் வெளிப்பாடு தெரிகிறது. வயதில் மூத்தோர் உடல் ரீதியான சிரமங்களையும் வியாதிகளையும் கொண்டிருப்பதால்தான் அவர்களை சனியின் அம்சங்களாக குறிப்பிடுகிறோம். ராகு நோயின் தீவிரத்தையும் குரு நோயிலிருந்து விடுபடுவதையும் குறிப்பிடுகிறது.

ராசிக்கட்டத்தில் சர ராசிகள் உடலையும், ஸ்திர ராசிகள் உயிரையும், உபய ராசிகள் ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 



ஜாதகத்தில் இரண்டாம் பாவமும் கிரகங்களில் புதனும், ராகுவும் காதுகளை குறிப்பிடுகின்றன. மேற்கண்ட ஜாதகத்தில் புதனின் உச்ச ராசியான கன்னியில் ராகு அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில் மாந்தி அமைந்து இரண்டாம் வீட்டிற்குரிய சுக்கிரன் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியுடன் இணைந்து தன் 2ஆம் வீட்டிற்கு 8ல் அமர்ந்துள்ளார். இத்தகைய அமைப்பு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் காரக கிரகமும் லக்னாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பாதிப்பு குணமடையும் வாய்ப்பும் உள்ளது. லக்னாதிபதிக்கு உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டிக்காக்கும் சக்தி உண்டு என்பது முக்கியமாக அறிய வேண்டிய ஒன்று. 

ஜாதகருக்கு 1996 பிற்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

செவிக்கு உரிய பாவமான இரண்டாம் பாவாதிபதி சுக்கிரனின் திசையில் செவித்திரனுக்கு காரக கிரகமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்துவிட்ட பிணி காரகனும் வியாதியை குறிப்பிடும் பாவமான ஆறாம் பாவாதிபதியுமான  சனியின் புக்தியில் லக்னத்திற்கு பாதகாதிபதியும் அஷ்டமாதிபதியான அறுவை சிகிச்சை காரகன் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் அந்தரத்தில் ஜாதகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இங்கு குரு லக்னத்திற்கு பாதகாதிபதியாகி லக்னாதிபதி புதனுக்கு 12 ல் மறைவு பெற்று கேந்திரத்தில் அமர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டு தோஷத்தை கொடுத்தாலும் வியாதியிலிருந்து குணமடைவதற்கு காரகத்துவம் பெற்றதால் குணமடையவும் வைத்துவிட்டார். அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சைக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் அறுவை சிகிச்சை குரு அந்தரத்தில் நடந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. லக்னாதிபதியின் வீட்டில் அமரும் கிரகம் தோஷத்தை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் லக்னாதிபதியின் பணியையும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதியாகும்.

சனி புக்தி துவங்கிய 1993 பிற்பகுதி முதல் ஜாதகர் செவித்திரனால் பாதிக்கப்பட்டிருந்தார். சனி வியாதியை குறிப்பிடும் ஆறாம் பாவாதிபதி மட்டுமல்ல, வியாதி குணமடைவதை குறிக்கும் ஐந்தாம் பாவத்திற்கும் அதிபதி ஆவதால் குணமடையவும் வைத்தார். நீதிமான் அல்லவா தனது பணியை இரு வகையிலும் செவ்வனே செய்துள்ளார். அது மட்டுமல்ல இரு பாவங்களுக்கு அதிபதியாகும் ஒரு கிரகம் அதன் திசா - புக்தி காலங்களில் இரு பாவ பலன்களையும் கலந்து வழங்காது. முதலில் ஒரு பாவ பலனையும் பிறகு மற்றொரு பாவத்தின் பலனையும் தனித்தனியாகவே வழங்கும். இது பற்றிய எனது பதிவை கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம்

.கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ் 

ஆராய்ச்சி அன்பர்களுக்கு

ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் இணைந்து இரண்டிற்கு எட்டில் மறைந்துள்ள அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சை காரகனுமான செவ்வாயின் திசை  சென்ற மாதம் (செப்டம்பர்-2016) முதல் துவங்கியுள்ளது. தற்போது ஜாதகர் செவித்திரனில் சில சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாதிகளுக்கு ஜோதிட பரிகாரமாக
குறிப்பிட்ட வியாதிக்கான காரக கிரகம் மற்றும் பாவாதிபதி கிரகங்களுக்கான அதிதேவதைகளை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மிகுந்த உதவியாக இருக்கும். இந்த வகையில் குறிப்பிடப்படும் கிரகங்களின் அதிர்வலைகள் கிடைக்கும் திருக்கோவில்களுக்கு  சென்று அவற்றை பெறுவதும் உதவிகரமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட வியாதியை அதிகப்படுத்தும் காரணிகளை தவிர்த்து குணப்படுத்தும் காரணிகளை நோக்கி நாம் உணவு, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் என்ற வகையில் சென்றால் வியாதியிலிருந்து விடுபடவும் வியாதியின் தீவிரத்தை குறைக்கவும் அவை உதவும். 

"அம்மா"வின் ஜாதகத்தை அலசி ஆராயும்படி அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஜோதிடரின் முதுகை பிராண்டிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு,

அடியேன் சிறை செல்ல தயாரில்லை என்பதை அறியவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
அலை பேசி எண்:7871244501.