Sunday, 6 November 2016

சந்திராஷ்டமம் - சில சந்தேகங்கள்

நமது வாசகர் திரு.முத்துராமன் சந்திராஷ்டமம் பற்றிய சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நுட்பமான கேள்விகள் அவை. வாசகர்கள் அனைவருக்கும் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே பதிவிடப்படுகிறது.

1அமாவாசை திதியன்று வரும் சந்திராஷ்டமத்துக்கும், பௌர்ணமி திதியில் வரும் சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா?

வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி. எனவே இரண்டிற்கும் கண்டிப்பாக வேறுபாடு உண்டு. மேலும் வளர் பிறையில் சுபாவ சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் & ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேராத தனித்த மற்றும் சுபர்களோடு சேர்ந்த புதன் ஆகியோர் சுபாவ பாவக்கிரகங்களைவிட வலுவோடிருப்பர்.

தேய்பிறையில் சுபாவ பாவிகளான செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது, தேய்பிறைச் சந்திரன்  மற்றும் ஜனன ஜாதகத்தில் பாவிகளோடு சேர்ந்த புதன் ஆகியோர் முதலில் சொன்ன சுபாவ சுபர்களைவிட  வலுவோடிருப்பர்.

இதில் புதன் ஜனன காலத்தில் அமைந்த நிலையை பொறுத்தும் சந்திரன் இரு பிறை காலங்களிலும் மாறுபட்ட பலன்களை வழங்க வல்லன என்பது கவனிக்கத்தக்கது
 
2. நட்சத்திர சந்தி என்று நீங்கள் குறிப்பிட்டபடி எனக்கு எப்போதும் ரேவதி நட்சத்திரத்துக்குக் காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் என்று சொன்னால் அது அஸ்வினிக்கு சந்திராஷ்டமம் ஆகி பாதி நாள் கழிந்த பிறகே சரியானதுபோல் உணர்கிறேன்.

ஜனன காலத்தில் இரு நட்சத்திரங்களுக்கான சந்தியில் சந்திரன் நின்றால் இரு நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளும்  சந்திரன் மேல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரு நட்சத்திரங்களின் பாதிப்பைக்கொண்ட கலவையான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இதில் குறிப்பிட்ட இரு நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தின் கதிர்வீச்சை சந்திரன் அதிகம் கிரகிக்கிறதோ அதையே பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் அக்குறிப்பிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டே பிரதானமாக பார்க்கப்படவேண்டும்.  

3. கே.பி.வித்யாதரன் தினப்பலன் கூறும்போது சந்திரன் நிற்கும் நட்சத்திர கிரகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் பிற நட்சத்திரங்களையும்  சந்திராஷ்டமத்துக்குச் சமமாகச் சொல்கிறார். அதாவது சந்திரன் அஸ்வினியில் இருந்தால் சிம்ம ராசிக்குச் சொல்லும்போது மகம் நட்சத்திரக்காரர்களையும் தனுசில் மூல நட்சத்திரக்காரர்களையும் எச்சரிக்கை செய்கிறார்.

வேறு சிலர் சந்திரன் நின்ற நட்சத்திர சாரத்தை நல்லவிதமாகவே பலன்  சொல்கிறார்கள்.

சந்திரன் நின்ற நட்சத்திர நாளும் சந்திராஷ்டமம் போல் கஷ்டப்படுத்துமா? நான் கவனித்த வரையில் தேய்பிறையில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் (ரேவதியிலிருந்து அஸ்வினிக்கு மாற்றம் பெறும் நாள்) என்னைப் படுத்தி எடுத்திருக்கிறது. வளர்பிறையில் வந்த ஜென்ம நட்சத்திர நாளில் ஏதும் பெரிதாகக் கஷ்டப்படவில்லை..

கே.பி.வித்யாதரன் சொல்வது சரியாக இருக்கக்கூடும். நான் இது பற்றி ஆய்வு செய்து பிறகு எனது கருத்தை பதிவு செய்கிறேன். இதர ஜோதிடர்கள் சொல்வது பொதுவானது. வளர்பிறை சந்திரன் சுபன். தேய்பிறை சந்திரன் பாவி என்பது உங்களது கேள்வியின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

4. உச்ச வீட்டிலும், நீச வீட்டிலும் இருக்கும்போது பலன் மாறுமா? மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் வரும்போது சந்திரன் நீசமாகிறது. அப்போதும் சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்குமா? அப்படியானால் துலாம் ராசிக்காரர்கள் நிலை?

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் நீசமாகி ஏற்படுகிறது. இதனால் இதர ராசியினரைவிட பாதிப்பு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புண்டு. துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் சந்திரன் உச்சமாக அமைகையில் ஏற்படுகிறது. பொதுவாக பார்க்கையில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனலாம். ஆனால் துலாம் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடம் கடகத்திற்கு பாதகஸ்தானமான 11 ல் உச்சமான சந்திரன் அமைவது தொழில் வகையில் அவசர முடிவெடுத்து அதனால் சிரமப்பட நேரிடுகிறது. தொழில்வகையில் தடைகளையும் தாமதத்தையும் ஏற்படுத்தும்.  

5. சந்திராஷ்டம் போலவே அஷ்டம சனி காலமும் ஜோதிடத்தில் மிக முக்கியமானது. மீனத்துக்கு உச்சமான அஷ்டம சனி, கன்னிக்கு நீசமான அஷ்டம சனி. இதற்குப் பலன் எப்படி இருக்கும்?

ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு சனியின் அமைவிடம், ராசிக்கு சனியின் அமைவிடம் மற்றும் ஜனன ஜாதகத்தில் சனி அமைந்த இடத்திற்கு கோட்சார அஷ்டம சனி எந்த இடத்தில் அமைகிறது என்பதையும்  கவனிக்க வேண்டும். மேலும் சனியின் சுற்றுகளையும் அதாவது ராசி மண்டலத்தில் அஷ்டம சனி முதல் சுற்றாக வருகிறதா அல்லது இரண்டு மூன்றாவது சுற்றில் வருகிறதா என்பதோடு திசா புக்திகளையும் கவனிக்க வேண்டும்.

இதில் திசா புக்திகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 
 
6. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு சந்திரன் மறைவுஸ்தான அதிபதி. கோச்சாரத்தில் மறைவுஸ்தான அதிபதி இன்னொரு மறைவுஸ்தானமான எட்டாம் இடத்துக்கு வருவதால் இந்த நான்கு ராசியினருக்கு சந்திராஷ்டமம் சிரமம் கொடுக்காதா? பெரிய பாதிப்பைத் தராதா?

கண்டிப்பாக பாதிப்பை தரும். குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும்.

7. ராகு, கேதுவுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும், குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்களுடன் இணைந்த சந்திராஷ்டமத்துக்கும் வித்தியாசம் இருக்குமா? தற்போது மகரத்துக்கு ராகுவுடன் சந்திரன், கடகத்துக்கு கேதுவுடன் இணைந்த சந்திரன் சந்திராஷ்டமத்தைக் கொடுக்கிறது. கும்பத்துக்கு குருவுடன் இணைந்த சந்திராஷ்டமம்.

சுபர்களுடன் இணைந்த சந்திராஷ்டமம் மனோ ரீதியில் சிறிதாக சிரமப்படுத்தும். ராகு கேதுக்களுடன் சேர்ந்த சந்திராஷ்டமம் அதீத மனக்குழப்பத்தையும் எதிலும் பிடிப்பற்ற ஞான நிலையையும் ஏற்படுத்தும்.

முக்கியமாக சந்திராஷ்டமத்தின் பதிப்பை துல்லியமாக அளவிட இதர கிரகங்களுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பை கொண்டு அளவிடுவதே சிறப்பாக இருக்கும். உதாரணமாக கடகத்தில் நீச செவ்வாயுடன் சந்திரன் அமைந்துவிட்டால் அது தனுசு ராசிக்கு பாதிப்பை தராது (திசா புக்திகள் மோசமாக இருந்தாலன்றி).

மேலும் ஒரு கிரகத்தில் செயல்பாட்டை அதற்கு கேந்திரங்களின் அமைந்த கிரகங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக ஒரு கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் அமைந்த கிரகங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் செயல்பாட்டை பாதிப்பதில் முக்கிய பங்குவகிக்கும். .மேலும் அஷ்டம சந்திரனுடன் ராசியாதிபதி அல்லது ஜனன லக்னாதிபதி அமைத்தால் சந்திரனால் ஏற்படும் மனோ ரீதியிலான  தடுமாற்றம் வெகுவாக குறையும். 

ஆய்வுகள் தொடரும்.

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி  எண்:  7871244501

3 comments:

  1. அருமை.ராகு பற்றி பதிவிடுங்கள் ஜயா.கேது காலம் பற்றி கூறுங்கள்.

    ReplyDelete
  2. அஷ்டமத்து சந்திரனை குரு சேர்ந்தாலும் பார்த்தாலும் பாதிப்பு குறைகிறது உண்மை

    ReplyDelete
  3. Manapennuku Santhirastram ulla naal anru manapen vetrar manamagan vettiruku sellalam ah


    ReplyDelete