Wednesday, 18 September 2019

அரசியல் யாரை அரவணைக்கும்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. 

அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான் தன்னை நிலை நிறுத்தி தேசம் முன்னேற பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை இனி வருங்கால அரசியல் சிறப்பாகவே இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.


அரசியலில் ஈடுபட்டு பெரும் தனம் ஈட்ட முடியுமா? .பெரும் புகழைடைய முடியுமா? என்பது போன்ற கேள்விகளால் ஜோதிட உலகம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக தமிழக தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வருடங்களே உள்ள நிலையில் , உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு செலவு செய்தால் போட்ட முதலை எடுத்துவிடலாமா? என்பது போன்ற கேள்விகள் ஜோதிடர்களின் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலே இந்த பதிவை எழுத தோன்றியது.

கீழே நேற்று பிறந்தநாள் கண்ட நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்.

சனியின் அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கிறார். சனி ராசிக்கு 1௦ ல் ராஜ்ய ஸ்தானம் சிம்மத்தில் நிற்கிறார். இதனால் இவரது கர்மம் என்பது ராஜ கர்மம் என்பதாகிறது. கர்ம  காரகன் சனிக்கு 2 ல் சூரியன் நிற்பது இதற்கு மற்றொரு காரணம். ஜல ராசியில் பிறந்தவர். நடப்பது சந்திர திசை. சந்திரன் விரைவாக  சுற்றும் கிரகம். சுதந்திரமடைந்து இவரது ஆட்சியில் தான் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. துணிச்சலுக்கு காரணம் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து நீச பங்கப்படுவது. உலகம் சுற்றும் வயோதிகராக திகழ்கிறார். காரணம் 9 ஆம் அதிபதி சந்திரன் நீர் ராசியில் அமைந்து திசை நடத்துவதே. 7 ஆமதிபதி கர்ம காரகன் சனியுடன் ராசிக்கு 1௦ ல் அமைந்து நீசம் நோக்கி செல்வதால் குடும்ப வாழ்வு சிறப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார். காரணம் சந்திர திசை முடிந்தாலும் அடுத்து வரும் ராசி அதிபதி செவ்வாய் திசையும் தனது முதல் பகுதியில் நன்மையை செய்யும் என்பதே.

அடுத்து கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



சூரியன் லக்னத்தில் நிற்கிறார். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு உள்ளார். அதனால் சிந்தனை அரசியலின் பக்கம் உள்ளது. சூரியன் சனியின் நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதாலும் சனிக்கு 2 ல் சுக்கிரன் நிற்பதாலும் அரசியல்வாதிகளுக்கு வாகன ஓட்டியாக செயல்படுகிறார். 12 ஆமிடத்திற்கு, சுக்கிரனுக்கு, 2 ஆமிடதிற்கு  பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. சுக்கிரன் 8 ஆமதிபதியோடும் மாந்தியோடும் இணைந்து நிற்கிறார். நடப்பது 7 க்கு விரையமான 6 ஆம் பாவத்தில் நிற்கும் சந்திரனின் திசை. ஜாதகருக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இவருக்கு லக்னத்தில் சனியின் நட்சத்திரத்தில் சனி பார்வை பெற்று நிற்கும் சூரியனால் திருமண எண்ணமே பெரிதாக இல்லை என்பதுதான்.  சனி சூரிய தொடர்பால் ஜாதகர் பிரபல ஜாதிக்கட்சி ஒன்றை சார்ந்து செயல்படுகிறார். சிம்ம ராசிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. அரசியலில் ஜாதகர் ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜாதகர் அடியாளாகவே செயல்படுவார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே .


ஜாதகர் சிம்ம ராசி என்பதும்.  ராகு சூரியன் சேர்க்கை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும் என்ற அமைப்பு மட்டுமே அரசியலுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.  ராகு திசையில் லாப ஸ்தானத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பணப்பட்டுவாடா செய்யும் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து ஓரளவு பொருளீட்டினார்.


பின்வரும் ஜாதகம் மற்றுமொரு ஆணினுடையது.

இந்த ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை இல்லை. ஆனால் சூரியனுக்கு திரிகோணத்தில் 5 ஆமிடத்தில் ராகு உள்ளது. கடக ராசி அரசியலுக்கு உரியது இந்த இரு அமைப்புகளால் இவர் ஒரு அரசியல் கட்சியில் தீவிர ஆதரவாளராக உள்ளார். சந்திரனுக்கு  1௦ ல் நான்கு கிரக சேர்க்கை என்பதால் இது ஒரு சன்யாச யோக ஜாதகம். 38 வயதாகியும் ஜாதகருக்கு திருமண எண்ணம் இல்லை.  குடும்பததை குறிக்கும் குரு வக்கிரமாகிவிட்டதால் குடும்பம் பற்றி இவர் வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டதும் இதை உறுதி செய்கிறது. தன கார கிரகங்கள் குருவும் சுக்கிரனும் தோஷம் பெற்றதாலும் சன்யாச யோகத்தாலும் இவரால் அரசியலில் பொருளீட்டவும் முடியாது. லாபத்திலிருந்து திசை நடத்தும் சனி 1௦ ஆமதிபதி சூரியனின் சாரம் பெற்றுள்ளதால் ஓரளவு பிரபலமாக வாய்ப்புண்டு.

அரசியலில் சேவை செய்ய ராஜ கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, குரு  ஆகியவை சிறப்பாக ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்து திசாபுக்திகள் சாதகமாக வரவேண்டும். அரசியலில் சதிராட்டங்களில் ஈடுபட்டு பொருளீட்ட (கொள்ளையடிக்க) ராகு, சுக்கிரனின் வலு ஜாதகத்தில் இருக்க வேண்டும். இவற்றை தவிர ராஜ்ய ஸ்தானம் எனப்படும் 1௦ ஆமிடமும், சூரியனும் வலுவடைந்து சாதகமான திசை வந்தாலும் அரசியலில் ஈடுபடலாம். பொதுவாக நெருப்பு ராசிகள் 3 ம் (மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை), கடகம், கும்பம் ஆகியவையும் அவற்றின் அதிபதிகளும் சாதகமாக அமைந்த ஜாதகர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அரசியலில் ஈடுபட சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு ஆகியவை இளம் வயதில் கடும் சோதனைகளையும் இழப்புகளையும் ஒருவருக்கு கொடுத்து, பல தியாகங்களை செய்ய வைத்து அவற்றில் அவர் தேரிய பிறகே இக்கிரகங்கள் அரசியலில் வெற்றிகரமாக உலா வர உதவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் சரி, கடந்த காலங்களிலும் சரி நமது மாபெரும் அரசியல் தலைவர்களின் வரலாற்றை கவனித்தால் இவ்வுண்மை புரியவரும். அரசியல்வாதியின் வாரிசாக பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவர் அரசியல்வாதியாகிவிட முடியாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் அரசியலுக்கு வரத் தயாரா.?

தன்னலமற்ற தியாகிகளை இன்றைய அரசியல் எதிர்பார்க்கிறது.


மீண்டும் அடுத்த வாரத்தில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்
கைபேசி: 08300124501



Thursday, 12 September 2019

அடிக்கிற கை அணைக்குமா?


யோகம் என்பது நாம் முற்பிறவிகளில் செய்த புண்ணிய செயல்களின் மூலமாக இறைவன் நம் கணக்கில் வைத்துள்ள வரவு எனலாம். இப்பிறவியில் அதை நல்வழியில் செலவு செய்வது நமது பிறவிப்பயனை கடந்து இறைவனை நெருங்க உதவும். தோஷம் என்பது நாம் முற்பிறவிகளில் சேர்த்துவைத்த கடனுக்கு ஒப்பானதாகும்.  நம்மிடமுள்ள தனத்திற்கு தக்கபடி வாழ்ந்து கடனை அடைத்து நிம்மதி பெறுவது சிறப்பு. அதை விடுத்து நம்மிடம் உள்ள இருப்பைவிட அதிக கடனை ஏற்படுத்திக்கொண்டு அதை அடைக்க வழி தெரியாமல் குறுக்கு வழிகளை கடைப்பிடித்து பாவக்கடனை அதிகப்படுத்திக்கொள்பவர்களுக்கு அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை இந்தப்பிறவியிலேயே அனைத்தையும் பிடுங்கிசெல்ல வருவாய்துறை அலுவலர்கள் வந்து சோதிப்பது போல் இறைவன் நம்மை சோதிக்கிறான்.



ஒரு கிரகம் ஒரு யோகத்தை தரக்கூடிய நிலையில் ஜாதகத்தில் ஒரு பாவத்தில் அமைகிறது என்றால் அதன் அமைவு மற்றொரு பாவத்திற்கு, கிரகத்திற்கு பாதிப்பை தரும் நிலையில் இருக்கலாம். எனவே ஒவ்வொரு கிரக அமைவிற்கும் நல்ல பலன்கள் மட்டுமல்ல தீய பலன்களும் ஜாதகத்தில் ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஒளியை உமிழும் ஒரு பொருள் தனித்திருந்தால்  அதாவது சுயம்புவாக இருந்தால் அதற்கு நிழல்கள் இருக்காது. ஆனால் அந்த ஒளியை நம்பி செயல்படும் பொருள்கள் ஒளியை நோக்கிய திசையில் பிரகாசத்தையும் மறுபுறம் நிழலையும் கொண்டிருக்கும். இங்கு ஒளி ஒளிவடிவான இறைவன் எனக்கொண்டால் நாமெல்லாம் சுய ஒளியற்ற, அந்த ஒளிப்பிழம்பான இறைவன் அருளால் வாழும் உயிர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில் சுயம்புவான இறைவனுக்கு கர்மங்கள் கிடையாது.

நமக்கு சுய ஒளி இல்லாததால் நமது கர்மங்களை இறைவனை நோக்கிய நிலையில் அமைத்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி பெறலாம். அவ்வாறின்றி தீய (நிழல்) கர்மங்களை நோக்கிய நிலையில் நமது வாழ்வை செலுத்தினால் நமக்கு கிடைக்கும் ஒளியையும் நமது தீய கர்மங்கள் முறியடித்து நம்மை வாழத்தகுதியற்றதாக  மாற்றிவிடும்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்னுடையது.


தனுசு லக்ன ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னத்திற்கு இரண்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. இது செல்வ வளமை மிக்கவர்  ஜாதகி என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் 7 ஆமிதிபதி புதனுடன் இணைந்து பத்தாமிடத்தை பார்ப்பது சிறப்பு. 2 ஆமதிபதியும் ஜீவன காரகனுமாகிய சனி சுக்கிரன் சாரம் பெற்று சுக்கிரனும் இரண்டாமிட தொடர்பு கொண்டது யோகமே. விரைய ஸ்தானத்தில் குரு பரிவர்த்தனையில் இருப்பது ஒருவகையில் தன யோகத்தை குறிக்கும். விரையத்திற்கு குறைவில்லா தனவரவை குரு தருவார் எனலாம். 10 ஆமிடத்தை 10 ஆமதியோடு இணைந்த சூரியன் தர்ம கர்மாதிபதி யோகம் கொண்டு பார்ப்பதால் ஜாதகி சுய தொழில் செய்கிறார்.  நீச சனி சாரம் பெற்ற சூரியன் சனி குறிப்பிடும் இரும்பு தொடர்புடைய தொழில் செய்கிறார். லக்னாதிபதி நீச சனி சாரம் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.   

7 ஆமதிபதி புதன் நீச நிலை பெற்று செவ்வாயும் நவாம்சத்தில் நீசம் பெற்று அமர்ந்தது தோஷமே. உபய லக்னத்திற்கு ஏழாமதிபதி வலுகுறைவது ஒருவகையில் நன்மை எனும் சூழலில் ஏழாமதிபதி லக்னாதிபதியான குருவின் பார்வையை பெறுவது கணவரை இந்த ஜாதகம் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் செவ்வாய் நவாம்சத்தில் நீசம் பெற்றது கணவர் போதுமான திறமை அற்றவர் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் இரும்பு வியாபாரம் செய்கிறார்கள். இரண்டாமதிபதி சனி 5ல் செவ்வாய் வீட்டில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நீசம் பெற்ற நிலையில் சுக்கிரன் இரண்டில் செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்ததாலும் செவ்வாய்க்கு சனி திரிகோணம் பெற்றதாலும் செவ்வாய்க்கும் சனிக்கும் ஏற்பட்ட தொடர்பால் இவர்கள் இரும்புக்கடை நடத்துகிறார்கள். ஏழாமதியைவிட லக்னாதிபதி வலு கூடியதால்  ஜாதகிதான் தொழிலை நிர்வகிக்கிறார். ஏழாமதிபதி வலு குறைவது தோஷமே என்றாலும் அந்த தோஷமே ஜாதகி நிர்வாகியாக மாற வழி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

கீழே மற்றுமொரு பெண்ணின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 7 ல் நின்ற ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது. 7 ல் லக்னாதிபதி சந்திரனோடும் மாங்கல்யகாரகன் செவ்வாயோடும ராகு நிற்பது கடும் தோஷமே. நவாம்சத்தில் 7 ஆமதிபதி சனி, மாங்கல்ய காரகன் செவ்வாய் ஆகியோர் நீசமானது தோஷத்தை உறுதி செய்கிறது.  7 க்கு பாதகத்தில் குரு நிற்கிறார். இந்த அமைப்பால் குழந்தை பிறந்ததும் 7 ஆமிட தோஷம் செயல்படும்.  குரு திசையில் ஜாதகிக்கு மகன் பிறந்தான். குரு திசை மாங்கல்யத்தையும் பறித்தது. 7 ஆமிடம் தோஷம் பெற்று, 7 ஆமதிபதியும் பாதகத்தில் 11 ல் அமைந்து, 7 க்கு பாதகத்தில் அமைந்த 6 ஆமதிபதி குரு பார்வையை 7 ஆமதிபதி சனி  பெற்றது ஆகியவை தோஷம் வெளிப்படும் காலகட்டத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு லாபத்தில் குரு நின்று தொடர்பு ஸ்தான அதிபதியும் ஜீவன காரகனுமான சனியை பார்க்கிறார். எனவே குரு மூலம் ஜாதகிக்கு லாபமும் உண்டு என்பது புலனாகிறது. லக்னத்திற்கு திரிகோணத்தில் குரு அமைந்ததும் சனிக்கு திரிகோணத்தில் புதன் சூரியன் அமைந்ததும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடதிற்கு திரிகோணத்தில் சூரியன் புதன் அமைந்ததுமான அமைப்பால் ஜாதகிக்கு அரசுப்பள்ளி ஆசிரியையாக வேலை கிடைத்தது.

முன்பத்தியில் கூறப்பட்ட அமைப்பால் குரு குடும்ப வாழ்வை பறித்தார். ஆனால் அதே குரு ஜாதகியின் வாழ்வை தாங்கியும் பிடிக்கிறார் என்பது நம்பக்கூடிய உண்மை. முந்தைய அமைப்பு தோஷம் பிந்தைய அமைப்பு யோகம். பெரும்பாலும் பாவத்துவ அமைப்பை பெற்ற கிரகங்கள் முதலில் பாதகத்தை செய்துவிட்டு பிறகு பிறகு யோகம் செய்யும் அமைப்பால் பிற்காலத்தில் யோகத்தையும் செய்துவிடுவதை பார்க்க முடிகிறது. ஜாதக அமைப்பால் இது மாறுபட்டும் செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க. கீழே வரும் ஜாதகம் அத்தகையது.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்ன ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் இரண்டாமதிபதி செவ்வாயோடு பாக்ய -விரையாதிபதி புதனும் பாதகாதிபதி சூரியனும் நிற்கிறார்கள். ஜாதகருக்கு லாபத்தில் நிற்கும் சந்திர திசையில் உச்ச குருவின் பூரட்டாதி-4 சாரம் பெற்ற கேது புக்தியில் திருமணம் நடந்தது. அடுத்து வந்த சூரியனுடன் நிற்கும் செவ்வாய் திசையில் ஜாதகர் அரசியலில் ஈடுபட்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். சனிக்கு எந்த கிரக தொடர்பு ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்கு தனது காரகத்துவமான உண்மை, கடின உழைப்பு, நேர்மை என்ற நற்பண்புகளை சனி வழங்குவார்.  இங்கு சூரியன் வீட்டில் சனி நிற்பதாலும் சூரியனுக்கு 1௦ ல் சனி நிற்பதாலும், சனி சாரத்தில் சூரியன் நிற்பதாலும் ஜாதகர் தனது பதவி காலத்தில் பெருமளவு நேர்மையுடன் ஊருக்கு சில நல்ல காரியங்களை செய்து கொடுத்தார்.

ஆனால் சூரியனும் சனியும் மேற்சொன்ன அதே அமைப்பினால் பாதகங்களையும் செய்ய உரிமை பெற்றவர்களாயிற்றே. அதன்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற குடும்ப காரகன் குருவின் பார்வை பெற்ற இரண்டாமிட கிரகங்கள் குடும்ப வாழ்வை சிதறடித்தது. அதே செவ்வாய் திசையின் இறுதிப்பகுதியில் 2011 ல் ஜாதகரின் மனைவி ஜாதகரிடமிருந்து விவாகரத்து பெற்று விலகிச் சென்றார்.

இதிலிருந்து நாம் அறிய வருவது,

யோகத்தை செய்யும் கிரகங்கள் பாதகத்தையும் செய்யும்.

ஒரே மனிதனுக்குள் மாறுபட்ட குணங்கள் இருப்பதைப்போல் கிரகங்களும் மாறுபட்ட திசா புக்தி , கோட்சாரங்களில் தங்களது செயல்களில் மாறுபாட்டை தருகின்றன.

அதீத யோகம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அதன் தாக்கமாக மற்றொரு விஷயத்தில் பாதிப்பு உறுதியாக இருக்கும். பொதுவாக ஒருவரது வாழ்வை பார்த்து மலைத்து நிற்கும் நாம் அதன் பின்னணியில் அவர் இழந்த இழப்புகளை கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்த வாரப்பதிவு

“ரகு VS ராகு”

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி:  08300124501.



Sunday, 12 May 2019

மணமுறிவும் மறு திருமணமும்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது உணர்ந்து சொல்லிய வார்த்தைகள். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மனிதன் இயற்கையை விட்டு வேகமாக விலகிச் சென்று  கொண்டிருக்கிறான். அதனால் இன்றைய மனிதனிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகிய மனித தன்மைகளும் விலகிச் சென்றுகொண்டிருக்கின்றன. இதன் விளைவே அதிரிகரித்து வரும் மண முறிவுகள். 



அமெரிக்க பூர்வ பழங்குடிகளான செவ்விந்திய தலைவரிடம்  குடியேரிகளான வெள்ளையர்கள் அவர்களது நிலப்பரப்பை தங்களுக்கு அளித்துவிடும்படி கேட்டு ஒரு ஒப்பந்தம் போட்டனர்.. அப்போது அந்த செவ்விந்திய தலைவர் குறிப்பிட்ட வாசகங்கள் இன்றும் அமெரிக்காவில் பிரபலமான வாசகங்கள்.

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். வேட்டையாடுவதில் மட்டுமல்ல சமுதாய, குடும்ப அமைவிலும் ஒரு ஒழுங்கமைவை நாங்கள் கடைபிடிக்கிறோம். நீங்கள் பொருளாதார வளத்திற்காக காடுகளை (இயற்கையை) அழித்தால் மிருகங்கள் அழிந்துவிடும். நீங்கள் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்” என்பது போன்ற ஒரு நீண்ட கருத்தை பதிவு செய்திருந்தது நினைவு வருகிறது.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


ரிஷப லக்ன ஜாதகத்தில் செவ்வாய் - சனி இரண்டும்  1 – 7 தொடர்பிலிருந்து சம சப்தமமாக பார்த்துக்கொள்கின்றன. சனி வக்கிரமானதால் இது கணவரின் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணத்தை பாதிக்கும். கிரகம் வக்ரமானால் திக் பலம் வலுவிழந்துவிடும். கணவர் தனது சில கருத்துக்களில் ஒரு முடிவோடுதான் செயல்படுவார் என்பதை இது குறிக்கிறது. பாக்யாதிபதி சனி பாக்ய ஸ்தானத்திற்கு பாதகத்தில் அமர்ந்து, பாக்ய ஸ்தானத்தில் நீச நிலையில் சந்திரனோடு இணைந்து அமர்ந்த குருவை வக்கிர சனி மூன்றாம் பார்வை பார்க்கிறது. புத்திரமே ஒரு பாக்கியம்தான் என்பதன் அடிப்படையில் ஒன்பதாமிடம் பெண்களுக்கு பிரதானமான புத்திர ஸ்தானமாகிறது. புத்திர தோஷம் கொண்ட இந்த ஜாதகத்தில் புத்திர பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெற கணவர் வர மறுத்ததால் விவாகரத்து கேட்டது இந்தப் பெண்.  


கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



தனுசு லக்னத்தவர்க்கு பாதகாதியாக 7 & 10 க்குரிய புதன் வரும் என்பதால் இவர்கள் புதனின் பாதகத்தை களத்திரம் அல்லது தொழில் வகையில் அனுபவிக்கின்றனர். பொதுவாக களத்திர ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானாதிபதியான 6 ஆமதிபதியுடன் 7 ஆமதிபதி ஒன்று சேர்வது களத்திரத்திற்கு  பாதிப்பை தரும். இதில் 6 ஆமதிபதி  களத்திர காரகன் என்பது இன்னும் பாதிப்பே. முக்கியமாக களத்திர காரகனுடனும் (சுக்கிரன்), களத்திர ஸ்தானாதிபதியுடனும் (7 ஆமதிபதி) பிரிவினையை குறிக்கும் சர்ப்ப கிரகங்கள் இணைந்து நின்றால் அந்த ஜாதகர் குடும்ப பிரிவினையை தொடர்புடைய கிரகங்களின் திசா புக்தி வரும்போது நிச்சயம் எதிர்கொள்வார் எனலாம். சர்ப்ப கிரகங்களில் கேது கிரிஸ்தவத்தையும், ராகு இஸ்லாமியத்தையும் குறிக்கும். கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இந்த ஜாதகர் திருமணம் முடிந்து 13 நாளில் மனைவியை உதறினார். காரணம் இந்து மதத்தை சேர்ந்த மனைவி கிறிஸ்தவ கடவுளை வழிபடுவது தெரியவர கணவர் விலகிவிட்டார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


மேஷ லக்ன ஜாதகத்தில் பாதகாதிபதியும் ராசியாதிபதியுமான சனி பிரிவினையை குறிக்கும் ஆறாமிடத்தில் வர்கோத்தம வலுவுடன் நிற்கிறது. பாவத்தில் விரையாதிபதி குருவுடன் சேர்ந்து உச்ச கதியில் 7 ல் நின்றதால் 34 வயது நெருங்கிய நிலையில்தான் ஜாதகருக்கு திருமணமானது. பாதகாதிபதியுடன் சேந்து மற்றொரு பகைவன் வீட்டில்  சனியுடன் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று நவாம்சத்தில் நீசம்  பெற்றும் பல்வேறு வகையில் பலவீனமடைந்த லக்னாதிபதியும் யோகியுமான செவ்வாயால் ஜாதகரின் திருமண வாழ்வை தாங்கிப்பிடிக்க இயலவில்லை. ஏழில் நின்ற குரு திசை சுய  புக்தியில் ஜாதகருக்கு திருமணமாகி எட்டாவது நாளில் மனைவி ஜாதகரை பிரிந்து சென்றுவிட்டார்.   

சந்நியாச யோகம்கொண்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயைவிட ராசியாதிபதி சனிக்கே அதிக வலுவுள்ளது. ஜாதகருக்கு ராசி சுக ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தி துவங்கியதும் ஜாதகருக்கு மறு திருமணம் நடந்தது. குரு தொடர்புகொண்ட சனி,  புத்திரத்தையும்  தனது புக்தியிலேயே கொடுத்தது. 4 ஆம் பாவம் மறு திருமணத்தை குறிக்கும்.

கீழே மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


துலாம் லக்னம், கடக ராசி. சந்திரன் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. 17 வயது முதல் ராகு திசை. பாதகத்தில் சுக ஸ்தானாதிபதி சனியோடு நின்று ராகு திசை நடத்துகிறது. ராகுவோடு சேர்ந்த சனி 2 , 7 ஆம் பாவாதிபதி செவ்வாயோடு பரஸ்பர பார்வைகளை பரிமாரிக்கொள்கிறது. இத்தகைய ஜாதக அமைப்பு மணமுறிவுற்ற அல்லது குறையுடைய கணவரை தேர்ந்தெடுத்திருந்தால் திருமண வாழ்வை பாதிக்காது. இல்லையேல் நிச்சயம் மண முறிவைத்தரும். ஜாதகிக்கு சுக்கிரன் சாரம் பெற்ற ராகு திருமணம் செய்வித்து மணமுறிவையும் கொடுத்தது. அடுத்துவந்த குரு,  பாக்ய - படுக்கை ஸ்தானாதிபதி (9 - 12 ஆமதிபதி) புதன் சாரம் பெற்றதால் 2 ஆவது திருமணம் செய்வித்தது.. கிரகங்களில் புதனும்,  பாவங்களில் 4 ம் மறு திருமணத்தை குறிப்பிடுபவை.

திருமணம் தொடர்புடைய பாவங்களும் கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எப்படி அமைந்துள்ளன. திசா-புக்திகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்து ஒரு தேர்ந்த ஜோதிடரால் ஒருவரின் திருமண வாழ்வை அதிகம் பாதகம் ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். உதாரணமாக 7 ஆம் பாவமும் களத்திர கிரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பின் தன்மைக்கேற்ற ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது மணவாழ்வை பாதுகாக்கும். ஆனால் இன்றைய மனிதனின் பொருளாதாரமும் மனமும் அதை ஏற்றுக்கொள்ளும்  நிலையில் இல்லை. இன்றைய பெரும்பாலான மண முறிவுக்கு காரணம் இதுவே. இதை ஓரளவு சரி செய்துவிட முடியும். ஏற்றுக்கொள்ளத்தான் மனிதர்கள் இல்லை. 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.   
அதுவரை,

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி & பகிரி (Whatsapp) 08300124501