Monday, 21 December 2020

அவன் இவன்!

                          

தொடர்பற்ற ஆண்கள் இருவர் அதுவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். அதனால் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பைக்கொண்டவர்களின் வாழ்க்கையிலும் வேறு வேறு விதிகள் செயல்படுகிறது. ஜோதிடத்தில் உபய லக்னங்களுக்கு அதிபதிகளான குருவும் புதனும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், கேந்திராதிபத்திய தோஷத்தை தருபவர்கள்.  இவ்விரண்டில் குருவிற்கு புதனைவிட தோஷ வலு அதிகம். நாம் கீழே ஆராயவிருக்கும் இரு ஜாதகங்களிலும் இவ்விரு கிரகங்களும் லக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகின்றன. பரிவர்தனையாவதால் இவற்றிற்கிடையேயான தோஷங்கள் நீங்கி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்ளும். இது ஜோதிட ரீதியான விதி. உண்மையில் இவ்விதி எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு ஆராய்வோம்.       

அவன்:

 

மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற  குரு, பாதகாதிபதியும் களத்திர பாவாதிபதியுமான புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். ஜாதகர் பிறந்து 2 வயதுவரைதான் குருதிசை. குரு பரிவர்த்தனைக்குப்பிறகு தனது வீட்டிற்கே வருகிறார். ஜாதகர் வரவு செலவுகளை நிர்வகிக்கும் நகரத்தார் குடும்பத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு  குடும்பத்தில் பிறந்தவர். குரு தனகாரகர். புதன் கணக்கு, பதிவுகள் காரகன். இதனால் ஜாதகர் குரு திசையில் இக்கிரகங்களின் காரகங்கள் தொடர்பான குடும்பத்திலேயே பிறந்திருக்கிறார். ஜாதகருக்கு சனி திசை முடிந்து அவரது 21 வயது முதல் 39 வயது வரை பாதகாதிபதி புதனின் திசை. புதனும் குருவும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள். எனவே இவை பரிவர்த்தனை ஆவதால் தீய பலன்கள் ஜாதகருக்கு அடிபட்டுவிடுகிறது. லக்னத்தில் அமர்ந்த கிரகம் 7 ஆம் இடத்தோடு பரிவர்த்தனை ஆவதால் 7 ஆமிட பலனை அதிகமாகவும் லக்ன பலனை குறைவாகவும் செய்யும். இதன் அடிப்படையில் புதன் ஜாதகருக்கு களத்திர பாவாதிபதி என்பதால் திருமணத்தையும், 1௦ ஆம் அதிபதி பாவத்பாவ அடிப்படையில் 1௦ க்கு 1௦ ல் பரிவர்த்தனக்குப்பின் வருவதால் தனது காரகத்துவம் சார்ந்த வகையில் ஜீவனத்தையும் அமைத்துத்தரவேண்டும். 

ஜாதகர் கல்வியை முடித்து புதன் சார்ந்த தகவல் தொடர்பு நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை கிடைக்கப்பெற்றார். 7 ஆமதிபதி புதன் ஜாதகருக்கு திருமணத்தை செய்து வைத்தது. ஜாதகரின் மனைவி புதன் தொடர்புடைய (Data Processing) கணினி நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். புதனும் சுக்கிரனும் பங்குச்சந்தைக்கு காரக கிரகமாகும். ஜாதகருக்கு மனைவி வந்த பிறகு பங்குச்சந்தையில் ஈடுபட்டு பெரும் தனம் குவித்தார். புதன் நண்பர்களையும் குறிக்கும் கிரகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜாதகர் நண்பர்களிடம் முதலீடுகளை பெற்று நிறைய சம்பாதித்துக்கொடுத்தார். மனைவியை குறிக்கும் 6, 11 அதிபதி சுக்கிரன் குருவின் விசாகம்-4 ல் லக்னத்திற்கு 12 ல் பாக்யாதிபதி சூரியனுடன் அஸ்தங்கமடையாமல் மறைகிறது. 6 ஆமதிபதி 12 ல் மறைவது விபரீத ராஜ யோகமாகும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் மனைவி வந்த பிறகுதான் ஜாதகர் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்தார். 7 ஆமிட புதன் இங்கு செயல்படுகிறார். 7 ஆம் பாவாதிபதி எனும் வகையில் தனது அம்சம் ஜாதகரின் வாழ்க்கையில் பங்கேற்ற பிறகே ஜாதகர் பங்குச்சந்தையில் செல்வத்தை வாரி வழங்கியது.

இவன்:



இந்த மிதுன லக்ன ஜாதகத்திலும் லக்னாதிபதி புதனும் பாதகாதியான 7 ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை ஆகின்றன. குரு வக்கிரமடைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் பாதக ஆதிபத்தியம் அடிபட்டு 1, 7 ஆம் பாவ பலன்கள் ஜாதகருக்கு சிறப்பாக கிடைக்க வேண்டும். ஜாதகருக்கு பிறந்து 13 வயது வரை சனி திசை. அதன் பிறகு 3௦ வயது வரை புதன் திசை. முந்தைய ஜாதகத்தில் பரிவர்த்தைக்குப்பின் 7ல் அமர்ந்த புதன் தனது திசையில் திருமணத்தையும் ஜீவன வகையிலும் பலன் தந்தது. இந்த ஜாதகத்தில் புதன் பாதக ஸ்தானத்திலிருந்து பரிவர்த்தனை ஆகி லக்னத்திற்கு வருகிறது. லக்னத்தில் வந்து அமரும் புதன் குடும்ப பாவமான 2 க்கு விரையத்தில் அமர்வதால் இரண்டாமிட பலனை குடும்பம் அமைவதையும் வருமான வகைகளையும் பாதிப்பார். எப்படியாயினும் 7 ஆமிடத்தை  பார்ப்பதால் திருமணம் நடந்திட வேண்டும். ஆனால் ஜாதகருக்கு புதன் திசையில் திருமணம் நடக்கவில்லை. காரணம் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதனின் பகை கிரகமான செவ்வாய் அமைந்துள்ளார். இதனால் செவ்வாய் புதனின் செயல்பாடுகளை பாதிப்பார். இதனால் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாயை மீறி ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைக்க புதனால் இயலவில்லை.


இந்த ஜாதகத்தில் தனுசு புதன் கேதுவின் மூல நட்சத்திரத்திலும் மீன கேது புதனின் ரேவதி நட்சத்திரத்திலும் அமைகின்றன இதனால் குருவோடு பரிவர்த்தையாகும் புதன் கேதுவோடும் தொடர்புகொள்கிறார். ஞான காரகன் கேது செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளார். இதனால் கேதுவோடு சாரப்பரிவர்த்தனையாகும் புதன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாய்க்கு திரிகோணத்தில் நிற்கிறார். செவ்வாயும், கேதுவும் புதனின் சாரம் பெற்றதாலும் ஜாதகருக்கு புதன் திசையிலும் கேது திசையிலும் திருமணம் நடக்கவில்லை. முந்தைய ஜாதகத்திலும் இதே அமைப்பு இருக்கிறது என்றாலும் லக்னம் வேறு வேறு என்பதும் குடும்ப பாவத்தோடு கேதுவும் செவ்வாயும் தொடர்புகொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜாதகர் தற்போது சுக்கிர திசையில் உள்ளார். இரண்டாவது பாவத்தையும் லக்னாதிபதியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செவ்வாயின் புக்தியில் ஜாதகர் தற்போது உள்ளார். ஜாதகருக்கு தற்போது திருமணத்திற்கான காலமே. ஜாதகருக்கு வயது தற்போது 44. இரண்டில் சந்திரனுடன் செவ்வாய் அமைந்து 2 ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்தம்-3 ல் அமைந்த ராகு இவ்விருவரையும் கட்டுப்படுத்துகிறது. செவ்வாய் முதலில் 8  ஆமதிபதி சனியை தொடுவதால் மனைவி மணமுறிவுற்றவராக இருப்பார்.

மேற்கண்ட இருவரும் ஒரே நாளில் (30.11.1977) வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்டிருந்தாலும் லக்னம் இங்கே இருவரின் விதியை தொடர்பற்று மாற்றி அமைக்கிறது. மேலும் குரு வக்கிரமடைந்த நிலையில் பின்னோக்கிய நிலையில் தான் நிற்கும் பாவத்திற்கு முந்தைய பாவத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்றாலும் திசா-புக்திகளுக்கு இவ்விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கும்வரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Tuesday, 15 December 2020

ஊமையை பேச வைத்த குரு சனி சேர்க்கை!

 


சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஊமையான சிவாஜிகணேசன் அன்னை சரஸ்வதி அருளால் திடீரென பேசத்துவங்கி அற்புதமான பாடல் ஒன்றையும் பாடுவார். நிஜத்தில் இவையெல்லாம் சாத்தியமா? என்றால் தெய்வ சக்தி மூலம் இது சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட அதிசய நிகழ்வொன்றை ஜோதிட ரீதியாக இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன். முடிவுகள் ஆச்சரியமானவை என்றாலும் ஊமைகள் பேசவும் கிரகங்கள் சம்மதிக்க வேண்டும். இப்பதிவில் நாம் ஆராயவிருக்கும் ஜாதகி 1981 ல் பிறந்தவர். பிறவி ஊமை. ஆனால் தனது 14 ஆம் வயதிற்குப்பிறகு பேச்சு வந்தது. தற்போது சிறந்ததொரு குடும்பத்தலைவியாக திகழும் இவரா சிறுவயதில் ஊமையாக இருந்தார்? என நம்ப முடியாதவராக காட்சியளிக்கிறார். வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்.


ஜோதிடத்தில் பேச்சுக்கு உரிய காரக கிரகம் சந்திரன். பேச்சுத்திறமைக்கு உரிய காரக கிரகம் வாக்கு காரகன் என அறியப்படும் புதன். கால புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் சந்திரன் உச்சமடைவது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷபம் பாவ கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருப்பது நல்ல நாவன்மைக்கு அவசியம். சந்திரன் மட்டுமல்ல சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்படாமல் இருப்பது அவசியம். மேலும் சந்திரன் நீசமடையும் விருட்சிக ராசி, கடகத்தில் உச்சமடையும் குருவின் மீன ராசி ஆகிய மூன்று நீர் ராசிகளும் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருப்பது ஒருவரின் பேச்சு பாதிக்கப்படாமல் இருக்க உதவும். அதனால்தான் மூன்று நீர் ராசிகளும் ஜோதிடத்தில் ஊமை ராசிகள் என அழைக்கப்படுகின்றன. புதனும் சுக்கிரனும் அடுத்ததாக ஜாதகத்தில் சிறப்பாக அமையப்பெற்றிருப்பது நாவன்மைக்கு சிறப்பு. காரணம் சுக்கிரன் காலப்புருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதி என்பதோடு அவர் சுரப்பிகளுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் சிந்தனையில் எழும் எண்ணங்கள் பேச்சு வடிவம் பெற எண்ணச்சமிக்கைகள் காலபுருஷனின் குரல்வளையை குறிக்கும் மிதுனத்திற்கு தடையின்றி செல்ல ரிஷப ராசியும் சுரப்பிகாரகன் சுக்கிரனும் உதவ வேண்டும். நாவன்மைக்கு உரிய புதனும் மிதுன ராசியும் அதன் பகை கிரகமான செவ்வாயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.  

மேற்கண்ட பெண்ணின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் நின்று தன் வீட்டில் நீசம் பெற்ற வாக்கு ஸ்தானாதிபதி சந்திரனை பார்க்கிறார். ரிஷப ராசி பாதிக்கப்பட்டாலும் செவ்வாய் ராசி அதிபதி ஆவதால் சந்திரனுக்கு நீச பங்கம் கொடுத்தாக வேண்டும். இந்த ஜாதகத்தில் சந்திரனும் சந்திரனின் கடக ராசியும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு காரகன் புதன், ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் வக்கிரமாகியுள்ளார். மிதுன ராசிக்கு பாவகர்த்தாரி யோகம் உள்ளது. மிதுன ராசியை பாதகாதிபதி குருவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியும் பேச்சு காரகனுமான நீசம் பெற்ற சந்திரனை சனி மூன்றாம் பார்வையாகவும், செவ்வாய் 7 ஆம் பார்வையாகவும் பார்கின்றனர். சனி செவ்வாய் பார்வை பெற்ற பாவங்களும் அதில் இருக்கும் கிரகங்களும் பாதிப்படைய வேண்டும். சுக்கிரனும் புதனும் அஸ்தங்கமடையாவிட்டலும் சுக்கிரனனும் புதனைப்போலவே ராகுவின் திருவாதிரை சாரம் பெற்று பாதிக்கப்பட்டுள்ளார். லக்னாதிபதியும் வாக்கு காரகனுமான புதன் வக்கிரமாகியுள்ளார். அஷ்டம ஸ்தானத்தில் சந்திரனின் திருவோணம்-1 ல் நின்று சந்திரனை முதலில் தொடவிருக்கும் கேதுவும் சந்திரனின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளார்.  

இவை யாவும் ஜாதகிக்கு பேசும் திறன் பாதிக்கப்படும் என்பதை குறிக்கின்றன. இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள செவ்வாயால் ராசி வலுவடைகிறது. செவ்வாய் சந்திரனை நீசபங்கப்படுத்துவதோடு ராசிக்கு 2 ஆம் இடத்தையும் தனது 8 ஆம் பார்வையால் பார்ப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சந்திரன் பாதகாதிபதி குருவின் விசாகம்-4 ல் நின்று நவாம்சத்தில் ஆட்சி பெறுகிறார். சனியும் குருவும் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர். ராசியாதிபதி செவ்வாய், ராசியின் யோகாதிபதியும் லக்னாதிபதி புதனின் நண்பருமான சூரியனின் சிம்ம ராசியை தனது நான்காம் பார்வையாக பார்க்கும் சூழலில் சூரியனும் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் ஒரு இணைந்து செயல்படும் தன்மை ஏற்படும்.

ஜாதகி பிறந்தது முதல் 2 வயதுவரை பாதகாதிபதி குருவின் திசையில் பேசவில்லை. அதன்பிறகு 1983 முதல் 2002 வரை சனி திசை. லக்னத்திற்கு 8 & 9 ஆம் அதிபதியாக சனி வருகிறார். சனிக்கும், சூரியனுக்கும் அஷ்டமாதித்ய தோஷமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாதகாதிபதி தொடர்பால் தோசமுண்டு. 19 வருட சனி திசையின் முதல் ஒன்பதரை வருடங்கள் முடிந்து இரண்டாவது பகுதி 1995  ல் வந்தது. அப்போது சனி திசையின் சந்திர புக்தியில் ஜாதகி இருந்தார். சந்திரன் செவ்வாயால் நீசபங்கப்படுதப்பட்டுள்ளார். சந்திரன் தந்து புக்தியில் 6 ஆமிட பலனையும் 11 ஆமிட பலனையும் வழங்க வேண்டும். சந்திர புக்தியில் இரண்டாம் பகுதியான லாப ஸ்தான பலனை சந்திரன் வழங்கத்துவங்கிய காலம். ஜாதகிக்கு பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரிரு வார்த்தைகள் பேசத்துவங்கினார். சந்திரனை நீச பங்கப்படுத்திய செவ்வாய் புக்தி துவங்கிய பிறகு ஜாதகி எல்லோரையும் போல சாதாரணமாக பேச ஆரம்பித்தார். அப்போதைய கோட்சார நிலை (1997 துவக்கம்) கீழே.

ஒரு நல்ல திசா-புக்திகள் வரும்போது சர்ப்ப கிரகங்கள் ஜாதகருக்கு இருக்கும் பிரச்னையை கோட்சாரத்தில் அவை தொடர்புகொள்ளும் பாவங்கள் மற்றும் கிரகங்களின் மூலம் தீர்த்து வைக்கும். அதே போன்று ஒரு மோசமான திசா – புக்தி காலங்களில் அவை வரும் ராசியை சார்ந்து அதிலுள்ள கிரகங்களை சார்ந்து இல்லாத பிரச்னையை ஜாதகருக்கு உருவாக்கி  விட்டுச்செல்லும். ஜனன காலத்தில் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துவிட்ட ராகு அந்த பாவ பலனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தற்போது கோட்சார ராகு ராசிக்கு லாபத்தில் ஜனன சனி-குரு மீது வந்து நிற்கிறது. பாதகாதிபதி குருவை கட்டுப்படுத்தும் கோட்சார ராகு, திசா நாதன் சனியின் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்துவார். ராகு-கேதுக்கள் மருத்துவ ஜோதிடத்தில் மிகச்சிறந்த பலன்களை வழங்குபவை என்பது யாவரும் அறிந்ததே. லக்னத்திற்கு சுகஸ்தானத்தில் மருத்துவ கிரகம் புதனின் மூலத்திரிகோண வீட்டில் வந்தமரும் ராகு, திசா நாதன் சனிக்கு புதனின் மருத்துவ குணத்தையும் தனது நுட்பத்தையும் சேர்த்து வழங்கி தற்போது செயல்பட வைப்பார். கோட்சாரத்தில் குரு நீசமாகி சனியோடு பரிவர்த்தனை பெறுகிறது. இதனால் குருவும் சனியும் சம கிரகங்களானாலும் சனியின் தயவில்தான் பரிவர்த்தனையால் குரு நீச பங்கம் அடையவேண்டும். எனவே குரு தனது பாதகாதிபத்தியத்தை இழப்பார். ஜனன சனி, குருவிற்கு திரிகோணத்தில் அமர்ந்த கேது கோட்சாரத்திலும் இவ்விரு கிரகங்களோடு தொடர்புகொள்வதை கவனிக்கவேண்டும். இதனால் இவை கேதுவின் மருத்திவ நுட்பத்தை கோட்சாரத்தில் பெறுகின்றன. 

அதே சமயம் கோட்சாரத்தில் பரிவர்த்தனைக்கு முன்னும் பின்னும் கேதுவின் பிடியில் சிக்குவதால் குரு தனது பாதகாதிபத்திய தோஷத்தை இழபார். சனியும் குருவும் கோட்சாரத்தில் கடக ராசியை பார்வை செய்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குரு ஜனன காலத்தில் கேது நின்ற சந்திரனின் அதே திருவோண நட்சத்திரத்தில் கோட்சாரத்தில் சென்ற போது ஜாதகி முழுமையாக பேசத்துவங்கினார். ஜாதகி சனி திசையின் செவ்வாய் புக்தியில் பரிபூரணமாக பேசத்துவங்கினார். ஜனன காலத்தில் சனி,குருவிற்கு திரிகோணத்தில் செவ்வாய் நின்றதால் புக்தினாதனின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது சனி திசை சந்திர புக்தியில் ஜாதகி பேச முயற்சித்தார் என்றால் செவ்வாய் புக்தியில் தெளிவாக தங்குதடையின்றி பேசத்துவங்கினார். இதற்கு ஜனன காலத்தில் சேர்க்கை பெற்ற வருட கிரகங்களான சனியும் குருவும் காரணம். திசா புக்தி கிரகங்கள் இவ்விரு கிரகங்களோடு தொடர்பானது மிக முக்கிய காரணம். இவ்விரு கிரகங்களுக்கும் தங்களது மருத்துவ குணத்தை அதிசய மாற்றத்தை கோட்சாரத்தில் வழங்கிய ராகுவும் கேதுவும் மிக மிக முக்கிய காரணம். ராகு-கேதுக்களின் ஒப்புதலின்றி ஒருவர் கடும் சோதனைகளை சந்திக்கவும் முடியாது. அதிலிருந்து விடுபடவும் முடியாது. ஜனன  காலத்தில் லக்னத்தை நோக்கி நகரும் ராகு ஜாதகியின் வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கோட்சாரத்தில் ஜாதகியின் பிரச்னையை சீராக்கினார் என்றால் அது மிகையல்ல.

பேசா ஊமை ஒருவர் திடீரேன பேசம் அதிசயம் நடக்க வாய்ப்புகள் உண்டு. அதற்கும்  ஜோதிட ரீதியான காரணங்கள் உண்டு.

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 6 December 2020

அப்பாவின் வேலை கிடைக்குமா?

 


திரைப்படம் ஒன்றில் வாழ்வை வீணடித்துக்கொண்டிருக்கும் தனது மகனுக்காக, தந்தை தனது உயிரை விட்டு தனது இரயில்வே வேலை மகனுக்கு கிடைக்கும்படியான காட்சி ஒன்றை கண்டேன். இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதால் இதிலும் பல கட்டுப்பாடுகளை தற்போது கொண்டுவந்துவிட்டார்கள். இதுபோன்று வேலை அமைவது குரூரமான ஜாதக அமைப்பு என்றாலும் அதற்கும் ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஒருவரது லக்னாதிபதியை 9 ஆம் அதிபதி அல்லது சூரியன் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் அந்த ஜாதகர் தந்தையின் காலதிற்குப்பிறகே தனது வாழ்வில் முன்னேற முடியும். அத்தகையோர் தந்தையை விட்டு விலகி இருந்தால் பாதிப்பு குறையும். மேலும் தனது முன்னேற்றதிற்கான முக்கிய முடிவுகளை சனி ஜாதகத்தில் நன்றாக இருப்பின் சனிக்கிழமைகளிலும், சனி ஹோரைகளிலும் எடுத்தால் சிறப்பாக அமையும். மேலும்  ஞாயிற்றுக்கிழமையையும், சூரிய ஹோரையையும் தவிர்த்தால் சிறப்பு கூடும். சனியும் கெட்டிருந்தால் லக்னாதிபதி, லாபாதிபதியையும் மற்றும் ஜாதகத்தில் வலுவான கிரகம் இவற்றின் மூலம் தனது முயற்சிகளை மேற்கொள்வது சிறைப்பைத்தரும். எப்படியாயினும் சூரியனை தவிர்த்தல் நலம்.     

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 


  

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு, உச்சமான ராசியாதிபதி செவ்வாயுடன் இணைந்து நீச பங்கமாகிறார். ஜாதகத்தில் 9 மற்றும் 1௦ அதிபதிகள் சூரியனும் புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றனர். இது தந்தை வழி வந்த கொடுப்பிணை என்று கூறலாம். இதைத்தவிர கால புருஷனுக்கு 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குருவும் சனியும் இணைந்துள்ளதால் மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகம் செயல்படுகிறது. இரண்டாவது யோகமே இதில் முதன்மையானது. சூரியன் 1௦ ஆமதிபதியோடு இணைந்து 2 ல் நின்றதால், தந்தை ஜாதகருக்கான வருமான வாய்ப்பை தமயனுக்கு வழங்குகிறார் என அனுமானிக்கலாம். சிம்மத்திற்கு 5 ஆமிடம் தனுசின் அதிபதி குருவோடு இணைவது மற்றொரு கோணத்தில் இதை தெளிவாக்குகிறது. ஜாதகர் விருட்சிக ராசிக்காரர் என்பது கவனிக்கத்தக்கது. இது ஜாதகரின் முன்னேற்றத்தைக்காண தந்தை உயிரோடு இருக்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. அப்படி எனில் தந்தை இறந்த பிறகே அவரது வேலை தமயனுக்கு கிடைக்கும். இது பாதகமான அமைப்பே. விருட்சிக ராசி இல்லை என்றால் தனது வேலையை தொடர இயலாத சூழலில் தந்தை வேலையை தமயனுக்கு விட்டுத்தருவார் எனலாம்.

1962 ல் அனுஷம்-3 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு 1971 முதல் 7 & 1௦ க்குரிய புதன் திசை நடக்கிறது. புதன் 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையை வழங்க வேண்டும். 7 ஆம் அதிபதி என்பதால் திருமணத்தையும் நடத்தி வைக்க வேண்டும். 9 ஆம் அதிபதி சூரியன் தனது வீட்டிற்கு 6 ல் பகை வீட்டில் தனது பகை கிரகங்களான சனி, கேது, லக்ன விரையாதிபதி செவ்வாயுடனும், பாதகாதிபதி புதனுடனும் இணைந்து நிற்கிறார். இது சூரியனுக்கு வலுவற்ற அமைப்பாகும். ஜாதகத்தில் ராசியாதிபதி செவ்வாய் உச்சமாகியுள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமாகவில்லை என்ற நிலையில் இந்த ஜாதகத்தில் லக்னத்தைவிட ராசியே வலுவானதாகிறது. புதன் செவ்வாயின் சாரம் அவிட்டம்-2 ல் நிற்கிறார். செவ்வாய் சிம்மத்தின் பாதகாதிபதி குறிப்பிடத்தக்கது. இதனால் ராசிக்கு 8 ஆமிடமான புதன் திசையில் ஜாதகரின் தந்தைக்கு பாதகம் ஏற்படும். ஜாதகரின் 2௦ ஆவது வயதில் ராசிக்கு 8 ஆமதிபதியான புதனின் திசையில் ராசிக்கு 9 ஆமிடத்தில் புதனின் ஆயில்யம்-3 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகர் தனது தந்தையை இழந்தார். ராகு தந்தையை குறிக்கும் சிம்மத்தின் விரையத்தில் நின்று தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தினார். 

தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்திய அதே ராகு, 1௦ ஆமிட தொடர்பையும் பெற்று 1௦ ஆமிடமான கன்னிக்கு லாபத்தில் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வேலையையும் வாங்கிக்கொடுத்தது. தந்தைக்கு திடீர் மரணம் ஏற்பட்டதால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தமயனுக்கு கிடைத்தது. 2 ஆமிடத்தில் சூரியன் அமைந்தால் அரசு வகை வருமானம் குடும்பத்திற்கு ஏற்படும். அந்த வகையில் அரசுத்துறை வங்கியில் பணிபுரிந்த தந்தை மூலமும் தந்தைக்குப்பிறகு அவரது வேலையை பெற்ற ஜாதகருக்கும் அரசு வகை வருமானம் வருகிறது. தசாம்ச லக்னம் தனகாரகன் குருவின் வீடாகி அதில் சனி நிற்பதால் தனம் சார்ந்த பணி. தசாம்ச 1௦ ஆமிடமான கன்னியை தங்களுக்குள் பரிவர்தனையான இரு தன காரக கிரகங்கள் சுக்கிரனும் குருவும் பார்க்கின்றனர். தசாம்ச பரிவர்த்தனை பாதகதிற்குப்பின் சாதகம் என்ற நிலையை குறிப்பிடுகிறது. தசாம்ச 1௦ ஆமதிபதியான புதன், லக்னத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்ப்பதால் கணக்கு, ஆவணம், பதிவுகள் தொடர்புடைய பணி என்பதை குறிப்பிடுகிறது. 


மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திப்போம்,


அதுவரை வாழ்த்துக்களோடு,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501.