Monday, 21 December 2020

அவன் இவன்!

                          

தொடர்பற்ற ஆண்கள் இருவர் அதுவும் ஒரே நாளில் பிறந்தவர்கள். அதனால் ஒரே மாதிரியான ஜாதக அமைப்பைக்கொண்டவர்களின் வாழ்க்கையிலும் வேறு வேறு விதிகள் செயல்படுகிறது. ஜோதிடத்தில் உபய லக்னங்களுக்கு அதிபதிகளான குருவும் புதனும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், கேந்திராதிபத்திய தோஷத்தை தருபவர்கள்.  இவ்விரண்டில் குருவிற்கு புதனைவிட தோஷ வலு அதிகம். நாம் கீழே ஆராயவிருக்கும் இரு ஜாதகங்களிலும் இவ்விரு கிரகங்களும் லக்னம் மற்றும் 7 ஆம் அதிபதிகளாகின்றன. பரிவர்தனையாவதால் இவற்றிற்கிடையேயான தோஷங்கள் நீங்கி ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்ளும். இது ஜோதிட ரீதியான விதி. உண்மையில் இவ்விதி எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு ஆராய்வோம்.       

அவன்:

 

மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. தனுசு லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற  குரு, பாதகாதிபதியும் களத்திர பாவாதிபதியுமான புதனுடன் பரிவர்த்தனையில் உள்ளார். ஜாதகர் பிறந்து 2 வயதுவரைதான் குருதிசை. குரு பரிவர்த்தனைக்குப்பிறகு தனது வீட்டிற்கே வருகிறார். ஜாதகர் வரவு செலவுகளை நிர்வகிக்கும் நகரத்தார் குடும்பத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு  குடும்பத்தில் பிறந்தவர். குரு தனகாரகர். புதன் கணக்கு, பதிவுகள் காரகன். இதனால் ஜாதகர் குரு திசையில் இக்கிரகங்களின் காரகங்கள் தொடர்பான குடும்பத்திலேயே பிறந்திருக்கிறார். ஜாதகருக்கு சனி திசை முடிந்து அவரது 21 வயது முதல் 39 வயது வரை பாதகாதிபதி புதனின் திசை. புதனும் குருவும் ஒன்றுக்கொன்று பாதகாதிபதிகள். எனவே இவை பரிவர்த்தனை ஆவதால் தீய பலன்கள் ஜாதகருக்கு அடிபட்டுவிடுகிறது. லக்னத்தில் அமர்ந்த கிரகம் 7 ஆம் இடத்தோடு பரிவர்த்தனை ஆவதால் 7 ஆமிட பலனை அதிகமாகவும் லக்ன பலனை குறைவாகவும் செய்யும். இதன் அடிப்படையில் புதன் ஜாதகருக்கு களத்திர பாவாதிபதி என்பதால் திருமணத்தையும், 1௦ ஆம் அதிபதி பாவத்பாவ அடிப்படையில் 1௦ க்கு 1௦ ல் பரிவர்த்தனக்குப்பின் வருவதால் தனது காரகத்துவம் சார்ந்த வகையில் ஜீவனத்தையும் அமைத்துத்தரவேண்டும். 

ஜாதகர் கல்வியை முடித்து புதன் சார்ந்த தகவல் தொடர்பு நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை கிடைக்கப்பெற்றார். 7 ஆமதிபதி புதன் ஜாதகருக்கு திருமணத்தை செய்து வைத்தது. ஜாதகரின் மனைவி புதன் தொடர்புடைய (Data Processing) கணினி நிறுவனம் ஒன்றில் பணி செய்கிறார். புதனும் சுக்கிரனும் பங்குச்சந்தைக்கு காரக கிரகமாகும். ஜாதகருக்கு மனைவி வந்த பிறகு பங்குச்சந்தையில் ஈடுபட்டு பெரும் தனம் குவித்தார். புதன் நண்பர்களையும் குறிக்கும் கிரகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜாதகர் நண்பர்களிடம் முதலீடுகளை பெற்று நிறைய சம்பாதித்துக்கொடுத்தார். மனைவியை குறிக்கும் 6, 11 அதிபதி சுக்கிரன் குருவின் விசாகம்-4 ல் லக்னத்திற்கு 12 ல் பாக்யாதிபதி சூரியனுடன் அஸ்தங்கமடையாமல் மறைகிறது. 6 ஆமதிபதி 12 ல் மறைவது விபரீத ராஜ யோகமாகும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் மனைவி வந்த பிறகுதான் ஜாதகர் பங்குச்சந்தையில் அடியெடுத்து வைத்தார். 7 ஆமிட புதன் இங்கு செயல்படுகிறார். 7 ஆம் பாவாதிபதி எனும் வகையில் தனது அம்சம் ஜாதகரின் வாழ்க்கையில் பங்கேற்ற பிறகே ஜாதகர் பங்குச்சந்தையில் செல்வத்தை வாரி வழங்கியது.

இவன்:



இந்த மிதுன லக்ன ஜாதகத்திலும் லக்னாதிபதி புதனும் பாதகாதியான 7 ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை ஆகின்றன. குரு வக்கிரமடைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் பாதக ஆதிபத்தியம் அடிபட்டு 1, 7 ஆம் பாவ பலன்கள் ஜாதகருக்கு சிறப்பாக கிடைக்க வேண்டும். ஜாதகருக்கு பிறந்து 13 வயது வரை சனி திசை. அதன் பிறகு 3௦ வயது வரை புதன் திசை. முந்தைய ஜாதகத்தில் பரிவர்த்தைக்குப்பின் 7ல் அமர்ந்த புதன் தனது திசையில் திருமணத்தையும் ஜீவன வகையிலும் பலன் தந்தது. இந்த ஜாதகத்தில் புதன் பாதக ஸ்தானத்திலிருந்து பரிவர்த்தனை ஆகி லக்னத்திற்கு வருகிறது. லக்னத்தில் வந்து அமரும் புதன் குடும்ப பாவமான 2 க்கு விரையத்தில் அமர்வதால் இரண்டாமிட பலனை குடும்பம் அமைவதையும் வருமான வகைகளையும் பாதிப்பார். எப்படியாயினும் 7 ஆமிடத்தை  பார்ப்பதால் திருமணம் நடந்திட வேண்டும். ஆனால் ஜாதகருக்கு புதன் திசையில் திருமணம் நடக்கவில்லை. காரணம் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதனின் பகை கிரகமான செவ்வாய் அமைந்துள்ளார். இதனால் செவ்வாய் புதனின் செயல்பாடுகளை பாதிப்பார். இதனால் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாயை மீறி ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைக்க புதனால் இயலவில்லை.


இந்த ஜாதகத்தில் தனுசு புதன் கேதுவின் மூல நட்சத்திரத்திலும் மீன கேது புதனின் ரேவதி நட்சத்திரத்திலும் அமைகின்றன இதனால் குருவோடு பரிவர்த்தையாகும் புதன் கேதுவோடும் தொடர்புகொள்கிறார். ஞான காரகன் கேது செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளார். இதனால் கேதுவோடு சாரப்பரிவர்த்தனையாகும் புதன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்த செவ்வாய்க்கு திரிகோணத்தில் நிற்கிறார். செவ்வாயும், கேதுவும் புதனின் சாரம் பெற்றதாலும் ஜாதகருக்கு புதன் திசையிலும் கேது திசையிலும் திருமணம் நடக்கவில்லை. முந்தைய ஜாதகத்திலும் இதே அமைப்பு இருக்கிறது என்றாலும் லக்னம் வேறு வேறு என்பதும் குடும்ப பாவத்தோடு கேதுவும் செவ்வாயும் தொடர்புகொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜாதகர் தற்போது சுக்கிர திசையில் உள்ளார். இரண்டாவது பாவத்தையும் லக்னாதிபதியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செவ்வாயின் புக்தியில் ஜாதகர் தற்போது உள்ளார். ஜாதகருக்கு தற்போது திருமணத்திற்கான காலமே. ஜாதகருக்கு வயது தற்போது 44. இரண்டில் சந்திரனுடன் செவ்வாய் அமைந்து 2 ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்தம்-3 ல் அமைந்த ராகு இவ்விருவரையும் கட்டுப்படுத்துகிறது. செவ்வாய் முதலில் 8  ஆமதிபதி சனியை தொடுவதால் மனைவி மணமுறிவுற்றவராக இருப்பார்.

மேற்கண்ட இருவரும் ஒரே நாளில் (30.11.1977) வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான ஜாதக அமைப்பை கொண்டிருந்தாலும் லக்னம் இங்கே இருவரின் விதியை தொடர்பற்று மாற்றி அமைக்கிறது. மேலும் குரு வக்கிரமடைந்த நிலையில் பின்னோக்கிய நிலையில் தான் நிற்கும் பாவத்திற்கு முந்தைய பாவத்தின் செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்றாலும் திசா-புக்திகளுக்கு இவ்விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கும்வரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

No comments:

Post a Comment