Sunday, 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Sunday, 25 April 2021

எவனோ ஒருவன் வாசிக்கிறான்!

 


வாழ்வில் சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம். அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான் தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும் நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம் செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின் அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால் தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம்  குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும் இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம் மூலம் இது தொடர்பான  விஷயங்களை ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில் இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.  தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட  மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று  அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்)  குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.

ஜாதகியை மோட்சத்தை நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும் காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே. ஜாதகிக்கு கடந்த 2007 முதல் சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில் நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும் சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும் கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார். பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும் 5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன் சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக முடிவு செய்கிறார்.

தனது விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும். அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5 ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும் கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.

ராகு-கேதுக்களின் அச்சும் – கிரகண தோஷமும்.

தாயார் மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன் நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன் ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன்  வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில் பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும். மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால், ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29 பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால் சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின் வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும் ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல முடியாது என்பதாகும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில் ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர். இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல் நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு உள்ளே  உள்ளார். இதனால் தந்தையை மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின் அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச சடங்குகள் கடந்த 2019 இறுதியில் கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது  நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.

தற்போது ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன் அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும் குடும்பத்திலிருந்து  தன்னை  ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன் அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே குறிப்பிடுகின்றன.

தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Tuesday, 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501