Tuesday 20 April 2021

கட்டுமானத்துறையில் உயர்வுண்டா?

 

எனது மகனை கட்டுமானத்துறை கல்வி (Civil Engineering)  படிக்க வைக்க எண்ணியுள்ளேன். அத்துறையில் அவனது வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் ஒரு அன்பர் ஜாதகம் பார்க்க வந்தார். இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் கட்டுமானத்துறை மிகுந்த பலனளிக்கக்கூடியது. ஏனெனில் Infrastructures என்று அழைக்கப்பெறும் சாலை மற்றும் அலுவலகங்களுக்கான கட்டுமானங்கள் சிறப்பாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டியிடும் இந்தியா, சீனா அளவுக்கு Infrastructure அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வியத்தகு அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான தனது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்பதே உண்மை. எனவே கட்டுமானத்துறை அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையாகவே இருக்கும். எனவே இத்துறை சார்ந்த கல்வி சிறப்புடையதே.



மேற்கண்ட கருத்து பொதுவானதே என்றாலும் ஒருவர் கட்டுமானத்துறையில் உயர்கல்வி கற்று தனது சம்பாத்தியத்தை அடைய உண்டான ஜாதக அமைப்புகள் என்ன என்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம். மேலும் அடுத்த கல்வியாண்டு  துவங்கவுள்ள நிலையில் தங்களது குழந்தைகளை இத்துறையில் ஈடுபடுத்த எண்ணிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட அன்பரைப்போன்ற பல பெற்றோர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்டுத்தும். கட்டுமானத்துறையை குறிக்கும் பாவம் 4 ஆம் பாவமாகும். ஒரு துறையில் ஒருவரை ஈடுபடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனாகும். கட்டுமானத்துறைக்கு காரக கிரகங்கள் செவ்வாயும் சனியுமாகும். இவற்றோடு சந்திரன் தொடர்பு சிறந்தது. ஒருவரது ஜாதகத்தில் ஜீவன பாவங்களான 2, 4, 6, 1௦ ஆகிய பாவங்களில் சனி+செவ்வாய்   சேர்க்கை அமைந்து உரிய காலத்தில் இவற்றின் திசா புக்தி வரின் ஒருவர் கட்டுமானத்துறையில் ஈடுபட யோகமுண்டு.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இவர் பொறியியலில் கட்டுமானத்துறையில் உயர்கல்வி ME முடித்து அரசின் சாலை மேம்பாட்டுத்துறையில் பணிபுரிகிறார்.  இந்த ஜாதகத்தில் கட்டுமானம் என்பது இல்லை. ஆனால் கட்டமைப்பு என்பது உள்ளது. சாலையை குறிக்கும் பாவம் 12 ஆமிடமும், ராசிகளில் காலபுருஷனுக்கு 12 ஆமிடமான மீன ராசியுமாகும். சனி சாலையை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாய் கட்டமைப்பை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி குரு, சூரியன் வீட்டில் அமைத்தால் ஜாதகிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. வேலை பாவமான 6 ன் அதிபதி மற்றும் கட்டமைப்பின் காரக கிரகமான செவ்வாயை, 1௦ ஆமதிபதி குரு பார்ப்பதால் ஜாதகிக்கு சாலை கட்டமைப்புத்துறையில்  வேலை கிடைத்தது. சூரியன் திக்பலம் பெற்றது, ஜாதகி தன் துறை சார்ந்த உயரதியாக உயர்வதை குறிப்பிடுகிறது.  சூரியன் 1௦ ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆவதால் ஜாதகி வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்வதையும் இட மாறுதலையும் குறிப்பிடுகிறது. இதை சந்திரனின் திருவோணம்-4 ல் நிற்கும் சனியும் உறுதி செய்கிறார். மீனச்சந்திரன் திட்டமிடலுக்குரிய  புதனின் ரேவதி-2 ல் நிற்பதால் ஜாதகி திட்டமிடல் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலையில் (Planning & Management)   இருப்பார். லக்னத்தில் நிற்கும் கேது ஜாதகிக்கு தேர்ந்த பொறியியல் அறிவை வழங்கியுள்ளார். லக்னத்தின் 12 ஆமதிபதி சுக்கிரன் கால புருஷனுக்கு 12 ஆமிடம் மீனத்தில் உச்சமாகியுள்ளது சாலை கட்டமைப்பு துறையில் ஜாதகி ஈடுபட முக்கிய காரணமாகும். 

 

சதுர்விம்சாம்சம் மூலம் உயர்கல்வியை தேர்ந்தெடுத்தல்.


ராசியில் செவ்வாய் உயர்கல்வி பாவமான 9 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 9 ன் பாக்யாதிபதி (பாவத்பாவாதிபதி) சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று அமைந்துள்ளது ஜாதகி இத்துறையில் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க காரணமானது. ஆனால் சதுர்விம்சாம்சம் எனப்படும் சித்தாம்சத்தில் (D24) உயர்கல்வியை மதிப்பிட 9 ஆம் பாவத்தோடு 12 ஆம் பாவத்தை ஆராய்வது முக்கியமாகும். சதுர்விம்சாம்சத்தில் ஜீவன காரகனும் சாலையை குறிக்கும் காரக கிரகமுமான சனி,  9 & 12 ஆமதிபதியும் திட்டமிடலின் காரக கிரகமான புதனோடு இணைந்து உச்சம் பெற்று அமைந்திருப்பது. ஜாதகி சாலை சார்ந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கும். சதுர்விம்சாம்ச லக்னம் நீர் ராசியாக இருந்து அதனோடு நீர் கிரகங்களான குரு, சந்திரன் ஆகியவை நேரடியாக தொடர்புகொண்டால் ஜாதகர் உயர்கல்வியை வெளிநாட்டில் பயில்வார் எனலாம். இந்த ஜாதகத்தில் லக்னத்தை குரு வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய)  நிலையில் பார்ப்பது அத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு ஜாதகத்தில் உச்சம் பெற்ற கிரகங்கள்தான் ஜாதகரை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருக்கும். வர்க்கச்சக்கரங்களிலும் அப்படித்தான்.  சதுர்விம்சாம்சத்தில் சனியும் செவ்வாயும் உச்சம் பெற்று அமைந்துள்ளது, உயர்கல்வி சார்ந்தவகையில் ஜாதகியின் சிந்தனையை சனியும் செவ்வாயுமே இயக்கிக்கொண்டுள்ளன என்பதை தெள்ளத்தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது.    

தசாம்சம் மூலம் வேலை வாய்க்கும் துறையை தேர்ந்தெடுத்தல்.


தொழிலுக்கு ஆராயவேண்டிய தசாம்ச சக்கரத்தில் கன்னி லக்னத்திற்கு 1௦ ல் சூரியனும் செவ்வாயும் சந்திரனோடு சேர்ந்திருப்பது ஜாதகியில் தொழில் ரீதியான சூழலை துல்லியமாக படம்பிடித்துக்காட்டுகிறது. தசாம்சத்தில் கன்னி லக்னமும் மிதுனமும் புதனது திட்டமிடலையும், 1௦ ஆமிட கிரகங்களில் சந்திரன் தொழில் ரீதியான ஜாதகியின் மன வெளிப்பாட்டையும் 12 ஆமதிபதியான சூரியன், அரசின் சாலைப்பணியையும், செவ்வாய் சாலைக்கட்டுமானத்தையும் குறிப்பிடுகிறது. வர்க்க சக்கரங்களில் வலுவடைந்த கிரகங்களே அச்சக்கரம் சார்ந்த வகையில் ஜாதகரை இயக்கிக்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப லக்னத்திற்கு 1௦ ல் திக்பலம் பெற்ற செவ்வாயும் சூரியனுமே ஜாதகியை ஜீவனம் சார்ந்த வகையில் இயக்கியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது.   

ஒருவர் ஜாதகத்தில் ராசிக்கட்டம் பொதுவான ஒருவரது வாழ்க்கை சூழலை குறிப்பிடுகிறது. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் பொருளாதார சூழலில் கல்விக்கு அதிக செலவு செய்யும் நிலை உள்ளதால் மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய சதுர்விம்சாம்சத்தையும் தசாம்சத்தையும் ஆராய்ந்து உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் கட்டுமானம் (Construction) என்று பொதுவான துறையாக இல்லாமல் அதிலும் தனித்துவம் தரக்கூடிய சாலை மேம்பாட்டுத்துறையை (Highways) தேர்ந்தெடுக்க சனி, செவ்வாயோடு 12 ஆமிடம் தொடர்புடைய சுக்கிரன், மீனம், குரு ஆகியவை காரணமாகியுள்ளதை அறியலாம். 

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

No comments:

Post a Comment