Sunday, 8 November 2020

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்!

 


ஜோதிடத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி செல்லும்போது எட்டாம் பாவத்தில் இருந்து ஒரு கிரகம் திசா-புக்தி நடத்தினாலோ அல்லது எட்டாம் பாவாதிபதி திசா-புக்தி நடந்தாலோ அப்போது உயர்கல்வியில் தடை ஏற்படும். ஏனெனில் 8 ஆம் பாவம் என்பது ஒன்பதாம் பாவத்தின் விரைய பாவமாகும்.அப்படியானதொரு சூழலில் நினைந்த உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக்காலகட்டமே மிக முக்கியமானதொரு காலமாகும். இந்தச் சூழ்நிலையில் பெற்றோர்கள் சரியான வழிகாட்டலை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். முன்னதாக தங்கள் குழந்தைகளின் உயர்கல்வி சூழல்களை தகுந்த ஜோதிடர்களின் துணைகொண்டு ஆராய்ந்து வைத்திருப்பது பல சிரமங்களை தவிர்க்க பெரிதும் உதவும். உயர்கல்வியில் சிரம சூழல் யாருக்கு ஏற்படும் எனில் ஒன்பதாம் பாவம் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகம் ஏற்படும். 9 ஆம் பாவம் பாதிக்கப்பட்டு 8 ஆம் பாவ கிரக திசை-புக்தி நடக்கையில் அங்கு உயர்கல்வி தடுமாறும். அப்போது குறிப்பிட்ட காலம் வரை அவர்களை ஆற்றுப்படுத்தி உரிய மறு வாய்ப்புகளை அடையாளம் காட்டவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இப்பதிவின் உயர்கல்வி வாய்ப்புகளில் 8 ஆமிடத்தின் தாக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம்.  

கீழே ஒரு மாணவியின் ஜாதகம்.

2002 ல் பிறந்த இந்த மாணவிக்கு 2018 இறுதியிலிருந்து சிம்ம லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் மீனத்தில் ரேவதி-2 ல் நிற்கும் 9 ஆமதிபதி செவ்வாயின் திசை நடக்கிறது. ஜாதகி 2௦19 ல் 12 ஆம் வகுப்பு முடித்து மருத்துவம் பயில எண்ணியிருந்தார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதி செவ்வாய், 9 க்கு விரையத்தில் மறைந்துள்ளார். ஜாதகி நன்றாக படிக்கும் மாணவி ஆயினும் மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதனால் தனது எண்ணம் ஈடேற ஓராண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு மீண்டும் இவ்வாண்டு தேர்வு எழுதினார். ஆயினும் இவ்வாண்டும் தேர்ச்சி பெற இயலவில்லை. செவ்வாய் இங்கு பாக்யாதிபதி ஆயினும் 8 ல் மறைந்து திசை நடத்துவதால் உயர்கல்வியை தடை செய்கிறார். 8 ஆமிட செவ்வாய் தனது எதிரி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்பதால் புதனின் காரக வகையில்தான் அதாவது கல்வி சார்ந்த வகையில்தான் தனது பாதிப்பை வழங்கவேண்டும் என்பது தெளிவாகிறது. செவ்வாய் பிடிவாத காரகன் ஆகிறார். இதனால் ஓராண்டு கல்வியை பிடிவாதமாக மறுத்து மீண்டும் முயன்றார். உயர்கல்விக்கு உரிய 9 ஆம் பாவத்திற்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பது உயர்கல்வியில் ஏற்படும் தடுமாற்றத்தை தெளிவாக உணர்த்துகிறது. இங்கு செவ்வாய் பாக்யாதிபதியாயினும் 8 ஆமிட பலனை முதலில் வழங்கிவிட்டு பிறகே தனது 9 ஆம் பாவ பலனை வழங்குவார். இந்த அடிப்படையில் முதலில் உயர்கல்வியை தடைசெய்த அதே செவ்வாய் தற்போது உயர்கல்வியை தொடர வழிவகுத்துள்ளார். தற்போது ஜாதகி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.  

இரண்டாவதாக மற்றொரு மாணவியின் ஜாதகம்.


ஜாதகி 1994ல் பிறந்தவர். இந்த ஜாதகமும் முதல் ஜாதகத்தைப்போன்றே சிம்ம லக்ன ஜாதகம்தான். ஜாதகிக்கு 2௦௦6 முதல் 2023 வரை புதன் திசை நடக்கிறது. புதன் இந்த ஜாதகத்தில் 8 மறைந்து திசை நடத்தினாலும் அவர் தனது திசையின் ஒரு பகுதி பலனை 5 ஆமிடத்திற்கும் பிரித்து வழங்க வேண்டும். ஏனெனில் புதன் இரு வீடு ஆதிபத்தியம்கொண்ட  குருவின் வீட்டில் இருந்து திசை நடத்துகிறார். புதன் ஜாதகத்தில் நீசமானாலும் அவர் லக்னத்திற்கு 7 ல் திக்பலத்தில் நிற்கும் சனியின் உத்திரட்டாதி-1 ல் நிற்கிறார். இதனால் புதனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது. கூடவே சனியின் திக்பல வலிமை புதனுக்கும் கிடைக்கிறது. இதனால் புதன் வலுவடைகிறார். இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் புதனும் சூரியனும் சேர்ந்து புத-ஆதித்ய யோகத்தில் உள்ளனர். பொதுவாக புதனும் சூரியனும் சேர்ந்து இதர இடங்களில் அமைவதைவிட 1, 4, 8  ஆகிய மூன்று இடங்களில் ஒன்றில் இணைந்து நின்றால்தான் அங்கு புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாகச் செயல்படும். இந்த ஜாதகத்தில் புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

இந்த ஜாதகத்தில் உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்து தன வீட்டில் அமைந்த குருவின் பார்வையை பெறுகிறார் என்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இதனால் ஜாதகிக்கு உயர்கல்வி மிகச்சிறப்பாக வாய்க்கும். 8 ஆமிடம் சிறப்பாக அமைந்தால் அது மறைந்திருக்கும் பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்து புகழ்பெற்ற வைக்கும் அமைப்பாகும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட புதன் நீச பங்கம் பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்தது ஜாதகிக்கு தீவிர ஆராய்ச்சி மனமிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. 8 ஆமிடம் என்பது நீர் ராசியாவதால் ஜாதகி சொந்த ஊரை விட்டு கண்காணாத இடத்தில் கடல்கடந்த தேசத்தில் மறைந்துதான் தனது உயர்கல்வியை தொடரவேண்டும் என்பதையும் குறிப்பிடும். இந்த ஜாதகி பொறியியலில் BE (INDUSTRIAL BIO TECHNOLOGY) யை முடித்தார். புதன் செவ்வாய் சேர்க்கை இதற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல. அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக 9 ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது. பொறியியல் கல்வி பயிலும்போது ஜாதகி உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்று புதன் திசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகி ஜெர்மன் சென்று MS (MOLECULAR BIO TECHNOLOGY) பயின்றார். ஜாதகி இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் புக்திநாதன் செவ்வாய் குரு சாரம் பூரட்டாதி-4 பெற்று, குருவும் ராகுவும் தங்களுக்குள் சாரப்பரிவர்த்தனை (குரு-சுவாதி-4 & ராகு விசாகம்-4)  பெற்றதுதான் காரணமாகும். MOLECULAR பிரிவு கல்வியை இங்கு ராகு குறிக்கிறார். ஜாதகி ஜெர்மனியில் MS படிக்கும்போதே சுவிட்சர்லாந்தில் தனது ஆய்வுக்கல்வியை (PhD) பயில்வதற்கான  வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார். ஜாதகி தற்போது சுவிட்சர்லாந்தில் MOLECULAR BIO ENGINEERING  ல் தனது ஆய்வுக்கல்வியை  தொடர்ந்து வருகிறார். 

பொதுவாக 8 ஆமிடம் என்பது உயர்கல்வியை தடை செய்யும் அமைப்புதான் என்றாலும் ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாக்யஸ்தானத்தின் அமைப்பையும் 8 ஆமிட கிரகம் வேறு எந்த பாவங்களுடன் தொடர்புகொள்கிறது என்பதை கவனித்தே உயர்கல்வியில் ஏற்படும் விளைவுகளை கூறவேண்டும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட கிரகம் கண்காணாத கடல்கடந்த தூர தேசத்தில் தனது உயர்கல்வியை பயில ஜாதகிக்கு வகை செய்துள்ளதை கவனிக்கவேண்டும். (8 ஆமிடம் – மறைந்துபோதல், கடல்கடந்த தூர தேசம் சென்றுவிடுவதை குறிக்கும்.)

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 30 October 2020

பாவகப்புள்ளி ஆச்சரியங்கள்

 

ஜாதகத்தில் ஒரு பாவக பலனை அல்லது ஒரு கிரகம் செயல்படுவதை நிர்ணயிக்க பல்வேறு யுக்திகள் ஜோதிட அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும். ஜாதக பலன்களை நிர்ணயிப்பதற்கு பல்வேறு முறைகளில் ஆராய்ந்து அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக  தெரியும் சூழலில் ஜோதிடர் திகைத்து நிற்பதும் உண்டு. பெரும்பாலான ஜோதிடர்கள் கையாள்வது திசா புக்தி நிலையோடு கோட்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பலன் சொல்வதுதான். ஜாதகம் காட்டும் சூழலில் ஜாதகர் தோற்றம் அமைப்பு, வேலை போன்றவைகளை உறுதி செய்துகொண்டு ஜோதிடர்கள் பலன் கூறுவர். இதிலும் ஒரு சிக்கல் உண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்காவிட்டாலும் ஜனன நேரம் தவறுதலாக குறிக்கப்பட்டிருந்தாலும் பலன் கூற முடியாத சூழலில் நாடி முறைகளை அனுசரித்து பலன் கூறுவது ஒரு முறை.



இப்பதிவில் நாம் பல்வேறு ஜாதக அலசல் யுக்திகளில் ஒன்றான ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி அமைந்த நட்சத்திர நாதனைக்கொண்டு அந்த பாவகத்தின் பலனை அலசும் முறை பற்றி காண இருக்கிறோம். K.P முறையில் உப நட்சத்திரத்தை கொண்டு பாவகப் புள்ளியை வைத்து பலன் நிர்ணயிப்பவர்கள் “சார ஜோதிடம்” என்று இம்முறையை அழைக்கிறார்கள்.  நாம் இங்கு K.P உப நட்சத்திர முறையை தவிர்த்து பாரம்பரிய முறையில் அதாவது பாவகப்புள்ளி விழுந்த நட்சத்திர நாதனைகொண்டு  பலன் நிர்ணயிக்கும் முறையை காண்போம்.



மேற்கண்ட ஜாதகர் ஒரு ஆண். இவருக்கு லக்னம் மகரத்தில் 12.21 பாகையில் திருவோணம் முதல் பாதத்தில் அமைந்துள்ளத்து. இவரது ஜீவன கர்மா என்னவென்று பார்ப்போம். இவருக்கு 10 ஆவது பாவகம் துலாமின் தொடக்கப்புள்ளி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைகிறது. ராகு கடக ராசியில் அமைந்துள்ளார். ஜாதகர் கடல் கடந்த தொடர்பில் ஜீவனம் செய்கிறார் என்பதை இது குறிக்கிறது. ராகு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகர் புதன் குறிக்கும் தகவல் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிவதை இது குறிப்பிடும். சனியின் நிலையை கொண்டும் இதை அனுமானிக்கலாம் என்றாலும் இம்முறையால் சனியை தொடர்புபடுத்தி உறுதி செய்துகொள்ளலாம்.

இரண்டாவதாக கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


லக்னம் 23 பாகையில் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எனவே இரண்டாவது பாவகப்புள்ளி சிம்மத்தில் 23 பாகை லக்ன பாதகாதிபதியான சுக்கிரனின் பூரத்தில்  அமையும். 2 ஆமிடத்தில் பிரிவினையை குறிப்பிடும் கேது அமைந்து விரையாதிபதி  புதனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து விரையத்தில் அமைந்து 2 ஆமதிபதி சூரியன் 2க்கு விரையத்தில்  லக்னத்தில் விரையாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதும் 2 ஆமிடம் கடுமையாக இந்த ஜாதகிக்கு பாதிக்கும் எனவும் அது கர்ம வினை என்பதையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. எப்போது குடும்ப பாவம் பாதிக்கும் என்பதை திசா புக்திகளை கொண்டு அறியவேண்டும். இந்த ஜாதகிக்கு 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் சாரம் பெற்ற சனி திசையில் புதன் புக்தியில் திருமணம் நடந்து கேது புக்தியில் விவாகரத்தானது.

கீழே மற்றொரு நபரின் ஜாதகம்.


லக்னப்புள்ளி துலாத்தில் 26 பாகையில் அமைகிறது. ஜாதகருக்கு புதன் திசை நடக்கிறது. திசை பாவகப்புள்ளியை சார்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை இந்த ஜாதகம் கொண்டு ஆராய்வோம். ஜாதகருக்கு புதன் நிற்கும் 10 ஆவது பாவக துவக்கப்புள்ளி புதனின் சொந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அமைகிறது. ஜாதகருக்கு திசை நடத்தும் கிரகமும் புதன் என்பதால் புதன் தனது திசா காலம் முழுவதும் தனது, காரக, ஆதிபத்திய பலன்களை தான் நிற்கும் 10 ஆவது பாவம் சார்ந்து அழுத்தம் திருத்தமாக வழங்கும் எனலாம். திசா நாதன் புதன்  சூரியனோடு இணைந்திருப்பதால் உயர்ந்த நிலையிலான பணி. உச்ச குருவோடு சேர்ந்திருப்பதால் நிறைந்த தனம் புழங்குமிடத்திலும் கடக ராசி என்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய  நிறுவனத்திலும் பணி. உச்ச குரு குறிப்பிடும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் உயர்நிலை வரவு செலவு தணிக்கையாளராக  ஜாதகர் பணிபுரிகிறார். 

புதன் கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி மற்றும் லக்னத்துக்கு 9 ஆமாதிபதி என்பதாலும் ஜாதகர் தந்தை வழி பூர்வீக பூமி வகையில் விவகாரங்களை சந்தித்தார். 9 ஆம் பாவாதிபதியான புதன் லக்ன பாதகாதிபதி சூரியன் குருவோடு இணைந்து திசை நடத்வதால் ஜாதகரின் தந்தைக்கு உயிர் கொல்லி நோயான புற்றுநோய்  வந்து மரணத்தை தந்தது. (9 ஆமதிபதி + குரு + சூரியன் இணைவு தந்தைக்கு புற்றுநோயை தரும்). கடக ராசியில் புதன் நின்று பாதகாதிபதி, ரோகாதிபதி தொடர்பு கொண்டு திசை நடத்துவதால் தந்தை வழி பாரம்பரிய ரத்த தொடர்புடைய வியாதியான சர்க்கரை வியாதிக்கு ஜாதகர் ஆட்பட்டார். 

புதன் இளைய சகோதரியையும் சுக்கிரன் மூத்த சகோதரியையும் குறிக்கும். புதன் பாதகாதிபதி சூரியன் மற்றும் சகோதர-சத்ரு ஸ்தானாதிபதி குருவோடு தொடர்புகொண்டு திசை நடந்துவதாலும் சகோதர சகோதரிகள் வகையில் ஜாதகருக்கு அதிருப்தி உண்டு. முதல் மகளை குறிப்பிடும் சுக்கிரன் பாதகம் பெற்று அமர்ந்ததாலும்  முதல் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 6 அமர்ந்து புதன் திசை நடத்துவதாலும் ஜாதகரின் முதன் பெண் மகளோடு ஜாதகருக்கு சரியான புரிதல் இல்லை.

ஒரு ஜோதிடர் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்ய எவ்வளவு முறைகளை பயன்படுதினாலும் எந்த அளவு அவற்றில் தனது திறமையை, சுய ஆய்வை, அனுபவத்தை பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரை வெற்றிகரமான ஜோதிராக உருவெடுக்கிறார் என்பதை மறத்தல்  கூடாது.

இது ஒரு மீள்பதிவு.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


அதுவரை 

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Friday, 16 October 2020

கடவுளைத்தேடி!

 


வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி வாழ்வின் புதிர்களுக்கு விடைகாண முயன்ற ஒரு இளைஞன் தன்னால் ஈர்க்கப்பட்ட குரு தனக்கு வழிகாட்டுவார் என எண்ணுகிறான். அவர் மூலம் படைத்தவனை உணர அவனால் முடிந்ததா? அவனது ஞானத்தேடல்களுக்கு விடை கிடைத்ததா? அல்லது வாழ்வில் புதிர்களுக்குள் அவன் சிக்கிக்கொண்டுவிட்டானா? என இப்பதிவில் ஆராய்வோம்.

ஜாதகர் 1976 ல் பிறந்தவர். மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ஞானகாரகன் கேது, மோட்ச ஸ்தானாதிபதி (12 ஆமதிபதி) குருவுடன் இணைந்துள்ளது. இவரது பிறப்பின் நோக்கத்தை, ஞானத்தேடல்களில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதை குறிப்பிடுகிறது. மனோ காரகன் சந்திரன் மறை பொருளை குறிக்கும் 8 ஆமிடத்தில் நீசமாகி, சந்திரனுக்கு 1௦ல், சந்திரனுக்கு திக்பலம் தரும் வகையில் அமைந்த செவ்வாயால் நீச பங்கமும் ஆகியுள்ளது. இதனால் இவரது மனம் மறைப்பொருள் சார்ந்த வகையில் சிந்திக்கும் என்பது புலனாகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் மற்றொரு மறைபொருள் சார்ந்த மோட்ச காரகன் ராகு நிற்பதால் இவரது தொடர்புகள் ஞானம், மோட்சம், இறைவழி சார்ந்ததாகவே அமையும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ள கேது,குருவிற்கு திரிகோணத்தில் சூரியனின் வீட்டில் அமைந்து கேதுவோடு சேர்ந்த குருவின் பார்வையை பெறுவதால் ஒரு உயர்ந்த இடத்தில் (மடத்தில்)  ஞானத்தை தேடும் குருவின் தொடர்பு ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை .குறிப்பிடுகிறது. ராசியிலும் நவாம்சத்திலும் 7 ஆமிடம் பாவிகளால் கெட்டு, குருவின் பார்வையை பெறுகிறது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்வு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஜாதகர் 1௦ ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமின்றி ஞானத்தேடலில் சனி திசையில் லக்னத்தில் நின்ற குருவின் புக்தியில் வீட்டை விட்டு கிளம்பி தன்னை ஈர்த்த குருவின் ஆசிரமத்தை அடைந்தார். குருவை தரிசித்த ஜாதகர். அங்கேயே தங்கிவிட எண்ணினார். ஆசிரமத்தில் தங்கி பயிற்சி பெற ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக ஜாதகர் ஆசிரமம் இருந்த ஊரில் ஒரு குதிரை லாயத்தில் ஓரிரு வருடங்கள் சனி திசை முடியும் வரை வேலை பார்த்தார். ஜாதகரின் விருப்படியான விஷயங்களை ராசியைக்கொண்டே அளவிட வேண்டும். ஜாதகரின் கர்மவழி விஷயங்களை லக்னத்தை கொண்டு அளவிட வேண்டும். இந்த அடிப்படையில் ஜாதகரின் விருப்பத்தை குறிக்கும் ராசிக்கு 5 ஆமதிபதி குரு 6 ல் அமைந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகர் தனது விருப்பம் நிறைவேற வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை செய்து கிடைத்த பணத்தில் ஜாதகர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பயிற்சி பெற்றார். ஜாதகருக்கு புதன் திசை துவங்கி சுய புக்தி முடியும் வரை அது நீடித்தது.

ஜாதகரின் குரு  காமத்தை நுகர்ந்து கடந்து பிறகு ஆன்மீகப்பாதைக்கு திரும்புமாறு போதித்தார். ஏனெனில் காமம் கொண்ட மனம் எப்போதும் தெளிவடையாது. எனவே காமத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்கு கூறினார். இதனால் ஜாதகர், தன்னைப்போன்று ஆஸ்ரமத்திற்கு வந்த சக ஆசிரம வாசிகளுடன் காமத்தை நுகர்ந்தார். சுகஸ்தானாதிபதியான சந்திரன் உடலுறவை குறிக்கும் 8 ஆமிடத்தில்  சுகஸ்தானத்தில் அமைந்த சனியின் அனுஷம்-1 ல் அமைந்துள்ளது. சனி திருட்டு, குறை, முறையற்ற விஷயங்களுக்கும், சந்திரன் முறையற்ற உறவிற்கும் காரக கிரகங்களாகும். புதன் காமத்திரிகோணமான மிதுனத்தில் நண்பர்கள் சூரியனோடும் சுக்கிரனோடும் அஸ்தங்கமடையாமால் சிறப்பாக அமைந்துள்ளது. புதன் தனது திசையில் ஜாதகரின் மனம் காமத்தின்பால் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் என்றால் அது மிகையல்ல.சிந்தனை ஸ்தானமான 5 ஆமதிபதி சூரியன், திசாநாதன் புதனோடு இணைந்ததால் ஜாதகரின் மனம் காமத்தில் திளைத்தது.

ஜாதகரின் காம ஸ்தானமான 7 ஆமிடத்தில் ராகு நிற்கிறார். இதனால் 7 ஆமிட தொடர்புகள் வளரும். ஜாதகர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலம் ஒன்றில், ஒரு மகனோடு உள்ள விதவை ஒருவருடன் திருமணமாகாமால் இணைந்து வாழ்கிறார். ராகு விதவையையும் குரு ராகுவை பார்ப்பதால் அவர் குழந்தை உள்ளவராகவும் இருந்தார். 7 ஆமிட ராகு 7 ஆமதிபதி சுக்கிரன் போலவே செயல்படுவார். புகன் திசையில் குருவின் சாரம் புனர்பூஷம்-3 ல் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் அந்த தொடர்பு அமைந்தது. சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளது குறையுள்ள அதாவது விதவையான பெண்மணி என்பதையும், குரு சாரத்தில் அமைந்ததால் அவர் குழந்தையுடனும் இருந்தார் என்பதையும் தெரிவிக்கிறது. குரு திசையில் ஜாதகருக்கு ஏற்பட்ட ஞானத்தேடலை புதன் திசை தனது தன்மையோடு இணைந்து ஜாதகருக்கு புகட்டினார். எனினும் ஞானத்தேடலை ஜாதகர் கைவிடவில்லை. காரணம், புதன் ராசிக்கு 8 ஆமதிபதி. அதே சமயம் புதன் காம திரிகோணாதிபதியாகி காதல் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்ததால் ஞான அனுபவத்திலும், தன் மீது காதல்கொண்டு தன்னை நாடிவந்த பெண்களால் காம அனுபவத்திலும் ஒன்றுபட்ட சூழல்களால் ஜாதகர் திக்குமுக்காடினார். சில காலங்களுக்குப்பிறகு மீண்டும் பழைய ஆசிரமத்திற்கு திரும்பினார். அதன்பிறகு ஆசிரமத்தில் தவிர்க்க முடியாத முதன்மை நபர்களில் ஒருவரானார். ராஜ கிரகமானா சூரியனோடு திசா நாதன் புதன் சேர்ந்ததால் ஜாதகரின் ஞானத்தேடலில் ஒரு உயர்ந்த தன்மை வெளிப்பட்டது. அதே சமயம் காமமும் ஜாதகரை வழிய வந்து அணைத்துக்கொண்டது.

மோட்சத்திரிகோணமான 4 ஆமிட சனியின் பிற்பகுதியில் ஜாதகரின் மனம் ஞானத்தை நோக்கி கடினத்துடன் திரும்பியது என்றால் புதன் திசை அதை காதலுடன் உயர்த்தியிருந்தது. ஒரு வழியாக ஜாதகருக்கு புதன் திசை முடிந்து ஞான காரகன் கேதுவின் திசை 2012 முற்பகுதியில் துவங்கியது. ஞான காரகனானாலும் காமத்திரிகோணத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-2 ல் நின்ற கேது ஞானத்தோடு காமத்தொடர்புகளையும் ஜாதகருக்கு வழங்கியது கேது திசையில் ஜாதகர் ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாக, தியானப்பயிற்சியாளராக உயர்ந்தார். அதே சமயம் கிறிஸ்தவர்களை குறிக்கும் கேது திசையில் அயல் தேச பெண்மணி ஒருவருடன் ஜாதகர் திருமணம் செய்துகொள்ளாமல் ஓரிரு வருடங்கள் இணைந்து வாழ்ந்தார். கேதுவின் திரிகோணத்தில் காதல் பாவமான 5 ல் லக்னாதிபதி செவ்வாய் அமைந்தது அதற்கு காரணம். பிற்பாடு தன்னை மிகவும் நேசித்து, தன்னை திருமணம் செய்துகொண்டு தனது தேசத்திற்கு வந்துவிடுமாறு மன்றாடிய அப்பெண்ணின் வேண்டுகோளை கனத்த இதயத்துடன் நிராகரிக்கிறார். கேது திசையில் குரு புக்தியில் அது நிகழ்ந்தது. குரு ஜாதகரின் பிறப்பின் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்தி அந்த தொடர்பை துண்டிக்க வைக்கிறார். ராகு-கேதுக்களின் இணைவில் அவைகளை மீறி செயல்படக்கூடிய ஒரே கிரகமாக திகழ்வது கிரகங்களிலேயே குரு ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேது திசை முடிந்து ஜாதகர் சுக்கிர திசையில்தான் உள்ளார். சுக்கிரன் காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில்தான் உள்ளார். 5 பாகை இடைவெளியில் சுக்கிரனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிப்பைத்தராது. சுக்கிர திசையிலும் ஜாதகர் ஆன்மீக மற்றும் காம ரீதியான தொடர்பில்தான் தற்போதும் இருப்பார்.

பொத்திப்பொத்தி வளர்த்த சித்தார்த்தனை புத்தனாக்கியதும், செல்வத்தில் திளைத்த பட்டினத்தாரை திருவோடேந்த வைத்ததும் கிரகங்களின் லீலைகளே. கடவுளைதேடிச்சென்ற நமது ஜாதகரை ஞானத்திலும் காமத்திலும் திளைக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே கிரகங்களே. நாம் எதை அடைய வேண்டும், யாரை எப்போது தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கிரகங்களே. இது புரிந்தால் இறை புரியும், இயற்கை புரியும், ஞானம் சித்திக்கும், மனம் அமைதி பெறும். ஜோதிடம் அதற்கு ஒரு வழிகாட்டி. ஜாதகம் அதற்கொரு சாட்சி பூதம்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501.