Monday 28 November 2016

கெட்டவன் எப்போது நல்லவனாகிறான்?

நல்லவர்களை பார்த்து எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீயவர்களை பார்த்து எப்படி வாழக்கூடாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பார்கள்.

ஜோதிடத்தில் இயற்கை சுபர்கள் மற்றும் இயக்கை பாவிகள் என்ற வரையறை அனைவரும் அறிந்த ஒன்று. அறியாதவர்களுக்காக அந்த வரையறை கீழே.

குரு         - முழுமையான சுபர்.
சுக்கிரன்     - முக்கால் பங்கு சுபர் கால் பங்கு பாவி.
சந்திரன்     – வளர்பிறையில் சுபர் தேய்பிறையில் பாவி.
புதன்        - தனித்த நிலையில் சுபர். ஆனால் சுபர்களோடு கூடின் சுபர்  பாவிகளோடு கூடின் பாவி.
சூரியன்     - பாதி பங்கு சுபர். பாதி பங்கு பாவி.
செவ்வாய்   - கால் பங்கு சுபர். முக்கால் பங்கு பாவி.
சனி        - முழுமையான பாவி.
ராகு-       - முழுமையான பாவி.
கேது       முழுமையான பாவி.

மேற்சொன்ன வரையறைகள் கிரகங்களின் சுபாவ குணங்கள் அவ்வளவே.

கிரகங்களின் சுபாவ குணங்கள் எப்படி இருப்பினும் ஜாதக கட்டத்தில் கிரகங்கள் பெறும் ஆதிபத்தியம் மற்றும் அமைவை பொறுத்தே பலன்களை வழங்கும்.

சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எதுவானாலும் நல்ல பலன்களை வழங்க முயலும். அது போன்றே தீய ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் எதுவானாலும் தீய பலன்களை வழங்க முயலும்.

பாவ ஆதிபத்யம் பெற்ற ஒரு கிரகம் ஜாதகத்தில் கெட்டுவிட்டால் அது நன்மையை செய்யும் அமைப்பாக்கும். இத்தகைய அமைப்பைத்தான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கின்றனர். எளிமையாக கூற வேண்டுமானால் உங்களை கொலை செய்ய வரும் ஒருவனுக்கு வழியில் நடந்த விபத்தில் கால்களை இழந்துவிட்டதைப்போல. இனி அந்த எதிரியால் உங்களுக்கு தொல்லை இல்லை. அவனது கணக்கு நேர் செய்யப்பட்டுவிட்டது என்று பொருள்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ராகு-கேதுக்களின் பிடியில் அனைத்து கிரகங்களும் அடைபட்டுவிட்டன. திருமணத்தோடு தொடர்புடைய 2,4,7,8,12 ஆமதிபதிகளும் அவர்களது பாவங்களும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. லக்னாதிபதி செவ்வாய் பாதகாதிபதியும் கடும் பகைவனுமான சனியுடன் சேர்ந்து நான்காம் பாவத்தில் நீசமாகி உள்ளார். மேஷ லக்னத்தவர்க்கு குரு சுப ஆதிபத்யம் பெற்ற கிரகமானாலும் சனி பார்வை பெற்றுவிட்டால் நல்லதை செய்ய மாட்டார். கால சர்ப்ப தோஷத்தில் இந்த ஜாதகம் ஒரு கடிமையான வகை.

ஜாதகருக்கு 1995 பிற்பகுதியில் லக்னத்திற்கு பாதகாதிபதியான சனியின் திசை துவங்கியது.

பொதுவாக ஜாதகத்தில் கெடுதலை செய்யும் நிலையில் அமைந்துவிட்ட கிரகத்தினது காரகத்தை அனுபவிக்கும் காலத்தில்தான் ஒரு ஜாதகர் சனியின் பிடியில் அகப்படுவார். சனி தண்டனைக்கு உரிய கிரகம் என்பதே இதற்கு காரணம்.

இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சுய சாரத்தில் பரணி நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் லக்னத்திற்கு பாதகாதிபதியும் கடும் பாவியுமான சனியின் பார்வைக்கு உள்ளானதால் சுக்கிரனின் காரகமான இல்லற இன்பத்தை அனுபவிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. 19 வருடங்களை கொண்ட சனி திசை,  திருமணம் செய்யவேண்டிய இளமை காலம் முழுவதையும் முழுமையாக ஆக்கிரமித்து திருமணத்தை தடை செய்தது. சுகஸ்தானத்தோடு தொடர்பு கொண்டதால் இல்லற வகையில் சுகம் கிடைக்கவிடாமல்  தடை  செய்தது.

ஜாதகத்தில் பாவ ஆதிபத்யமான 6 க்கு உடைய புதன் இரண்டாம் பாவத்தில் அமைந்துள்ளதை கவனியுங்கள். ஒரு பாவத்தில் அமையும் கிரகம் அந்த பாவத்தை கட்டுப்படுத்தும் தகுதியை பெறுகிறது. இரண்டாம் பாவத்தில் அமைந்துவிட்டதால் ஆறாம் பாவாதிபதி எனும் வகையில் ஜாதகருக்கு குடும்பம் அமையாமல் தடை செய்ய வேண்டும். ஆனால் புதன் இங்கு வக்ரகதிக்கு உள்ளாகிவிட்டதால் தனது ஆதிபத்ய கெடுபலனை செய்ய இயலாத நிலையில் உள்ளார். வக்ரகதிக்கு உள்ளாகிவிட்டதால் புதனின் செயல்பாடு இனி அது அமைந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு உடைய சுகஸ்தானாதிபதி சந்திரனை சார்ந்ததாகவே இருக்கும். புதனின் இந்த நிலையை கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற மொழிக்கு உதாரணமாகக்கொள்ளலாம். புதனை பொறுத்தவரை ஒரு கெட்டவன் இங்கு நல்லவனாகிறான் எனலாம்.

புதனுக்கு சனி தொடர்பு எதுவும் இல்லை என்பது ஒரு நல்ல அம்சம். புதன் நின்ற நட்சதிராதிபதி சந்திரன் திருமணம் தொடர்புடைய ஏழாம் பாவத்தில் ராகுவோடு இணைந்துள்ளார். எனவே சனி திசை முடிந்து புதன் திசை சுய புக்தியில் ஏழரை சனியின் நிறைவு கட்டத்தில் ஜாதகருக்கு தான் நின்ற பாவம் மற்றும் நட்சத்திர அடிப்படையில் ஜாதகரின் நாற்பதாவது வயதில் திருமணம் செய்வித்தது.

திருமணத்திற்கு அவசியம் ஆராய வேண்டிய நவாம்சத்திலும் புதன் குடும்பத்தை குறிக்கும் இரண்டாம் பாவாதிபதியாகி தாம்பத்யத்தை குறிக்கும் 12 ஆம் பாவத்தில் அமைந்துள்ளது திருமணத்தை செய்விக்கும் வாய்ப்பு புதனுக்கு உள்ளதை குறிப்பிடுகிறது.

திருமண நாளின் 02.05.2016 கிரக நிலைகள் கிழே.


லக்னத்திற்கு பாவியான ஆறாமதிபதி புதன் வக்கிரமாகி லக்னத்திற்கு 2 ல் உச்ச சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் நின்று சுபனாகி தனது கேட்டை நட்சத்திரத்தில் நின்ற சனி மற்றும் செவ்வாயையும் தனது பார்வையால் சாந்தப்படுத்துகிறார். தனது வீட்டில் நின்ற உச்சன் சூரியனால் வக்ரமானாலும் வலுவடைந்த செவ்வாய் சனியின் அனுஷ நட்சத்திரத்தில் நின்று சனியை அமைதிப்படுத்துவதும் முக்கிய காரணம். பகை வீட்டில் வக்கிரமடையும் கிரகங்கள் நன்மையை செய்ய வேண்டும் என்ற விதியும் சனிக்கு பொருந்துகிறது.  

சூரியன் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் உச்சமாகி சுக்கிரனையும் சுக்கிரனின் சுய பாவங்களான ஜனன லக்னத்திற்கு 2 & 7 ஆகிய ரிஷப – துலாத்தையும் வலுவூட்டுகிறார். அதோடு சுக்கிரனின் நட்சத்திரத்தில் பூரத்தில் தனது வீட்டில் ராகுவோடு இணைந்து நின்ற குருவையும் சூரியன் வலுவூட்டுகிறார். இதனால் பலம் பெற்ற குரு, ராகு-கேதுக்களால்  ஜாதகருக்கு ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷத்தை நிவர்திசெய்கிறார். எனினும் குருவோடு இணைந்து சூரியனின் உச்ச பலத்தை கிரகிக்கும் ராகு மனைவியை தனது அம்சமாக அதாவது வேற்று ஜாதியை சேர்ந்தவராக அமைத்துக்கொடுத்து அதை குடும்ப காரகன் குரு ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்கிறார்.

லக்னத்திற்கு லாபத்தில் ராசிக்கு 5 ல் சனி வீட்டில்  ராகு-கேதுக்களின் தொடர்பில் நின்று குரு பார்வை பெறும் சுக ஸ்தானாதிபதி சந்திரன் ஜாதகருக்கு திருமணத்தை நடத்தி வைத்து குடும்ப சுகம் கிடைத்திட வழி செய்கிறார்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 7871244501

2 comments:

  1. அருமையான பதிவு!!!

    பகிர்வுக்கு நன்றி.


    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete