Thursday, 28 November 2019

புத்திர பாவ நுட்பங்கள்


மேலோட்டமாக பார்க்கும் சில ஜாதக விஷயங்கள் உள்ளார்ந்து பார்க்கும்போது மாறுபட்டுத் தெரியலாம். புத்திர வகையில் தம்பதியர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்வது முக்கியம். இரு ஜாதகங்களை இணைக்கும்போது ஒருவரது ஜாதகத்தை மற்றொருவரது ஜாதகம் பாதிக்கும். உதாரணமாக பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பின் ஆணின் ஜாதகத்தில் வலிமையான குரு பெண்ணின் பாதிக்கப்பட்ட 5 ஆம் பாவத்தை பார்க்கும் அமைப்பில் பெண்ணின் புத்திர பாவ தோஷம் கட்டுப்படுத்தப்படும்.  இன்றைய பதிவில் தனிப்பட்ட ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை அலசுவதில் உள்ள சில நுட்பங்களை உதாரண  ஜாதகங்களுடன் பார்ப்போம்.



ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கன்னி லக்ன ஜாதகத்தில் 5 ஆமதிபதியான சனி விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 1 பாகை முன்னிலையில் அஸ்தங்கம் பெற்றுள்ளார். உயிரணு உற்பத்திக்கு காரகன் சூரியனுடன் சூரியனின் பகைக்கிரகம் சனி இணைவது புத்திர பாக்கியத்திற்கு தடை, தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  ராகு புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்து குழந்தைபேறுக்கு சாதகமான அமைப்பு அல்ல. புத்திர காரகன் குரு வக்கிரமடைந்து அஷ்டமத்தில் மறைந்த நிலையில் உள்ளார். பொதுவாக இத்தகைய அமைப்புகள் புத்திர பாக்கியத்திற்கு தடை என பொதுவாக ஒதுக்கிவிடக்கூடாது. இத்தகைய தடைகளுக்கு எதிர் அமைப்புகள் உள்ளதா? அதன் அளவு என்ன? அது வெளிப்படும் திசா புக்திகள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும்.

அப்படி கவனிக்கையில் லக்ன பாதகாதிபதி  குரு வக்கிரமடைவது குருவால் ஏற்படும் பாதகத்தன்மை மாற்றமடைவதையும் 8 ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க குருவால் நன்மையே ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. லக்னாதிபதி புதனுக்கும் குடும்ப பாக்யாதிபதி சுக்கிரனுக்கும் 8 ஆமிட குருவின் பார்வை கிடைப்பது சிறப்பானது. குரு  பார்வை இவ்விரு கிரகங்களுக்கும் ராசிக்கு 5 ஆமிடத்தில் கிடைக்கிறது என்பது கூடுதல் பலமாகும். மேலும் மேஷ குரு பரணி – 4 லிலும் துலாச்சுக்கிரன் விசாகம் – 1 லிலும் அமைந்து சாரப்பரிவர்தனை பெறுகின்றனர். குடும்பத்திற்கு புதிய வரவை குறிக்கும் சுக்கிரன் 5 க்கு 5 ஆமிடமான (பாவத் பாவ)  ரிஷபத்திற்கும் உரியவராகி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மிகச்சிறப்பானதாகும்.  இது மட்டுமின்றி இந்த ஜாதகத்தில் குரு – சுக்கிரன் சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள் என்றால் குருவும் சதுர்த்த கேந்திரத்தில் குருவின் வீட்டில் அமைந்த செவ்வாயும் நேரடியாகவே பரிவர்த்தனை பெறுகின்றனர். இதனால் நன்மை செய்யும் நிலையில் அமைந்த லக்ன பாதகாதிபதி குருவுடன் தொடர்புகொள்ளும் செவ்வாயும் ஜாதகத்தில் நன்மை செய்யும்  நிலையிலேயே அமைந்துள்ளது. இத்தகைய பரிவர்தனைகளால் குரு, சுக்கிரன், செவ்வாயும் இவை சாரம் பெரும் கிரகங்களும் நன்மையையே செய்ய வேண்டிய நிலை பெறும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும் சூரியனும் சனியும் செவ்வாயின் சித்திரையில் அமைந்துள்ளனர். ஐந்தாம் பாவத்தில் அமைந்த ராகுவும் செவ்வாய் சாரத்தில் அவிட்டத்தில் நிற்கிறது. இதனால் சுபத்துவமடைந்த செவ்வாயின் சாரம் பெற்றதால் சனி சூரியன் சேர்க்கையால் ஏற்படும் உயிரணு குறைபாடு ஜாதக அமைப்பிலேயே நிவர்த்தியாகிவிடுகிறது. ஜாதகருக்கு சனி திசையில் புதனின் புக்தியில் பெண் குழந்தை பிறந்தது.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் 5 ஆவது பாவத்தில் சனி அமைந்து லக்ன பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறது. குருவின் வீட்டில் சனி-செவ்வாய் தொடர்பு பெறுவது இவ்விரு கிரகங்களின் கடுமையை மட்டுமே குறைக்கும். குரு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்து குடும்ப ஸ்தானத்தில் சுய சாரம் ஹஸ்தம்-2ல் நிற்கும்  சந்திரனை பார்ப்பது ஒரு நல்ல அமைப்பு. இது ஜாதகியின் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதை குறிக்கிறது. பாக்கிய ஸ்தானாதிபதி செவ்வாய் புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். மேலும் லக்னாதிபதி சூரியன் பெண்களுக்கு முக்கிய புத்திர ஸ்தானமான 9 ஆமிடத்தில் உச்சமாகி அந்த ஸ்தானத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். குரு 5 ஆவது பாவமான தனுசுக்கு 6 ல் அமைந்துள்ளது. 5 ஆம் இடத்து அதிபதி மற்றும் கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பது மட்டுமே ஓரளவு புத்திர பேறுக்கான சாதக நிலையாகும்.

5 ல் அமைந்த சனி பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுவதால் புத்திர பாக்கியத்தை ஒரு பாதகத்தை அடைந்த பின்னரே  பெறமுடியும் என்பது விதி. லக்னாதிபதி பாதகத்தில் இருப்பதும் இதையே உறுதி செய்கிறது.  ஜாதகி புத்திரப்பேறு தொடர்பாகவே ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பிரசன்ன ஜாதகமும் ஜாதகி விரைவில் புத்திரப்பேறை அடைய இருக்கிறார் என்பதையே காட்டியது. உண்மையில் அடியேன் குழம்பித்தான் போனேன். பிறகு கூறினேன் “ அம்மா பூர்வீகம் தொடர்பாக ஒரு பாதிப்பை நீங்கள் அடைந்து பிறகே புத்திரம் வாய்க்கும் அமைப்பு தங்கள் ஜாதகத்தில் உள்ளது” எனக்கூறினேன்.  அதற்கு ஜாதகி கூறிய பதிலில் ஆச்சரியமுற்றேன். ஜாதகி பிறப்பால் கிறிஸ்தவர். லக்ன கேது இதை குறிப்பிடுகிறது. சனி செவ்வாய், 5 – 9 தொடர்பால் ஜாதகி மதம் மாறி ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளார். எனவே 5 ஆமிடம் குறிப்பிடும் பூர்வீக வழிபாட்டு முறையிலிருந்து ஜாதகி மாறியுள்ளார். இதனால் 5 ஆமிடம் தனது பாதிப்பை அடைந்துவிட்டது. இனி புத்திரம் அடைய தடையில்லை. பாதிப்பை அடைந்த 5 ஆம் பாவ சனி ஜாதகியின் 3௦ வயது வரை புத்திரப்பேறை தாமதப்படுத்தியுள்ளது.  இந்த பதிவை எழுதும் சமயம் லக்னத்திற்கு 5 ஆமிடத்திற்கு வந்த கோட்சார குருவின் நிலையால் குரு  திசை சுய புக்தியில்  ஜாதகி கருவுற்றிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த ஜாதகத்தில் புத்திர தோஷம் கடுமையாக உள்ளதாகவே தெரியும்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் 1, 6 ஆமதிபதி செவ்வாய் அமர்ந்துள்ளார். கடகத்தில் புத்திர காரகனும் 5 ஆம் அதிபதியுமான குரு உச்சமாகி வக்கிரமும் ஆகியுள்ளார். உச்ச வக்கிரம் என்பது நீச நிலைக்கு ஒப்பானது. குரு பாதகாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். குருவின் 5 – 9 ஆமிட தொடர்பால் புத்திரம் உறுதியாக அமையும் என்றாலும் குருவின் உச்ச வக்கிரமாகி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றதால் பாதிப்பையும் அடையும் என உறுதியாகக்கூறலாம்.  இந்த ஜாதகத்திலும் 5 – 9 பாவங்கள் தொடர்பு பெறுவதால் ஜாதகரின் மகன் ஜாதி மாறி திருமணம் செய்துள்ளார். 5 ஆமிடமான பூர்வ புண்ணியம், முன்னோர்களை குறிக்கும் 9 ஆம் பாவங்களின் வடிவில் தோஷம் வெளிப்பட்டுவிட்டது.

புத்திர பாவத்தை ஆய்வு செய்வதில் குரு, 5 ஆம் பாவாதிபதிகளின் நிலைமை. மற்றும் இவர்களின் சாரத்தில் அமைந்த கிரகங்கள், இவை பெற்றுள்ள ஆதிபத்தியங்கள், திசா புக்திகள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்தால் புத்திரத்தின் தன்மையை தெளிவாக அறியலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Thursday, 21 November 2019

வெளிநாட்டில் வீடு வாங்கும் யோகம்.


வாழ்க்கைப்போராட்டத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வெளிநாட்டு வாழ்வு என்பது கனவு. குடும்பத்தை பிரிந்து பலகாலம் வெளிநாட்டில் வாழும் குடும்பஸ்தருக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்பது தண்டனை என்பர். சிலருக்கு மட்டும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் சூழல் அமைகிறது. தாய் நாட்டில் இன்றைக்கு வீடு வாங்குவதே கடினம் எனும் சூழலில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வீடு, வாகன வசதிகளுடன் வசிக்கும் சூழல் அமைவது வெகு சிலருக்கே. இதை மீறி வெளிநாட்டில் வீடு வாகன வசதிகளை அடைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் கொடுப்பினை இருக்க வேண்டும். நமது இந்த வாரப்பதிவு அதற்கான காரணிகளை ஆராய்வதே.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகிக்கு கேது ஒன்பதாவது பாவத்தில் கன்னியில் உள்ளார். ஒன்பதாம் பாவம் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும். ராகு-கேதுக்கள் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும். இதனால் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசிக்கிறார்.  வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்திற்கும் லாபத்தை குறிக்கும் 11 ஆம் பாவத்திற்கும் உரிய செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்று அமர்ந்துள்ளது.  பரிவர்த்தனைகளில் நீச்ச பரிவர்த்தனை என்பது ஒரு அருமையான அமைப்பு. ஏனெனில் பரிவர்த்தனைக்குப்பிறகு நீச்ச கிரகங்கள் தங்கள் ஆட்சி வீட்டுக்கு வந்துவிடுகின்றன.  பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் லாப ஸ்தானத்தில் சனியோடு இணைகிறது. நடப்பு திசா நாதன் கேது செவ்வாயோடு பரிவர்தனையாகும் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் கேதுவுக்கு செவ்வாயோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஜாதகி நடப்பு கேதுவின் திசையில் வீட்டை குறிக்கும் லக்னத்திற்கு நான்காமிடத்தில் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷத்தில் அமைந்த குருவின் புக்தியில் தற்போது வெளிநாட்டில் வீடுவாங்க தேர்வு செய்துகொண்டுள்ளார். பரிவர்த்தனைக்கு பிறகு ஏற்படும் சனி செவ்வாய் தொடர்பால் ஜாதகி பழைய வீட்டை வாங்கி சீர்செய்து குடிப்போக இருக்கிறார்.

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே முதன்மையான நீர்க்கோளான குரு அமைந்து 7ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கும் பூமிகாரகன் செவ்வாயின் பார்வையை பெறுகிறது. வீடுகாரகன் சுக்கிரன் 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் திக்பலத்துடன் நின்று நவாம்சத்தில் உட்சம் பெறுகிறது. இதனால் ஜாதகர் குரு  திசையில் வெளி நாட்டில் வீடு வாங்கினார். லக்னத்தில் நிற்கும் குரு வக்ரமாகி இழப்பை குறிக்கும் 12 ஆவது பாவத்தை நோக்கி போகிறது. வக்கிர குரு என்பதால் குருவின் திக்பலம் அடிபட்டுவிடுகிறது. செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 4 ல் திக்பலத்தில் அமையும் சுக்கிரனும் 4 ன் விரைய பாவமான 3ஆமதிபதியாகிறார். மேலும் சுக்கிரன் லக்னாதிபதி சூரியனுக்கு  பகைவராகி சூரியனுக்கு பாதகத்தில் நிற்கிறார். இந்த ஜாதக அமைப்புகள் வீடு வாங்கினாலும் அதை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதை உணர்த்துகிறது. வெளி நாட்டு வீடு பாக்கியத்தில் ஏற்படும் தடைகளை 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவமான 8 ஆவது பாவத்தை ஆராய்ந்தால் புரியும். குரு 5 ஆவது பாவாதிபதியாகி அதன் பார்வையை பெறுவதாலும் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆம் பாவத்திற்கு பாவத்பாவமானதாகவும் தனுசு அமைவதாலும்   5 ஆமிட சிறப்பால் ஜாதகர் வெளிநாட்டு வேலை, வீடு பாக்கியங்களை அடைந்தார். அதே குரு வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆமிடத்திற்கு விரைய பாவமான அஷ்டமத்திற்கும்  அதிபதியானதால்  குரு திசையின் இரண்டாவது பகுதியில் அஷ்டமத்தில் ராகுவோடு இணைந்து நின்ற சனியின் அமைப்பால் பணியிழப்பை சந்தித்து இந்தியா திரும்பினார். வீடு உள்ள நாட்டில் இதுவரை சரியான வேலை அமையாமல் வாங்கிய வீட்டை அனுபவிக்க இயலாமல் ஜாதகர் இந்தியாவில் உள்ளார்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்ற நான்காம் அதிபதி சனியோடு லக்னத்தில் ஆட்சி பெற்ற பூமி காரகன் செவ்வாய் உள்ளது. லக்னாதிபதி செவ்வாய் ஜீவன காரகன் சனியோடு இணைந்து நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்திருப்பதால் ஜாதகரின் ஜீவனம் வெளிநாட்டில் அமைகிறது.  லக்ன செவ்வாய் வீட்டை குறிக்கும் 4 வது பாவத்தை பார்க்கிறது. வீடு காரகன் சுக்கிரன் மீனத்தில் உச்ச நிலையில் உள்ளார். இதனால் ஜாதகர் நடப்பு செவ்வாயின் திசையில் 4 ஆம் பாவத்தில் நிற்கும் குருவின் புக்தியில் வெளிநாட்டில் வீடு வாங்க உள்ளார். செவ்வாய் சனியோடு தொடர்பு பெறுவதால் பழைய வீட்டை வாங்கும் முனைப்பில் உள்ளார். 

நான்காவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

மகர லக்ன ஜாதகத்தில் கணவன் மற்றும் வீட்டை குறிக்கும் செவ்வாய் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் வீடுகாரகன் சுக்கிரனின் வீட்டில் நிற்கிறது. செவ்வாய் சந்திரனின் சாரம் பெற்றதால் கணவர் வெளிநாட்டில் தொழில் செய்தவர். சந்திரன் வீட்டை குறிக்கும் 4 ஆவது பாவத்தில் நின்றதால் கணவர் செவ்வாய் திசையில் வெளிநாட்டில் பூமி வாங்கி வியாபர நிறுவனம் அமைத்து வியாபாரம் செய்தார். செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்புகொண்டு நீசத்தை நோக்கி செல்வதால் வெளிநாட்டில் அமைந்த சொத்தை அனுபவிக்க முடியாது என்பது தெரிகிறது. செவ்வாய் திசைக்கு அடுத்து மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அமைந்த ராகுவின் திசையில் கணவர் மரணமடைந்தார். ஜாதகிக தற்போது 12 ஆவது பாவத்தில் ஜீவன காரகன் சனியோடு இணைந்த குருவின் திசையில் உள்ளார்.  தன வரவை குறிக்கும் 2 ஆமிடத்திற்கு லாபத்தில் 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் மூல நட்சத்திரத்தில் திசா நாதன் குரு அமர்ந்து திசை நடத்துகிறார்.  ஜீவன காரகன் சனியும் திசா நாதன் குருவும் வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளனர். இதனால் வெளிநாட்டில் கணவர் வாங்கிய சொத்தை ஜாதகி நேரடியாக அனுபவிக்க முடியவில்லை. ஆனால் வெளிநாட்டில் கணவர் ஏற்படுத்திய நிறுவனம் மூலம் ஜாதகிக்கு இன்றும் வருமானம் வந்துகொண்டிருக்கிறது. என்னே கிரகங்களின் லீலைகள்.

எந்த பாக்கியங்களை ஒரு ஜாதகர் அடைய வேண்டும் என்பதையும் அதை எப்போது அடைய வேண்டும் என்பதையும் அதையும் எதுவரை அடைய வேண்டும் என்பதையும் ஜாதகத்தை ஆராய்ந்தால் கிரகங்களே முடிவு செய்கின்றன என்பது தெளிவாக புலனாகிறது. தெளிந்த மனம் சாந்தமடைகிறது. தெளியாத மனம் ஆத்திரங்கொண்டு தவிக்கிறது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501. 

Wednesday, 13 November 2019

திரிகோண நுட்பங்கள்


ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி எந்த கிரக சாரத்தில் அமைகிறதோ அதே கிரக சாரம்தான் அந்த பாவகத்தின் 5 மற்றும் 9 ஆவது பாவக புள்ளியாகவும் அமையும். இப்படி அமைவதை ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்மம் என ஜோதிடத்தில் அழைக்கிறோம். 12 பாவங்களையும் மேற்கண்ட அடிப்படையில் நான்கு வகையில் பிரிக்கலாம். இந்த அடிப்படையில் லக்ன திரிகோணங்களை தர்ம திரிகோணங்கள் என்றும் 2 ஆம் பாவ திரிகோணங்கள் கர்ம திரிகோணங்கள் எனவும் மூன்றாம் பாவ திரிகோணங்கள் காம திரிகோணங்கள் எனவும் நான்காம் பாவ திரிகோணங்கள் மோட்ச திரிகோணங்கள் எனவும் அழைக்கிறோம். இவை ஒருவர் கடைப்பிடிக்கும் தர்மம், பொருளீட்டளுக்கான அவரது கர்மம், அவரது இல்லற ஈடுபாடு, இறுதியாக அவரது மோட்ச நிலை ஆகியவற்றை ஆராய இந்த திரிகோணங்கள் உதவுகின்றன.

முதலாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.



ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் தர்ம திரிகோணங்கள் எனப்படும். ஒருவரது சிந்தனையும் செயல்களும் எதை நோக்கிய வகையில் இருக்கும் என்பதை இதனைக்கொண்டு அளவிடலாம். ராகு கேதுக்களுக்கு தனிப்பட்ட காரகங்கள் கிடையாது அவை நின்றபாவப்படியும் அவை இணைந்த கிரகங்களின் காரகங்களையும் கிரகித்தே அவை செயல்படும். தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது சூரியனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகர் அரசின் உயர்பதவியை நோக்கிய சிந்தனையை ஏற்படுத்திகொண்து ஒரே குறிக்கோளாக செயல்பட்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் (IAS) வென்றிபெற்றார்.

இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


ஜாதகத்தில் பொருளாதாரத்தை குறிக்கும் கர்மத்திரிகோணங்கள் எனப்படுபவை 2 ம் அதன் திரிகோணங்களான 6, 1௦ ஆகும். ரிஷப லக்னத்திற்கு 2 ஆம் பாவாதிபதியும் முதல் கர்மத் திரிகோணாதிபதியுமான புதன் உச்ச சுக்கிரன், ஆட்சி குரு மற்றும் ராகுவுடன் இனைந்து நீச பங்கம் பெறுகிறார். லக்னாதிபதியே இரண்டாவது கர்ம திரிகோணமான துலாமின் அதிபதியும் ஆகி உச்சமாகி லாப ஸ்தானத்தில் குரு, புதன், ராகு தொடர்பு பெறுகிறார். மூன்றாவது கர்ம திரிகோணத்தில்தான் இதர 2 திரிகோணாதிபதிகள் தொடர்பு பெறுகிறார்கள். ஜாதகர் குரு, புதன் குறிப்பிடும் ஆசிரியராக பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இதற்கு லக்னாதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில் குருவின் பூரட்டாதியில் நின்று உச்சமானதும், ஜீவன காரகன் சனி விருட்சிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்பதும் ஒரு காரணம்.

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகம். லக்னத்திற்கு 3, 7, 11 ஆகிய பாவங்கள் காமத்திரிகோணங்கள் எனப்படும். முதலாவது காமத்திரிகோணமான மீனத்தின் பாவக துவக்கப்ப்புள்ளி புதனின் ரேவதி நட்சத்திரத்திலும்  2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தின் துவக்கப்புள்ளி புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் மூன்றாவது காமத்திரிகோணமான விருட்சிகத்தின் துவக்கப்புள்ளி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது. புதன் 2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தில் லக்னத்திற்கு இரண்டில் நிற்கும் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. காதலை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியும் குடும்ப பாவாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் காதல் காரகன் புதனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தில் நிற்கிறது.

ஜாதகி காதல் திருமணம் புரிந்துகொண்டவர்.

நான்காவதாக கீழே ஆணின் ஒரு ஜாதகம்.


கன்னி லக்னம். லக்னாதிபதி புதன் கால புருஷனுக்கு  8 ஆமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து நிற்கிறது. 8 ஆமிடம் என்பது மறைபொருள் என்பதையும் அது கால புருஷனின் 2 ஆவது மோட்ச பாவம் என்பதையும் நாம் அறிவோம். இப்படி கால புருஷனின் இரண்டாவது மோட்ச பாவத்தில் அமைந்த லக்னாதிபதி புதனை லக்னத்தின் இரண்டாவது மோட்ச பாவாதிபதியும் புதனின் ராசிநாதனுமான செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபெற்று ௮ ஆவது பார்வையால் பார்க்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இது மோட்சம் நோக்கிய ஜாதகரின் உறுதியை தெரிவிக்கும். லக்னத்திற்கு மோட்ச பாவங்கள் எனப்படுபவை 4, 8, 12 ஆகியவை ஆகும். முதல் மோட்ச திரிகோணமான தனுசுவில் மறை பொருளை குறிப்பிடும் ராகுவுடன் மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடாதிபதி சூரியன் இணைந்துள்ளது. 2 ஆவது மோட்ச பாவமான 8 ஆமிடத்தில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது.  மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடத்தை ஆன்மீக கிரகங்களில் ஒன்றான பரம சுபன் குரு பார்க்கிறார். இரண்டாவது மோட்ச பாவம் மேஷத்தையும் மூன்றாவது மோட்ச பாவமான சிம்மத்தையும் ஞான காரகன் கேது தனது மூன்றாவது பார்வையால் கட்டுப்படுத்துகிறார்.

ஜாதகர் உலகம் போற்றும் மிகச்சிறத்த ஆன்மீக குரு பகவான் ரமண மகரிஷி ஆவார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Wednesday, 6 November 2019

எட்டாமிட சனி ஜீவன பங்கமா?


ஜாதகத்தில் ஜீவன ஆயுள் காரகன் சனி லக்னத்திற்கு அஷ்டமத்தில் அமைந்துவிட்டால் ஜாதகருக்கு ஆயுளுக்கு தோஷம். ஜீவன பங்கம். தாமத திருமணம் என்று பல்வேறு கருத்துக்கள் ஜோதிட உலகில் உலாவுகிறது. அதன் உண்மைத்தன்மையை அடியேன் அறிய முற்பட்டதே இப்பதிவு. 


 கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

பொதுவாக 8 ஆம் பாவ காரகன் என அழைக்கப்படும் சனி 8 ல் அமைவது தோஷமில்லை எனக்கூறப்பட்டாலும். ஜீவன, ஆயுள் காரகன் சனி 8 ல் அமைவது வருமானத்தை குறிக்கும் 2  ஆம் பாவத்திற்கு திக் பலத்தை தரும் என்பதை கவனிக்க வேண்டும். அப்படியானால் வருமானம் சிறப்பாக அமையுமா? எனில் அது சனி எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறது மற்றும் சனியோடு தொடர்பு பெரும் கிரகங்கள் எவை என்பதை பொறுத்தே முடிவே செய்யப்படுகிறது. சனி பாதிக்கப்படாத தனது நண்பர் சுக்கிரனோடும் பரம சுபன் குருவோடும் தொடர்புகொள்ளும்போது மட்டுமே இந்த திக் பலம் வேலை செய்யும். அதன விழைவுகள் தொடர்புடைய திசா புக்திகளில் மட்டுமே வெளிப்படும்.

கும்ப லக்னத்திற்கு 2ல் தன ஸ்தானத்தில் ஆட்சியாய் நிற்கும் தன காரகன் குருவும் அஷ்டமத்தில் நட்பு வீட்டில் நிற்கும் சனியும் பரஸ்பரம் பார்வை செய்கின்றன. இரண்டாமிட அமைப்பால் ஜாதகருக்கு தனம் புழங்கும் இடத்தில் வேலை அமைந்தது. புதனின் வீட்டில் சனி நின்ற அமைப்பால் புதனின் காரகத்துவம் சார்ந்த ஆவணங்கள், பதிவேடுகள் வகையில் பணி அமைந்தது. குரு - சனி தொடர்பால் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கும் வகை பணியில் ஜாதகர் அமர்த்தப்பட்டார். கால புருஷனுக்கு 6 ஆமிடத்தில் சனி நின்றதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் வேலையையும் ஜாதகர் செய்தார். சனிக்கு திரிகோணத்தில் சூரியன் அமைந்து 1௦ ஆம் பாவத்தை 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயோடு இணைந்த சூரியன் பார்ப்பதால் ஜாதகருக்கு அரசாங்க வகையில் பணி  அமைந்தது. ஜாதகர் ஜாதகத்தில் ஜீவனத்திற்கு சிறப்பாக அமையப்பெற்ற சுக்கிர, சூரிய, சந்திர, செவ்வாய் திசைகளை தனது சம்பாத்திய வருடங்களில் கடந்தார் என்பது இதில் முக்கியமானது.

ஜாதகர் அரசு வங்கியில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின்  ஜாதகம்.


இந்த ஜாதகத்திலும் ரிஷப லக்னத்திற்கு யோகாதிபதியான சனி லக்னத்திற்கு 8 ல் தனக்கு சம கிரகமான குருவின் வீட்டில் மறைகிறது. குரு 12 ல் மறைந்து அஷ்டமத்தில் தன் வீட்டில் அமைந்த  சனியை பார்க்கிறது. 2 ஆமதிபதி புதன் ராசியில் நீசமும் நவாம்சத்தில் உச்சமும் பெற்ற நிலையில் சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் மீனத்தில் நிற்கிறது. இதனால் ஜாதகர் புதன் குறிக்கும் தனியார் அஞ்சல் சேவையில் பணிபுரிகிறார். தூர தேச வசிப்பிடத்தை குறிக்கும் 12ம் பாவத்தில் நின்று சனியின் பாவாதிபதி குரு பார்ப்பதால் மாதத்தில் பாதி நாள் உள்ளூரிலும் பாதி நாள் தொலைதூர மாநிலத்திலும் பணி புரிகிறார். ஜாதகர் நீசமடைந்த புதன் திசையை கடந்து கேது திசையில் தற்போது உள்ளார். கேந்திர கேது ஏழரை சனி முடிந்த பிறகும் அடுத்து வரும் சுக்கிர திசையும்தான் ஜாதகரை உயர்த்த வேண்டும்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


கடக லக்னத்திற்கு எட்டாமிடத்தில் சனி தனது மூலத்திரிகோண வீட்டில் நிற்கிறது. செவ்வாய் 1 பாகையிலும் சனி 1௦ பாகையிலும் சூரியன் 16 பாகையிலும் சுக்கிரன் 27 பாகையிலும் நிற்கிறது. சூரியனுக்கும் சனிக்கும் 5  பாகைக்கு மேற்பட்ட தொலைவு உள்ளதால் இது பெரிய அஸ்தங்க தோஷமில்லை. லக்னாதிபதி சந்திரன் 6 ஆமதிபதி குருவை சேர்ந்துள்ளார். இது ஜாதகர் பணிக்குச் செல்வதை குறிக்கிறது. செவ்வாயின் வீட்டில் நிற்கும் ராகு முதலில் சந்திரனை சேர்கிறார். இதனால் வேலை செவ்வாய்-ராகு தொடர்பானதாக இருக்க வாய்ப்புண்டு. சனியும் செவ்வாயை சேர்ந்துள்ளதால் செவ்வாய் தொடர்பும் ஜீவனத்தில் இருக்க வேண்டும். தன ஸ்தானாதிபதி சூரியன் தொடர்பும் சனிக்கு இருப்பதால் சூரியன் தொடர்பும் சனிக்கு இருக்கலாம். சுக்கிரன் தொடர்பு சனிக்கு உள்ளதால் வேளையில் பளிச்சென்று நேர்த்தியாய் இருக்க வேண்டும். லக்னத்திற்கு 8 ல் ஆட்சியில் மூலத்திரிகோண வீட்டில் நிற்கும் சனி லக்னாதிபதியோடு சேர்ந்த குருவின் 5 ஆவது பார்வையை வாங்குகிறார்.

லக்னத்திற்கு அஸ்டமாதிபதியானாலும் ராசிக்கு யோகாதிபதியாகிறார் சனி. சுக்கிரன் சனி தொடர்பு பெறும்போது ஜீவனம் சிறப்படையும். சனிக்கு சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்படும்போது ஜீவனம் பாதிக்கப்படும். ஆனால் சூரியன் செவ்வாய் தொடர்புடைய வேலையை செய்தால் ஜீவன பங்கம் ஏற்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜாதகர் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். வேலையில் சில பாதிப்புகள் உண்டு. ஆனாலும் இந்தப்பணி ஜாதகருக்கு உணவிடுகிறது. ராகு, செவ்வாய், சூரியன் ஆகியவை மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்களாகும். 7 ல் நிற்கும் விரையாதிபதி புதன் மருந்து வகை தொடர்பு ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறார். ஜாதகருக்கு தற்போது சதுர்த்த கேந்திரத்தில் பகை வீட்டில் வக்கிரமடைந்து ராகுவை எதிர்நோக்கியுள்ள குருவின் திசை நடைபெறுகிறது. இது மிகச் சிறப்பான அமைப்பில்லை என்றாலும் குரு சனியை பார்ப்பதால் ஜாதகரின் ஜீவனத்திற்கு குரு பார்வை பெற்ற சனி வழி செய்கிறது.

அடுத்து 4 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


மேஷ லக்னத்திற்கு லக்னத்திற்கு 8 ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் சனி வக்கிர கதியில் அமர்ந்துள்ளார். சனிக்கு பாவ கர்தாரி யோகமும் உள்ளது. இந்த ஜாதகத்தில் சனிக்கு குரு பார்வை இல்லை. சனி வீட்டில் லக்னத்திற்கு பாதகத்தில் குரு அமைந்து பாதிக்கக்கூடிய அமைப்பிலேயே உள்ளார். ஆனால் இரண்டாமிடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள தனது நண்பர் சுக்கிரனின் பார்வையை சனி வாங்குகிறார். மேலும் சனி தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் நிற்கிறார். இந்த ஜாதகத்தில் சனி ஜீவனத்தில் சிறப்பை செய்வாரா? என்றால் நிச்சயம் செய்ய மாட்டார். ஏனெனில் இந்த ஜாதகத்தில் சனி பாதகாதிபதி ஆகிறார். பாதகாதிபதியாகவும் ராசியாதிபதியாகவும் உள்ள சனி லக்னத்திற்கு அஸ்டமத்தில்  ராசிக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். ராசி அதிபதியானதால் ஆயுளுக்கு தோஷத்தை தர இயலாதபோது ஜீவன பங்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவார்.

சுக்கிரனின் சுப கதிர்வீச்சை சனி வாங்கினாலும் பாதகாதிபதியான சனி சுக்கிரனுக்கு தனது கதிர்வீச்சை பதிலுக்கு திணிக்கிறார். சனி வக்கிரமான நிலையில் உள்ளது. ஜீவன விஷயத்தில் தனது வாழ்வாதாரத்திற்கு ஒத்துவராத  ஒரு குறிப்பிட்ட எண்ணச்சுழற்சியில் ஜாதகர் இருப்பார். சனி தன் வீட்டில் லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் நிற்கும் மனோ காரகன் சந்திரனையும் லக்னத்திற்கு 5 ஆவது பாவத்தையும் பார்ப்பதால் சனியின் ஆட்டுவிக்கும்படிதான் ஜாதகரது மனம் சிந்திக்கும். தற்போது ஜாதகருக்கு லக்னத்தில் நிற்கும் ராகுவின் திசையின் இரண்டாவது பகுதியில் இருக்கிறார். வருமான ஸ்தானத்திலுள்ள சுக்கிரனை சனி பார்த்ததாலும் சனிக்கு திரிகோணத்தில் நீசம் பெற்ற புதனாலும் ஜாதகர் புதன்-சுக்கிரன் குறிக்கும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையின் ஆதாரமான முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வங்களை இழந்தார்.

ஏனைய மூன்று ஜாதகங்களிலும் சனி எட்டில் மறைந்தாலும் லக்னத்திற்கு யோகாதிபதியாகவோ, குரு-சுக்கிரனின் பார்வையை வாங்கியவராகவோ இருந்ததால் தன்னை சேர்ந்த, தான் பார்வை பெற்ற கிரகங்களின் வகையில் தொழிலில் ஈடுபட வைத்து  ஜாதகர்கள் வாழ வழி வகுத்தது. ஆனால் நான்காவது ஜாதகத்தில் சனி பாதகாதிபதியானதால் ராசி அதிபதியாக இருந்தாலும் பாதகத்தை செய்ய வேண்டியவராகிறார். 

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில் ஜாதகத்தில் சனி அமைவு மட்டுமல்ல ஏனைய கிரக அமைவுகளும் சாதகமற்று அமைந்திருந்தாலும் ஒருவர் உழைக்கும் காலங்களில்  கடந்துவரும் திசா – புக்திகளே ஜீவனத்தில் அவர் எதிகொள்ளும் சாதக பாதகங்களை நிர்ணயிக்கின்றன. 

எனவே சனி அஸ்டமம் என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம். சனி ஜாதகத்தில் அமையும் நிலைக்குத் தக்கவும் திசா – புக்திகளின் வலிமையை சார்ந்தே ஜீவன வகை விளைவுகள் ஏற்படும்.

மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கை பேசி: 08300124501