Wednesday 6 November 2019

எட்டாமிட சனி ஜீவன பங்கமா?


ஜாதகத்தில் ஜீவன ஆயுள் காரகன் சனி லக்னத்திற்கு அஷ்டமத்தில் அமைந்துவிட்டால் ஜாதகருக்கு ஆயுளுக்கு தோஷம். ஜீவன பங்கம். தாமத திருமணம் என்று பல்வேறு கருத்துக்கள் ஜோதிட உலகில் உலாவுகிறது. அதன் உண்மைத்தன்மையை அடியேன் அறிய முற்பட்டதே இப்பதிவு. 


 கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

பொதுவாக 8 ஆம் பாவ காரகன் என அழைக்கப்படும் சனி 8 ல் அமைவது தோஷமில்லை எனக்கூறப்பட்டாலும். ஜீவன, ஆயுள் காரகன் சனி 8 ல் அமைவது வருமானத்தை குறிக்கும் 2  ஆம் பாவத்திற்கு திக் பலத்தை தரும் என்பதை கவனிக்க வேண்டும். அப்படியானால் வருமானம் சிறப்பாக அமையுமா? எனில் அது சனி எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறது மற்றும் சனியோடு தொடர்பு பெரும் கிரகங்கள் எவை என்பதை பொறுத்தே முடிவே செய்யப்படுகிறது. சனி பாதிக்கப்படாத தனது நண்பர் சுக்கிரனோடும் பரம சுபன் குருவோடும் தொடர்புகொள்ளும்போது மட்டுமே இந்த திக் பலம் வேலை செய்யும். அதன விழைவுகள் தொடர்புடைய திசா புக்திகளில் மட்டுமே வெளிப்படும்.

கும்ப லக்னத்திற்கு 2ல் தன ஸ்தானத்தில் ஆட்சியாய் நிற்கும் தன காரகன் குருவும் அஷ்டமத்தில் நட்பு வீட்டில் நிற்கும் சனியும் பரஸ்பரம் பார்வை செய்கின்றன. இரண்டாமிட அமைப்பால் ஜாதகருக்கு தனம் புழங்கும் இடத்தில் வேலை அமைந்தது. புதனின் வீட்டில் சனி நின்ற அமைப்பால் புதனின் காரகத்துவம் சார்ந்த ஆவணங்கள், பதிவேடுகள் வகையில் பணி அமைந்தது. குரு - சனி தொடர்பால் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கும் வகை பணியில் ஜாதகர் அமர்த்தப்பட்டார். கால புருஷனுக்கு 6 ஆமிடத்தில் சனி நின்றதால் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும் வேலையையும் ஜாதகர் செய்தார். சனிக்கு திரிகோணத்தில் சூரியன் அமைந்து 1௦ ஆம் பாவத்தை 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயோடு இணைந்த சூரியன் பார்ப்பதால் ஜாதகருக்கு அரசாங்க வகையில் பணி  அமைந்தது. ஜாதகர் ஜாதகத்தில் ஜீவனத்திற்கு சிறப்பாக அமையப்பெற்ற சுக்கிர, சூரிய, சந்திர, செவ்வாய் திசைகளை தனது சம்பாத்திய வருடங்களில் கடந்தார் என்பது இதில் முக்கியமானது.

ஜாதகர் அரசு வங்கியில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின்  ஜாதகம்.


இந்த ஜாதகத்திலும் ரிஷப லக்னத்திற்கு யோகாதிபதியான சனி லக்னத்திற்கு 8 ல் தனக்கு சம கிரகமான குருவின் வீட்டில் மறைகிறது. குரு 12 ல் மறைந்து அஷ்டமத்தில் தன் வீட்டில் அமைந்த  சனியை பார்க்கிறது. 2 ஆமதிபதி புதன் ராசியில் நீசமும் நவாம்சத்தில் உச்சமும் பெற்ற நிலையில் சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் மீனத்தில் நிற்கிறது. இதனால் ஜாதகர் புதன் குறிக்கும் தனியார் அஞ்சல் சேவையில் பணிபுரிகிறார். தூர தேச வசிப்பிடத்தை குறிக்கும் 12ம் பாவத்தில் நின்று சனியின் பாவாதிபதி குரு பார்ப்பதால் மாதத்தில் பாதி நாள் உள்ளூரிலும் பாதி நாள் தொலைதூர மாநிலத்திலும் பணி புரிகிறார். ஜாதகர் நீசமடைந்த புதன் திசையை கடந்து கேது திசையில் தற்போது உள்ளார். கேந்திர கேது ஏழரை சனி முடிந்த பிறகும் அடுத்து வரும் சுக்கிர திசையும்தான் ஜாதகரை உயர்த்த வேண்டும்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


கடக லக்னத்திற்கு எட்டாமிடத்தில் சனி தனது மூலத்திரிகோண வீட்டில் நிற்கிறது. செவ்வாய் 1 பாகையிலும் சனி 1௦ பாகையிலும் சூரியன் 16 பாகையிலும் சுக்கிரன் 27 பாகையிலும் நிற்கிறது. சூரியனுக்கும் சனிக்கும் 5  பாகைக்கு மேற்பட்ட தொலைவு உள்ளதால் இது பெரிய அஸ்தங்க தோஷமில்லை. லக்னாதிபதி சந்திரன் 6 ஆமதிபதி குருவை சேர்ந்துள்ளார். இது ஜாதகர் பணிக்குச் செல்வதை குறிக்கிறது. செவ்வாயின் வீட்டில் நிற்கும் ராகு முதலில் சந்திரனை சேர்கிறார். இதனால் வேலை செவ்வாய்-ராகு தொடர்பானதாக இருக்க வாய்ப்புண்டு. சனியும் செவ்வாயை சேர்ந்துள்ளதால் செவ்வாய் தொடர்பும் ஜீவனத்தில் இருக்க வேண்டும். தன ஸ்தானாதிபதி சூரியன் தொடர்பும் சனிக்கு இருப்பதால் சூரியன் தொடர்பும் சனிக்கு இருக்கலாம். சுக்கிரன் தொடர்பு சனிக்கு உள்ளதால் வேளையில் பளிச்சென்று நேர்த்தியாய் இருக்க வேண்டும். லக்னத்திற்கு 8 ல் ஆட்சியில் மூலத்திரிகோண வீட்டில் நிற்கும் சனி லக்னாதிபதியோடு சேர்ந்த குருவின் 5 ஆவது பார்வையை வாங்குகிறார்.

லக்னத்திற்கு அஸ்டமாதிபதியானாலும் ராசிக்கு யோகாதிபதியாகிறார் சனி. சுக்கிரன் சனி தொடர்பு பெறும்போது ஜீவனம் சிறப்படையும். சனிக்கு சூரியன் செவ்வாய் தொடர்பு ஏற்படும்போது ஜீவனம் பாதிக்கப்படும். ஆனால் சூரியன் செவ்வாய் தொடர்புடைய வேலையை செய்தால் ஜீவன பங்கம் ஏற்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜாதகர் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். வேலையில் சில பாதிப்புகள் உண்டு. ஆனாலும் இந்தப்பணி ஜாதகருக்கு உணவிடுகிறது. ராகு, செவ்வாய், சூரியன் ஆகியவை மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்களாகும். 7 ல் நிற்கும் விரையாதிபதி புதன் மருந்து வகை தொடர்பு ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறார். ஜாதகருக்கு தற்போது சதுர்த்த கேந்திரத்தில் பகை வீட்டில் வக்கிரமடைந்து ராகுவை எதிர்நோக்கியுள்ள குருவின் திசை நடைபெறுகிறது. இது மிகச் சிறப்பான அமைப்பில்லை என்றாலும் குரு சனியை பார்ப்பதால் ஜாதகரின் ஜீவனத்திற்கு குரு பார்வை பெற்ற சனி வழி செய்கிறது.

அடுத்து 4 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


மேஷ லக்னத்திற்கு லக்னத்திற்கு 8 ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் சனி வக்கிர கதியில் அமர்ந்துள்ளார். சனிக்கு பாவ கர்தாரி யோகமும் உள்ளது. இந்த ஜாதகத்தில் சனிக்கு குரு பார்வை இல்லை. சனி வீட்டில் லக்னத்திற்கு பாதகத்தில் குரு அமைந்து பாதிக்கக்கூடிய அமைப்பிலேயே உள்ளார். ஆனால் இரண்டாமிடத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள தனது நண்பர் சுக்கிரனின் பார்வையை சனி வாங்குகிறார். மேலும் சனி தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் நிற்கிறார். இந்த ஜாதகத்தில் சனி ஜீவனத்தில் சிறப்பை செய்வாரா? என்றால் நிச்சயம் செய்ய மாட்டார். ஏனெனில் இந்த ஜாதகத்தில் சனி பாதகாதிபதி ஆகிறார். பாதகாதிபதியாகவும் ராசியாதிபதியாகவும் உள்ள சனி லக்னத்திற்கு அஸ்டமத்தில்  ராசிக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். ராசி அதிபதியானதால் ஆயுளுக்கு தோஷத்தை தர இயலாதபோது ஜீவன பங்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துவார்.

சுக்கிரனின் சுப கதிர்வீச்சை சனி வாங்கினாலும் பாதகாதிபதியான சனி சுக்கிரனுக்கு தனது கதிர்வீச்சை பதிலுக்கு திணிக்கிறார். சனி வக்கிரமான நிலையில் உள்ளது. ஜீவன விஷயத்தில் தனது வாழ்வாதாரத்திற்கு ஒத்துவராத  ஒரு குறிப்பிட்ட எண்ணச்சுழற்சியில் ஜாதகர் இருப்பார். சனி தன் வீட்டில் லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் நிற்கும் மனோ காரகன் சந்திரனையும் லக்னத்திற்கு 5 ஆவது பாவத்தையும் பார்ப்பதால் சனியின் ஆட்டுவிக்கும்படிதான் ஜாதகரது மனம் சிந்திக்கும். தற்போது ஜாதகருக்கு லக்னத்தில் நிற்கும் ராகுவின் திசையின் இரண்டாவது பகுதியில் இருக்கிறார். வருமான ஸ்தானத்திலுள்ள சுக்கிரனை சனி பார்த்ததாலும் சனிக்கு திரிகோணத்தில் நீசம் பெற்ற புதனாலும் ஜாதகர் புதன்-சுக்கிரன் குறிக்கும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையின் ஆதாரமான முன்னோர்கள் விட்டுச்சென்ற செல்வங்களை இழந்தார்.

ஏனைய மூன்று ஜாதகங்களிலும் சனி எட்டில் மறைந்தாலும் லக்னத்திற்கு யோகாதிபதியாகவோ, குரு-சுக்கிரனின் பார்வையை வாங்கியவராகவோ இருந்ததால் தன்னை சேர்ந்த, தான் பார்வை பெற்ற கிரகங்களின் வகையில் தொழிலில் ஈடுபட வைத்து  ஜாதகர்கள் வாழ வழி வகுத்தது. ஆனால் நான்காவது ஜாதகத்தில் சனி பாதகாதிபதியானதால் ராசி அதிபதியாக இருந்தாலும் பாதகத்தை செய்ய வேண்டியவராகிறார். 

இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில் ஜாதகத்தில் சனி அமைவு மட்டுமல்ல ஏனைய கிரக அமைவுகளும் சாதகமற்று அமைந்திருந்தாலும் ஒருவர் உழைக்கும் காலங்களில்  கடந்துவரும் திசா – புக்திகளே ஜீவனத்தில் அவர் எதிகொள்ளும் சாதக பாதகங்களை நிர்ணயிக்கின்றன. 

எனவே சனி அஸ்டமம் என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம். சனி ஜாதகத்தில் அமையும் நிலைக்குத் தக்கவும் திசா – புக்திகளின் வலிமையை சார்ந்தே ஜீவன வகை விளைவுகள் ஏற்படும்.

மீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கை பேசி: 08300124501

2 comments:

  1. ஐயா, 4 ஆவது எடுத்துக்காட்டு ஜாதகதை போன்றே என் ஜாதகமும் ஆனால் சனி கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார்.சனி ஜாதகத்தில் வக்கிரம் பெற்று புதன் சாரத்தில் உள்ளார், என் ஜாதகத்தில் புதனும் வக்கிரம். இதன் பலன் எப்படி எடுத்துக்கொள்வது ?

    6-ஜூலை-1987, நேரம்: 01:27 AM, சென்னை.

    8இல் சனி வக்கிரம், மேஷ லக்கினம், துலாம் ராசி.

    தயவு செய்து கூறுங்கள்.

    ReplyDelete