Friday, 13 December 2019

மகரச் சனி ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்கள் என்ன?


ஜீவன கார கிரகம் சனி கோட்சாரத்தில் எப்போது கேதுவின் பிடிக்குள் அகப்பட்டதோ அப்போதிலிருந்தே உலக அளவில் தொழில் வளமும் அதனை சார்ந்த வேலைவாய்ப்பும்  தடுமாறுகின்றன. சனி-கேதுவோடு தற்போது தன காரகன் குருவும் வந்து சேர்ந்துவிட்டதால் வேலை வாய்ப்பும் தனப்புழக்கமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தடைபட்டு வேலை வாய்ப்பு பறிபோகின்ற சூழலில் உலகில் இன்று பெரும்பாலான நாடுகளில் போராட்டங்கள் தலைதூக்கியிருக்கின்றன. வாகனத்துறை மட்டுமின்றி அணைத்து துறைகளும் இன்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கின்றன. முதலில் சனிதான் கேதுவின் பிடிக்குள் இருந்து அடுத்த வரும் ஜனவரி நான்காவது வாரத்தில் வெளி வருகிறார். அதன்பிறகு குருவும் மார்ச் மாதம் அதிசாரமாகி மகரத்திற்கு போகிறார். இது ஒரு நல்ல அமைப்பு. ஜீவனகாரகனும் கால புருசனின் 10 ஆமதிபதியுமான சனி மகரத்தில் ஆட்சி பெற்று அதிசாரமாக மகரத்திற்கு வரும் குருவின் தொடர்பு பெறுகிறார்.  மகரத்தில் நீசமடையும் குரு  அங்கு ஆட்சியாய் அமர்ந்துள்ள சனியோடு சேரும்போது நீச பங்கமடைகிறார்.


மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் சனியும் குருவும் இணைந்திருக்கும்போது அரசுகள் பொருளாதார ரீதியான தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தும். இதனால் குறிப்பாக அமெரிக்கா-சீனா போன்ற நாடுகளிடையே மட்டுமல்ல இதர நாடுகளும் தங்களுக்குள் பொருளாதார ரீதியாக உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் என எதிர் பார்க்கலாம். 2020 பிற்பகுதியில் ராகு ரிஷப ராசிக்கும் குரு முறையாக பெயர்சியடைந்து மகர ராசிக்கும் வரும் காலத்தில் உலகின் போக்கு வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும். புதுமைக்கு உரிய ராகு கால புருஷனுக்கு 2 ஆமிடத்தில் உச்சமாவதால் பாரம்பரியமான துறைகள் யாவும் புதுமையான நவீன முறைக்கு மாறும். வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கலாம். மகரத்தில் சூரியனின் உத்திராடம்-2 ல் ஆட்சி வீட்டிற்கு வரும்  சனி மக்களிடையே சுய தொழில் சிந்தனையை தூண்டுவார். ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் திசை நடப்பவர்களும் ஜனன சனியோடு ராகு-கேதுக்கள் நல்ல முறையில் அமைந்துள்ளவர்களுக்கும் 2020 ன் பிற்பகுதி முதல் சிறப்பான காலமாக இருக்கும் எனலாம். கடந்த முறை ராகு ரிஷப ராசிக்கு வந்த பிறகுதான் தகவல்தொடர்பு சாதனப்பொருட்கள் சாமானியனுக்கும் கிடைக்கப்பெற்று தொழில்துறை ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது. அப்போது ராகு ஏற்படுத்திய தாக்கத்தால்தான் தகவல் தொழில்  நுட்பத்துறை நமது தேசத்தின் முதன்மையான அந்நியச்செலவாணியை பெற்றுத்தரும் துறையாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

சுய தொழில் ஒருவருக்கு சிறக்க வேண்டும் என்றால் லக்னாதிபதி எனும் முதன்மை கிரகம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவின்றி அமைந்துவிட்டால் ஒருவருக்கு போராட்ட மனோபாவமும் நிர்வாகத்திறனும் இருக்காது. எனவே லக்னாதிபதி பலம் முக்கியம். இரண்டாவதாக நிர்வாகத்திறமைக்கு உரிய சூரியன் நன்கு அமைந்திருக்க வேண்டும். 3 ஆவதாக சுய தொழிலை குறிக்கும் 10 ஆமிடம் சிறப்பாக அமைய வேண்டும். 1௦ ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பு. அல்லது 1௦ ஆமிடத்தில் ஒரு உச்ச கிரகம் இருப்பது  சிறப்பு. 1௦ ஆமிடத்தில் இருக்கும் கிரகம் பாவ கிரகமாக அமைவது சிறப்பு.  லக்ன கேந்திரங்களில் பாவிகள் அமைவது நன்று. சுபர்கள் அமையக்கூடாது. சனி சந்திரன் தொடர்பு சுயதொழில் சிந்தனைக்கு சிறந்தது. சந்திரன் தனித்து 6, 8, 12 ல் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் ஜாதகரிடம்  மன உறுதியும் கண்டிப்பும் இன்மையால் தொழில் நஷ்டமடைவது உறுதி.

இனி சுய தொழிலுக்கு சாதகமான சில ஜாதக அமைப்புகளை காண்போம்.

முதலில் ஒரு பெண்ணின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி 1௦ ஆமதிபதியுடன் 9 ல் இணைவு பெற்றுள்ளார். 1௦ ஆமிடத்தில் ஒரு பாவக்கிரகமான கேது உச்சம் பெற்றுள்ளார். ஜீவன காரகன் சனி இயந்திர காரகன் செவ்வாயுடன் இணைந்துள்ளதால் ஜாதகி தையல் நிறுவனம் அமைத்து பலருக்கு வேலை தருகிறார். நாடி ஜோதிட விதிப்படி சுக்கிரன் ஜாதகியை குறிக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் நிர்வாகத்தை குறிக்கும் சூரியனுடன் இணைந்துள்ளது இயல்பான நிர்வாகத்திறனை ஜாதகிக்கு கொடுக்கிறது. பொதுவாக சிம்ம ராசி மற்றும் லக்னம் அமைந்தவர்கள் சுபாவ குணத்திலேயே நிர்வாகத்திமையை பெற்றிருப்பார்கள்.  ஜாதகிக்கு ராகு திசை நடக்கிறது. ராகு உச்சம் பெற்ற நிலையில் சுக்கிரனின் வீட்டில் அமைந்து திசை நடத்துகிறது. ஜாதகி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆடைகளை (சுக்கிரன் – ஆடை)  தனது நிறுவனத்தின் மூலம் தைத்து தருகிறார்.

இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி 8 ல் மறைவது சிறப்பல்ல. 1௦ ஆமிடத்தில் சந்திரன் நீசம் பெற்று சனியின் அனுஷம் -1 ல் அமைந்துள்ளதால் இவருக்கு இயல்பிலேயே தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதை அறியலாம். 8 ஆமிட சனி சந்திரனின் நட்சத்திரத்தில் ஹஸ்தம் – 3 ல் நிற்பதால் இங்கே சனிக்கும் சந்திரனுக்கும் சாரப்பரிவர்தனை உள்ளது.  அதனால் சந்திரனின் நீசம் பங்கப்படுகிறது. சனிக்கு வீடு கொடுத்த வியாபார கிரகம் புதன் ஆட்சி குருவுடன் அஸ்தங்கமடையாமல் சேர்ந்துள்ளதால் புதனும் நீச பங்கமடைந்துள்ளார்.  ஜாதகர் 1௦ ஆமிடத்தில் அமர்ந்த சந்திரன் குறிக்கும் பஞ்சு மில் (Spinning Mill) வைத்து வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்துவருகிறார். கால் பாதம் மற்றும்  ஊழியர்களை குறிக்கும் சனி இரட்டை கிரகமான புதனின் வீட்டில் வக்கிரமடைந்து பாத ராசியான மீனத்தை பார்ப்பதால் இவரது நிறுவனத்தில் கணக்கு வழக்குகளை கால் ஊனமான ஊழியர்கள் இருவர் கவனித்து வந்தனர். இந்த ஜாதகத்தில் சனி-சந்திர சார பரிவர்த்தனையை கவனிக்காமல் விட்டுவிட்டால் பலன் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்ற நிலையில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். சூரியன் மேஷத்தில் உச்ச நிலையில் உள்ளார். மேற்பார்வைக்குரிய செவ்வாய் உச்ச சூரியனுடன் இணைந்து ஆட்சியில் உள்ளார். இத்தகைய அமைப்புகளால் இந்த  ஜாதகருக்கு இயல்பாகவே சுய தொழில் எண்ணம் இருப்பது புலனாகும். 9 ல் லக்னாதிபதி அமைந்து 9 ஆமதிபதி உச்சமானதால் ஜாதகரின் தந்தை ஏற்படுத்தி வைத்திருந்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்து கவனித்து வருகிறார். 1௦ ஆமிடத்தில் ஒரு பாவி இருக்க நிர்வாகச் சிறப்பு என்றபடி கேது கன்னியின் இருக்கிறார். ராகு மீனத்தில் இருக்கிறார். வங்கி வரவு செலவுகளை குறிக்கும் புதன் உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீச பங்கமான நிலையில் அமைந்துள்ளார். ராகு – கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் இல்லை என்றாலும் ராகு மீனத்தையும் கேது கன்னியையும் இயக்கும் என்ற விதிப்படி கன்னி கேது குறிக்கும் கடனை வங்கி மூலம் பெற்று தனது தொழிலை ஏழரை சனியிலும் சிறப்பாக நடத்திவருகிறார். இந்த ஜாதகத்தில் சந்திரன் 12 ல் நீசம் இவருக்கு சுய தொழில் சிறப்பில்லை என்ற விதி  இங்கு ஏன் செயல்படவில்லை என்ற கேள்வி எழும். ஜாதகர் சந்திரன் குறிக்கும்  அன்றாடம் அழியக்கூடிய காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். சந்திரன் சனியின் அனுஷம் – 2 ல் நீசமாகியுள்ளார்.  சனியின் மற்றொரு நட்சத்திரத்திரம் உத்திரட்டாதி – 4 ல்  உச்ச சுக்கிரன் நிற்கிறார். இதனால் சனிக்கும் சனியின் சாரத்தில் நிற்கும் கிரகங்களுக்கும் வலு கூடும். இதனால் சந்திரன் இங்கு நீச பங்கமடைகிறார். 12 நிற்கும் சந்திரன் பாதிப்பை தராமைக்கு ஜாதகர் சந்திரனின் அன்றாடம் அழியக்கூடிய காரக தொழிலை செய்வதும், சந்திரன் நீச பங்கம் பெற்றதும் காரணமாகும்.

நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமைந்துள்ளார். பல கிரக கூட்டில் லக்னாதிபதி அமைந்துள்ளதால் ஜாதகரின் எண்ணங்களில் தெளிவின்மை ஏற்படும். நிர்வாக சிறப்பை குறிக்கும் சூரியன் 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளதால் ஜாதகருக்கு பணிக்கு செல்வதில் நாட்டம் இருக்காது. சுய தொழில் செய்யவே விருப்பம் ஏற்படும். சனியும் செவ்வாயும் நாயை குறிக்கும் கிரகங்களாகும். லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் கேது அமைவது கால்நடைகளோடு ஜாதகரை தொடர்புபடுத்தும் அமைப்பாகும். 4 மற்றும் 6 ஆவது பாவங்களும் வளர்ப்பு பிராணிகளை குறிக்கும் பாவங்களாகும்.  ராசிகளில் துலாமும் மேஷமும் நாயை குறிப்பிடும் ராசிகளாகும். துலாம் ராசிக்கு சனி – செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் வீட்டில் நாய் வளர்ப்பர். இங்கு சந்திரனோடு பரிவர்த்தனை பெரும் செவ்வாய்   துலாம் ராசியையும் சனியையும் பார்க்கிறது. ஜாதகர் நாய்களை இனப்பெருக்கம் செய்வித்து விற்பனை செய்து பொருளீட்டி வருகிறார். ஜாதகருக்கு ராகு திசையில் சுய புக்தி அடுத்த ஆண்டு முற்பகுதிவரை நடக்கிறது. இத்தகைய தொழிலை செய்வதற்கு திசா நாதன் ராகுவும் முக்கிய காரணமாகும். ஆனால் ராகு குரு சாரத்தில் விசாகம் – 1 ல் சுபர்களோடு இணைந்து நிற்பதால் ராகுவின் சுயபுக்தி முடிந்த சில காலங்களில் தனது தொழிலை மாற்றியாக வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சனி வக்கிரமடைவது ஜீவன விஷயத்தில் ஜாதகர் உறுதியாக ஒரு எண்ணத்தில் இருப்பதை குறிக்கும். சனி வக்கிரமடைந்த பெரும்பாலான ஜாதகர்கள் பணிக்கு செல்ல முடியாமலும் சென்றாலும் பணியில் ஒன்ற முடியாமல் சுய தொழில் செய்யவே விரும்புவதையும் காண முடிகிறது.  லக்னாதிபதி வக்கிரமடைந்தாலும் லக்னத்திலோ அல்லது லக்ன திரிகோணங்களில்லோ வக்கிர கிரகங்கள் அமைய பெற்றவர்களுக்கும் இந்த குணம் இருப்பதை அறிய முடிகிறது.


மீண்டும் அடுத்தவார பதிவில் சந்திப்போம்.

உங்களுக்கான தொழிலை தெரிந்துகொள்ள

அழைப்பீர்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.

No comments:

Post a Comment