இருமனம் ஒருமனமாகி இணையும் திருமணப்பொருத்தத்தில் அனைத்து
பாவங்களும் கிரகங்களும் ஒருங்கினைய வேண்டும். ஆனால் இவை அனைத்துமே சாத்தியமில்லை.
இதனால் ஒருவர் மற்றவருடன் எந்த அளவு இணைந்து செல்வார் என்பதை ஆராய்ந்தே இன்றைய
திருமணங்கள் நடக்கின்றன. பொதுவாக மூன்றாவது பாவத்திற்கு அத்தனை முக்கியத்துவம் திருமணப்பொருத்தத்தில்
கொடுப்பதில்லை. திருமணப்பொருத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் 3 ஆமிடமும் 12
ஆமிடமும் மிக முக்கியமானவை. உண்மையில் ஜாதகத்தில் உள்ள பல தோஷங்களை போக்குவதற்கான வழிகள்
இவ்விரு பாவங்களிலும் உள்ளது. இதுபோல புதன் என்பது இருவர் மனமொன்றி இணையும்
உறவுப்பாலத்தை குறிக்கும். கிரகமாகும். புதன் கால புருஷனுக்கு போக ஸ்தானமான 3ஆம்
பாவ அதிபதி என்பதால் மிதுனம் மற்றும் புதனைக்கொண்டும் லக்னத்திற்கு 3 ஆம் பாவம்
மற்றும் அதன் அதிபதியைக்கொண்டும் ஒருவர் மற்றொருவருடன் தாம்பத்ய அடிப்படையில்
எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவார் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஒருவரது இல்லறம்
சிறப்படைய வேண்டுமெனில் கால புருஷனுக்கு படுக்கை சுகத்தை குறிக்கும் மீனத்தில் அதிபதி
குருவின் தொடர்பு 3 ஆம் பாவம், 3 ஆம் பாவாதிபதி, புதன் மற்றும் மிதுனம் இவற்றிற்கு
இருக்கவேண்டும். இவை நைசர்கிக பாவர்களோடும் லக்ன பாவர்களோடும் தொடர்புகொண்டிருந்தால்
அங்கே தாம்பத்யம் தடைபடும். அதுவே உறவு பாதிப்படைவதன்
முதல் அறிகுறியாக அமையும். உண்மையில் தம்பதியரின் 3, 12 பாவங்களோடு கோட்சார
சந்திரனை இணைத்துப்பார்த்தால் அவர்களின் அன்றைய இரவில் தாம்பத்யமுண்டா என்பதைக்கூட
அறியலாம். இவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
இந்த ஜாதகிக்கு தற்போது ராகு திசையில் சூரிய புக்தியில் உள்ளார். 2017 முதல் கணவனோடு சண்டையிட்டு பிரிந்துள்ளார். கணவனை குறிக்கும்
செவ்வாய் போக ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளார். 2017 ல் ஜாதகிக்கு 7 ல் நிற்கும் ராகுவின் திசையில் கேது புக்தி
துவங்கியதும் இல்லறம் தடைபட்டு பிரிந்துள்ளனர். கேது களத்திர காரகன் செவ்வாய்க்கும்
போக பாவமான கடகத்திற்கும் பாதக ஸ்தானமான ரிஷபத்தில் அமைந்ததால் போகம் கருத்து வேறுபாடால் தடைபட்டு
அதுவே பிரிவினையாகி உள்ளது. கேதுவிற்கு அடுத்து வந்த சுக்கிர புக்தியும் கால புருஷனுக்கு 12 ல் உச்சமாகி வக்கிரமடைந்து நீசத்திற்கு ஒப்பான
நிலையில் புக்தி நடத்தியுள்ளதால் ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லை. சுக்கிரனின் 1, 6
தொடர்பு போகத்திற்கு பாதகமாகவும் 7 க்கு விரையமாகவும் அமைவதும் மற்றொரு காரணம்.
சுக்கிர புக்தியை அடுத்து வந்த சூரியனும் 3 க்கு பாதகத்தில் நிற்கும் கேதுவின்
அஸ்வினி சாரம் பெற்றுள்ளதும் இருவரும் இணைந்து குடும்பம் நடத்த வாய்ப்பில்லை
பிரிவுதான் என்பதையே காட்டுகிறது. இந்த ஜாதகத்தில் கால புருஷ போக ஸ்தானாதிபதி
புதன் நீசமாகியுள்ளது ஜாதகிக்கு போக பாக்கியத்தில் தடை ஏற்படும் என்பதையும் புதன்
லக்ன அஷ்டம, லாபாதிபதி குருவுடன் பரிவர்தனையாகியுள்ளது திருமணமும் நடந்து போகமும்
ஏற்பட்டு அது தடையுடன் முடிய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சம்பவங்கள்
புதனின் கேட்டை-1 சாரம் பெற்று திசை நடத்தும் ராகுவின் திசையில்தான்
ஏற்படவேண்டும் என்பதும் ஜாதகியின் விதிப்பயன் என்பது புலனாகிறது.
கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.
இந்தப்பெண்ணிற்கு போக ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் கால புருஷ போக
ஸ்தானாதிபதி புதன் நீசமாகி அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து நிற்கிறார். புதன்
அஸ்தங்கமடையவில்லை. குரு கேந்திராதிபத்திய தோஷம் பெற்று லக்னத்திற்கு 4 ல் அஷ்டமாதிபதி
சூரியன் உச்சமாகும் ,மேஷத்தில் நிற்கிறார். குரு வருஷ கிரகமாவதால் ஜாதகிக்கு
திருமணமாகி 1 வருட காலம் தாம்பத்ய உறவை தவிர்த்து வந்துள்ளார். ஒரு வருடம் சென்ற
பிறகே தாம்பத்யம் ஏற்பட்டுள்ளது. தாம்பத்யம் ஏற்பட காரணம், கற்பு ஸ்தானமான சுக
ஸ்தான அதிபதி செவ்வாய் மேஷத்தில் நிற்கும்
குருவை பார்ப்பதே ஆகும். குருவிற்கு திரிகோணத்தில் தாம்பத்ய ஸ்தானமான 12
ஆமிடத்தில் லக்னாதிபதி சனி நின்று தாமதித்தாவது தாம்பத்யத்தை தரவேண்டியவராகிறார். 7 ஆமதிபதி சந்திரன் உச்ச
செவ்வாயால் நீச பங்கம் பெற்று 4 ஆமிட குருவிற்கு அஷ்டமத்திலும் 4, 11 ஆமதிபதி
செவ்வாய்க்கு பாதகத்திலும் நீச புதனின் கேட்டை சாரம் பெற்று அமைந்து புதனது நீச
தோஷத்தையும் போக்குகிறார். இதனால் ஜாதகிக்கு தாம்பத்யம் தடை பட்டு பிறகு
ஏற்பட்டுள்ளது.
கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் என்னுடன் பணிபுரிந்தவர். 1973 ல் பிறந்தவர் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் கால புருஷ போக
ஸ்தானாதிபதி புதன் வக்கிரமாகி இரு கடும் பாவிகளான சனியோடும் கேதுவோடும்
இணைந்துள்னது. இவர்களுக்கு குருவின்
பார்வையும் இல்லை. லக்னத்திற்கு 3 ஆமதிபதி
சுக்கிரன் லக்னத்திற்கு 6 ல் மறைந்து பகை பெற்று நீசத்தை நோக்கி
சென்றுகொண்டுள்ளார். இந்த ஜாதகருக்கு திருமணம் நடந்து முறையான போகம் கிடைக்காது என்பது ஜாதக விதியாகும். திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் இது. திருமண மறுப்பை போக ஸ்தான அடிப்படையிலும்
பார்க்கலாம் என்பதற்கான உதாரணம் இது.
இறுதியாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
இந்த ஜாதகத்தில் புதன் 7 ல் ஆட்சி பெற்றுள்ளது. இது தனுசு
லக்னத்திற்கு கடும் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த ஜாதகருக்கு
திருமணம் நடைபெற்று தாம்பத்யமும் நடந்தது. புத்திர, தாம்பத்ய ஸ்தானாதிபதி செவ்வாய்
கால புருஷனுக்கு தாம்பத்ய ஸ்தானமான மீனத்தில் நின்றதால் இது நடந்தது. ஆனால்
விவாகரத்தும் ஆகிவிட்டது. இப்போது விவாகரத்தின் காரணத்தை ஆராய்வோம். 7 ஆமதிபதியான
புதனை 7 க்கு 6 ஆமதிபதி செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கடும் பாவிகள்
பார்க்கின்றனர். இதனால் களத்திரம் இவ்விரு பாவிகளின் குணம் கொண்டவராக இருப்பார்.
அதே சமயம் லக்னாதிபதி குரு, லக்னத்திற்கு 6 ல் பகை பெற்று மறைந்து 7 க்கு
விரையத்தில் நிற்பதால் மனைவியின் குணத்தோடு ஜாதகரால் ஒருங்கிணைய முடியவில்லை.
மேலும் போக ஸ்தானமான 3 ஆமதிபதி சனி லக்னத்தில் வக்கிரமாகி 3 ஆமிடத்தில் ராகு
லக்னாதிபதி குருவின் சாரம் பூரட்டாதி-1 பெற்று நிற்பதால், மனைவியின் தீவிர
எண்ணங்களுக்கு எதிராக தீவிர பகை எண்ணங்களை ஜாதகர் கொண்டிருப்பார். இதனால் இவர்களின் தாம்பத்ய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று
எதிர்மறையானவை என்பதால் பிரிவு ஏற்பட்டுள்ளது.
தம்பதிகளின் தாம்பத்ய ஒற்றுமையை அறிய புதனையும் மூன்றாவது
பாவத்தையும் அதன் அதிபதியையும் உற்றுநோக்க வேண்டியது அவசியம்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501
No comments:
Post a Comment