Friday, 19 June 2020

ஜோதிடத்தில் குடும்ப உறவுகள்





மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது. ஒரு நபர் உறவுகளின்றி வாழ்ந்தால் அவர் அநாதை என அழைக்கப்படுவார். பொருளாதார சிரமங்களைகளைக்கூட ஒருவர் பொறுத்துக்கொள்ளவார். ஆனால் இன்று உறவுகள் ரீதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை மிகப்பெரிய அளவில் எடுத்துக்கொள்கின்றனர். உறவுகளோடு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அன்றைய காலத்தில் ஒருவர் ஒரு உறவால் பாதிக்கப்பட்டால் மற்றொரு உறவினர் அவரை தாங்கிப்பிடிப்பார். இதனால் உறவுகள் என்றாலே சிரமப்படுதுபவர்கள் என்றொரு மனோநிலை ஜாதகருக்கு வராது.  ஆனால் உறவுகளைவிட்டு சம்பாத்தியதிற்காக பிரிந்து செல்லும் இன்றைய சூழலில் உறவுகளோடு ஒரு மனிதனின் பிணைப்பு குறையத்தொடங்குகிறது. இதனால் அவன் தனி மனிதன் ஆகிறான். அவனது உறவு அவனது மனைவி மற்றும் குழந்தைகள் என்ற அளவில் சுருங்கிவிடுகிறது. மற்றவை எல்லாம் பெயரளவிலேயே உறவாக அமைந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் கால மாற்றம் ஏற்படுத்தும் விழைவுகள். இவைகளை ஒரு தனி மனிதனால் தடுத்துவிட இயலாது. பண்டைய ஜோதிட விதிகளோடு போராடாமல் காலமாற்றத்திற்கேற்ப மாறிவரும் உறவு நிலைகளையும் கவனித்து ஜோதிடத்தை அணுகுவதே சிறந்தது. இதனால் ஒருவர் மனோரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த ஆலோசனைகளை ஒரு ஜோதிடரால் வழங்க முடியும். இவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


மிதுன லக்னம். லக்னத்திற்கு 7 ல் பாதகாதிபதி குரு ஆட்சி. கடும் களத்திர தோஷம் கொண்ட ஜாதகம். ஜாதகருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடும்ப வாழ்விலும் பாதிப்புகள் உண்டு. களத்திர காரகன் சுக்கிரனும், களத்திர பாவமும் பாவாதிபதி குருவும் பாவகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாதகருக்கு பாதிப்பை மனைவி ஏற்படுத்தினால் மனைவியும் பாதிக்கப்படுவார் என்ற அமைப்பு இங்கே உள்ளது. இதனால் இருவரும் தங்கள் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட்டால் குடும்பம் பிரியாமல் தடுக்க முடியும். செவ்வாயின் சேர்க்கை பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் பாதக ஸ்தான கிரகங்களை பார்க்கிறது. இதனால் மனைவி பிடிவாதமும் கோபமும் நேர்மையும் கொண்டவராக இருப்பார். சனியைவிட 4 பாகைகள் பின்தங்கி கிரக யுத்தத்தில் தோல்வியுற்ற செவ்வாய் தனது நான்காம் பார்வையாக 8 ல் மறைந்த லக்னாதிபதி புதனையும் சூரியனையும் பார்க்கிறது. இதனால் ஜாதகருக்கும் ஜாதகரின் தந்தைக்கும் பிடிவாதமும் வைராக்கியமும் ஏற்படும். லக்னாதிபதி புதன் சூரியனோடு லக்னத்திற்கு 8 ல் நிற்பது சிறந்த புத ஆதித்த யோகம். ஜாதகர் நல்ல மதிநுட்பம்கொண்டவர். இப்பொழுது இவர்களின் வாழ்வில் உறவுகள் வழி பாதிப்புகள் எப்படி என்பதை காணலாம்.


கோட்சாரத்தில் லக்னத்திற்கு 1 – 7ல் ராகு – கேதுக்கள் நிற்பதால் ஜாதகருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறவு சரியில்லை. மனைவி தனது தந்தையின் வீட்டில் குழந்தையோடு இருக்கிறார். தனது மாமனார் மற்றும் கணவரின் மூத்த சகோதரி, மற்றும் மூத்த சகோதரியின் கணவர் ஆகியோர் தங்களது குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாகவும் கணவன் தன்னை மதிப்பதில்லை என்பதும் மனைவியின் குற்றச்சாட்டு. ஜாதகத்தில் லக்னாதிபதி 8 ஆமிடத்தில் சூரியனோடு சேர்ந்து மறைவு பெற்று அமர்ந்துள்ள நிலையில் 8 ஆமதிபதி உச்சமானதால் ஜாதகர் ஒரு பாரம்பரியமும் கௌரவமும்கொண்ட குடும்பத்தில் பிறந்தவராவார். இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி புதனுக்கு சனியும் சுக்கிரனும் நண்பர்கள். சுக்கிரன் பாதக ஸ்தானம் பெற்றுள்ளது. சூரியன் மறைவு ஸ்தானம் பெற்றுள்ளது. புதன் எந்த பாவத்திலும் முழுமையான மறைவு பெறாத ஒரே கிரகமாகும். சூரியன் 8, 12 ல் மறைவு பெறும் கிரகமாகும். இங்கு நண்பனின் வீட்டில் மறைந்த புதன் பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் 8 ல் பகைவன் சனியின் வீட்டில் அமைந்த சூரியன் பாதிக்கப்படும். சூரியனுக்கும் பாகை இடைவெளி அதிகம் என்பதால் இங்கு தந்தைக்கும் மகனுக்கும் ஒருங்கிணைவு இருக்காது. ஆனால் சூரியனுக்கு புதன் கட்டுப்படும் கிரகமாகும். சூரியன் புதனைவிட அதிக பாகையில் சென்றிருப்பதால் சூரியன் புதனை கட்டுப்படுத்தும். 

உச்ச சனியோடு சேர்ந்த செவ்வாய் புதனையும் சூரியனையும் பார்ப்பதால் ஜாதகரின் தந்தை சனி+செவ்வாய் சேர்க்கையை குறிக்கும் சீருடையணிந்த ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தவராவார். இதனால் தந்தை மகனின் குடும்ப வாழ்வில் தலையிட்டு தனது ராணுவ கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதனால் ஜாதகர் தனது குடும்ப வாழ்வில் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் தனது குடும்ப வாழ்வில் தடுமாறுகிறார். சூரியன் சுக்கிரனுக்கு பகை கிரகம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். மேலும் செவ்வாயின் பார்வையும்  தந்தையை மூர்க்கமாக்குகிறது. மூத்த சகோதரியை குறிக்கும் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் அமைந்து செவ்வாயோடு சேர்ந்த சனியின் பார்வையை பெறுகிறது. இதனால் கணவனின் மூத்த சகோதரி வகையில் ஜாதகரின் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும்.  மைத்துனனை குறிக்கும் செவ்வாய் 6,11 ஆமதிபதியாகி தனது கடும் பகை கிரகமான சனியோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் மைத்துனனாலும் (ஜாதகரின் மூத்த சகோதரியின் கணவன்)  ஜாதகருக்கு பாதிப்புகளே அதிகம். சனியும் செவ்வாயும் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்தில் இணைந்து நின்று, 7 ஆம் பாவத்தில் ஆட்சி பெற்று நிற்கும் புத்திர காரகனும் களத்திர பாவாதிபதியுமான குருவை சனி பார்ப்பதால் குருவின் களத்திர தோஷத்தை சனி குறைத்தாலும் குழந்தை பிறந்த பின் இருவருக்கும் பிரிவினை பாதிப்பு ஏற்படவேண்டும் என்ற விதி இங்கே செயல்படுகிறது.

தற்போது இந்த நபருக்கு ஜோதிடர்கள் கிரகங்கள் ஜாதக ரீதியாக அமைந்துள்ள விஷயங்களை விளக்கி ஜாதகரது தந்தை, மூத்த சகோதரி மற்றும் அவரது கணவரை தனது குடும்ப விஷயங்களில் தலையிடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் மனைவியோடு தனியாக குடித்தனம் போகவேண்டும் என ஆலோசனை கூறலாம். இவற்றை கிரகங்களின் நிலைகளின்படியே அறிவுறுத்தவேண்டும். தற்போது கோட்சார  ராகு-கேதுக்கள் லக்னத்திற்கு 1 – 7  ஆக அமைந்துள்ளன. வரும் புரட்டாசி மாதம் (செப்டம்பர் 2௦2௦)ல் அவை 6 -12 நிலை பெற்று சிறப்பாக மாறவிருக்கின்றன. மேலும் ஜனன கால புதன்+சூரியன் மீது நீதிமானான கோட்சார சனி செல்வதால் தந்தை சனியின் நேர்மைக்கு தலைவணங்கியாக வேண்டும். கூடுதலாக பாதகாதிபதி குரு இவ்வருட இறுதியில் லக்னதிற்கு 8 நீசமாகி அங்கு ஆட்சிபெற்ற சனியோடு சேரவிருக்கிறார். (தற்போது தற்காலிகமாக அதிசார குரு சனியோடு சேர்ந்துள்ளது). இதனால் இவ்வருட பிற்பகுதியில் ஜாதகர் தனது குடும்பத்துடன் இணைய வாய்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஜாதகத்தில் 7 ஆமிட நிலையும் சனியோடு சேர்ந்த செவ்வாயும் பிரிவினையை குறிப்பிடும் அமைப்பு இந்த சூழலில் இவர்கள் பிரிவதே ஜாதகப்படி உள்ளது என ஜோதிடர்கள் சிந்திக்கத்தோன்றும். இங்கு செவ்வாய் சனியிடம் கிரக யுத்தத்தில் தோல்வியுற்றுள்ளதையும் பாதக ஸ்தானத்திற்கும் பாதகாதிபதிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளதையும்  வெற்றி பெற்ற லக்ன யோகாதிபதி சனியின் 7 ல் பதிவதையும் கவனிக்க வேண்டும். மனைவியின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து ஜாதக திசா புக்திகள் மற்றும் கோட்சாரத்தின் அடிப்படையில் தீர்க்கமான பதிலை கூறுவது ஒரு சிறந்த ஜோதிடரின் முக்கிய கடமை. இந்த ஜாதகரின் மனைவிக்கு  தனுசு லக்னம். பாதக ஸ்தானமான மிதுனத்தில் புதன் ஆட்சியாக உள்ளது. சம சப்தம லக்னம் என்பதைவிட சம தோஷம் கொண்ட ஜாதகங்கள் என்பதையும் அடியேன் கவனித்தேன்.

விரைவில் உங்களை மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

No comments:

Post a Comment