Friday 31 July 2020

உயர் கல்வியும் வேலை வாய்ப்புகளும்!



கல்வியின் நோக்கம் மனிதனை பண்புடையவனாக உருவாக்குவதே என்ற நிலையிலிருந்து வேலை வாய்ப்பை வழங்குவதே என்றொரு கருத்து இன்று நிலைபெற்றுவிட்டது. இன்றைய காலத்தில் கல்வியையும் கருத்தில்கொண்டே ஒருவரின் சமுதாய தகுதி அமைகிறது. ஞானிகளின் கல்வி இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்களின் கல்வித்தேடல் ஆன்மாவிற்கானது. உயர் கல்வியை தேர்ந்தெடுக்கையில் அது ஒருவரின் தகுதியை உயர்த்துவதற்கானது என்பதைத்தாண்டி அது சம்பாத்தியத்தை வழங்கும் அமைப்புகளோடு ஜாதகத்தில் தொடர்பாகிறதா என பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் உயர்கல்வியால் பயனற்ற நிலைதான் ஏற்படும். இக்கருத்தை ஆராய்வது மாணவ மாணவிகள் உயர்கல்வியை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருக்கும்.  தேர்வு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையின் இன்றைய பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.


மேக்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. லக்னத்தில் ராகு உள்ளது. ராகு வளர்ச்சிக்கான முதன்மைக்கிரகம் என்பதால் ஜாதகர் எதிலும் தீவிர முனைப்பில் இருப்பார் எனலாம். ஜாதகத்தில் குருவும் சனியும் பரஸ்பர பார்வையில் உள்ளன. இது  ஜாதகருக்கு ஜீவனச்சிறப்பை தரவல்லது. ஜோதிடத்தில் 2 ஆம் பாவம் பால்ய கல்வியையும் 4 ஆம் பாவம் பள்ளிக்கல்வியையும் 9 ஆம் பாவம் உயர் கல்வியையும் குறிப்பிடும் பாவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகர் பள்ளிக் கல்வியைத்தாண்டி உயர் கல்வியில் பொறியியல் படித்தார். உயர் கல்வியை ஆராய 9 ஆம் பாவத்தோடு 9 ன் திரிகோணங்களையும் குறிப்பாக 9 க்கு 9 ஆம் பாவமான 5 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும். 5 ஆம் பாவம் புதனின் வீடாகி அங்கு செவ்வாய் அமைகிறார். இதனால் புதன் செவ்வாய் தொடர்பு குறிப்பிடும் பொறியியலை உயர் கல்வியில் ஜாதகர் தேர்ந்தெடுத்தார். அங்கு சூரியனும் செவ்வாயோடு இணைந்து நிற்பதால் பொறியியலில் உயர்நிலை (M.Tech) வரை  ஜாதகர்  படித்தார். 5 ஆமிடத்தில் 1௦ ஆமதிபதி செவ்வாய், வர்கோத்தம சூரியனோடு இணைந்து நிற்பதால் ஜாதகர் உயர் கல்வி மூலம் அரசு வேலை பெறுவார் என்பது புலனாகிறது.

இப்போது ஜாதகரின் சம்பாத்திய நிலையை காண்போம். ஜாதகரின் சம்பாத்திய நிலையை குறிப்பிடும் பாவங்கள் 6 மற்றும் 1௦ ஆம் பாவங்களாகும். சம்பாத்தியத்தை ஆராய பொதுவாக 6 ஆம் பாவத்தோடு  1௦ ஆம் பாவத்தையும் 1௦ க்கு 1௦ ஆன 7 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும்.  6 ஆம் பாவத்தில் புதன் நிற்கிறார். 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய் வாயு பாவமான மிதுனத்தில் நிற்கிறார். ஜாதகரின் லக்னமே வாயு பாவமான கும்பமாகும். 1௦ க்கு 1௦ ஆம் பாவமான சிம்மத்தில் சுக்கிரன் கேதுவோடு இணைந்து நிற்கிறார். வாயு ராசிகளும்  ராகு-கேதுக்களும்  விண்வெளியையும் சுக்கிரன் வானவூர்த்தியையும் குறிப்பிடுபவை. ஜாதகர் ISRO வில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகியும் M.Tech படித்தவர்தான். ஜாதகத்தில் சந்திரன் உச்சமாகி ராசியாதிபதி சுக்கிரன், புதனோடு பரிவர்த்தனையும் ஆகியுள்ளதால் ராசியே வலுவாக அமைந்துள்ளது. இதனால் ராசியே ஜாதகியை வழிநடத்தும். ராசிப்படி உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடமான மகரத்திற்கு 9 ஆமிடம் புதனுடைய வீடான கன்னி அமைகிறது. கன்னியை  ராகுவோடு இணைந்த செவ்வாய் 8 ஆம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகி பொறியியலில் M.Tech  படித்தார். உண்மையில் ஜாதகி மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால் ஜாதகத்தில் சூரியன், புதன், கேது ஆகியவை சாதகமாக அமையாததால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

இப்போது ஜீவனத்திற்கு வருவோம். ராசியில் சந்திரன் சூரியனோடு இணைந்து உச்சமாகியுள்ளார். சூரியன் 3 பாகையிலும் சந்திரன் 22 பாகையிலும் புதன் 25 பாகையிலும் அமைந்துள்ளனர். சுக்கிரன் 6 பாகையில் அமைந்துள்ளது. பரிவர்த்தனைக்குப்பின் புதனின் பாகைக்கு சுக்கிரன் வருவதால் சுக்கிரன் அஸ்தங்கமடையாது. ராசியாதிபதி சுக்கிரனுக்கு சூரியனால் சுயதொழில் எண்ணமும் உச்ச வளர்பிறை சந்திரனால் சந்திரன் சார்ந்த தொழில் சிந்தனையும் ஏற்படும். இக்கிரகங்கள் ராசிக்கு 1௦க்கு 1௦ ஆகிய விருட்சிகத்தை பார்க்கின்றனர். இதனால் இக்கிரகங்களே ஜாதகியின் வருமான வகையை தீர்மானிக்கின்றன. சந்திரனின் தாக்கமே இதில் அதிகம் இருக்குகிறது. அந்த தாக்கத்தால் ஜாதகி சந்திரன் குறிக்கும் ஆடை வியாபாரம் செய்துவருகிறார்.  

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகத்திலும் சந்திரன் உச்சமாகியுள்ளது. கேது சந்திரனை கடந்துவிட்டது. பாவத்தில் கேது மேஷத்தில் அமைத்துள்ளார். லக்னாதிபதி சூரியனும் சந்திரனின் ஹஸ்தத்திலேயே நிற்கிறது. இதனால் ராசியே ஜாதகியை வழிநடத்தும்.  உயர் கல்வியை குறிக்கும் ராசிக்கு 9 ல் எந்த கிரகமும் இல்லை. 9 க்கு 9 ஆம் பாவமான கன்னியில் சூரியனுடன் குரு இணைந்துள்ளார். இதனால் கன்னியைக்கொண்டே உயர்கல்வியை தீர்மானிக்கவேண்டும். உச்ச சந்திரன் கேது தொடர்புபெற்று கன்னி உயர்கல்வியை தீர்மானிப்பதால் இந்த ஜாதகி கேது, சூரியன் மற்றும் கன்னி ராசி குறிப்பிடும் மருத்துவம் (MBBS) பயின்றார். இப்போது மருத்துவத்தில் உயர் கல்வி பயிலவுள்ளார். இப்போது உயர்கல்வியில் ஜாதகப்படி என்ன கல்வியை தேர்ந்தெடுத்தால் ஜீவனத்தில் சிறந்த நிலை அமையும் என 4 பிரிவுகளை மனதில்கொண்டு ஜாதகி சார்பாக ஆலோசனை கேட்கப்பட்டது. ஜாதகி சார்பாக ராகு குறிப்பிடும் கதிர்வீச்சியல் (Radiology), கேது+சந்திரன் சேர்க்கை குறிப்பிடும் மனநிலை மருத்துவம் (Psychiatry), மயக்க மருந்தியல் (Anesthesia), சூரிய சந்திரர்கள் குறிப்பிடும் கண்ணொளியியல் (Ophthalmology) ஆகியவற்றை வாய்ப்புக்களாக ஜாதகி கேட்டிருந்தார். இப்போது ஜீவனத்தில் முக்கிய பங்காற்றும் கிரகம் எது என பார்ப்போம்.

ஜாதகத்தில் முக்கிய ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் அமைந்துள்ளனர். கேது சந்திரனை கடந்துவிட்டதால் கேது சந்திரன் குறிப்பிடும் மயக்க மருந்தியலும் மனோவியலும் புறந்தள்ளப்படலாம். சந்திரன் லக்னத்திற்கு 1௦ ல் அமைந்து உச்ச சந்திரனின் சாரத்தில் சூரியன் அமைவதால் கண்ணொளி மருத்துவத்தில் சிறப்பு ஏற்படலாம். ஜீவனத்தைப்பொறுத்தவரை ராசிக்கு 1௦ ஆமிடத்தில் சனி செவ்வாயின் அவிட்டம்-3 ல் வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளது. ஆனால் ராசிக்கு 1௦ க்கு 1௦ ஆன விருட்சிகத்தில் ராகு, சனியின் அனுஷம் – 3 ல் அமைந்துள்ளார். பொதுவாக வக்கிரம் பெற்ற கிரகங்கள் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களை சார்ந்தே   செயல்படும். இதனால் ஜீவனத்தை ராகு தீர்மானிக்க வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் கண்ணொளி மருத்துவம் (Ophthalmology) மற்றும் கதிர்வீச்சியல் (Radiology) ஆகியவை பறிந்துரைக்கப்பட்டது.  ஜாதகி தற்போது Radiology ல் இணைந்துள்ளார்.

உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமும் நிதானமும் இருக்கவேண்டும். ஏனெனில் அதன் அடிப்படையில்தான் வேலைவாய்ப்பும் சமுதாய மதிப்பும் வாழ்வியல் உயர்வுகளும் ஏற்படுகின்றன. இன்றைய நிலையில் வேலை வாய்ப்பினை பொறுத்தவரை எண்ணற்ற வாய்ப்புகளும், துறைகளும் பெருகிவிட்டன. இதனால் வேலைதரும் துறைகளை துல்லியமாக அளவிடுவதில் ஜோதிடர்களுக்கு சிரமங்கள் ஏற்படும்  என்றாலும் அதில் சரியான வாய்ப்புகளை ஒரு தேர்ந்த ஜோதிடரால் பரிந்துரைக்க முடியும்.

உங்களுக்கான வாய்ப்புகளை தெரிந்துகொள்ள என்னை தொடர்புகொள்ளலாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,


அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

1 comment:

  1. Anna அருமை உங்கள் விளக்கம்,

    ReplyDelete