Tuesday 1 December 2020

ஜவுளி வியாபாரம்

 


கொரானாவால் முடங்கிய உலகம் தற்போது மெல்ல தனது பழைய பாதைக்கு திரும்ப முயற்சிக்கிறது. இந்த காலத்தில் தொழில் துறை அடைந்த பாதிப்புகள் சொல்லில் வடிக்க முடியாதது. அதிலும் கடன் வாங்கி தொழில் செய்து வந்தவர்கள் வருமானமின்றி வட்டியும் கட்டமுடியாமல் தொழிலை ஓரம் கட்டிவிட்டு ஊரைப்பார்க்கப்போன பீகாரிகளை, பெங்காலிகளைவிட நம்மவர்களும் மிக அதிகம்.  சென்னையில் இருந்து சாரை சாரையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நம்மவர்கள் திரும்பிய அவலங்களை பார்த்தோம். இந்நிலையில் தன் உறவுக்காரப்பெண்  ஒருவருடன் இணைந்து ஜவுளி வியாபாரம் செய்யலாமா? எனக்கேட்டு என்னை அணுகினார் ஒரு பெண்மணி. பொதுவாக ஒருவரது தொழில் கூறுகளை ஜாதகம் சுட்டிக்காட்டும் என்றாலும் பிரசன்னம் அதன் நிகழ்கால நிலையை துல்லியமாக சுட்டிக்காட்டும். இதனால் இது போன்ற கேள்விகளுக்கு பிரசன்னத்தை கைக்கொள்வதே சிறந்தது. அவருக்காக ஒரு ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்பட்டது.

          


பிரசன்னத்தை ஆராயுமுன் பிரசன்னம் கேள்வியாளரின் கேள்வியை,  சிந்தனையை சுட்டிக்காட்டுகிறதா என்பதை உறுதிப்படுத்திகொண்ட பிறகே பதிலுக்கு செல்ல வேண்டும். இது பிரசன்னத்தில் மிக முக்கியம். இனி மேற்கண்ட  பிரசன்னத்தை ஆராய்வோம் வாருங்கள்.

சனி ஹோரையில் சுக்கிர உப ஹோரையில் கேட்கப்பட்ட கேள்வி. இங்கு சனி என்பது தொழிலையும் சுக்கிரன் என்பது பெண்கள் உடுத்தும் ஆடைகளையும் குறிக்கிறது.

உதயத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளது. உடன் கூட்டாளியை குறிக்கும் புதன் உள்ளார். எனவே கூட்டுத்தொழில் என்ற கேள்வி சரி.

உதயத்திலும் கூட்டாளியை குறிக்கும் மேஷத்திலும் சுக்கிரன் அமைந்துள்ளது. எனவே கூட்டாளி பெண் என்பது தெளிவாகிறது.

தொழிலை குறிக்கும் 1௦ ஆம் அதிபதி சந்திரன் உதயத்திற்கு கூட்டாளி ஸ்தானமான 7 ல் உள்வட்டத்தில் நிற்கிறது. எனவே இது இரு பெண்கள் இணைந்து கூட்டாக தொழில் செய்வதைப்பற்றிய கேள்வி என்பது தெளிவாகிறது.

வியாபரத்தை குறிக்கும் துலாம் உதயமும் 7 ஆம் பாவமும் ஒற்றைப்படை ராசியாகி அதில் பெண் கிரகங்களான சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உடன் புதனும் இருப்பதால் இந்த பிரசன்னம் பெண்கள் தொடர்புடைய வியாபாரப்பிரசன்னம் என்பது தெளிவாகிறது. 

                       உள்வட்ட கிரக நிலை
 


பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களே தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு உதயத்திற்கு 1௦ ல் அமைந்த குரு ஜாதகியின் தொழில் சிந்தனையை தெரிவிக்கிறார்.

உதயத்திற்கு பாதகாதிபதி சூரியன் உதயத்தில் வெளிவட்டத்தில் நீச நிலை பெற்று உதய ஆட்சி சுக்கிரனால் நீச பங்கம் பெற்று நிற்கிறார். இது கேள்வியாளர் கூட்டாளியுடன் இணைந்து தொழில் செய்தாலும் தானே முதன்மையான சக்தியாக இருக்க விரும்புவதும் அதற்கு பாதகாதிபதியான சூரியன் தடையாக இருப்பார் என்பது தெளிவாகிறது. 

உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சூரியன் கேது இணைவையும் மீனத்தில் தன் வீட்டில் ஜாம சனியோடு இணைந்து நிற்கும் செவ்வாயை உச்ச நிலையில் கடகத்தில் அமைந்த ஜாம குரு பார்க்கிறார். இதனால் தொழில் முதலீடு கடன் பெற்றே துவங்கும் என்பதும். அதற்கு உதயத்திற்கு 1௦ ல் உச்சமான 6 ஆமதிபதி குரு உதவுவார் என்பதும் புரிகிறது. ஜாம குரு கேதுவின் மகம்-2 ல் நிற்பது தொழில் முதலீடு கடன் மூலம் என்பதை உறுதி செய்கிறது.

கூட்டாளியை குறிக்கும் புதன் உதயாதிபதியுடன் இணைந்து உதயத்தில் பாதகாதிபதி சூரியனுடன் இணைந்து நின்று, கூட்டாளியை குறிக்கும் மேஷ செவ்வாய் மீனத்தில் 6 ஆமிடத்தில் அதன் பகை கிரகமான சனியோடு சேர்க்கை பெற்ற   நிலையில் ஜாம செவ்வாயும் விரையத்தில் நிற்கிறது. இதனால் கேள்வியாளர் தனது தொழிலில் மிகுந்த சிரமங்களை அடைவார். அதுவும் கூட்டாளி வகையில் விரையங்களையும் வேதனைகளையும் அடைவார் என்பது தெளிவாகிறது.

                          வெளிவட்ட கிரக நிலை 


    உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற ஜாம குருவை உதயத்திற்கு 4 ஆமிடத்தில் அமைந்த சனியும், ஆட்சி சனியால் நீச பங்கமடைந்த உள்வட்ட குருவும் பார்க்கிறார்கள். உடன் 1௦ ஆமதிபதியான ஜாம சந்திரனும் தன் வீட்டை பார்க்கிறார். இந்த நிலையை உதயத்திற்கு 7 ஆமிடத்தை முதன்மையாகக்கொண்டு பார்க்கையில் கூட்டாளிக்கு நிர்வாகத்திறமை உண்டு. ஆனாலும் இரு செவ்வாயின் நிலையால் மேற்சொன்ன பாதிப்பு மற்றும் விரையம் ஆகியவை இருக்கும்.

இது எதுவரை இருக்கும் எனில் உதயத்திற்கு 4 ல் நின்று 1௦ ஆம் வீட்டை பார்க்கும் சனி 4 ஆம் வீட்டை விட்டு நகரும் வரையிலும் கோட்சார கேது உதய புள்ளியை கடக்கும் வரையிலும் இருக்கும். அதன் பிறகு தொழில் பாதிப்புகள் குறையத்துவங்கும். ஆனால் உள்வட்ட சனி உதயத்திற்கு 6 ல் மீனத்திற்கு செல்லும் காலம் வரை தொழிலில் அதிகம் கடன் கொடுக்காமலும் அதிக இருப்பு வைத்துக்கொள்ளாமலும் வியாபாரம் செய்வது சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டது.

உதயம் (சுவாதி), ஆரூடம் (சதயம்), கவிப்பு (சதயம்) ஆகியவை ராகு சாரம் பெறுவது கவனிக்கத்தக்கது. உதயாதிபதியின் மற்றொரு வீடான ரிஷபத்தில் நிற்கும் ராகு உதயாதிபதி போன்றே செயல்படவேண்டும். ராகு உதயத்திற்கு 8 ல் நின்றாலும் அது உதயாதிபதியின் மற்றொரு வீடு என்பதால் பாதிப்பை தராது.

கவிப்பு 5 ல் இருப்பது இந்த தொழிலால் கேள்வியாளருக்கு  ஏற்படவிருக்கும் பாதிப்பை சொல்லும். கவிப்பும் உதயாதிபதியின் சாரம் பெறுவதால் அது பாதிப்பை தர இயலாது.

ஆரூடம் 5 ல் நிற்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேள்வியாளர் கல்லூரியில் படிக்கும் தனது மகளை தனது தொழிலுக்கு சேர்த்துக்கொள்ளலாமா? என கேட்டார். பிரசன்னத்தில் உச்சம் மற்றும் நீசம் பெற்றும் நிற்கும் குருவை ஆராய்ந்தும் மூத்த மகளை குறிப்பிடும் சுக்கிரன் 7 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதை வைத்தும் அதுவே மிகச்சிறப்பானது என கேள்வியாளருக்கு சொல்லப்பட்டது. இதனால் கேள்வியாளர் தொழில் கூட்டிற்கு எண்ணியிருந்த பெண்ணை  தவிர்த்து மகளையே கூட்டாளியாக்கிவிட ஒப்புக்கொண்டார்.  எனினும் நிர்வாகத்தை மகளிடமே தந்துவிடவேண்டும் என்றும் நீங்கள் உதவியாளராக மட்டுமே செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 


மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன் 

கைபேசி: 8300124501  

1 comment: