Saturday, 27 February 2021

ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது?

 

கிரகப்பெயச்சிகள் நமது கர்மங்களை எப்போது நாம் அனுபவிக்கவிருக்கிறோம் என்பதை தெரிவிக்கின்றன. கிரகப்பெயர்ச்சிகளில் மனித வாழ்வை ஆளும் முக்கிய கிரகங்களான குரு மற்றும் சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியமானவை. சனி இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையும் குரு வருடத்திற்கு ஒரு முறையும் பெயர்ச்சியாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.  ராகு-கேதுக்களின் பெயர்ச்சிகள் குரு மற்றும் சனிப்பெயர்ச்சிகளைவிட முக்கியத்துவம் குறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. எப்படியாயினும் இவை குறிப்பிட்ட ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் அவர் அறியும் வண்ணமோ அறியா வண்ணமோ மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. நாளிதழ்களில் பொதுவாக குறிப்பிடப்படும் கிரகபெயர்ச்சி ராசி பலன்களை விட தனி ஒருவருக்கான ஜாதகங்களை தேவைப்படின் தங்களது குடும்பத்திற்கான ஜாதகங்களை ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது  குறிப்பிட்ட கிரக பெயர்ச்சிகளால் நாம் எதை எதிர்கொள்கிறோம் என்பதறிந்து நம்மை தயார் படுத்திக்கொள்ள உதவும். இப்பதிவில்  ஒரு கிரகப்பெயர்ச்சி ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயவிருக்கிறோம்.


2015 ல் பிறந்த மேற்கண்ட சிறுவனின் ஜாதகத்தில் ஜனன காலத்தில் ரிஷபத்தில் உச்சமான சந்திரனின் மீது, கோட்சாரத்தில் ராகு கடந்த 202௦ செப்டம்பரில் வந்து உச்சமாகி அமர்கிறார்.  கார்த்திகை-2 ஆம் பாதத்தில் பிறந்த இச்சிறுவனுக்கு தற்போது சந்திர திசையில் ராகு புக்தி இந்த 2021 ஆம் ஆண்டு இறுதிவரை நடப்பில் உள்ளது. ராகு கேதுக்கள் ஒரு ஜனன கால கிரகத்தை கோட்சாரத்தில் கடந்து செல்லும்போது தங்களது திசை, புக்தி, அந்தரங்ககள் அப்போது நடந்தால் அவை ஜாதகருக்கு நிச்சயம் வாழ்வில் மாற்றங்களை வழங்கும். மேலும் அவை செல்லும் நட்சத்திராதிபதியின் இதர நட்சத்திரங்களில் ஏதேனும் கிரகங்கள் அமைந்திருந்தாலும் அக்கிரகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு செல்லும். இவை கோட்சாரத்தில் தரும் மாற்றங்கள் ஒருவரது ஜாதக அமைப்பைப்பொறுத்து நன்மையாகவோ அல்லது தீமையாகவோ அமையும். இந்த சிறுவனுக்கு 6 வயதுதான் ஆகிறது எனவே தற்போதைய கோட்சார ராகு தரும் தாக்கத்தை சிறுவனால் பெரிய அளவில் உணர வாய்ப்பில்லை. ஆனால் கோட்சார ராகு தாயாரை குறிக்கும் சந்திரனின் மீது சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணி-4ல் தற்போது சென்றுகொண்டிருக்கிறது என்பதை கவனிக்கவும். இதனால் சிறுவனுக்குப்பதில் கோட்சார ராகு தரும் பாதிப்புகளை தாயார் ஏற்றுக்கொள்ள  வாய்ப்புண்டு.  

இப்போது சிறுவனின் தாயாரின் ஜாதகத்தை பார்ப்போம்.


இந்தப்பெண்மணி 1986 ல் பிறந்தவர். தற்போது இவருக்கு ராகு திசையின் சந்திர புக்திதான் நடக்கிறது. ராகு இவரது ஜாதகத்தில் எந்த கிரகத்தின் மீதும் கோட்சாரத்தில் செல்லவில்லை. இதனால் இந்தப்பெண்மணி மகனின் ஜாதகத்தில் தெரிந்தது போல மகனது சந்திரனின் மீது கோட்சார ராகு செல்வதன் பாதிப்பை உணரமாட்டார். இந்த ஜாதகிக்கு ராகுவால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் கோட்சார கேது இவரது ஜனன கால சனி மீதும் செவ்வாய் மீதும் செல்கிறது. தடைகளை குறிக்கும் கேது ஜனன கால சனி மீது செல்வதால் ஜாதகிக்கு தற்போது வேலை இல்லை. திறமை இருந்தும் தற்போதைய சூழலில் தன்னால் செயல்பட இயலவில்லையே என வருந்துகிறார். இதன் பாதிப்பு ஜாதகிக்கு குறைவே. ஆனால் கோட்சார கேது ஜனன கால செவ்வாய் மீதும்  செல்வதால் இந்த ஜாதகியின் கணவருக்கோ அல்லது சகோதரருக்கோ சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஜாதகியின் ஜாதகத்தில் இது தெரிந்தால் நிச்சயம் மகனின் ஜாதகத்திலும் தந்தைக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது தெரிய வேண்டும். மகனின் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் கோட்சாரத்தில் தந்தைக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என மீண்டும் ஒரு முறை ஆராய்வோம்.

சிறுவனின் ஜாதகத்தில் நாம் கவனிக்கத்தவறிய ஒரு விஷயம் ஒன்று உண்டு. அது தந்தையை குறிக்கும் சூரியன் மகரத்தில் திருவோணம்-2 ல் உள்ளது. தாயை குறிக்கும் ரிஷபத்தில் கார்த்திகை-2 ல் நின்று சூரியனும் சந்திரனும் நட்சத்திரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இதனால் பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் கோட்சாரத்தில் இடம் மாறி செயல்படும். இதனடிப்படையில் சந்திரனின் இடத்திற்கு வரும் சூரியன் கோட்சார ராகுவோடு தொடர்பு பெறுகிறார். இதனால் சிறுவனுக்கு அல்லது சிறுவனின் தாய்க்கு கோட்சார ராகு தரும்  சிரமங்களை அவர்களுக்கு பதிலாக தந்தை ஏற்றுக்கொள்கிறார். எனவே தாயின் ஜாதகப்படி கணவனுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பது உறுதியாகிறது. இப்போது இவற்றை தந்தையின் ஜாதகம் காட்டுகிறதா என காண்போம். கீழே தந்தையின் ஜாதகம்.


1986 ல் பிறந்த ஜாதகர். இவரது ஜனன கால லக்னாதிபதி புதன் மற்றும் சூரியன் மீது கோட்சார ராகு நிற்கிறது. இது இந்த ஜாதகருக்கு பாதிப்பு ஏற்படுவதை தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார கேது ஜனன கால வக்கிர சனி மீது நிற்கிறது. ஜனன காலத்தில் வக்கிரமடைந்த கிரகங்கள் கோட்சார நேர்கதி கிரகங்களோடு இணைந்து செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி கேதுவினால் ஜீவன காரகன் சனி பாதிப்படையாது. ஜனன புதன், சூரியன் மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகுதான் பாதிப்பை தர வேண்டும். ஜாதகருக்கு ராகுவால் ஏற்படும் பாதிப்பை திசா-புக்திகள் அனுமதிக்கின்றனவா என காண்போம். ஜாதகருக்கு கேது திசையில் புதன் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கிறது. ஜனன கால புதனை கோட்சாரத்தில் ராகு கடந்தாலும் பாதிப்பின் தீவிரம் குறையுமே தவிர பாதிப்பு இல்லாமல் இராது. கோட்சார ராகு ஜனன கால புதனை கடந்து சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளார். சூரியன் தந்தை, மாமனாரையும் கால புருஷனுக்கு வயிறு மற்றும் முதுகை குறிக்கும் சிம்மத்தின் அதிபதி என்பதால் இந்த வகைகளில்தான் ஜாதகருக்கு பாதிப்புகள் ஏற்பட வேண்டும். தந்தையை குறிக்கும் லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் சூரியன் மீது கோட்சார ராகு செல்வதால் இவரது தந்தைக்கு கடும் கண்ட காலமாகும். மேலும் சூரியன் கால புருஷனின் ரோகாதிபதியும் லக்னாதிபதியுமான புதனோடு இணைந்து உள்ள நிலையில் கோட்சாரத்தில் இவைகளின் மீது ராகு செல்கையில் ஜாதகருக்கும் பாதிப்புகள் ஏற்பட விதியுண்டு. ஜாதகருக்கு ஏற்கனவே முது வலி உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து  வருகிறார். கோட்சார ராகு சூரியனை நெருங்கிக்கொண்டுள்ளது. இந்தக்காலத்தில் இவர் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.


1997 ல் பிறந்த இளைஞனின் ஜாதகம். இது. இவர் தற்போது உயர் கல்விக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். இரண்டாம் இடத்திற்கு கோட்சார ராகு-கேதுக்கள் வரும் சூழலில் திசா-புக்தி அடிப்படையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஜாதகருக்கு சனி திசையில் ராகு புத்தி நடக்கிறது. ஜோதிடத்தில் 9 ஆமிடம் நீண்ட தொலைவு பயணங்களையும் 12 ஆமிடம் வெளிநாட்டு பயணங்களையும் குறிப்பிடும். இந்த இளைஞனுக்கு சனி திசையில் ராகு புக்தி தற்போது நடக்கிறது. ஜனன கால சனி கால புருஷனுக்கு 12 ல் நிற்க ராகு லக்னத்திற்கு 12 ல் நின்று புத்தி நடத்த இவர் தற்போது வெளிநாடு செல்கிறார். இவர் கல்விக்காகவே வெளிநாடு செல்கிறார் என்பதை ஜனன காலத்தில் கல்வியை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனியோடு பரிவர்த்தனை ஆகி நிற்கும் குருவும் சனியும் கோட்சாரத்தில் 4 ஆம் பாவத்தில் தற்போது இணைந்திருப்பது சுட்டிக்காட்டுகிறது.

மகனின் இந்த சூழல் இதர குடும்ப உறுப்பினர்களில் ஜாதகங்களிலும் எதிரொலிக்கிறதா என காண்போம்.

இளைஞனின் தந்தையின் ஜாதகம்.


லக்னத்திற்கு 5 ஆவது பாவம் முதல் குழந்தையையும், சூரியனும் முதல் மகனையும் குறிப்பவை. முன் பார்த்த இளைஞன் ஜாதகரின் முதல் மகனாவார். தனுசு லக்னத்திற்கு 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் ராகுவோடு இணைவு பெற்று ரிஷபத்தில் நிற்பதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நிற்பதும் ஜாதகரின் முதல் மகன் வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது. ஜாதகருக்கு சுக்கிர திசை புதன் புக்தி தற்போது நடப்பில் உள்ளது. இவை இரண்டும் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவத்திற்கு விரையத்தில் நின்று திசை நடத்துகிறது. 5 க்கு விரைய பாவமான 4 ஆம் பாவம் செயல்படுவதால் 5 ஆம் பாவ உறவான மகன் விடுபட்டுச்செல்கிறார். மேலும் திசா-புக்தி கிரகங்கள் கல்வி பாவமான 4 ஆம் பாவத்தில் ஜல ராசியான  மீன ராசியில் நிற்பது மகன் கல்விக்காக கடல் கடந்து வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

இப்போது இளைஞனின் தாயார் ஜாதகத்தில் மகன் வெளிநாடு செல்வது சுட்டிக்காட்டப்படுகிறதா என காண்போம்.


இதுவும் தனுசு லக்ன ஜாதகம் என்பதால் முதல் மகனை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் கோட்சாரத்தில் கோட்சார ராகுவின் மீது செல்வதும் முதல் மகனை குறிக்கும் சூரியன் கோட்சாரத்தில் ராகுவின் சதய நட்சத்திரத்தில் செல்வதும் மகன் வெளிநாடு செல்வதை குறிக்கிறது. ஜாதகிக்கு நடக்கும் திசா நாதன் ராகு முதல் மகனை குறிக்கும் சூரியனின் உத்திராடம்-2 நின்று திசை நடத்துகிறது. புக்தி நாதன் சனி 5 ஆம் பாவாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம்-1 ல் நின்று புக்தி நடத்தும் வேளையில் சனி  மீது கோட்சார ராகு செல்வதும், புத்திரகாரகன் குரு கோட்சாரத்தில் ஜனன கால ராகுவின் மீது கோட்சார சனியோடு இணைந்து செல்வதும் மகன் கல்விக்காக வெளிநாடு செல்வதை தெளிவாக உணர்த்துகிறது.

கிரகங்கள் மாற்றங்களை தந்துகொண்டே இருக்கின்றன. உணர்வதற்கு மனமிருந்தால் மாற்றங்களை எதிர்கொள்வது எளிதாகும். அதற்கு ஜோதிடம் உறுதுணை புரிகிறது.  

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment