Friday, 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 18 March 2021

அதிசயங்களை நிகழ்த்த வரும் அதிசார குரு!

 


ஒரு கிரகம் முறையான பெயர்ச்சிக்கு முன்னரே தற்காலிகமாக அடுத்த ராசிக்கு செல்லும் பெயர்ச்சியே அதிசார பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. தற்போது மகரத்தில் சனியோடு இணைந்து நிற்கும் குரு இன்னும் சில நாட்களில் கும்பத்திற்கு அதிசாரமாக செல்ல இருக்கிறார்.  உண்மையில் குருவை கடந்து செல்லும் பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு மாயத்தோற்றமே இது என்றாலும் கிரகங்களின் கதிர் வீச்சுகளே உயிரினங்களை இயக்குகின்றன என்பதன் அடிப்படையில் இதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி அதிசாரமாக அடுத்த ராசிக்கு செல்லும் குரு வழக்கமாக 4 மாதங்கள் அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார். ஆனால் இம்முறை குரு கிட்டத்தக்க 6 மாத காலங்கள் இப்படி அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார் என்ற அடிப்படையில் இந்த அதிசார குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.  பொதுவாக நீச வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு கிரகம் தனது ஆரோகண பயணத்தை துவங்குகிறது. நீச்ச வீட்டிலிருந்து வெளியேறி அடுத்த வீட்டிற்கு செல்லும் குரு தனது நீச்சத்தன்மையிலிருந்தும் உடன் இணைந்த சுபாவ பாவி சனியின் பிடியிலிருந்தும் விடுபட்டுச் செல்கிறார். இதனால் குரு தற்போது தீவிர வீரியத்தோடு செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.  

குரு இக்காலத்தில் பெருமளவு வக்கிர கதியிலேயே இருப்பார். வக்கிர நிலை பெறும்  கிரகங்கள் ராகு-கேதுக்களோடு இணைந்து அல்லது அதன் தன்மையில் செயல்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  அதே சமயம் இதுவரை சனியோடு இணைந்திருந்து சனியின் மற்றொரு வீட்டிக்கு செல்லும் குருவிடம் சனியும் குணமும் இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். குரு கும்பத்திற்கு சென்று மிதுனத்தையும் சிம்மத்தையும் துலாத்தையும் தனது பார்வையால் புனிதப்படுத்துகிறார். அதற்கு முன்னர்  செவ்வாய் ராகுவை கடந்து செல்லும் இம்மாத கடைசி வாரம் உலக அளவில் ஒரு கடுமையான நெருக்கடியான காலமாக இருக்கும்.  குரு செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் கும்பத்திற்கு செல்லும் இதே காலத்தில் குருவின் சார நாதன் செவ்வாய் ராகுவை கடந்து தனது சொந்த நட்சத்திரம் மிருகசீரிஷத்தில் மிதுனம் சென்று குருவின் 5 ஆம் பார்வையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் இம்மாத இறுதிக்குப்பிறகு உலக அளவில் அரசியல், வேலை, குடும்ப மற்றும் பணிச்சூழல்களில் மாறுதல்களை அனைவரது வாழ்விலும் உணரும்வண்ணமோ அல்லது உணராவண்ணமோ ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த அதிச்சார குருவின் மாற்றம் தனி மனித வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 

லக்னாதிபதி புதன் 5,12 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைந்து நீண்ட பயணங்களை குறிக்கும் 9 ஆமிடத்தில் உள்ளதால் ஜாதகர் தனது வாழ்வில் நீண்ட தொலைவு பயணங்களை செய்வார். சுக்கிரனே வெளிநாட்டுப்பயணத்தை குறிக்கும் 12 ஆமதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. புதன் 1௦ ஆமதிபதியும் ஜல ராசியான மீனத்தின் அதிபதியுமான குருவின் பூரட்டாதி-3 அமைந்து, புதன் நின்ற வீட்டோனான சனி மற்றொரு ஜல ராசியான விருட்சிகத்தில் புதனின் கேட்டை-4 ல் நின்று,  வருமான ஸ்தானாதிபதி சந்திரன் கடகத்தில் ஜீவன காரகன் சனியின் பூசம்-4 ல் நின்றதால் ஜாதகர் வெளிநாட்டில் பணி புரிகிறார். 1௦ ஆமதிபதி தனகாரகன் குருவாகி, லக்னாதிபதியோடு இணைந்த கிரகமும் தனத்தை குறிக்கும் மற்றொரு கிரகம் சுக்கிரனாகி , ஜீவன காரகன் சனி கணக்கு, வங்கி, பதிவுகளை குறிக்கும் புதனின் கேட்டையில் நின்றதால் ஜாதகர் வங்கித்துறையில் பணிபுரிகிறார். கூட்டுக்கிரக சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலுவானவர்கள் என்ற அடிப்படையில் 1௦ ஆமிட கிரகங்களில் வலுவானது ராகுதான். இதனால் ஜாதகர் வளைகுடாவில் கணினி சார்ந்த துறையில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். (குரு-வங்கி, ராகு-கணினி.)

தற்போது ஜாதகருக்கு 1௦ ஆமிட ராகுவின் சதையம்-4 ல் நிற்கும் சுக்கிரனின் திசையில் லக்னாதிபதி புதனின் ரேவதி-1 நிற்கும் ராகுவின் புக்தி நடத்துகிறது. ராகுவின் சாரநாதன் புதன் உத்தியோக உயர்வை குறிப்பிடும் 9 ஆம் பாவத்தில் 1௦ அதிபதி குருவின் சாரம் பெற்று நிற்கிறார். இந்த அமைப்பால் 9 மற்றும் 1௦ ஆமிட கிரகங்கள் இணைந்து செயல்பட்டு ஜாதகருக்கு தற்போது  தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றன. ஜாதகருக்கு குருவின் அந்தரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து சனியின் அந்தரம் துவங்கவுள்ளது. இதே சமயம் 1௦ ஆமதிபதியான குரு கோட்சாரத்தில் 9 ஆம் பாவமான கும்பத்திற்கு அதிசாரமாக வந்து அங்கு ஜனன காலத்தில் நிற்கும் சுக்கிரன் மற்றும் புதனோடு இணைகிறார். இது ஜாதகருக்கு ஒரு அருமையான கால கட்டமாகும். 9 ஆமிடம் குருவிற்கு இதர பாவங்களைவிட ஒரு ஒப்பற்ற ஸ்தானமாகும்.. காரணம் குரு கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பதால்தான். இக்காலத்தில் ஜாதகருக்கு வாழ்வில் உத்தியோக உயர்வுகள் ஏற்பட வேண்டும். காரணம் சனி அந்தரத்தில் இது நடக்கிறது என்பதால்தான். சனிக்கு 9 ஆவது திரிகோணத்தில் கடகத்தில் நிற்கும் சந்திரன் சனியில் சாரத்தில் ஆட்சி பெற்று அமைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இட மாற்றத்தை குறிக்கும் சந்திரன் சனியின் சாரம் பெற்றதால் இட மாற்றம் வேலை வகையில் ஏற்படுவதை இது உணர்த்துகிறது. கோட்சார சூரியனும் லக்னத்திற்கு 1௦ ஆம் பாவத்தில் தற்போது நிற்கிறார் இதனால் அப்படி இட மாறுதலோடு அமையும் வேலை ஜாதகருக்கு மிகுந்த மதிப்பையும் சிறப்பையும் தருவதாக அமையும்.  லக்னாதிபதிக்கு நண்பரான சூரியன் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலம் பெற்று அமைந்துள்ள நிலையில் கோட்சாரத்திலும் திக்பலம் பெற்று நிற்பதுதான் இந்த சிறப்பிற்கு காரணம்.

தற்போது ஜாதகர் வளைகுடாவில் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இடமாறுதலுடன் கூடிய உத்தியோக உயர்வு கிடைக்கப்பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில்  பணியில் சேர உள்ளார்.     

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

  


8 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிர கதியில் நிற்கிறார். 7 ஆமிடம் மனைவியை குறிக்கும் பாவமாகும். அங்கு நிற்கும் குரு குடும்பம், குழந்தை வருமானம் இவற்றோடு 8 ஆமதிபதி என்பதால்    விபத்து, கண்டம், மாரகம், பிரிவினை, அவமானம்  போன்றவற்றை குறிக்கிறார். திருமணத்திற்கு பிறகுதான் வாழ்க்கையில் அவமானம் என்றால் என்னவென்று உணர்ந்துகொண்டதாக ஜாதகர் தெரிவிக்கிறார். தன்னை அவமானப்படுத்துவதற்காகவே தனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்களோ என புலம்பினார். ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் அனுஷம்-1 சுய சாரம் பெற்ற சனியின் திசை நடக்கிறது. 4, 9 ஆம் வீட்டோனின் ராசியில் சனி நிற்பதால் இரு வீட்டு வேலையையும் சனி செய்தாக வேண்டும். 9 ஆமிடம் சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இப்படி மேஷத்திற்கு செயல்படும் சனி ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கு விரையத்தில் மேஷத்திற்கு செயல்படுவதால் வேலையில் பாதிப்புகளை கொடுத்துக்கொண்டுள்ளார். கோட்சார கேது ஜனன சனி மீது தற்போது சென்றுகொண்டுள்ளது இதை தெளிவாக உணர்த்துகிறது. இதனால் வேலைவகை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உள்ளது. வேலையில் கவனக்குறைவாக இருந்தால் பணி பறிபோகும் காலமாகும். சனியின் திரிகோணத்தில் ராகு நிற்பதால் ஜாதகர் ராகு-கேதுக்கள் தொடர்புடைய கணினித்துறையில்தான் பணிபுரிகிறார்.   ஜனன சனி மீது கோட்சாரத்தில் தற்போது சென்றுகொண்டிருக்கும் கேதுவின் காரக தொழிலை ஜாதகர் செய்வதால்  வேலை வகையில் பாதிப்பு ஜாதகருக்கு குறைவாகவே உள்ளது. கர்ம காரகன் சனி தந்தையை குறிக்கும் பாவமான 9 ஆமிடத்தோடு தொடர்புகொண்டு செயல்படும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் தனது தந்தைக்கு கர்மம் செய்யும் நிலை ஏற்பட்டது.. அதே சமயம் 6 ஆமிட நீச்ச குருவால்  மனைவியுடன்  இணக்கமற்ற சூழலில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். இங்கே குடும்பத்தை பிரியாமல் காப்பது பிரிவினை பாவமான 8 ஆமிடதிற்கு  திரிகோணத்தில் விருட்சிகத்தில் நின்று திசை நடத்தும் சனிதான் என்றால் அது மிகையல்ல. 

8 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் சனியோடு இணைந்து சென்றுகொண்டிருப்பது குருவின் செயல்பாட்டை திசா நாதன் சனி தடுத்துவிடுகிறார் என்பதை காட்டுகிறது. மேலும் தன் வீட்டில் நிற்கும் குருவிற்கு கேந்திரத்தில்தான் சனி நிற்கிறார். இதனால் தன் வீட்டில் நிற்கும் குருவை கட்டுப்படுத்தும் சக்தி குருவின் சம கிரகமான சனிக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனினும் குரு தரும் அவமானங்களை சனியால் தடுக்க இயலாது. அதாவது அவமானங்களை எதிர்கொண்டு பிரிவினையை ஜாதகர் தவிர்ப்பார். திசா நாதன் சனி பாக்ய ஸ்தானமான 9 ஆமிடம் மேஷத்திற்கு செயல்படுவதாலும் புத்திர காரகன் குருவோடு கோட்சாரத்தில் இணைந்துள்ளதாலும் ஜாதகரின் மனைவி தற்போது கருவுற்றிருக்கிறார். லக்னத்திற்கு 4 ஆமிடதில் செவ்வாயின் வீட்டில் நிற்கும் சனி ஜாதகருக்கு வீடு யோகத்தையும் தருகிறார். ஜாதகாருக்கு சனி திசையில் சுய புக்திதான் நடக்கிறது. சிம்மத்தின் பூர்வ புண்ணியாதிபதி குரு 4 ஆமதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் தற்போது திசா  நாதன் சனிக்கு 4 ஆமிடம் கும்பத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி வரும் குரு ஜாதகருக்கு வீடு யோகத்தை வழங்குகிறார். ஜாதகர் வீடு கட்டும் முயற்ச்சியில் நிலத்தை முதலில் தற்போது வாங்கியுள்ளார். 

இந்த நிலையில்தான் கோட்சார குரு லக்னத்திற்கு 7 ல் அதிசாரமாக வருகிறார். இதனால் ஜாதகர் பாதிப்படைவார். கோட்சார குரு லக்னத்தை பார்ப்பது சிறப்பே ஆனாலும் ஜனன காலத்தில் தான் நின்ற அதே 7 ஆமிடத்திற்கு அவமான ஸ்தானாதிபதி வருவது நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். குழந்தை பிறந்ததும் மனைவி கோபம்கொண்டு கணவரோடு ஒருங்கிணைய மாட்டார். அதுவும் சில காலம்தான். அதன் பிறகு கோட்சார சனி அடுத்த வருடம் கும்பத்திற்கு வந்து அங்கு ஜனன காலத்தில் நின்ற குருவை கட்டுப்படுத்திவிடுகிறார். இதனால் மனைவியால் நீண்டநாள் கணவரை பிரிந்து இருக்க இயலாது. காரணம் தனது மூலத்திரிகோண வீட்டிற்கு வரும் 7 ஆமதிபதியும் திசா நாதனுமான சனி, குருவை தன்னோடு இணைந்து செயல்பட வைத்துவிடுவார். எனவே இங்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் பிரிவினை நிரந்தரமாகாது தடுக்கப்படும்..

இந்த ஜாதகத்தில் கோட்சாரத்தில் அதிசாரமாகி கும்பத்திற்கு வரும் குரு ஜாதகருக்கு மனைவி வகையில் நெருக்கடியை தற்காலிகமாக கொடுப்பார் ஆனால் அது நிரந்தரமாகாமல் சனி தவிர்த்துவிடுகிறார்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 12 March 2021

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...

 


நாமெல்லாம் தமில் நாட்டில் வாழ்கிறோம். தமிழகம் பொதுவாகவே சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட பூமியாகவே பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டை இத்தனை ஆண்டுகளாக சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பதால் இதைக்கூறுகிறேன். சுக்கிரன் எதிர்மறையாகவும் செயல்பட்டு வளர்ச்சியை அடையக்கூடியது. சுக்கிரனின் இந்த எதிர்மறைத்தன்மையால் தமிழ்நாட்டு மக்களாகிய நமக்கெல்லாம் பொதுவாகவே ஒரு எதிர்மறை சிந்தனைகொண்டவர்கள்தான். தமிழ்நாட்டின் தலைநகரத்தின் பெயர் மெட்ராஸ் என்பதிலிருந்து சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு கேதுவின் ஆதிக்கத்திற்கு வந்துவிட்டது. கேது மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம்,  நேர்மையான நீதி நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மருத்துவத்துறையின், ஆன்மீகத்துறையின், ஜோதிடத்துறையின் எழுச்சி ஆகியவை கேதுவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வந்துவிட்டதை தெளிவாக உணர்த்துகிறது. எனவே கேதுவின் ஆதிக்க காலமான இன்றைய நிலையில் இனி திரைத்துறையோடு தொடர்புடையவர்கள் தமிழகத்தை ஆள நினைத்துப்பார்க்கவே இயலாது. இதை எதிர்வரும் தேர்தலில் திரைத்துறை வேட்பாளர்கள் அடையும் தோல்வியிலிருந்து உணரலாம். சுக்கிரன் பாவிகள் தொடர்பு, சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றால் ஒருவர் நேர் வழியில் செயல்பட்டு அடைய முடியாத தனது விருப்பங்களை லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் சென்று நிறைவேற்றிக்கொள்வதை குறிக்கும். அப்படி பாவிகள் தொடர்பு பெற்ற சுக்கிரனின் செயல்பாட்டிற்கு ஒருவரது ஜாதகத்தில் உள்ள வக்கிரம் பெற்ற கிரகங்களும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் உதவுகின்றன. இக்கருத்தை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவதே இன்றைய பதிவு.


 

ஜாதகர் 1962 ல் பிறந்த ஒரு ஆண். இவர் அரசுத்துறையில் பணிபுரிந்து கடந்த 2020 பிற்பகுதியில் பணி ஓய்வு பெற்றவர். ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசமானாலும் அவர் சந்திரனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாய் நீசமாகிவிட்டதால் ஜாதகர் நேர் வழியில் முயன்று தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலாது. சந்திரன் பரிவர்தனைக்குப்பிறகு ராகுவோடு தொடர்பாவதாலும் இவர் மனம் ராகுவின் குறுக்கு வழி சிந்தனையை நாடும். நேர் வழி முயர்ச்சிகளை ராகு தடை செய்வார். குறுக்கு வழியை ராகு தடை செய்ய மாட்டார். லக்னாதிபதி நீசமாகி ராகுவோடு இணைந்து நிற்பதால் குறுக்கு வழிக்கு ஜாதகர் முயல்வார் ஜீவன காரகன் சனியும் மூன்றாமிடத்தில் அமைந்திருப்பது சிறப்பே. ஜீவன விஷயங்களில் கேதுவின் நேர்மைத்தன்மை வேண்டும் என்பதை இது குறித்தாலும் ராகு-கேதுக்களோடு தொடர்பான சனியை நீச செவ்வாய் பார்ப்பதால் ஜாதகருக்கு நேர் சிந்தனையை விட குறுக்கு சிந்தனைகளே அதிகம் வெற்றி தரும். 1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு லாப ஸ்தானத்தில் இணைத்துள்ளது. இதனால் ஜாதகர் அரசுத்துறையில் நிர்வாகம் மற்றும் திட்டமிடல் மற்றும் வரி வசூல் சார்ந்த துறைகளில் ஜாதகர் பணி புரிந்தார். 1௦ ஆமதிபதி சூரியனானதால் அரசுத்துறையிலும் சூரியன் புதனோடு இணைந்ததால் திட்டமிடல் துறையிலும் ஜீவன காரகர் சனி ராகு கேதுக்களோடு தொடர்பானதால் வரி வசூல் துறையிலும் ஜாதகர் பணி புரிந்தார்.   1௦ ஆமதிபதி சூரியன் வக்கிர புதனோடு இணைந்துள்ளது  ஜாதகரின் பணியில் நேர்மையான நண்பர்களை விட குறுக்கு வழி ஆசாமிகள் அதிகம் உடன் வருவர் என்பதை உணர்த்துகிறது.  

லக்னாதிபதி நீசமானதால் ஜாதகர் ஆளுமைத்தன்மை இல்லாதவராக செயல்பட்டார். நீச செவ்வாய் பாதக ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்பானதால் ஜாதகரிடம் பொதுவாகவே ஒரு பயந்த சுபாவம் உண்டு. இவரால் தனது துறையில் தவறு செய்யும் பணியாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ஜாதகரின் இந்தத்தன்மையால் ஜாதகருக்கு பணி ஆண்டுகள் அடிப்படையில் தன் துறை சார்ந்த வகையில் முதன்மை இடத்திற்கு முன்னேற தகுதி இருந்தும்  இவரை முதன்மை இடத்திற்கு கொண்டு செல்ல அரசு நிர்வாகம் தயங்கியது என்றே சொல்லலாம். ஜோதிடத்தில்  உத்தியோக உயர்வை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். ஒன்பதாம்  பாவமே ஜாதகருக்கு பாதக ஸ்தானமாகவும் அமைந்துவிட்டதால் உத்தியோக உயர்வில் ஜாதகருக்கு பாதகம் ஏற்படும் என்பதை இவரது லக்னமே குறிப்பிடுகிறது. ஜாதகருக்கு வேலை பாவமான 6 ஆம் பாவம் மேஷத்தில் சந்திரன் லக்னத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-3 ல் நிற்கிறார். இதனால் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் ஏற்பட்ட தொடர்பால்  சந்திரனின் திசையில் 6 க்கு லாபத்தில் நிற்கும் குருவின் விசாகம்-4 ல் விருட்சிகத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் ஜாதகருக்கு அரசுப்பணி கிடைத்தது. ஜாதகருக்கு கடந்த 2019 பிற்பகுதி வரை குரு திசையில் கேது புக்தி நடந்தது. குரு வேலை பாவமான 6 க்கு லாபத்தில் நிற்கும் அதே சமயம் அது 6 ன் பாதக ஸ்தானம் என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் குரு திசை ஜாதகருக்கு வேலையில் பாதிப்பு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு குரு திசையில் கேது புக்தி 2020 பிற்பகுதி வரை நடக்கிறது. கேது உத்தியோக உயர்வை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சந்திரனின் திருவோணம்-1 ல் அதே திருவோணம்-1 ல் உள்ள சனியுடன் இணைந்து இருந்தாலும் 9 ஆமிடம் பாதக ஸ்தானமாக வருவதாலும் உத்தியோக உயர்வுகளில் தடையும் மறுப்பும் ஜாதகருக்கு ஏற்பட்டது. கேது புக்தியை அடுத்து வரும் சுக்கிர புக்தி வருமான பாவமான 2 ன் விரையமான லக்னத்தில் இருப்பதால் சுக்கிர புக்தியில் ஜாதகர் பணி ஓய்வு பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 9 ல் உள்ள ராகுவும் உத்தியோக உயர்வில் தடைகளையே கொடுத்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஆனால் ராகு முன் சொன்னபடி முறையான வழியில் செயல்படுவதை தடை செய்வார். முறையற்ற வழிகளில்  செயல்பட தடை செய்ய மாட்டார். இதனால் உத்தியோக உயர்வை முறையாக பெற இயலாது என்பதை புரிந்துகொண்ட ஜாதகர் உத்தியோக உயர்வுக்காக லஞ்சம் கொடுத்து பணி உயர்வு பெற்றார். பணி ஏற்ற சில மாதங்களில் குரு திசையில் சுக்கிர புக்தி வந்ததும் பணி ஓய்வும் பெற்றார்.

இந்த ஜாதகத்தில் ஜாதகருக்கு முறையாக கிடைக்க வேண்டிய பணி உயர்வு மறுக்கப்பட்டதை கிரகங்கள் சுட்டிக்காட்டினாலும் அவர் குறுக்கு வழியில் சென்று பணி உயர்வு பெறவும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்களும் இதர வக்கிர கிரகங்களான புதனும் குருவும் இணைந்து செயல்பட்டுள்ளன. புதன் லஞ்சப்பணத்தை மேலிடத்தில் கொண்டுசேர்க்கும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் லஞ்சத்தின் காரக கிரகமாகும். இவைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் ஜாதகர் குறுக்கு வழியில் உத்தியோக உயர்வு பெற்றார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 4 March 2021

ஜோதிடமும் அரசியலும்!

 



ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள, அகல உயரம் என்ன? எந்த இடத்தில் எவ்வளவு உயரத்திலிருந்து நான் அரசியலில் குதித்தால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்? பெயர் கெடுமா? பண இழப்பா? சம்பாதிக்க முடியாதா? புகழ் உண்டா? என்ற கேள்விகளுடன் சிலர் அணுகியதன் விளைவாக இப்பதிவு இங்கே உங்களுக்காக.

அரசியலில் கிரகங்களின் பங்கு.

சூரியன் – ஆளும் தகுதியை தரும் முதன்மைக்கிரகம். ஆளும் கட்சியை குறிப்பது.

சந்திரன் – பொதுச்சேவை, மக்கள் தொண்டு. இரண்டாவது முக்கியமான ராஜ கிரகம்.

செவ்வாய் – இரண்டாம் நிலை அரசியல்வாதிகள். ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிகள்.

புதன் – அரசியலில் திட்டங்களுக்கான காரக கிரகம். கூட்டணி பேச்சுவார்த்தை. அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்களை குறிக்கும் கிரகம். சூரியனுடன் சேர ஆளும் கட்சிக்கும் சுக்கிரனுடன் சேர எதிர் கட்சிகளுக்கும் உதவி செய்யும் கிரகம்.

குரு – தேச நலன் கருதி செயல்படும் கிரகம். தேர்தல் காலங்களில் எந்த கிரகங்களுடன் தொடர்புகொள்கிறதோ அதன் அடிப்படையில் முடிவுகளை தெரிவிக்கும். ஆளும் கட்சியை அல்லது தேச நலனின்பொருட்டு செயல்படுபவர்களை ஆதரிக்கும் கிரகம்.

சுக்கிரன் – அரசியலுக்கான காரக கிரகங்களில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை நேரடியாக குறிக்கக்கூடியது. அரசியலில் நடக்கும் அனைத்து சதிராட்டங்களுக்கும் காரகம் வகிப்பது. பணம் பரிசு, இனாம், தானம் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்களே.

சனி – வாக்காளர்களை, அடித்தட்டு மக்களை குறிக்கும் கிரகம். சூரியனின் பகை கிரகமாவதால் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படக்கூடியது. ஜனன ஜாதகத்தில் சனி சாதகமாக இல்லை எனில் அரசியலில் வெற்றி பெற இயலாது. வயதான அல்லது பல்லாண்டு உழைப்பிற்குப்பிறகு அரசியலில் வெற்றியை உறுதியாகத்தரும் கிரகம். சாதகமற்ற சனி அரசியலில் தோல்வியை, அவமானங்களை, இழப்புகளை தரக்கூடியது. 

ராகு – சட்டத்திற்கு புறம்பான வழிகளில் அரசியல் வெற்றியை பெற வைக்கும் கிரகம்.

கேது – சட்டப்படியான வழிகளில் அரசியலில் வெற்றி பெற வைக்கும் கிரகம்.

மாந்தி – அரசியல் கூட்டணிகள் கடைசி நேரத்தில் மாறுவதற்கான காரக கிரகமாகும். மரணத்திற்கு சமமான பாதிப்புகளை சாதகமற்ற மாந்தி தருகிறார். அரசியல் படுகொலைகளுக்கு ராகு, செவ்வாய், சனி தொடர்பு பெற்ற மாந்தி காரணமாகிறார்..  

லக்னாதிபதி கிரகம் வக்கிரமானாலோ அல்லது வக்கிர கிரகம் லக்னத்தில் இருந்தாலோ அதன் திசா-புக்திகளில் அரசியலில் ஒருவரை பின்வாங்கவைக்கும்.

வக்கிர கிரகம் அரசியலில் நடிப்பவர்களை குறிப்பிடும்.

கடகம், சிம்மம் ஆகியவை ஆட்சி அதிகாரங்களுக்குரிய ராஜ ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

தனுசு ராசியும் அதன் அதிபதி குருவும், மகர ராசியும் அதன் அதிபதி சனியும் தேசத்தை ஆள்பவர்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குருவும் சனியும் கால புருஷனுக்கு தர்ம-கர்மாதிபதிகளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் கோட்சாரத்தின் கால புருஷனின் ராஜ்ய ஸ்தானமான மகரத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் வேளையில் தமிழக தேர்தல் வந்தாலும் வாக்குப்பதிவு காலத்தில் குரு கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ ராசிகளில் ஒன்றான கடகம் மக்கள் சேவையை குறிக்கும் ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியான மகரம் மக்களை குறிக்கும் சனியின் ராசியாவதால் மகரம் மக்களளின் மனநிலையை வெளிக்காட்டும் ராசியாகும். சிம்மத்தின் எதிர் வீடும் சனியின் கும்ப ராசிதான். ஆனால் கும்பம் மக்கள் மனோநிலையை வெளிக்காட்டாத ராசியாகும். இதன் பொருள் சந்திரனுக்குரிய தாய்மை உணர்ச்சியுடன் மக்களை அணுகினால் மக்கள் ஆதரவு உண்டு என்பதும் சிம்மத்தின் அதிகாரத்தோடு மக்களை அணுகினால் மக்கள் தங்கள் மனநிலையை வெளிக்காட்டாது தேர்தலில்தான் எதிரொலிக்கும் என்பதாகும். ஒவ்வொரு ராசியும் செயல்படுவது அதன் எதிர் ராசியின் வலுவைப்பொறுத்துதான்  என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு அரசியல்வாதியின் ஜாதகம்.

லக்னம் மக்கள் சேவையை குறிக்கும் கடக ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியாதிபதி சனியும் லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் சிறப்பாக அமைந்துள்ளனர். லக்னத்திற்கு 6  ஆமதிபதியும் 8 ஆமதிபதியும் லக்னத்திற்கு மூன்றில் அமைந்து விபரீத ராஜ யோகத்தை வழங்குகின்றனர். இவர்கள் கால புருஷனின் தர்ம கர்மாதிபதிகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது. கடக லக்னத்தின் பாதகாதிபதி சுக்கிரன் நீசம் பெற்று லக்னத்திற்கு மூன்றில் மறைவது ஒருவகையில் நன்மையே என்றாலும் சுக்கிரன் நீசமாகும் கன்னிக்கு அடுத்த ராசி துலாம் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால் சுக்கிரன் விரைவில் நீசபங்கம் பெற்று விடுவார். இது ஜாதகர் அரசியல் செல்வாக்கால் இல்லற விஷயத்தில் தவறாக நடந்துகொண்டால் ஜாதகர் தண்டனையையும் பெண்கள் மூலமான அவமானத்தையும் அடைவார் என்பதை குறிப்பிடுகிறது. இந்த அரசியல்வாதி தற்போது சுக்கிர திசையில்தான் உள்ளார். 11 ஆமதிபதியான சுக்கிரன் நீசம் பெற்று இப்படி திசை நடத்துவது இல்லற விஷயத்தில் ஜாதகர் தவறு செய்துகொண்டுள்ளார் என்பதையும் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள அதிகம் செலவு செய்வதையும் குறிக்கிறது. ஆனால் இவை யாவும் வெளி உலக்கிற்கு தெரியாது காரணம் சுக்கிரன் மறைவு பெற்றதுதான்.  லக்னத்திற்கு 2 ல் சூரியன் ஆட்சி பெற்று நிற்பது ஜாதகருக்கு அரசியல் மூலம் வருமானமும் வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தில் நிற்கும் செவ்வாய், சந்திரன் ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஜாதகர் அரசியலில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செயல்படுவதையும் அவரது நிலைப்பாடு கடுமையாகவும் இருக்கும் என்பதையும் குறிக்கிறது. அதே சமயம் லக்ன ராகு ஜாதகர் முறையற்ற குறுக்கு வழிகளில் சென்று தனது காரியங்களை முடிக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது.  இரண்டாமிட புதன் ஜாதகர் அரசியலின் பொருட்டு செய்யும் செலவுகளை குறிப்பிடுகிறது.

கீழே தான் அரசியலில் ஈடுபட்டால் சாதிக்க முடியுமா எனக்கேட்ட ஒரு இளைஞனுக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.


கும்ப உதயத்தில் முதன்மை ராஜ கிரகம் சூரியன். இது ஜாதகரின் அரசியல் ஈடுபாட்டை காட்டுகிறது. உதயத்தில் உள்ள சூரியன் தேஜேஸ்வர் என்ற  பெயரை கேள்வியாளருக்கு கொடுத்துள்ளது. முயற்சி ஸ்தானத்தில் அதன் அதிபதிகளான இரு செவ்வாயும் உள்ளது. இது ஜாதகரின் துணிவான நிலையை குறிக்கிறது. இரண்டு செவ்வாய்களும் 1௦ ஆமிடத்தை 8 ஆம் பார்வையால் பார்ப்பது கேள்வியாளரின் அரசியல் ஆசையை குறிக்கிறது.. ஆரூடம் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது.. ஜாம குரு மீனத்தில் ஆட்சி பெற்று நின்றாலும் உள்வட்ட குரு நீசம் பெற்று நிற்கிறது. இது ஜாதகர் தன்னை பொருளாதார ரீதியாக முதலில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதையும், தனக்கு ஒரு குடும்பத்தை இன்னும் அமைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது. கும்ப உதயம். சனியினுடையது. ஜாம சனி துலாத்தில் உச்சமாகி மகர சுக்கிரனுடன் பரிவர்தனையாகிறார். இதனால் இரு உதயாதிபதிகளும் உதயத்திற்கு விரையதிலேயே அமைகிறார்கள். இப்படி உதயாதிபதி கிரகம் உதயத்திற்கு விரையத்தில் அமைவது கேள்வியாளர் முதலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஜாம சனி மூன்றாவது திரிகோணத்தில் உச்சமாகியுள்ளது ஜாதகரின் எண்ணம் நிறைவேற பல ஆண்டுகள் ஆகும் என்பதை தெரிவிக்கிறது.  5 ஆவது திரிகோணம் சில ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் 9 ஆவது திரிகோணங்கள் பல ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் குறிக்கும். உச்ச சனி பலனை மெதுவாக கொடுக்கும் என்பதை குறிக்கிறது. கவிப்பு 1௦ ஆமதிபதி செவ்வாயின் மிருகச்சீரிஷ நட்சத்திரத்தில் ஜாம சூரியனோடு நிற்பதும் 1௦ல்  கேது நிற்பதும் ஜாதகரின் அரசியல் எண்ணங்களுக்கு தற்போது உள்ள தடைகளையும் குறிக்கிறது. அரசியலில் ஈடுபட எண்ணம் கொண்டுள்ள ஜாதகருக்கு வயது தற்போது 21. எனவே ஜாதகர் தற்போது தன்னை முதலில் நிலைநிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.

 

மீண்டு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501