Thursday, 18 March 2021

அதிசயங்களை நிகழ்த்த வரும் அதிசார குரு!

 


ஒரு கிரகம் முறையான பெயர்ச்சிக்கு முன்னரே தற்காலிகமாக அடுத்த ராசிக்கு செல்லும் பெயர்ச்சியே அதிசார பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. தற்போது மகரத்தில் சனியோடு இணைந்து நிற்கும் குரு இன்னும் சில நாட்களில் கும்பத்திற்கு அதிசாரமாக செல்ல இருக்கிறார்.  உண்மையில் குருவை கடந்து செல்லும் பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு மாயத்தோற்றமே இது என்றாலும் கிரகங்களின் கதிர் வீச்சுகளே உயிரினங்களை இயக்குகின்றன என்பதன் அடிப்படையில் இதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி அதிசாரமாக அடுத்த ராசிக்கு செல்லும் குரு வழக்கமாக 4 மாதங்கள் அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார். ஆனால் இம்முறை குரு கிட்டத்தக்க 6 மாத காலங்கள் இப்படி அதிசார மற்றும் வக்கிர கதியில் இருப்பார் என்ற அடிப்படையில் இந்த அதிசார குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.  பொதுவாக நீச வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு கிரகம் தனது ஆரோகண பயணத்தை துவங்குகிறது. நீச்ச வீட்டிலிருந்து வெளியேறி அடுத்த வீட்டிற்கு செல்லும் குரு தனது நீச்சத்தன்மையிலிருந்தும் உடன் இணைந்த சுபாவ பாவி சனியின் பிடியிலிருந்தும் விடுபட்டுச் செல்கிறார். இதனால் குரு தற்போது தீவிர வீரியத்தோடு செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.  

குரு இக்காலத்தில் பெருமளவு வக்கிர கதியிலேயே இருப்பார். வக்கிர நிலை பெறும்  கிரகங்கள் ராகு-கேதுக்களோடு இணைந்து அல்லது அதன் தன்மையில் செயல்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.  அதே சமயம் இதுவரை சனியோடு இணைந்திருந்து சனியின் மற்றொரு வீட்டிக்கு செல்லும் குருவிடம் சனியும் குணமும் இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். குரு கும்பத்திற்கு சென்று மிதுனத்தையும் சிம்மத்தையும் துலாத்தையும் தனது பார்வையால் புனிதப்படுத்துகிறார். அதற்கு முன்னர்  செவ்வாய் ராகுவை கடந்து செல்லும் இம்மாத கடைசி வாரம் உலக அளவில் ஒரு கடுமையான நெருக்கடியான காலமாக இருக்கும்.  குரு செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் கும்பத்திற்கு செல்லும் இதே காலத்தில் குருவின் சார நாதன் செவ்வாய் ராகுவை கடந்து தனது சொந்த நட்சத்திரம் மிருகசீரிஷத்தில் மிதுனம் சென்று குருவின் 5 ஆம் பார்வையை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் இம்மாத இறுதிக்குப்பிறகு உலக அளவில் அரசியல், வேலை, குடும்ப மற்றும் பணிச்சூழல்களில் மாறுதல்களை அனைவரது வாழ்விலும் உணரும்வண்ணமோ அல்லது உணராவண்ணமோ ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த அதிச்சார குருவின் மாற்றம் தனி மனித வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

 

லக்னாதிபதி புதன் 5,12 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைந்து நீண்ட பயணங்களை குறிக்கும் 9 ஆமிடத்தில் உள்ளதால் ஜாதகர் தனது வாழ்வில் நீண்ட தொலைவு பயணங்களை செய்வார். சுக்கிரனே வெளிநாட்டுப்பயணத்தை குறிக்கும் 12 ஆமதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. புதன் 1௦ ஆமதிபதியும் ஜல ராசியான மீனத்தின் அதிபதியுமான குருவின் பூரட்டாதி-3 அமைந்து, புதன் நின்ற வீட்டோனான சனி மற்றொரு ஜல ராசியான விருட்சிகத்தில் புதனின் கேட்டை-4 ல் நின்று,  வருமான ஸ்தானாதிபதி சந்திரன் கடகத்தில் ஜீவன காரகன் சனியின் பூசம்-4 ல் நின்றதால் ஜாதகர் வெளிநாட்டில் பணி புரிகிறார். 1௦ ஆமதிபதி தனகாரகன் குருவாகி, லக்னாதிபதியோடு இணைந்த கிரகமும் தனத்தை குறிக்கும் மற்றொரு கிரகம் சுக்கிரனாகி , ஜீவன காரகன் சனி கணக்கு, வங்கி, பதிவுகளை குறிக்கும் புதனின் கேட்டையில் நின்றதால் ஜாதகர் வங்கித்துறையில் பணிபுரிகிறார். கூட்டுக்கிரக சேர்க்கையில் ராகு-கேதுக்களே வலுவானவர்கள் என்ற அடிப்படையில் 1௦ ஆமிட கிரகங்களில் வலுவானது ராகுதான். இதனால் ஜாதகர் வளைகுடாவில் கணினி சார்ந்த துறையில் வங்கி ஒன்றில் பணிபுரிகிறார். (குரு-வங்கி, ராகு-கணினி.)

தற்போது ஜாதகருக்கு 1௦ ஆமிட ராகுவின் சதையம்-4 ல் நிற்கும் சுக்கிரனின் திசையில் லக்னாதிபதி புதனின் ரேவதி-1 நிற்கும் ராகுவின் புக்தி நடத்துகிறது. ராகுவின் சாரநாதன் புதன் உத்தியோக உயர்வை குறிப்பிடும் 9 ஆம் பாவத்தில் 1௦ அதிபதி குருவின் சாரம் பெற்று நிற்கிறார். இந்த அமைப்பால் 9 மற்றும் 1௦ ஆமிட கிரகங்கள் இணைந்து செயல்பட்டு ஜாதகருக்கு தற்போது  தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகின்றன. ஜாதகருக்கு குருவின் அந்தரம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து சனியின் அந்தரம் துவங்கவுள்ளது. இதே சமயம் 1௦ ஆமதிபதியான குரு கோட்சாரத்தில் 9 ஆம் பாவமான கும்பத்திற்கு அதிசாரமாக வந்து அங்கு ஜனன காலத்தில் நிற்கும் சுக்கிரன் மற்றும் புதனோடு இணைகிறார். இது ஜாதகருக்கு ஒரு அருமையான கால கட்டமாகும். 9 ஆமிடம் குருவிற்கு இதர பாவங்களைவிட ஒரு ஒப்பற்ற ஸ்தானமாகும்.. காரணம் குரு கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பதால்தான். இக்காலத்தில் ஜாதகருக்கு வாழ்வில் உத்தியோக உயர்வுகள் ஏற்பட வேண்டும். காரணம் சனி அந்தரத்தில் இது நடக்கிறது என்பதால்தான். சனிக்கு 9 ஆவது திரிகோணத்தில் கடகத்தில் நிற்கும் சந்திரன் சனியில் சாரத்தில் ஆட்சி பெற்று அமைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. இட மாற்றத்தை குறிக்கும் சந்திரன் சனியின் சாரம் பெற்றதால் இட மாற்றம் வேலை வகையில் ஏற்படுவதை இது உணர்த்துகிறது. கோட்சார சூரியனும் லக்னத்திற்கு 1௦ ஆம் பாவத்தில் தற்போது நிற்கிறார் இதனால் அப்படி இட மாறுதலோடு அமையும் வேலை ஜாதகருக்கு மிகுந்த மதிப்பையும் சிறப்பையும் தருவதாக அமையும்.  லக்னாதிபதிக்கு நண்பரான சூரியன் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலம் பெற்று அமைந்துள்ள நிலையில் கோட்சாரத்திலும் திக்பலம் பெற்று நிற்பதுதான் இந்த சிறப்பிற்கு காரணம்.

தற்போது ஜாதகர் வளைகுடாவில் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இடமாறுதலுடன் கூடிய உத்தியோக உயர்வு கிடைக்கப்பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில்  பணியில் சேர உள்ளார்.     

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

  


8 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிர கதியில் நிற்கிறார். 7 ஆமிடம் மனைவியை குறிக்கும் பாவமாகும். அங்கு நிற்கும் குரு குடும்பம், குழந்தை வருமானம் இவற்றோடு 8 ஆமதிபதி என்பதால்    விபத்து, கண்டம், மாரகம், பிரிவினை, அவமானம்  போன்றவற்றை குறிக்கிறார். திருமணத்திற்கு பிறகுதான் வாழ்க்கையில் அவமானம் என்றால் என்னவென்று உணர்ந்துகொண்டதாக ஜாதகர் தெரிவிக்கிறார். தன்னை அவமானப்படுத்துவதற்காகவே தனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்களோ என புலம்பினார். ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் அனுஷம்-1 சுய சாரம் பெற்ற சனியின் திசை நடக்கிறது. 4, 9 ஆம் வீட்டோனின் ராசியில் சனி நிற்பதால் இரு வீட்டு வேலையையும் சனி செய்தாக வேண்டும். 9 ஆமிடம் சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இப்படி மேஷத்திற்கு செயல்படும் சனி ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கு விரையத்தில் மேஷத்திற்கு செயல்படுவதால் வேலையில் பாதிப்புகளை கொடுத்துக்கொண்டுள்ளார். கோட்சார கேது ஜனன சனி மீது தற்போது சென்றுகொண்டுள்ளது இதை தெளிவாக உணர்த்துகிறது. இதனால் வேலைவகை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜாதகருக்கு உள்ளது. வேலையில் கவனக்குறைவாக இருந்தால் பணி பறிபோகும் காலமாகும். சனியின் திரிகோணத்தில் ராகு நிற்பதால் ஜாதகர் ராகு-கேதுக்கள் தொடர்புடைய கணினித்துறையில்தான் பணிபுரிகிறார்.   ஜனன சனி மீது கோட்சாரத்தில் தற்போது சென்றுகொண்டிருக்கும் கேதுவின் காரக தொழிலை ஜாதகர் செய்வதால்  வேலை வகையில் பாதிப்பு ஜாதகருக்கு குறைவாகவே உள்ளது. கர்ம காரகன் சனி தந்தையை குறிக்கும் பாவமான 9 ஆமிடத்தோடு தொடர்புகொண்டு செயல்படும் இந்த காலகட்டத்தில் ஜாதகர் தனது தந்தைக்கு கர்மம் செய்யும் நிலை ஏற்பட்டது.. அதே சமயம் 6 ஆமிட நீச்ச குருவால்  மனைவியுடன்  இணக்கமற்ற சூழலில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். இங்கே குடும்பத்தை பிரியாமல் காப்பது பிரிவினை பாவமான 8 ஆமிடதிற்கு  திரிகோணத்தில் விருட்சிகத்தில் நின்று திசை நடத்தும் சனிதான் என்றால் அது மிகையல்ல. 

8 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் சனியோடு இணைந்து சென்றுகொண்டிருப்பது குருவின் செயல்பாட்டை திசா நாதன் சனி தடுத்துவிடுகிறார் என்பதை காட்டுகிறது. மேலும் தன் வீட்டில் நிற்கும் குருவிற்கு கேந்திரத்தில்தான் சனி நிற்கிறார். இதனால் தன் வீட்டில் நிற்கும் குருவை கட்டுப்படுத்தும் சக்தி குருவின் சம கிரகமான சனிக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனினும் குரு தரும் அவமானங்களை சனியால் தடுக்க இயலாது. அதாவது அவமானங்களை எதிர்கொண்டு பிரிவினையை ஜாதகர் தவிர்ப்பார். திசா நாதன் சனி பாக்ய ஸ்தானமான 9 ஆமிடம் மேஷத்திற்கு செயல்படுவதாலும் புத்திர காரகன் குருவோடு கோட்சாரத்தில் இணைந்துள்ளதாலும் ஜாதகரின் மனைவி தற்போது கருவுற்றிருக்கிறார். லக்னத்திற்கு 4 ஆமிடதில் செவ்வாயின் வீட்டில் நிற்கும் சனி ஜாதகருக்கு வீடு யோகத்தையும் தருகிறார். ஜாதகாருக்கு சனி திசையில் சுய புக்திதான் நடக்கிறது. சிம்மத்தின் பூர்வ புண்ணியாதிபதி குரு 4 ஆமதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் தற்போது திசா  நாதன் சனிக்கு 4 ஆமிடம் கும்பத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகி வரும் குரு ஜாதகருக்கு வீடு யோகத்தை வழங்குகிறார். ஜாதகர் வீடு கட்டும் முயற்ச்சியில் நிலத்தை முதலில் தற்போது வாங்கியுள்ளார். 

இந்த நிலையில்தான் கோட்சார குரு லக்னத்திற்கு 7 ல் அதிசாரமாக வருகிறார். இதனால் ஜாதகர் பாதிப்படைவார். கோட்சார குரு லக்னத்தை பார்ப்பது சிறப்பே ஆனாலும் ஜனன காலத்தில் தான் நின்ற அதே 7 ஆமிடத்திற்கு அவமான ஸ்தானாதிபதி வருவது நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்தும். குழந்தை பிறந்ததும் மனைவி கோபம்கொண்டு கணவரோடு ஒருங்கிணைய மாட்டார். அதுவும் சில காலம்தான். அதன் பிறகு கோட்சார சனி அடுத்த வருடம் கும்பத்திற்கு வந்து அங்கு ஜனன காலத்தில் நின்ற குருவை கட்டுப்படுத்திவிடுகிறார். இதனால் மனைவியால் நீண்டநாள் கணவரை பிரிந்து இருக்க இயலாது. காரணம் தனது மூலத்திரிகோண வீட்டிற்கு வரும் 7 ஆமதிபதியும் திசா நாதனுமான சனி, குருவை தன்னோடு இணைந்து செயல்பட வைத்துவிடுவார். எனவே இங்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் பிரிவினை நிரந்தரமாகாது தடுக்கப்படும்..

இந்த ஜாதகத்தில் கோட்சாரத்தில் அதிசாரமாகி கும்பத்திற்கு வரும் குரு ஜாதகருக்கு மனைவி வகையில் நெருக்கடியை தற்காலிகமாக கொடுப்பார் ஆனால் அது நிரந்தரமாகாமல் சனி தவிர்த்துவிடுகிறார்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment