வாழ்வில்
சில முறை நாம் சன்னியாசிகளை பார்த்து அவர்களால் சில எண்ணங்களை மனதில் பதிய வைத்திருப்போம்.
அவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு
அதன் மூலம் உலகத்தை காண்கிறார்கள். வட்டத்துக்குள் இருந்து உலகத்தை காண்பவர்களும் என்னதான்
தனது முன்னோடிகளின் அனுபவ அறிவை புத்தகங்கள் மூலம் அறிந்தாலும் அவர்களுக்கும்
நிதர்சனமான உலகியல் அறிவு தேவைப்படுகிறது. அதனால்தான் சன்னியாசிகள் தேசாந்திரம்
செல்கிறார்கள். சாதாரண மனிதன் அலைந்து திரிந்து அனுபவங்கள் பல பெற்று அதன் பிறகே வாழ்க்கை
பற்றிய சில உண்மைகளை உணர்கிறான். இந்தக்கருத்தைக்கொண்டு பார்த்தால் சன்னியாசிகளின்
அறிவைவிட சாமான்யனின் அறிவே சிறந்தது என்பது தெளிவு. ஆனால் சாமான்யன் தனது இல்லற பொறுப்புகளால்
தள்ளாடுகிறான் அதனால் தனது அனுபவத்தால் பெற்ற அறிவைக்கூட சில சமயம் குடும்ப பொறுப்புகளால் செயல்படுத்த முடியாதபடி திணறுகிறான். இந்த விஷயத்தில் சன்னியாசிகளுக்கு சாமான்ய மனிதனைவிட
சிறப்புண்டு எனலாம். ஒரு வட்டத்துக்குள் தங்களது வாழ்வை குறுக்கிக்கொண்டு வாழும்
இந்த சன்னியாசிகளுக்கான ஜாதக அமைப்புகளை ஆராயவேண்டும் என்று நீண்ட நாட்களாகவே ஒரு
எண்ணமிருந்தது. சன்னியாசம் எனும் புயலின் மையத்தில் தற்போது நிலைகொண்டுள்ள ஒரு ஜாதகம்
மூலம் இது தொடர்பான விஷயங்களை ஆராய்வது
பொருத்தமானதாக இருக்கும். அதுவும் ஜைன மதத்தை தோற்றுவித்த மகாவீரர் பிறந்த நாளில்
இப்பதிவு வருகிறது என்ன பொருத்தம் பாருங்கள்.
கீழே ஒரு
பெண்ணின் ஜாதகம்.
21 வயதான இந்தப்பெண் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் துறவியாக மாறி பாலைவன மாநிலமொன்றில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார். தமிழ்நாட்டின் முதன்மை தென்மாவட்ட தலைநகரில் வசித்துவரும் ஒரு வட மாநில குடும்பத்தை சார்ந்தவர் இப்பெண். மேஷ லக்னாதிபதி செவ்வாய் மீனத்தில் நின்று அதன் அதிபதி குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது மோட்சம், நீண்ட சிறைவாசம், அடைபடுதல், நோயால் படுத்த படுக்கையாக பல நாள் இருத்தல் மற்றும் இல்லற இன்பத்தை அனுபவிப்பதையும் (படுக்கை சுகம்) குறிப்பிடும் இடமாகும். 12 ஆமிடம் மோட்ச ராசியாகி 12 ஆமதிபதி லக்னாதிபதியோடு பரிவர்த்தனை பெற்றதால் இந்தப்பெண் சன்னியாச வாழ்வை விரும்புகிறார். 12 ஆமதிபதி குரு பாதகாதிபதி சனி தொடர்பு பெற்று லக்னத்தில் அமைந்ததும், 12 ல் ஒரு பாவி செவ்வாய் அமைந்து 12 ஆமிட செவ்வாயை கேது தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் இங்கே படுக்கை சுகம் என்ற இல்லற சுகம் அடிபட்டுவிடுறது. மோட்ச பாவமான 12 ஆமிடத்தில் அமைந்த லக்னாதிபதியை கேது பார்ப்பது மோட்சத்தை முன்னிட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது வாழ்வை குறுக்கிக்கொண்டு ஒரு இடத்தில் அடைபடுதலையும் குறிப்பிடுகிறது.
ஜாதகியை மோட்சத்தை
நோக்கிய பாதையில் உந்தித்தள்ளிய காரணிகளை இப்போது ஆராய்வோம்.
ஜாதகத்தில்
சூரியனும் சந்திரனும் 6/8 அமைப்பில் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். இது
பெற்றோர்களுக்கிடையே கருத்தொற்றுமை இல்லை என்பதை குறிப்பிடுகிறது. பள்ளி செல்லும்
காலத்தில் பெற்றோர்களின் தினசரி வாக்குவாதங்களை பார்க்கும் ஜாதகிக்கு குடும்ப
வாழ்வின் மீது ஒரு வெறுப்பு ஏற்படுவது சாத்தியம். இதனால் இல்லறத்தை நினைத்து
ஆசைகொள்ள வேண்டிய பருவ வயதில் ஜாதகிக்கு இல்லற வாழ்வின் மீது வெறுப்பு வந்தது நியாயமே.
ஜாதகிக்கு கடந்த 2007 முதல்
சுக்கிர திசை நடக்கிறது. ஜாதகி தனது நகரில் 8 ஆம் வகுப்பு வரை ஒரு உயர்தர
ஆங்கிலப்பள்ளியில் படித்தார். அதன் பிறகு கும்பத்தில், லக்னத்திற்கு பாதகத்தில்
நிற்கும் புதனின் சாரத்தில் கடகத்தில் ஆயில்யம்-4 ராகுவோடு இணைந்து நிற்கும்
சந்திர புக்தியில் ஜாதகி தனது கல்வியை நிறுத்திவிட்டார். பாட்டியை குறிக்கும்
கேது திசா நாதன் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். பெற்றோர்களின் சண்டையால் மனோ
ரீதியாக பாதிக்கப்பட்ட ஜாதகிக்கு அவரது பாட்டி மன நிம்மதிக்காக மத நூல்களை படிக்கக்கொடுக்கிறார்.
பள்ளிக்கு செல்லாமல் மத நூல்களை படிக்கும் ஜாதகியை வீட்டில் யாரும் தொல்லை செய்யாதவாறு
திசா நாதனை கட்டுப்படுத்தும் கேது கவனித்துக்கொள்கிறார். பாதக ஸ்தானத்தில் நிற்கும்
5 ஆமதிபதி சூரியனின் உத்திராடம்-4 ல் மகரத்தில் நின்று சுக்கிரன் திசை
நடத்துகிறார். சுக்கிரனுடன் சன்னியாச கிரகம் கேது இணைந்துள்ளார். திசா நாதன்
சுக்கிரனானாலும் அவர் தனது பகை கிரகமான சூரியனின் சாரம் பெற்று பாதக ஸ்தான
தொடர்பும் பெற்றதால் ஒரு பருவ பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை கேது திசை மாற்றி அவருக்கு
ஆன்மீக ஆசைகளை பாட்டி மூலம் தூண்டி விடுகிறார். இதனால் ஜாதகி தானொரு சன்னியாசி ஆக
முடிவு செய்கிறார்.
தனது
விருப்பத்தை ஜாதகி வீட்டில் தெரிவிக்கிறார். 5 ஆமிடம் ஒருவரின் ஆசையை குறிக்கும்.
அதனோடு தொடர்புடைய கிரக திசா-புக்திகள் ஒருவரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும். 5
ஆமதிபதி சாரம் பெற்ற சுக்கிர திசையில் இல்லற ஆசையை கேது தடை செய்தாலும் தனது
காரகமான ஆன்மீக ஆசை நிறைவேற உதவுகிறார். கேதுவும் ஆசையை குறிக்கும்
கிரகமாகவும் செயல்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்பமாக
வசிக்கும் ஜாதகியின் வீட்டில் ஏற்கனவே ஜாதகியின் பெரியப்பா ஒருவர் தனது இல்லறக்கடமைகளை
நிறைவேற்றிய பிறகு சன்னியாசியாகி இருந்தார். இதனால் ஜாதகியின் சன்னியாசி ஆசைக்கு
குடும்பத்தில் தாயாரைத்தவிர இதர அன்பர்கள் அனுமதி தந்தனர்.
ராகு-கேதுக்களின்
அச்சும் – கிரகண தோஷமும்.
தாயார்
மறுக்கக்காரணம் ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் அச்சுக்கு வெளியே சந்திரன்
நிற்பதுதான். ராகுவை விட்டு சந்திரன் பாகை அடிப்படையில் விலகி இருந்தாலும் சந்திரன்
ராகுவுடன் மோட்ச ராசியான கடகத்திலேயே நிற்பது அதன் வலுவற்ற தன்மையை குறிக்கிறது. ஜாதகி பௌர்ணமியில்
பிறந்துள்ளார். ராகுவுடன் சந்திரன் பௌர்ணமியில் இணைந்திருப்பது கிரகண தோஷமாகும்.
மனதை குறிக்கும் சந்திரனின் ராசியில் ராகு-கேதுக்களின் தொடர்பில் சந்திரன் நிற்பதால்,
ஜாதகியின் மனதை ஆளும் தகுதியை ராகு-கேதுக்கள் பெற்றுவிடுகின்றன. ஆனால் ஆட்சி
பெற்று நிற்கும் சந்திரன் ஜாதகியின் வாழ்க்கையை காப்பாற்ற தன் மீது விழுந்துவிட்ட
ராகு-கேதுக்களின் நிழலை மீறி போராடுகிறார். சந்திரன் ஜாதகத்தின் அதிக பாகை பெற்று (29
பாகை) நிற்கிறார். இதனால் அவர் ஆத்ம காரகனாகி வலுவுள்ளவராகவே உள்ளார். ஆனால்
சந்திரனின் வலுவை கிரகண தோஷம் தவிடு பொடியாக்குகிறது. இதனால் சந்திரனின் காரக உறவான ஜாதகியின் தாயாரின்
வார்த்தையை வீட்டில் அனைவரும் நிராகரிக்கின்றனர். அனைத்து கிரகங்களும்
ராகு-கேதுக்களின் அச்சுக்குள் நிற்கும்போது சந்திரன் மட்டும் ராகு-கேதுக்களின் அச்சை
விட்டு விலகி நிற்கிறார். இதன் பொருளாவது ஜாதகியின் உலகத்திற்குள் தாய் செல்ல
முடியாது என்பதாகும்.
ஜாதகத்தில்
சூரியனும் சந்திரனும் 6/8 ஆக அமைந்த சூழலில் சந்திரன் அதிக பாகை பெற்று ஜாதகத்தில்
ஆத்ம காரகனாகவும் சூரியன் குறைந்த பாகை (6 பாகை) பெற்று தாரா காரகனாகவும் உள்ளனர்.
இதனால் தந்தை தாய்க்கிடையே கடும் மனப்பிரிவினை. சூரியன் பாதக ஸ்தானத்தில் 12 ல்
நிற்கும் லக்னாதிபதி செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் ராகு-கேதுக்களின்
அச்சுக்கு உள்ளே உள்ளார். இதனால் தந்தையை
மீறி தாயின் சொல்லை ஜாதகி ஏற்றுக்கொண்டுவிட இயலாது. சுக்கிர திசையில் கேதுவின்
அஸ்வினி-3 ல் நிற்கும் குருவின் புக்தியில் ஜாதகிக்கு உள்ளூரில் சன்னியாச
சடங்குகள் கடந்த 2019 இறுதியில்
கேது, சனி, குரு ஆகியவை கோட்சாரத்தில் தனுசு ராசியில் ஒன்றாக இணைந்திருந்தபோது நடந்தன. புக்தி நாதன் குரு குடும்ப பாவமான 2
க்கு விரையமான லக்னத்தில் கேது சாரம் பெற்று நிற்பதை கவனியுங்கள். இது சன்னியாச
வாழ்வுக்காக குடும்பத்தை ஜாதகி பிரிவதை குறிப்பிடுகிறது.
தற்போது
ஜாதகி தங்களது மதத்தின் தலைமை இடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜாதகியின் தாய் தனது மகளை சன்னியாச
வாழ்விலிருந்து மீட்கப்போராடுகிறார். ஜாதகி தற்போது சற்றே தனது மாயையிலிருந்து
விடுபட்டு தனது தாயின் கருத்துக்களை எண்ணிப்பார்க்கிறார். சன்னியாச வாழ்வை
முழுமையாக்கும் முடி பிடுங்குதல் எனும் முக்கிய சடங்கு தற்போதைய கொரோனாவால் ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது. ஜாதகியின் மத சம்பிரதாயப்படி முடியை மழிக்கமாட்டார்கள். முழுமையாக
பிடுங்கிவிடுவார்கள். தலை முடியை பிடுங்கிவிட்டால் மீண்டும் சன்னியாசிகளுக்கு
குறிப்பாக பெண்களுக்கு இல்லற எண்ணம் வராதபடி அது தவிர்த்துவிடும் என்பதே அதன்
அடிப்படை. தற்போது ஜாதகி தன்னை யாராவது காப்பாற்றி மீட்டுச்செல்வார்களா என தனித்து
விடப்பட்ட நிலையில் காலம் கடந்து தனது செயல்களை எண்ணி வருந்துகிறார். ஜாதகியின் தாய் தன் மகளை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா? என
தமிழ்நாட்டிலிருந்துகொண்டு கதறுகிறார். தாய் தனது குடும்பத்தை மீறி, தனது சமுதாய
விதிகளை மீறி தனது மகளை காப்பாற்ற செயல்பட்டால் தனது மதம் மற்றும்
குடும்பத்திலிருந்து தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை
அறிந்து மனதுக்குள் கதறிக்கொண்டுள்ளார். ஜாதகத்தில் லக்னாதிபதி 12 ஆமிடத்தில் அதன்
அதிபதியோடு பரிவர்தனையானது ஜாதகி குடும்ப வாழ்வுக்கு திரும்ப முடியாது என்பதையே
குறிப்பிடுகின்றன.
தலைப்பை
மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
மீண்டுமொரு
பதிவில் விரைவில் சந்திப்போம்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.