சூரியன்
தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது
எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார்
என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும்.
ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம் சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர்
பிறரிடம் எளிதில் ஒன்றிவிட மாட்டார்கள்.
அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு
கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம்
பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது
கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும் கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக
திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால
புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை
எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும்
நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை
கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே
இன்றைய பதிவாகும்.
மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும் சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய் சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும் அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.
ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில்
அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும்
ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை
எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும்
போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான
இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை
பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று,
வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி
புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர
பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில்
பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப
வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து
ஒரு பெண்ணின் ஜாதகம்.
மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.
இந்த
ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய
பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி
சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில்
திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦
ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன்
இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ், உயர்வு
எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு
தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன
பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை
முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார்.
இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ
காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை
சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி
கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய
புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை
ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501
No comments:
Post a Comment