அபூர்வமாக
சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து
வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள்,
காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக
விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும் அறிமுகமற்ற நபர்கள்,
மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை
பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர்
இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில்
செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை. இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த
வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள்
உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே
இன்றைய பதிவு.
கீழே 1963 ல் பிறந்த ஒரு
ஆணின் ஜாதகம்.
மகர
லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம்.
இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு.
சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில்
பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில்
பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம்
பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம்
என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும்
பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின்
காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால்
அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம்
வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற
சந்திரனின் காரக வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன்
இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத
வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக
இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற
ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர
வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு
இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.
மேற்கண்ட
ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது
மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு
தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக்
குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த
சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக
சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும்,
12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என
தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி
சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.
12 ஆம்
பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம்
பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச
கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால்
செவ்வாய் திசையில் தனது 25,
26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின்
தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு புதனின்
வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது.
தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப
ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு
வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு
ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில்
வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான
பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி
புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது
தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
லக்னத்தில்
அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா
முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில்
நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது
மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25
ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு
திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப
காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி
சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1
ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு
காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம்
வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை
பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர
புக்தியில் தனது 55 ஆவது வயதில் விருப்ப
ஓய்வு பெற்றார்.
உண்மையில்
ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட
குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல
குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர்
லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த
ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக
இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற
முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.
இந்த
ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின்
வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி
பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில்
ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது.
அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால்
அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.
விரைவில்
மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501