Monday, 19 July 2021

நுண்ணுயிரியல் கல்வி

 


நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய  காலத்திற்கேற்ப நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய பிரிவுகளை பலர் அறிந்திருந்தாலும் அதன் எதிர்கால நிலையையும் கணிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் மன ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய கல்வியாக தாங்கள் தேர்ந்தேடுக்கும் கல்வி அமைய வேண்டும் என்று எண்ணுவது இயற்கையே. அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி தனது திறமைக்கு உட்பட்டதாகவும், பொருளாதார சூழலுக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டியதும் அவசியமாகிறது. இவை அனைத்தும் ஒருங்கே தரும் கல்விப்பிரிவை ஒரு மாணவன் இனங்கண்டு கொண்டால் மட்டும் போதாது, அதில் சேர வைக்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அதில் சேர முடியும் என்ற நிலை இன்று ஏறக்குறைய அனைத்து கல்விப்பிரிவிலும் உள்ளது. இந்நிலையில் உயர் கல்வி வாய்ப்பில் ஒரு பிரிவான நுண்ணுயிரியல் (Micro Biology) பிரிவில் தனது மகளுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் என்னை ஒரு தாய் அணுகியதன் விளைவே இன்றைய பதிவு.

ஜோதிடத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமைய வேண்டுமெனில் கிரகிப்புத் திறனுக்கும் நினைவுத் திறனுக்கும் உரிய சந்திரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்களின் தொடர்பு எந்த கிரகங்களுக்கும் நல்லதல்ல என்றாலும் தீவிரமான நுட்பத்திறனை வழங்குவது ராகு-கேதுக்கள்தான். குறிப்பிட்ட வகை கல்வியில் நவீனத்துவத்தை (advanced level) குறிக்கும் ராகு-கேதுக்களின் தொடர்பு விரும்பத்தக்கது. கல்வியின் காரக கிரகம் புதனும், பாக்ய, லாப ஸ்தானங்களும் அவற்றின் அதிபதிகள் நிலையும் சிறப்புற அமைய வேண்டியது அவசியம். குறிப்பாக உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவம் ஆகியவை சிறப்பாக அமைவது நன்று. ஒருவர் தனக்கான உயர் கல்வியில் சிறப்புற பயின்று தேர்ச்சி பெறுவாரா அல்லது பாதிப்படைவாரா என்பதை கோட்சாரமும் திசா-புக்திகளும் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும்.   

பொதுவாக அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக சுக்கிரன் அமைகிறார் எனினும் Biology எனும் உயிரியலுக்கு காரக கிரகங்களாக ஜீவ கிரகங்கள் புதனும் குருவும் அமைகின்றன. அடிப்படை உயிரியல் கல்வியை புதனும் மேம்பட்ட உயிரியல் கல்வியை குருவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயிரியல் பிரிவின் மேம்பட்ட Micro Biology எனும் நுண்ணியிரியலிலுக்கு காரக கிரகம் குருவாகும். குருவோடு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போது அது இயந்திரங்களைக் கொண்டு கையாளும் technology எனும் நுட்பவியலாகிறது. குருவோடு ராகு-கேதுக்கள் தொடர்பாகும்போது அது நவீன தொழில்நுட்பமாக (Advanced Technology) மாற்றமடைகிறது.  

கீழே ஒரு 1999 ல் பிறந்த ஒரு மாணவியின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் விருச்சிகம்  மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவமான கடகத்தையும் குரு பார்க்கவில்லை. ஆனால் அதன் அதிபதிகளான செவ்வாயையும் சந்திரனையும் பார்க்கிறார். இந்த ஜாதகி முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் (Msc-Bio Technology) பட்டம் பெற்றவர். ஜாதகிக்கு  இக்குறிப்பிட்ட கல்வியை படிக்கும் காலத்தில் நடப்பில் இருந்தது 5 ஆம் பாவத்தில் இருந்த சுக்கிர திசையாகும். சுக்கிரனும் ராகுவும் வித்யா ஸ்தானமான 4 ல் ஆட்சி பெற்று சூரியனோடு சேர்க்கை பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்துள்ள புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் நட்சத்திர சாரம் கொடுத்த புதன் குரு சாரம் (புனர்பூசம்) பெற்றதே இந்த ஜாதகி உயிரி தொழில்நுட்பம் படிக்க காரணமாக அமைந்துள்ளது. இவரது கல்வியில் technology என்ற பெயர் அமையக் காரணம் ராகுவே ஆவார். திசா நாதன் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு கல்வி போன்ற உயிரற்ற காரணிகளை தடுக்க மாட்டார். எனவே ஜாதகியின் கல்விக்கு அவர் உதவினார் என்றே சொல்ல வேண்டும். சுரப்பி காரகன் சுக்கிரனோடு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு ஜாதகிக்கு உடல் ரீதியாக சில சிரமங்களை கொடுத்துள்ளதை மறுக்க முடியாது. 9 ஆமதிபதியை  (செவ்வாய்) குரு பார்த்தது ஜாதகி இரட்டை பட்டம் பெற காரணமாக அமைகிறது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயின்று கொண்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் தனக்கு நுண்ணுயிரியியல் (Micro Biology) கிடைக்குமா என கேட்கும் மாணவிக்கான ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகம் வித்யா ஸ்தானமான நான்காம் பாவத்தில் புதனும் சூரியனும் புத்த-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளனர். பால்ய கல்வியை குறிக்கும் 2 ஆம் பாவத்தில் குரு, 4 ஆம் பாவம் புத-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் தனித்த ராகு அந்த ராசியாதிபதி செவ்வாயைப் போன்றே செயல்படுவார் எனலாம். சந்திரனை குரு பார்ப்பது சிறப்பு எனலாம். எனினும் 8 ல் மறைந்த சந்திரனை நோக்கி ராகு வருவது சிறப்பல்ல. ஜாதகிக்கு தற்போது கேது திசை நடப்பில் உள்ளது. ஜாதகி கல்லூரி செல்லும் காலத்தில் கேது திசையில் புதன் புக்தி நடப்பில் இருக்கும். இந்நிலையில் இந்த மாணவிக்கு கல்லூரியில் நுண்ணுயிரியியல் பயில வாய்ப்பு கிடைக்குமா என காண்போம்.

ஜாதகத்தில் கேது செவ்வாயை கடந்திருப்பது சிறப்பான அமைப்பே.  நுண்ணுயிரியலின் காரக கிரகமான குரு, இந்த லக்னத்திற்கு 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதியாகிறார். எனவே 5 ஆமதிபதி எனும் நிலையில் உயர் கல்வியை தரும்போது 8 ஆமதிபதி எனும் நிலையில் அதை தடை செய்ய அமைப்புள்ளது. குரு 8 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் ஹஸ்தம் பெற்றுள்ளார் எனவே உயர் கல்வியில் நிச்சயம் தடைகளும் விரையங்களும் ஏற்படும். கல்லூரிக் காலத்தில் புதன் புக்தியில் ஜாதகி இருப்பார். புதன் ஆத்ம (அதிக பாகை பெற்ற கிரகம்) காரகனாக உள்ளார். அது சிறப்பு என்றாலும் புதன் 9 க்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துவதும் எண்ணிய பாடப்பிரிவை அடைவதில் தடைகள் ஏற்படும். 3 ஆமிட கேது 2 ஆமிடத்தில் விரயாதிபதி சந்திரன்  சாரம் பெற்ற குருவை நோக்கி வருகிறார். திசா நாதன் கேது கோட்சாரத்தில் தற்போது 4 ஆம் பாவத்தில் விருட்சிகத்தில் நிற்பது கல்வியை பாதிக்கும் அமைப்பாகும். இந்த பாதிப்பு இந்த ஜாதகிக்கு மட்டுமல்ல தற்போதைய கொரோனா காலத்தில் அனைத்து மாணவர்களுக்குமான அமைப்பாகும். கோட்சார கேது 3 ஆம் பாவத்திற்கு செல்கையில் ஜாதகியின் கல்விச் சூழலில் நல்ல வகையான மாறுதல் ஏற்படும் என்றாலும் உயர்கல்விக் காலத்தில் ஏழரை சனியில் பயிலும் இந்த ஜாதகத்தில் ஜாதகி குறிப்பிட்ட வகை பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில் எளிதாக கிடைக்காமல் அதற்காக கணிசமான பொருளாதாரத்தை செலவு செய்துதான் பெற வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment