Saturday, 7 August 2021

பயணிகளின் கனிவான கவனத்திற்கு....

வாழ்க்கையில் பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து என்பது ஒருவருக்கு அமையும் அவர் நேசிக்கும் சிறப்பான வேலைதான். வாழ்க்கைக்கு ஆதாரமான வேலை சிறப்பாக அமைந்துவிடின் அது ஒருவரது வாழ்வில் ஏற்படக்கூடிய இதர வகை சிரமங்களை பெருமளவு குறைத்துவிடும். ஆனால் அந்த வேலை அவரது அறிவுக்கும், திறமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். அதிஷ்டவசமாக சிலருக்குத்தான் அத்தகைய கனவு வேலையே கிடைக்கிறது. அதில் சென்று சேர்ந்த பிறகும் சிலருக்குத்தான் அந்த வேலையில் உரிய அங்கீகாரமும், உயர்வும் நிம்மதியான பணிச்சூழலும்  கிடைக்கிறது. இரயில்வே துறை வேலைக்காக தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் எனது வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று என்னை அனுகிய நபருக்கான அவரது ஜாதகத்தை ஆய்வு செய்து எனது கருத்துக்களை தெரிவித்தேன். எனது ஜோதிட கோணங்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் விடுத்ததன் விளைவே இப்பதிவு.


ரயில்வே துறை வேலைக்கான ஜாதக அமைப்புகள்.

ராகு ரயிலின் காரக கிரகம் ஆகும். ஜீவன காரக கிரகம் சனியாகும். ரயில் போன்ற பெரிய இயந்திரங்களுடன் ஒருவரது வாழ்க்கை தொடர்பு ஏற்பட வேண்டுமெனில் வாகன காரகன் செவ்வாயும் சனியும் தொடர்பில் இருக்க வேண்டும்.  அரசுப்பணிக்குரிய காரக கிரகம் சூரியன் ஆகும். அரசுப்பணிக்குரிய காரக பாவங்கள் 5, 1௦ ஆகியவை ஆகும். சம்பாத்யத்திற்குரிய காரக பாவங்கள் 2, 6, 1௦ மற்றும் 1௦ ன் பாவத் பாவமான 7 ஆகும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி திசா புக்திகள் சாதகமாக வரும் காலம் ஒருவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைக்கும்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1968 ல் பிறந்தவர். ரயிலை குறிப்பிடும் ராகு, லக்னாதிபதி சந்திரனோடும், ஜீவன காரகன் சனியோடும், 6 ஆமதிபதி குருவோடும், 1௦ ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்புகொள்கிறார். 2 ஆமதிபதி சூரியன் ராகு சாரமான சுவாதியில் நின்று 1௦ ஆவது பாவமான மேஷத்தை பார்க்கிறார். வித்யா காரகன் புதன் உச்சம் பெற்று, ஆதிக பாகை பெற்று ஆத்மா காரகனாக சிறப்பாக அமைந்ததால் கல்வி சிறப்பாக அமைந்தது. புதனுக்கு செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் பொறியியல் பயின்றார். பிறகு 1998 ல் 5 ல் நிற்கும் சுக்கிர திசையில் சனி சாரம் உத்திரட்டாதி-4 ல் நிற்கும் ராகுவின் புக்தியில் ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி கிடைத்தது. தற்போது முதுநிலை பொறியாளராக பணிபுரிகிறார். ரயிலின் காரக கிரகம் ராகுவிற்கு ஜீவன காரகன் சனி மற்றும் 5,1௦ ஆமதிபதி செவ்வாய் தொடர்பு இருப்பதை கவனியுங்கள். இவை ஜாதகருக்கு ரயில்வே துறையில் பணி அமைய காரணங்களாகும். ஒரு துறையில் ஒருவர் மதிப்பான உயர்ந்த நிலைக்கு  உயர வேண்டுமெனில் 9 ஆமிடம் சிறப்புற வேண்டும். இந்த ஜாதகத்தில் ராகு 9 ல் அமர்ந்து 9 ஆமதிபதி குரு பார்வை பெற்றது சிறப்பு. மேலும் ஜீவன காரகன் சனி உச்சம் பெற்ற புதனின் சாரத்தில் ரேவதி-4 ல் அமைந்திருப்பது ஜாதகரை தனது துறை சார்ந்த வகையில் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளதை அறியலாம்.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகி 1952 ல் பிறந்து இரயில்வே துறையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விருட்சிக லக்னத்திற்கு 1௦ ஆமிடமான சிம்மத்தில் கேது நிற்கிறார். இதனால் இவர் அரசு மருத்துவரானார். கேது உயர்நிலை மருத்துவரை குறிக்கும் கிரகமாகும். சிம்மம் அரசுத்துறை என்பதை குறிக்கிறது. 12 ஆமிட செவ்வாய் ராகுவின் சுவாதி-2 ல் நின்று வேலை பாவமான 6 ஆம் பாவத்தையும், 1௦ ன் பாவத் பாவமான 7 ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் இவர் செவ்வாய் குறிப்பிடும் மருத்துவராகவும், லக்னாதிபதி செவ்வாய் ராகு சாரம் பெற்றதால் ரயில்வே துறை மருத்துவராகவும் செயல்பட வேண்டும் என்பது இவரது கர்மாவாகும்.

சனி வீட்டில் நிற்கும் 1௦ ஆமதிபதி சூரியன் மருத்துவ கிரகம் புதனுடன் இணைந்து சனி நிற்கும் சந்திரனின் சாரத்தையே பெறுகிறார். (சூரியன்-திருவோணம்-3, சனி-ஹஸ்தம்-4. மேலும் 6 ஆமதிபதி செவ்வாய், 1௦ ஆமதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் இந்த ஜாதகி அரசுத்துறையில் ரயில்வே மருத்துவராக பணியாற்றியுள்ளார்.  


தொழிலை சுட்டிக்காட்டும் தசாம்சத்தில் லக்னம் கால புருஷனின் 6 ஆமிடமாகி, லக்னாதிபதி புதன் கேதுவுடன் இணைவதும், 1௦ ன் பாவத்பாவம் 7 ல் இருந்து சூரியனோடு சேர்ந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாய் பார்ப்பதிலிருந்து ஜாதகி ஒரு அரசு மருத்துவர் என்பதையும் குரு உச்ச ராகுவோடு இணைந்ததிலிருந்து ஜாதகி ரயில்வே துறை சார்ந்தவர் என்பதையும் உணரலாம்.  

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1994 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ரயில்வே துறையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். விருட்சிக லக்னதிலேயே ராகு அமர்ந்து தனது ஆதிக்கத்தை ஜாதகரின்மேல் செலுத்துகிறார். இதனால் ரயில்வே துறை தொடர்பு. 4 ஆம் பாவத்தில் சனி,செவ்வாய், புதன் ஆகியவை ஒருங்கிணைந்து 1௦ ஆமிடமான சிம்மத்தை பார்ப்பதால் இவரது ஜீவனம் சுகாதாரத்துறை ஆகும். 1௦ ஆம் அதிபதி சூரியன் 5 ஆம் பாவத்தில் மீனத்தில் அமர்ந்ததால் இவருக்கு அரசு தொடர்பான பாக்கியம் ரயில்வே மூலமாக கிடைத்துள்ளது.


தசாம்ச லக்னத்திலும் ராகு-கேதுக்கள் தொடர்பாகியுள்ளதை கவனியுங்கள். தசாம்சத்தில் உணவு காரகன் சந்திரன் உச்சம். இதனால் இவர் ரயிலில் வழங்கப்படும் உணவு தொடர்பான விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவார் எனலாம்.    

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

No comments:

Post a Comment