Tuesday 31 August 2021

கட்டம் பார்த்து திட்டம் போடு!


வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்றாலும் அவர்கள் முந்தைய வகையினரைவிட மெதுவாகவே முன்னேறுகிறார்கள். “எண்ணித் துணிக கருமம்” என்பார் வள்ளுவர். குழப்பமான சூழலில் எடுக்கும் முடிவு சாதகமாக இருப்பதில்லை. குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்றவர்கள் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த விஷயத்தில் தைரியமாக முடிவெடுகிறார்கள். தாங்கள் எடுக்கும் முடிவு சாதகமற்றுப் போகும்போது தங்களது விஷய ஞானத்தால் அம்முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்  அல்லது  பாதகத்தின் விகிதத்தை குறைத்துக் கொள்கிறார்கள். மற்றொரு வகையினர் உண்டு. முடிவெடுக்க வேண்டிய விஷயத்தின் மீது தெளிந்த அறிவு இல்லாமல், உரிய விஷய ஞானம் கொண்டவர்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு அவ்விஷயம் சாதகமற்றுப் போகும்போது மற்றவர்களை துணைக்கு அழைப்பார்கள். இவர்களை சொதப்பல் திலகங்கள் எனலாம். இன்றைய பதிவில் ஜோதிடத்தின் துணைகொண்டு முடிவெடுப்பதில் கோட்சார கிரகங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை ஆராய்வோம்.


மேற்கண்ட ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். பிறப்பு ஜாதகம் இடது பக்கமும், கோட்சார ஜாதகம் வலது பக்கமும் உள்ளது. கோட்சார சந்திரன் ரிஷபத்தில் உச்ச கதியில் சுய சாரத்தில் செல்கிறார். பொதுவாகவே சந்திரன் ஸ்திர ராசியின் ரிஷபத்தில் உச்சம் பெற்ற நிலையில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் நிதானமானவர்கள். தெளிவான முடிவெடுப்பவர்கள். தாங்களால் முடிவெடுக்க இயலாவிட்டால் தகுந்த ஆலோசனையை நாடிப்பெற தயங்காதவர்கள். ஜனன கால சனியும், புதனும் கோட்சார சந்திரனை பார்க்கிறார்கள். எனவே ஜாதகர்  புதன், சனி ஆகிய இரு கிரகங்களின் காரகங்கள், பாவங்கள் தொடர்பான விஷயத்திற்காகத்தான் ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜோதிடத்தில் இம்முறை “சந்திர நாடி “ என அழைக்கப்படுகிறது. ஜனன ஜாதகத்தில் விருட்சிக சனி மகர செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். எனவே ஜாதகர் கேட்க வந்துள்ள விஷயத்தில் செவ்வாயின் காரகத்துவமும் கலந்திருக்கும்.

கோட்சார சந்திரனை ஜனன கால சனி பார்ப்பதால் ஜாதகர் சனியின் காரகமான வேலை தொடர்பான விஷயதிற்கு தெளிவு பெற வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜனன கால சனி மீது கோட்சார கேது நிற்பதால் ஜாதகருக்கு வேலையில் தடையா? அல்லது வேலை இல்லையா? என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும். ஜனன காலத்தில் நீசமான 6 ஆமதிபதி சூரியன், கோட்சாரத்தில் ஆட்சி பெற்று ஜனன கால மற்றும் கோட்சார வக்கிர குருவின் நேர் பார்வையில் உள்ளார். தன பாவாதிபதியான செவ்வாயும் 6 ல் சூரியனோடு இணைந்து குரு பார்வை பெறுவதால் ஜாதகர் வேலையில் இருக்கிறார் என்பதை அனுமானிக்கலாம். அதே சமயம் 6 ஆமதிபதி சூரியன் அடுத்து மாற்றத்தின் காரகரான ஜனன கால சந்திரனையும், ஜனன கால கேதுவையும் நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும், ஜனன கால ஜீவன காரகன் சனி மீது கோட்சார கேது நிற்பதாலும் வேலையில் சிரமங்கள் உண்டு என அனுமானிக்கலாம். எனவே உங்களுக்கு வேலையில் சிரமங்கள் தற்போது உண்டு. அதை பொறுத்துக்கொண்டு பணி செய்யவும். வேலை சிரமங்களை பொறுத்துக் கொள்ளாவிட்டால் வேலை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது என அறிவுரை வழங்கப்பட்டது. “மிக்க நன்றி சார். வேலைப்பழு விஷயமாகத்தான் உங்களிடம் ஆலோசனை பெற வந்தேன்” என்று ஜாதகர் கூறினார்.

கோட்சார சந்திரனோடு தொடர்புகொள்ளும் மற்றொரு ஜனன கால கிரகம் புதன் ஆவார். புதன் லக்னத்திற்கு 4 ஆம் அதிபதியாகிறார். மேலும் ஜனன கால சனியோடு பரிவர்தனையாகும் உச்ச செவ்வாயும் விருட்சிகத்திற்கு வந்து கோட்சார சந்திரனை பார்க்கிறார். இதனால் ஜாதகர் 4 ஆமிட புதன் குறிக்கும் நிலம், செவ்வாயின் காரகமான வீடு தொடர்பான சிந்தனையில் உள்ளது தெரிகிறது. கோட்சாரத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து 4 ஆம் பார்வையாக பரிவர்த்தனை செவ்வாயை பார்ப்பதாலும், 4 ஆமதிபதி புதன் கோட்சாரத்தில் உச்சமானதும் இதை உறுதி செய்கிறது. “இடம், வீடு வாங்கும் சிந்தனையும் உங்களுக்கு உள்ளது. தற்போது ஜனன கால பரிவர்த்தனை செவ்வாய் மற்றும் புதனின் மீது கோட்சார கேது நிற்பதால் தற்போது அதற்குரிய காலமல்ல. எனவே இது தொடர்பான விஷயத்தை ஒத்திப்போடவும் என்று கூறினேன்”. ஜாதகர் தற்போது "கடன் பெற்று இடம் வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் அது உதவுமா? என்று கேள்வி எனக்கிருக்கிறது" என்றார். கோட்சார சந்திரன் அடுத்து 4 ஆம் பாவத்திற்கு சென்று ஜனன கால குருவின் 5 ஆம் பார்வையை பெறவுள்ளது. அதே சமயம் ஜனன கால புதன், பரிவர்த்தனை செவ்வாயை விட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ராகு-கேதுக்கள் விலகுகின்றன. அதன் பிறகு அது பற்றி முடிவு செய்யலாம். தற்போது வேண்டாம் என்று கூறினேன்.

மூன்றாவது கேள்வியாக ஜாதகர் தனக்கு 2 ஆவது குழந்தை வாய்ப்பைப் பற்றி கேட்டார். இரண்டாவது குழந்தையை குறிக்கும் பாவம் 5 க்கு 3 ஆன 7 ஆம் பாவமாகும். கோட்சார குரு லக்னத்திற்கு வந்து 5, 7 ஆகிய பாவங்களை பார்க்கும்போது அதற்குரிய காலம் உள்ளது. திசா புக்திகளும் கோட்சாரத்துடன் அதற்கு பொருந்தி வர வேண்டும். ஜாதகருக்கு அந்த அமைப்பு அடுத்த 2022 பிற்பகுதியில் வருகிறது” என்று கூறப்பட்டது. கோட்சார சந்திரனை பார்த்த 7 ஆமதிபதி புதனாலும், கும்பத்தில் குரு வக்கிரமாகி பின்னோக்கிய நிலையில் மகரத்தை நோக்கி வருகிறார். இப்படி அரைப்பங்கு  மகர தொடர்பு பெற்ற வக்கிர குருவின் 5 ஆம் பார்வை  கோட்சார சந்திரனுக்கு கிடைக்கிறது. எனவே ஜாதகர் குழந்தை பற்றிய விஷயத்தை இறுதியாக கேட்டார்.

ஜாதகரின் நிலையை ஜனன & கோட்சார கிரகங்கள் ஒரு ஊடுகதிர் படம் போல (Scan report) தெளிவாக உணர்த்துகின்றன. இனி முடிவெடுப்பதில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த தெளிவை தருவது ஜோதிடம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்!

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

No comments:

Post a Comment