Friday 20 August 2021

இரண்டாம் பாவத்தின் மறுபக்கம்!

 


ஜோதிடத்தில் இரண்டாவது பாவம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருவரின் பொருளாதார வளத்தை குறிப்பது இரண்டாம் பாவமாகும். இரண்டாம் பாவம் ஒருவரது குடும்பத்தொடர்புகளை குறிக்கும். எனவே ஒருவருக்கு பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைய வேண்டுமென்றால் இரண்டாம் பாவம் சிறப்பாக அமைய வேண்டியது அவசியமாகும். தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும், வாழ்வில் தன்னோடு உடன் வரும் நபர்களுக்காகவுமே ஒருவர் பொருளீட்டுகிறார். பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்து அதற்காக அதிக நேரம் செலவிடுவோர் குடும்ப வாழ்வின் சிறப்புகளை புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். குடும்பத்திலேயே உழன்று கொண்டிருப்பவர் பொருளாதரத்தின் சிறப்பை புரிந்துகொள்ள தவறிவிடுவது மட்டுமின்றி தனது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுத்துகிறார். உறவுகள் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் சரியாக கையாள்வது ஒரு கலை என்றே கூறலாம். பொதுவாக ராசிக்கட்டத்தில் அனைத்து பாவங்களுமே உறவுகளையும் பொருளாதாரத்தையும் குறிப்பிடும் என்றாலும் ஒரு பாவத்தின் உயிர் காரகம் அதீத வலுவடையும்போது பொருட்காரகமும், பொருட்காரகம் அதிக வலுவடையும்போது உயிர் காரகமும் பாதிக்கப்படும். இன்றைய பதிவில் உதாரணமாக 2 ஆம் பாவத்தை எடுத்துக்கொண்டு இக்கருத்தை ஆராய்வோம்.

மேற்கண்ட ஜாதகம் ஒரு 1990 ல் பிறந்த ஒரு பெண்ணுடையது. விருட்சிக லக்னத்திற்கு 7 ல் லக்னாதிபதி செவ்வாய் ராசியிலும் நவாம்சத்திலும் ரிஷபதிலேயே நின்று வர்கோத்தமம் பெறுகிறார். செவ்வாய் 1௦ ஆம் பாவமான சிம்மத்திற்கு 1௦ ல் நின்று 1௦ ஆம் பாவத்திற்கு திக்பலம் தருகிறார். 1௦ சூரியன் ஆட்சி பெற்று திக்பலத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகி பொருளாதார ரீதியாக நல்ல வேலையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இரண்டில் நிற்கும் வக்கிர சனிக்கு வீடு கொடுத்த குரு கடகத்தில் சனியில் சாரம் பூசத்திலேயே உச்சம் பெற்று நிற்கிறார். இதனால் இரண்டாம் பாவ சனி அதீத வலுவடைகிறார். அதே சமயம் இரண்டாம் பாவாதிபதி குரு இரண்டுக்கு 8 ல் தான் உச்சம் பெறுகிறார். இவ்வமைப்பு பொருளாதார சிறப்பை தருகிறது. ஆனால் இல்லறத்திற்கு சிறப்பல்ல. இரண்டாமிட சனி வேலையில் ஜாதகியை முழுமையாக ஈடுபடுத்தி குடும்ப வாழ்வை தாமதப்படுத்துகிறது. 3௦ வயதில் பொருளாதார வளத்தில் திளைக்கும் ஜாதகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. 2 ஆமிட வக்கிர சனி வேலையை உயிர் மூச்சாக நினைக்க வைக்கிறது ஆனால் தனக்கான குடும்பத்தை அமைத்துக்கொள்வதை தடுக்கிறது. இந்த ஜாதகி பொருளாதாரத்தைவிட குடும்ப வாழ்வு முக்கியம் என எப்போது கருதுகிறாறோ அப்போதுதான் திருமணம் நடக்கும்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகன் 1995 ல் பிறந்த ஒரு இளைஞன்.மிதுன லக்னாதிபதி புதன் நீசம் பெற்று திக்பல சூரியனுடன் 1௦ ல் வக்கிர குரு பார்வை பெற்று நிற்கிறார். குடும்ப காரகன் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் குடும்ப பாவத்தில் நீசம் பெற்று, 11 ஆம் பாவமான மேஷத்தில் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று உள்ளார். ஜாதகருக்கு நடப்பது. 5 ல் சுய சாரம் பெற்று நிற்கும் ராகு திசை. 5 ஆம் பாவம் என்பது காதலுக்கு சிறப்பு. ஆனால் அது வேலை பாவமான 6 ன் விரைய பாவம் என்பதால் சம்பாத்யத்திற்கு சிறப்பை தராது. இந்த ஜாதகருக்கு சரியான வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. ஆனால் 5 ஆமிட ராகு காதலை கொடுத்து திருமணத்தையும் செய்து வைத்துள்ளது. இந்த இளைஞர் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 ல் உள்ள 6 ஆமதிபதியான நீச செவ்வாய் 11 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்வதால் காதலை நிறைவேற்றி வைத்துள்ளது. ஆனால் பொருளாதாரத்திற்குரிய உகந்த வேலையை செவ்வாயால் தர இயலாது. குடும்பம் அமைந்த பிறகுதான் ஜாதகர் பொருளாதாரத்தை முன்னிட்ட முயற்சிகளை எடுக்கிறார். 1௦ ஆமிட திக்பல சூரியன் சுய தொழில் எண்ணத்தை தூண்டுவார். ஆனால் 1௦ க்கு 8 ல் இருந்து திசை நடத்தும் ராகு அதற்கு தடை போடுவார். அதே சமயம் ஜாதகரின் வேலைக்கும் ராகு சிறப்பை தரமாட்டார். இதனால் உரிய வயதில் குடும்பம் அமைந்துவிட்டது. காரணம் இரண்டாம் பாவத்திற்குரிய உயிர் காரகத்துவங்கள் 5, 7, 11 ஆகியவை வலுவடைந்துவிட்டன. ஆனால் நல்ல வேலையும், போதிய வருமானமும் இன்றி ஜாதகர் தவிக்கிறார். காரணம் உயிர் காரகத்திற்கு சிறப்பு சேர்ந்த கிரகங்கள் பொருட்காரகங்களுடன் கை கோர்க்கவில்லை என்பதே.

கீழே மூன்றாவது ஜாதகம்.

ஜாதகர் 1992 ல் பிறந்த ஒரு ஆண். கேது திசையில் பிறந்த ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திற்கு 5 ல் 7 ஆமிடத்தில் நிற்கும்  குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு திருமணமானது. தன காரகன் குரு, குடும்ப பாவமான 2க்கு 6ல் மறைந்து 7 ஆமிடத்தில் நின்றாலும் அவர் லக்னத்தின் மீது தனது கதிர்வீச்சை செலுத்துகிறார்.   இதனால் குரு குடும்பம், தனம் ஆகிய இரு அம்சங்களிலும் குறைவற்ற நிலையை  தருகிறார். திசா நாதன் சூரியன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் நின்றாலும், சூரியனின் வீட்டோன் புதன், 6 ல் கடகத்தில் நின்றதால் ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி குருவின் சார நாதன் சுக்கிரனும் கடகத்தில்தான் நிற்கிறார். ஜாதகர் வெளிநாட்டில் மனைவியோடு வசிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும்  இந்த அமைப்பு உதவுகிறது. இந்த ஜாதகத்தில்  தனகாரகனும் குடும்ப காரகனுமான குருவே இரண்டாம் பாவதிபதியுமாகி அவர் லக்னத்தை பார்வை செய்வதால் இந்த ஜாதகருக்கு குடும்பம், பொருளாதாரம் மற்றும் புத்திர வகையிலும் சிறப்பான பலனை தந்துள்ளது. ஆனால் இவ்வகை அமைப்பு அனைவருக்கும் எளிதாக ஏற்படுவதில்லை. இத்தகைய அமைப்புகள் ஜாதகத்தில் அபூர்வமானவையாகும்.

நான்காவது ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். 7, 1௦ ஆமதியும், தன புத்திர காரகருமான குரு லக்னத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமதிபதி குரு லக்னத்தில் அமைந்து, ஜீவன காரகரான 7 ல் திக்பலம் பெற்ற சனியை பார்ப்பதால் ஜாதகர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். குரு களத்திர பாவாதிபதியாகி, 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணமும் ஆகிவிட்டது. இவருக்கு  பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் திக்பல குருவின் வலுவை, குருவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் கேது பாதிக்கிறார். ஜோதிட விதிகளின்படி இதை குரு, கேது சேர்க்கையாகவே பாவிக்கலாம். இரண்டில் அமைந்த கேது ஜாதகரது குடும்பம் மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. ஆனால் புத்திரத்தை பாதிக்கிறார். காரணம் கேது 5 ன் விரையாதிபதி புதனின் சாரம் ஆயில்யம் பெற்று 6 ல் மறைந்த 5 ஆமதிபதி சுக்கிரனுக்கு பாதகத்தில் அமைந்துள்ளார். இதனால் குடும்பத்திற்கு குழந்தை வருவதை 2 ஆமிட கேது தடை செய்கிறார். இந்த வகை அமைப்பை பெற்ற ஜாதகர்கள் குழந்தை அமையுமுன் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயலாமலிருப்பது நன்று. ஏனெனில் குடும்பம், பொருளாதாரம் இரண்டும் நிறைவாக கிடைத்துவிட்டால் 2 ஆமிட கேது குழந்தை பாக்கியத்தை தடுத்துவிடுவார். இதனால் ஜாதகர் தீவிர மருத்துவம் மற்றும் இறை சக்தியின் துணைகொண்டு முதலில் புத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் 5, 7, 9 ஆகிய பாவங்களை குரு பார்வை புனிதப்படுத்தினாலும் குரு அவ்விடங்களை கேதுவின் தடைகளோடுதான் பார்க்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அனைத்து பாவங்களுமே வாழ்வின் அனைத்து விஷயங்களோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு பெறும் என்றாலும், அனைத்து பாவங்களின் உயிர் மற்றும் பொருள் காரணிகளை ஒருவர் எந்த அளவு சமநிலைப்படுத்தி    தனது வாழ்வை கொண்டு செலுத்துகிறாரோ அந்த அளவு அவர் இரு காரணிகளையும் தனது வாழ்வில் திறம்பட அனுபவிக்கிறார் எனப்பொருள்.  இதில் சமநிலை தவறும் பட்சத்தில் அவரது வாழ்வில் இவ்விரு காரணிகளில் ஒன்றை பாதிப்புக்கு உள்ளாக்கிக்கொள்கிறார் எனப்பொருள்.  

மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைப்பேசி: 8300124501

No comments:

Post a Comment