Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 14 October 2021

தொழில் சிந்தனைகள்...

 


ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை. கால மாற்றங்களை போன்றவைதான் எண்ணங்களும். எனவே எல்லோரும் காலத்தின் கைப்பாவைகளே. ஒருவர் சிறப்பான தொழில் சிந்தனையை பெற்றிருப்பதை அவரது மனப்போக்குதான் தீர்மானிக்கிறது. நமது இன்றைய பதிவு ஒருவரின் தொழில் ரீதியான சிந்தனைகளை ஜோதிடப்படி ஆராய்வதே.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 43 வயது நிரம்பிய ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் ஜீவன பாவமான லக்னத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் திருவாதிரை-4 ஆம் பாதத்தில்  செல்கிறார். திருவாதிரை-2 ஆம் பாதத்தில்  ஜனன காலத்தில் நிற்கும் லாபாதிபதி மீது கோட்சார சந்திரன் செல்கிறார்.  லாபாதிபதி சந்திரன் மாற்றத்திற்குரிய கிரகம் என்பதோடு அவர் 1௦ ஆமிட தொடர்பில் கோட்சாரத்தில் செல்வதால் இவர் தொழில் மாற்றத்தால்  லாபம் உண்டா? என்ற கேள்வியுடன் ஜாதகம் பார்க்க வந்தார். கோட்சார சந்திரனும் ஜனன சந்திரனும் லக்னத்தில் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் இவர் சந்திரன்+ராகு சேர்க்கை  குறிக்கும் விவசாயதிற்குரிய உரங்கள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவராக இருப்பார். கோட்சாரத்தில் சந்திரன் ரோகிணி-1 ல் நிற்கும் ராகுவை கடந்து வந்துள்ளது இதை உறுதி செய்கிறது. லக்னத்தில் நிற்கும் கிரகமே ஜாதகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப, அலைச்சலை குறிக்கும் 12 ஆமதிபதி சூரியன் சாரம் பெற்று அலைச்சலின் காரக கிரகமான ராகுவே லக்னத்தில் நிற்கிறார். இவர் கடந்த காலங்களில் ரசாயன உரங்கள் தொடர்புடைய துறையில் விற்பனை பிரதிநிதியாக நீண்ட பயணங்கள் செய்து நன்கு பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

2௦19 ல் இவர் மருந்து வணிகம் தொடர்புடைய துறைக்கு மாறி, கடினமாக உழைத்தும் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிறார். கொரான காலம் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையில் திருப்தியில்லை என்கிறார்.  காரணம் மருத்துவத்தின் காரக கிரகமான செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதியாவதால் ஜாதகருக்கு நன்மைகளை வழங்க இயலவில்லை. இவர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபட காரணம் செவ்வாய் வருமான பாவமான 2 ஆமிடத்தில் நிற்பதால்தான். கோட்சாரத்தில் செவ்வாயும் சூரியனும் ஜனன கால ராகுவிடம் சரணடைவது ஜாதகர் ஈடுபட்ட செவ்வாய் சார்ந்த துறையில் ஜாதகர் சோபிக்கவில்லை என்பதை கூறுகிறது.  இதனால் ராகு-சந்திரன் சேர்க்கை குறிக்கும் விவசாயத்திற்குரிய உரங்கள், ரசாயனங்கள் தொடர்புடைய துறையே ஜாதகருக்கு   நன்மையை செய்கிறது. காரணம் ராகுவும் சந்திரனும் லக்னத்தோடும் 1௦ ஆம் பாவத்தோடும் தொடர்புகொள்வதே. கோட்சார சந்திரன் லாப ஸ்தானத்தில் கடகத்தில் நிற்கும் உச்ச குருவைத்தான் அடுத்து தொடவுள்ளது. விவசாயத்தை கால புருஷனின் நான்காமிடமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் குறிப்பதோடு சந்திரன்+ராகு  தொடர்பு, ஜாதகர் முன்பு ஈடுபட்ட ரசாயன உரத்துறைக்கு திரும்புவது ஜாதகருக்கு நிச்சயம் லாபமாக அமையும் என்று கூறப்பட்டது.  

அடுத்து ஒரு ஜாதகம்.   

ஜாதகதிற்குரியவர் 4௦ வயதான ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் கன்னியில் சுய சாரத்தில் ஹஸ்தம்-3 ல் செல்கிறது. குரு கால புருஷனுக்கு 12 ஆமதிபதி என்பதோடு சனியும் கால்கள், பாதங்கள், கழிவுகள் ஆகியவற்றை குறிப்பவர். தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ஜனன ராகு சனி சாரம் பூசம்-2 ல் நிற்கிறார். 12 ஆமிடாதிபதி புதன், அங்கு சந்திரனோடு  பரிவர்த்தனை பெற்ற சூரியனோடு இணைந்து நிற்கிறார். ஜாதகருக்கு தற்போது ராகு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. எனவே இவரது தொழில் பற்றிய சிந்தனையில் ராகுவின் காரகத்தோடு, சூரியன் குறிக்கும் சுய தொழில் எண்ணம், சந்திரன் குறிக்கும், திரவங்கள், புதன் குறிக்கும் தரகு கமிஷன், ஏஜென்சி,  ஒப்பந்தம்  ஆகியவை கலந்திருக்கும் எனலாம். செவ்வாய் மிதுனத்தில் ராகு சாரம் திருவாதிரை-4 ல் நிற்பதால் இவரது தொழில் சிந்தனையில் செவ்வாயின் தாக்கமும் இருக்கும். இவர் குடிநீர் விற்பனை செய்தார். தற்போது ஒரு சிமென்ட் ஏஜன்சி வைத்துள்ளார். கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி தருகிறார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது கழிவறையை  குறிக்கும் என்பதோடு, கன்னியில் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு 12 ஆமதிபதி குரு இருந்து அவர் கோட்சாரத்தில் நீசமாவதும், கழிவுகளை குறிக்கும் சனி ஜனன காலத்தில் அங்கு நிற்கிறது. கோட்சாரத்தில் கட்டுமானங்களுக்குரிய  செவ்வாயும், அரசை குறிக்கும் சூரியனும், கோட்சார புதனோடு லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் செல்வதால், அரசு மக்களுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டங்களை தான் ஏற்று செய்யலாமா? என்று கேட்கிறார். ஒருவரது தொழில் சிந்தனையின் தரத்தை கோட்சார கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் அது மிகையல்ல.

மூன்றாவதாக ஒரு ஜாதகம்.


ஜாதகத்திற்கு உரியவர் 36 வயதான ஒரு பெண். ஜாதகத்தில் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் நிற்கிறார். தொழிலை குறிக்கும் 1௦ ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கடன் பாவமான 6 ஆமிடத்தில் நிற்கிறார். ஜீவன காரகரும் லக்னாதிபதியுமான சனி உச்சம் பெற்று கடனின் காரக கிரகமான கேதுவோடு பாதக ஸ்தானமான துலாத்தில் உள்ளார். இம்மூன்று அமைப்புகளும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அது ஜாதகிக்கு தொழில் ரீதியான கடன் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பதே. இது விஷயங்களில் ஜாதகியை ஒரு தேர்ந்த ஜோதிடரால் எச்சரிக்க இயலும். ஆனால் ஜாதகி சம்பவங்களை அனுபவிப்பதை தடுக்க முடியாது.  ஜாதகி ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் கன்னி ராசியில் சுய சாரம் ஹஸ்தம்-3 ல் சென்றுகொண்டிருக்கிறார். கன்னி ராசி கால புருஷனின் 6 ஆவது பாவம் என்ற வகையிலும் சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 8 ல் சுய சாரத்தில் செல்வதால் ஜாதகி கடன் நெருக்கடியில் ஜாதகம் பார்க்க வந்துள்ளார்.

கடக ராசியில் உள்ள 1௦ ஆமதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரை துலாத்தில் கேதுவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையை பார்த்த நிலையில் கோட்சார சந்திரன் கடக ராசியை கடந்து வந்துள்ளது. பிறகு சூரியனை கடந்து வந்துள்ளது. கோட்சாரத்தில்  1௦ ஆமதிபதி செவ்வாயும், புதனும், சூரியனும் லக்னத்திற்கு 8 ல் நிற்கின்றனர். சுக்கிரன் லக்னத்திற்கு 1௦ ல் விருட்சிகத்தில் கேதுவோடு நிற்கிறார். இது ஜாதகி தொழிலுக்கான கடன் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதை குறிக்கிறது. அரசு வங்கிக்கடனுக்கு உரிய சூரியனும் புதனும் லக்னத்திற்கு 8 ல் கோட்சாரத்தில் மறைந்துவிட்டது ஜாதகி அரசு வங்கிக்கடன் பெற எடுத்த முயற்சிகள் பலனடையவில்லை என்பதை குறிக்கின்றன. ஜாதகி தொழிலுக்கான துவக்க முதலீடு செய்துள்ளார். கூடுதல் முதலீட்டிற்காகவே வங்கிக்கடன் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஜாதகி தற்போது தொழில் இருந்து பின் வாங்க இயலாது. கோட்சார சந்திரன் அடுத்து உச்ச சனியையும் கேதுவையும் தொட்ட பிறகே 1௦ ஆமிடம் செல்லமுடியும். இதனால் ஜாதகி தொழிலில் கடுமையான போராட்ட சூழலை சந்தித்த பிறகே தொழிலில் காலூன்ற இயலும் என்பதை கோட்சார சந்திரனின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜீவன விஷயங்கள் ஒருவரது வாழ்க்கை போக்கை தீர்மானிப்பவை. கணிசமான முதலீட்டில் செய்யும் எந்தவொரு விஷயத்தையும் தகுந்த ஜோதிடரின் மூலம் அதன் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது சிறப்பு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Thursday, 7 October 2021

மீன ராசிக்கு சுக்கிர திசையில் திருமண யோகம்!

                           


மீன ராசியினருக்கு சுக்கிரன், ராசிக்கு 3 ஆமதிபதி என்ற வகையில் திருமண யோகத்தையும் 8 ஆமதிபதி என்ற வகையில் அவமானம், கண்டம், பிரிவினை, நிரந்தர குறைபாடுகளையும் தர வேண்டியவராகிறார். மீன ராசியினருக்கு 2023 முதல் ஏழரை சனி துவங்கவுள்ள நிலையில் சுக்கிர திசை நடக்கையில் திருமணம் செய்யலாமா? என கலக்கத்துடன் ஓரளவு ஜோதிட அறிவுகொண்டோர் தங்களது பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோதிடரிடம் எடுத்து வருகின்றனர். சுக்கிர திசை 2௦ வருடங்கள் எனும் நிலையில் அத்தனை வருடங்கள் பாதிப்பு ஏற்படும்  என்று திருமணத்தை தள்ளிப்போடுவது  மடமையாகும். மேலும் ராசி மீனமாயினும் லக்னம் என்ன என்பதையும் அளவிட்டே இதற்கு பதிலளிக்க இயலும். ராசியும் லக்னமும் மீனமாக அமைபவர்களுக்கு சுக்கிர திசை சற்று கடுமையை அதிகம் கட்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதையும் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையைக்கொண்டே கூற வேண்டும். மேலும் ஒருவரது இல்லற கொடுப்பினைகளை கூற கால புருஷனுக்கு 7 ஆமதிபதி என்ற வகையில் சுக்கிரனை முதன்மையாக எடுத்துக்கொண்டாலும் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தையும் அதன் அதிபதி நிலையையும் கவனத்தில்கொள்வது அவசியம்.  இந்தச் சூழலில் சுக்கிர திசை மீன ராசினருக்கு என்னென்ன பலன்களை எவ்வெப்போது வழங்க இருக்கிறது என்று தகுந்த ஜோதிடரிடம் சென்று தெளிவு பெறுவது சுக்கிர திசையின் சாதக-பாதகங்களை எதிர்கொள்ள உதவியாய் அமையும். இதை உதாரண ஜாதகங்கள் மூலம் இன்றைய பதிவில் அலசுவோம்.  

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 26 வயது நிரம்பிய ஒரு ஆண். ஜாதகருக்கு 2015 முதல் சுக்கிர திசை நடப்பில் உள்ளது. சுக்கிரன் கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி ராசிக்கு 8 ல் பாவிகள் தொடர்பில் ஆட்சி பெற்று வக்கிரமாகி நிற்கிறார். இந்நிலையில் சுக்கிரனுக்கு பாதக வலு கூடும். இதனால் சுக்கிர திசை ஜாதகருக்கு பெண்கள், இல்லற வகையில் சிரமங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கால புருஷனுக்கு 7 ஆமிடமாகிய துலாத்திலேயே சுக்கிரன் பாவிகளால் சூழப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது. சுக்கிர திசை ஜாதகருக்கு அவரது 41 ஆவது வயது வரை உள்ளது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போட இயலாது. சுக்கிரன் ரிஷபம், துலாம் ஆகிய இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகம் என்பதால் இரு வீட்டு பலனையும் வழங்குவார். ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டுமெனில் ஒற்றைப்படை பாவங்களிலுள்ள கிரக திசா-புக்திகள் நடக்க வேண்டும். குறிப்பாக காமத்திரிகோணங்கள் எனப்படும் 3, 7, 11 ஆமிட கிரகங்களின் திசா புக்தியோடு குடும்பம் அமைவதை குறிக்கும் 2 ஆமிடமும்  தொடர்பாக வேண்டும்.

களத்திர பாவாதிபதியும் ஆயுள்  காரகருமான சனி 8 ல் மூலத்திரிகோண வலு பெற்றது ஆயுள் ஸ்தானத்திற்கும் களத்திர வகைக்கும் சிறப்பே எனினும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணத்தை தாமதப்படுத்துவார் எனலாம். எனவே ஜாதகர் சுக்கிர திசையின் துலாம் ஆதிபத்திய காலம் முதல் 1௦ வருடம் முடிந்து 2 ஆவது ரிஷப ஆதிபத்திய காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு இன்னும் சில காலமுள்ளது. இப்போது அதற்கான முயற்சி எடுத்தால் ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரன் பிரிவினையையும் அவமானத்தையும் தருவார். லக்னத்திற்கு 8 ல் நிற்கும் சனி 2 ஆமிடத்தை பார்ப்பது திருமண தடையையும் மீறி முயன்றால் அவமானத்தை தரும். (8 ஆமிடம் அவமானம்). கோட்சார சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தை தாண்டி ஜென்ம சனியாக மீனத்தில் சஞ்சரிக்கும்போது, லக்னத்திற்கு 5 ல் நின்று லக்னத்தையும் 9,11 பாவங்களையும் பார்க்கும் குருவின் புக்தியில் திருமணம் செய்வதே நல்லது. தற்போது திருமண செய்வித்தால் அது அவமானத்தை ஏற்படுத்தி அதன்  விளைவாக பிரிவினையை தரும்.

சுக்கிர திசை சந்திர புக்தி நடக்கும் ஜாதகருக்கு தற்போது திருமண ஏற்பாடு நடந்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஜாதகருக்கு தொழில் சிறப்பில்லை என பெண் வீட்டார் திருமணத்தை நிறுந்திவிட்டனர். ஜாதகர் இதனால் பெருந்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார். அவமான ஸ்தானமான ராசிக்கு 8 ல் நின்று திசை நடத்தும் சுக்கிரனும் சந்திரனும் தங்களுக்குள் சஷ்டாஷ்டகமாக (6-8 ஆக) அமைந்துள்ளனர். இதுவே ஜாதகருக்கு பெருந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனன சுக்கிரன் வக்கிரமாகி தற்போது கோட்சாரத்தில் லக்னத்தின் 7 ஆமதிபதி சனியும் வக்கிரத்தில் உள்ளதால் பெண் வீட்டார் பின்வாங்கிவிட்டனர். சுக்கிரன் மனைவியை குறிப்பதோடு மூத்த சகோதரியை குறிப்பவர். ஜாதகருக்கு அவரது மூத்த சகோதரிதான் பெண் பார்த்துள்ளார். இதனால் மூத்த சகோதரி ஏற்பாட்டாலும், திருமணதிற்கு பார்த்த பெண்ணின் மூலமும் ஜாதகருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் சுக்கிரனின் காரக உறவுகளான மூத்த சகோதரி, அத்தை ஆகிய சுக்கிரனின் காரக உறவுகள் ஜாதகரின் திருமண விஷயத்தில் தலைடாமல் பார்த்துக்கொள்வது பெருமளவு ஜாதகருக்கு ஏற்படும் அவமானங்களை குறைக்கும்.     

கீழே மற்றொரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 3௦ வயதான ஒரு பெண். இந்த ஜாதகிக்கு 2008 முதல் சுக்கிர திசை நடக்கிறது. தற்போது திசையின் இரண்டாவது பகுதியில் உள்ளார். ராசி மீனமானாலும் லக்னம் கும்பமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் முந்தைய ஜாதகம் போல சுக்கிரன் இங்கு கடுமை காட்ட மாட்டார். சுக்கிரன்  கும்ப லக்னத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதியாவதால் ராஜ யோகாதிபதியாவதுதான் காரணம். லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதியானாலும் அவர் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். மீன ராசிக்கு 3, 8 க்கு உரியவராகி ராசிக்கு 8 ல் நிற்பதுவும் சுக்கிரன் தனது திசையின் ஒரு பகுதியில் சிரமங்களை ஏற்படுத்துவார் எனலாம். சுக்கிரன் இங்கு முதலில் ஆராய்ந்த ஜாதகத்தில் போலன்றி பாவிகள் தொடர்பின்றி நிற்கிறார். இதனால் சுக்கிரன் ஏற்படுத்தும் சிரமங்கள் ஜாதகி பொருத்துக்கொள்ளுமளவு அல்லது வெளியில் தெரியாத அளவில் இருக்கும் எனலாம். களத்திர பாவாதிபதி சூரியன் ராகுவோடு லாபத்தில் தொடர்பு பெற்று 7 ல் நிற்கும் தனித்த குருவோடு பரிவர்த்தனை பெறுவதால், சுவாதி-4 ல் ராகு சாரத்தில் நிற்கும் சுக்கிரன் இந்த ஜாதகிக்கு பாதகத்தை, திருமண வாழ்வை தடைபடுத்துவதன் மூலமே தருகிறார். தாம்பத்ய ஸ்தானமான  12 ல் ஆட்சி பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் 2 ஆமிடத்தையும் 1௦ ஆம்  பார்வையால் திசாநாதன் சுக்கிரனையும் கட்டுப்படுத்துகிறார். இதனால் திருமணம் மூலம் ஜாதகிக்கு  பாதகம் ஏற்படுத்துவதை தவிர்க்க திசா நாதன் சுக்கிரனுக்கு சனி தனது 1௦ ஆம்  பார்வையால் உத்தரவிடுகிறார்.    

தந்தையை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதியாக திசாநாதன் சுக்கிரனே வந்து, தந்தையை குறிக்கும் சூரியனே 7 ஆமதிபதியாகி 11 ஆமிட குருவோடு பரிவர்தனையாகவதால் இந்த ஜாதகிக்கு திருமண வாழ்வில்  ஏற்படவிருக்கும் சிரமங்களை கணவருக்குப்பதில் சூரியனாகிய தந்தை வாங்கிக்கொள்கிறார். எவ்வாறெனில், ஜாதகியின் தந்தைக்கு, குரு குறிக்கும் குடும்ப வகையிலும், பொருளாதார  வகையிலும் இழப்பு ஏற்பட்டது. சுக்கிர திசையில் 2 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் பெற்ற சனி புக்தியில் ஜாதகியின் 3௦ ஆவது வயதில் தற்போது தாமதமாக திருமண வாழ்வு கூடி வந்துள்ளது. மீன ராசி சுக்கிர திசை என்றாலும், சுக்கிரன் லக்னாதிபதி சனிக்கு நட்பென்பதால் தீவிர பாதகத்தை ஜாதகிக்கு ஏற்படுத்தவில்லை. அது தாங்கிக்கொள்ளும் அளவிலேயே இருந்தது. ஏழரை சனியில் களத்திர வகையில் ஜாதகிக்கு ஏற்படும் சிரமங்களும்  களத்திர பாவாதிபதி பரிவர்தனையாவதால் திசை மாறிவிடும்.  

எனவே சுக்கிர திசை மீன ராசிக்கு ஏழரை சனியில் திருமண வாழ்வில் பாதகத்தையே செய்யும் என்று பொதுவாக எண்ணி கலங்க வேண்டாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501