Thursday 30 January 2020

கொரோனா கிருமியும் ஜோதிடமும்


இன்று கொரோனா விஷக்கிருமி சீனாவில் தோன்றி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவும் மக்களின் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்பட்டதாகவே அறியப்படுகிறது. பாம்பு மாமிசத்தை சரியாக சமைக்காமல் உண்டதால் ஏற்பட்ட  விளைவே இக்கொரோனா கிருமி என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சென்ற நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில்  துவங்கிப் பரவி ஆட்கொல்லி நோய்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்ட பால்வினை நோயான AIDS க்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. AIDS குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் ராட்சத பாம்பு வடிவில் பட்டங்கள் விடுவதும், ராட்சத பாம்பு பொம்மைகளைகொண்டு ஆடப்படும் நடனமும் சீனாவில் மிகப்பிரபலம். இதன் ஜோதிட அடிப்படை என்னவென்றால் சிவப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்தும் சீனா சிவப்பு நிறத்தை குறிக்கும் செவ்வாயின் அம்சமாக கருதப்படுகிறது. சீனாவின் செயல்பாட்டில் செவ்வாயின் ஆக்கிரமிப்புத்தனமும் போர்க்குணமும், கட்டுப்பாடுகளும் வெளிப்படுவதிலிருந்து இதை நாம் உணரலாம்.  சீனாவை பொறுத்தவரை அதன் ஜாதக அமைப்பின் செவ்வாய் தனது கடும் பகை கிரகமான ராகுவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். இதனை ராட்சத பாம்பு வடிவ பட்டங்களை பறக்கவிட்டு சீனர்கள் மகிழ்வதிலிருந்தும், ராட்சத பாம்பு வடிவங்களைக்கொண்டு ஆடப்படும் சீனர்களின் டிராகன் நடனங்களில் இருந்தும்,  பாம்பு மாமிசத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளும் அவர்களின் உணவுப்பழக்கத்தில் இருந்தும் நாம் அறியலாம்.


ராகுவிற்கு செவ்வாய் கடுமையான பகைக்கிரகமாகும். ராகு கோட்சாரத்தில் தற்போது வாயு ராசியான மிதுனத்தில் தனது சுய சாரமான திருவாதிரையில் அமர்ந்து ரத்த அணுக்களை குறிக்கும் செவ்வாயின் மிருகசீரிச நட்சத்திரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. அதே சமயம் தனது சொந்த வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் மிதுன ராசியதிபதியும் தனது பகைக்கிரகமுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் தற்போது அமைந்துள்ள செவ்வாயை நோக்கி கேது நகர்ந்து வருவதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்படி கால புருஷனுக்கு ஆயள் ஸ்தானமான விருட்சிகத்தில் அமைந்து கேதுவின் தீண்டலால் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் பாதிக்கப்படும் நிலையில் இந்த கொரோனா கிருமி பரவுவது கடுமையான விளைவுகளை உலகத்தில் ஏற்படுத்தும் எனலாம். ராகு குறிக்கும் கிருமி ராகுவின் பகைக்கிரகமான செவ்வாயின் அம்சமான சிவப்பு நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் சீனாவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உலகில் சிவப்பு  நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் நாடுகளையும், சந்திரனின் அம்சமாகவும், ராசி லக்னமாகவும் குறிப்பிடப்படும் நாடுகளையும் இந்த கிருமி அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் சிவப்பு நிறம் ஆட்சி செய்யும் (கம்யூனிஷம்) கேரளாவில் முதல் கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சிவப்பு நிறம் அதிகம் ஆட்சி செய்யும் செவ்வாயின் அம்சங்களான மணிப்பூர், மேற்கு வங்கம் இப்பகுதிகளிலும் இத்தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதன் பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட அதிகம் இருக்கக்கூடும். தமிழ்நாட்டை கேதுவின் அம்சம் கொண்ட ஆன்மீகம், கல்வி, மருத்துவத்திற்கு உரிய பூமியாக ஜோதிட ரீதியாக நான் கணிக்கிறேன். இதன் அடிப்படையில் ராகுவின் பாதிப்புகளை கேது சரிசெய்யும் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டுப்பண்டைய மூலிகை சிகிச்சை முறைகளால் இக்கிருமித்தொற்று  தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பலவீனச் சூரியன் நோய்த்தொற்றுக்கு உரிய கிரகமாக கூறப்படுகிறது. எனவே சூரியனின் கதிர்கள் அதிகம் ஆளுமை செலுத்தும் பாலைவனப்பகுதிகள், நிலநடுக்கோட்டு பகுதி நாடுகளான  ஆப்பிரிக்க கண்டத்திலும் இக்கிருமி அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை  என்பது எனது அனுமானம்.    
இனி இந்த கிருமி பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்வோம்.

பொதுவாக விஷக்கிருமிகளை குறிக்கும் காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். இவற்றை இனங்காண்பது எளிதல்ல. பல்வேறு நவீன முறைகளை கையாண்டுதான் கிருமிகளின் வகையை உறுதியிடமுடியும். கோட்சாரத்தில் ராகு வாயு ராசியான மிதுனத்தில் நிற்கிறது. காற்று ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்துகொண்டே இருப்பது. இதனால்தான் இக்கிருமி விரைவாக பரவுகிறது. கிருமிகள் ரத்தத்தில் எவ்வளவு விரைவாக  பரவி உடலில் மரபுக்கூறுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறதோ அவ்வளவு விரைவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இத்தகையை கிருமிகளால் ஜோதிடப்படி யார் பாதிக்கபடுவர் என்பதை காண்போம். தொற்றுக்கிருமிகளால் மொத்தமாக உயிரிழப்புகள் ஏற்பட ராகு-கேதுக்களே ஜோதிடப்படி காரணமாகும். எனவே

1.பிறப்பு ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் கூட்டு மரண பாவம் எனக்கூறப்படும் 4 ஆம் பாவத்தில்  நிற்கும் ஜாதகர்கள்.

2.ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் தொடர்புடைய மாரக திசை நடப்பில் இருந்து அவை வாயு ராசிகளில் நிற்கும் ஜாதக அமைப்பினர். 

3.கிருமித்தொற்றுக்கு உரிய கிரகம் பலவீனமான சூரியனாகும். அதனால் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக அமைந்துள்ள ஜாதகர்கள் பொதுவாக எளிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4.ஜீவ காரக கிரகமான குரு ஜாதகத்தில் பாதகமாக அமைந்து குருவோடு ராகுவோ அல்லது கேதுவோ  இணைவு பெற்றவர்கள். மற்றும் குருவிற்கு திரிகோணத்தில் ராகு-கேது அமையப்பெற்றவர்கள்.

5.ரத்தத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். ரத்த அணுக்கள் உற்பத்தியை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். அந்த வகையில் பிறப்பு ஜாதகத்தில்  சந்திரனும் செவ்வாயும் ராகு-கேதுக்களால் தொடர்பு பெற்ற அமைப்பில் இருக்கும் ஜாதகர்கள். அல்லது சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு-கேதுக்கள் அமையப்பெற்ற ஜாதகர்கள் மற்றும் சந்திரனையோ அல்லது செவ்வாயையோ நோக்கி ராகு-கேதுக்கள் வரக்கூடிய அமைப்பின் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள்.

6. ரத்த காரகன் சந்திரனோடு தொடர்புடைய ரிஷபம் (சந்திரன் உச்சமாகும் ராசி) , கடகம், விருட்சிகம் மற்றும் இவற்றுக்கு அடுத்த ராசிகளான மிதுனம், சிம்மம், தனுசுவில் ராகு கேதுக்கள் அமைந்து முன்சொன்ன ராசிகளை நோக்கி ராகு-கேதுக்கள் வரும் அமைப்பில் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புண்டு என ஜோதிட ரீதியாக அறியமுடிகிறது.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ஜோதிடம் ஏதேனும் வழிகளை கூறுகிறதா எனக்கேட்டால் ராகுவின் பாதிப்புகளை கேதுவின் துணைகொண்டு சரி செய்யலாம் என்பதற்கேற்ப மக்கள் அதிகம் கூடுமிடங்களில் உலாவுவதை கூடுமானவரை தவிர்ப்பது நலம். இதனால் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு. ஜோதிட ரீதியாக கேது தனிமை விரும்பி என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப்பழக்கத்தை சீராக வைத்துக்கொள்வது முடிந்தவரை எளிதில் செரிமானமாகும் உணவுவகைகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். புலனடக்க பயிற்சிகளையும், யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றையும் கடைபிடிக்கலாம். ஆதித்ய ஹிருதயம் பிடிப்பது நன்மை பயக்கும். ராகு-கேதுக்களின் பாதிப்புகளால்தான் இத்தகைய கிருமிகள் பாதிப்பை தரும் எனவே ராகு-கேதுக்களின் பாதிப்புகளை விஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக குறைத்துக்கொள்ளலாம். ராகு-கேதுக்களுக்கு கிரக பதவியை பெற்றுத்தந்தவர் என்பதால் சர்ப்ப கிரக தோஷத்திற்கு விஷ்ணுவை வழிபடுவது நலம்பயக்கும். இதன் அடிப்படையில் பாற்கடலில் ஆதிசேஷனோடு பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், தும்பிக்கையாழ்வார், சரபேஸ்வரர்  போன்ற தெய்வங்களோடு கோவிலில் சென்று துர்க்கை, பகவதி, மாசாணியம்மன் மற்றும் சர்ப்ப வழிபாடுகளையும் செய்து வரலாம்.

கொரோனா கிருமிக்கு என்றில்லாமல் பொதுவாக மருத்துவ சிகிச்சைக்கு ஒருவரின் பிறப்பு ராகு-கேதுக்களின் மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் செல்வது நன்மை தரும். வியாதிகள் விரைவில் தீரவும் நல்ல மருத்துவர் கிடைப்பதற்கும் இது உதவும். ராகு தொடர்புடைய தோல் வியாதிகளுக்கு எனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களில் பிறப்பு ராகு மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் இதை பரிந்துரைத்து சிறப்பாக செயல்பட்டதை கண்டிருக்கிறேன். மேலும் ராகுவினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் ஒருவரின் பிறப்பு கேதுவின் மீது கோட்சார சந்திரன் செல்லும் நாளிலும், கேது தொடர்புடைய நோய் பாதிப்பிற்கு ஒருவரின் பிறப்பு ராகுவின்மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்திலும் செல்வது சிறப்பாக இருக்கும். ராகுவும் கேதுவும் ஒன்றுக்கொன்று ஏழாமிடமான நிவர்த்தி ஸ்தான அதிபதிகளாக அமைவதே காரணமாகும். 
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501.

1 comment:

  1. Excellent analysis Anna. Appreciate your effort and attention to details. This helps many folks who are keen knowing astrology and relevant subject

    ReplyDelete