Sunday, 11 April 2021

திருமண உறவில் சூரியன்!

 


சூரியன் தனது சுய கர்மங்களில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்தும் கிரகம் ஆகும். இதன் பொருளாவது எதன் பொருட்டும் ஒருவர் தான் விரும்பி ஈடுபட்டுள்ள செயலை நிறுத்தமாட்டார் என்பதாகும். சூரியன் சீரான மற்றும் நிரந்தரமான இயக்கத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஒருவரை புகழுக்காகவும் கௌரவத்திற்காகவும் தனது செயலை செய்யவைக்கும் கிரகம்  சூரியனாகும். இதனால் சூரியனின் ஆதிக்கம் உடையோர் பிறரிடம் எளிதில் ஒன்றிவிட  மாட்டார்கள். அப்படியெனில் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களின் திருமண வாழ்வு என்னவாவது? என்றொரு கேள்வி எழும். திருமண உறவிலும் சூரியன் கௌரவம் பார்க்கும். ஒருவரது கௌரவம் பங்கப்பட்டால் அங்கே அவரது திருமண உறவு முறிகிறது என்பது பொருளாகும். தனது கௌரவத்திற்காக எதையும் இழக்கத்துணியும்  கிரகம் சூரியனாகும். இதனால் சூரியன் பொதுவாக திருமண உறவிற்கு எதிரான கிரகமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் சூரியன் கால புருஷனுக்கு களத்திர பாவமான துலாத்தின் பாதகாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் ஆதிக்கம் கொண்டவர்கள் கௌரவத்திற்காக தங்களது குடும்ப வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைத்துனைவர்களிடம் கிடைக்காத அன்பையும் நிம்மதியையும் குழந்தைகளிடம் பெறுகிறார்கள். காரணம் புத்திர காரகன் குரு, சிம்மத்தின் 8 ஆமிடமான மீனத்தின் அதிபதியாவதால் குடும்ப வாழ்வில் சிரமத்தை கொடுத்து சிம்மத்தின் 5 ஆமிடமான தனுசுவின் அதிபதியாவதால் குழந்தைகளால் நிம்மதியை தருகிறார். சூரியன் குடும்ப வாழ்வில் எப்படி செயல்படுகிறார் என்பதை ஆராய்வதே இன்றைய பதிவாகும்.


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் செவ்வாயுடன் 4 ஆம் பாவத்தில் இணைந்துள்ளனர். சுக ஸ்தானத்தில் இரு பாவிகள் இணைவது சுகத்திற்கு சிறப்பல்ல ஆயினும் கேந்திர பாவிகள் பொருளாதார வகையில் சிறப்பை தருகின்றனர். இங்கு செவ்வாய், சூரியனுக்கு பின்னால் 5 பாகை விலகி உள்ளது. இதனால் இது செவ்வாய்க்கு  கடுமையான அஸ்தங்கமல்ல. ஆயினும் செவ்வாயும்  சூரியனும் ஒன்று சேர்வதே இல்லறத்திற்கு சிறப்பல்ல. இக்கிரகச்சேர்க்கை பெற்றோர், தனது கௌரவம் பாதிக்கப்பட்டால் நல்ல சம்பாத்தியம் உள்ள வேலையைக்கூட எளிதில் உதறிவிடுவதை காண முடிகிறது. லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற சூரியன் ஜாதகரை எப்போதும் தனது வாழ்வின் உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே முன்னோக்கி நகர்த்தும். எந்த தோல்வியிலும் ஜாதகருக்கு பின்வாங்காத நிலையைத்தரும். சூரியன் செவ்வாய்  சேர்க்கை ஜாதகருக்கு தகுதிக்குறைவை அது எந்த வடிவமானாலும்  அல்லது உறவானாலும் உதறிவிடும் மனநிலையைத்தரும். ஆனால் சூரியன் செவ்வாய் சேர்க்கை நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்ததும் ஒரு நீர்க்கிரகம் சந்திரன் லக்னத்தில் அமைந்ததும் சூரியன் செவ்வாய் இணைவு தோஷத்தை பெருமளவு குறைத்துவிடுகிறது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் 6 ல் மகரத்தில் அமைந்து, அதற்கு பாதகமான விருட்சிகத்தில் செவ்வாயும் சூரியனும் அமைவது மனைவிக்கு பாதகத்தை செய்யும் அமைப்பாகவே தோன்றுகிறது. மனைவி தனது தகுதிக்கு குறைவானவராக இருந்தால் மனைவியோடு நல்லுறவு இருக்காது. தனது தகுதிக்கு நிகரானாவராக இருப்பின் மனைவியை  ஜாதகர் விட்டுத்தர மாட்டார்.

ஜாதகரின் இல்லறம் சிறக்க இங்கு மற்றொரு காரணி உதவுகிறது. 7 ஆமதிபதி சனிக்கு வீடு கொடுத்த சந்திரன் லக்னத்தில் அமைந்ததால் ஜாதகர் தனது மனைவியை விட்டுத்தர மாட்டார். ஆனால் இந்த விதியையும் ஜாதகரின் தகுதிக்கு மனைவி குறைந்த தகுதி பெற்றராயின் செயல்பட வாய்ப்பு இல்லை எனலாம். இவர் மனைவி இவருக்கு இணையான தகுதி வாய்ந்தவராக உள்ளார். இதனால் கடும் போராட்டமான காலங்களிலும் தனது தகுதியை உயர்த்திக்கொண்டு மனைவியோடு இன்று சிறப்பான இல்லறம் நடத்துகிறார். ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் அரசுப்பணியில் உள்ளார். 7 ஆமதிபதி சனி 12 ல் மறைந்து வக்கிரம் பெற்று, வேலை பாவமான 6 ல் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறார். இதனால் இவரது மனைவியும் பணி புரிபவராக இருக்கிறார். சுக்கிரனுக்கு பாதகத்தில் நிற்கும் சூரியனும் செவ்வாயும் களத்திர பாவமான 7 ஆமிடத்திற்கு திக்பலத்தை தருவதை கவனியுங்கள் இதனால் இவரது மனைவியும் அரசுத்துறையில் பணிபுரிகிறார். எனவே ஜாதகருக்கும் மனைவிக்குமான சம தகுதி இங்கு இவர்களின் குடும்ப வாழ்வை சிறப்படைய வைக்கிறது. இதில் திசா புக்திகளின் பங்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

அடுத்து ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னதிலேயே செவ்வாய். இதனால் ஜாதகிக்கு நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் அதிகம். ஜாதகிக்கு சுக்கிர திசை முடிந்து தற்போது சூரிய திசையில் ஒரு வருடம் முடிந்துள்ளது. சுக்கிரன் வித்யா காரகன் புதனுடனும் பூர்வ புண்யாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று திசை நடத்திய காலத்தில் 2016 ல் ஜாதகி உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். உயர்கல்வியை உலகின் முதன்மையான தேசத்தில் முடித்தால்தான் தனக்கு மதிப்பு என ஜாதகி எண்ணினார். காரணம் திசா நாதன் சுக்கிரன் 1௦ ல் திக்பலம் பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் சூரியனின் காரகமான இருப்பதிலேயே உயர்வான எனும் காரகத்தை தனதாக்கிக்கொண்டார். சுக்கிரன் சூரியனின் அஸ்தங்கமாகவில்லை எனினும் சுக்கிரன் சூரியன் மற்றும் புதனின் காரகங்களை தனதாக்கிக்கொண்டார். மேலும் ராகுவை முதலில் எதிர்கொள்ளும் சுக்கிரன் ராகுவின் காரகங்களையும் தனதாக்கிக்கொள்கிறார். இந்த ஜாதகி திரைத்துறையில் இயக்குனர் தொடர்புடைய உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். திரைத்துறையை சுக்கிரன் புதன் சேர்க்கை குறிக்கிறது. அதில் இயக்குனர் எனும் நிலையை சூரியன் குறிக்கிறார். அதில் பிரம்மாண்டமான நவீன நுட்பங்களை ராகுவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் கனவுகள் கற்பனைகளை குறிக்கும் காரக கிரகமாகும் இவற்றோடு ராகு தொடர்பாகும்போது அது பிரம்மாண்டமானதாக உருவெடுக்கும்.

இந்த ஜாதகி அமெரிக்காவில் வரும் திரைப்படங்களைப்போன்று வேற்றுகிரக வாசிகளோடு தொடர்புடைய பிரம்மாண்டமான திரைப்படங்களை இந்திய மொழிகளில் எடுக்க விரும்புபவர். தற்போது ஜாதகி சுக்கிர திசை முடிந்து திக்பலம் பெற்ற சூரிய திசையில் இருக்கிறார். 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்ற சூரியன் பணிக்கு சிறப்பு. ஆனால் திருமண வாழ்விற்கு சிறப்பை தராது. 1௦ ஆமிட திக்பல சூரியன் மேலும் மேலும் புகழ் மற்றும் உயர்வையே எண்ண வைக்கும். சூரியன் இங்கு ஜாதகிக்கு ஒருவித புகழ்,  உயர்வு எனும் மன போதையை ஊட்டி திருமண வாழ்வை தடை செய்கிறார். 1992 ல் பிறந்த ஜாதகிக்கு தற்போது வயது 32. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. உயர் கல்வி பாவமான 9 ல் லக்ன பாதகாதிபதி சனி அமைந்ததால் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர் இன்னும் கல்வியை முடித்து திரும்ப மனமின்றி மேலும் புதிய நுட்பங்களை கற்றுக்கொள்ளவே விரும்புகிறார். இது சூரியனால் உண்டாகும் ஒருவித புகழ் போதை மனநோய் எனலாம். சுக ஸ்தானாதிபதியும் மனோ காரகனுமான சந்திரனும் நீசம் பெற்றதால் ஜாதகி உடல் ரீதியாக விரும்பும் சுகத்தை சூரியன் ஏற்படுத்தும் புகழ் போதை எண்ணம் மழுங்கடித்துவிடுகிறது. 2 ல் நின்று கல்வி கற்க பொருளைத்தரும் குரு குடும்பத்தை எளிதில் தரமாட்டார். காரணம் 5 ல் கேது நிற்பதையொட்டிய புத்திர தோஷமும் திருமண தடைக்கு முக்கிய காரணம். இந்த ஜாதகி திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள முதலில் மனநல சிகிச்சையும் எடுத்துக்கொள்வது நன்று.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 4 April 2021

ஜனன ஜாதக திருத்தங்கள்!

 


ஜாதகத்தை ஆய்வு செய்யும் சில ஜோதிடர்கள் ஜாதகப்படியான சில விளக்கங்களை வந்தவரிடம் கேட்டு ஜாதகத்தை உறுதி செய்துகொண்டு பலன் சொல்வதை கவனித்திருக்கலாம். இது பொதுவாக ஜாதகத்தின் உண்மைத்தன்மையை அறிய பயன்படுத்தப்படும் ஒரு யுக்திதான். சில ஜாதகங்கள் உத்தேச ஜாதகங்களாகவும் சில லக்னம் மாறியோ அல்லது சந்தி லக்ன ஜாதகங்களாகவும் அமையும்போது ஜோதிடர்களுக்கு பலன் சொல்வதில் தடுமாற்றங்கள் எழத்தான் செய்கின்றன. அதற்காகவே மேற்கண்டவாறு சில கேள்விகளை ஜோதிடர்கள் கேட்பர். ஜோதிடர்களிடம் அளிக்கபடும் ஜாதகங்களில் ஜாதக கணிதங்களுக்கேற்ப தவறுகளும் இருப்பது உண்டு. அவற்றை எல்லாம் சரிசெய்துதான் ஜோதிடர்கள் பலன் சொல்ல வேண்டியிருக்கும். எனது ஜாதகத்தில் நேரத்தவறு இருக்கலாம் அதை சரி செய்து தர இயலுமா என நேரடியாக கேட்போரும் உண்டு. அப்படியானவர்களிடம் ஜாதக விபரங்களோடு அவர்கள் வாழ்வில் நடந்த திருமணம், வேலை கிடைத்த நாள் போன்ற சில முக்கிய சம்பவங்களின் நாட்களை பெற்றுக்கொண்டு  ஜாதகத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி சில நேர திருத்தங்களை செய்யலாம். இப்பதிவில் இன்று ஜனன நேரத்தை சரி செய்வது பற்றி ஆராயவிருக்கிறோம். ஜனன நேரத்தை திருத்த பல முறைகள் உண்டு என்றாலும் நம்பகமான ஒரு முறை என நான் கருதுவது பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு சரி செய்வதே ஆகும்.

எது சரியான பிறந்த நாள்?

தனது உறவுப்பெண்ணின் ஜாதகத்தை கடந்த வருடம் அளித்திருந்த ஒரு நண்பர் மீண்டும் சில நாட்களுக்கு முன் அதே ஜாதகத்தை முன்னிட்டு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். முன்னதாக அனுப்பியிருந்த பிறந்த நாளானது 23.08.91 என அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிறந்த நாள் 28.03.91 என குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இது போன்ற சூழ்நிலைகள் ஒரு ஜோதிடருக்கு விரக்தியை ஏற்படுத்துபவையாகும். வருடம் ஒன்றுதான் ஆனால் பிறந்த நாள் மற்றும் மாதம் ஆகியவை மாறுபட்டிருந்தன. 23.08 மற்றும் 28.03 என்பது தட்டச்சுப்பிழையாக இருக்கும் என கருதி இதில் எது சரியான பிறந்த தேதி என ஆய்வு செய்தேன். எனது “ஜோதிட சாகர” WhatsApp குழுவிலும் இதை ஆய்வுக்கு பதிவிட்டிருந்தேன்.

பெண்ணின் இரு வேறு ஜாதகங்கள்

  

   


பிறந்த நாள் A படி ஜாதகி பிறந்தது சூரியன் சிம்மத்தில் இருக்கும் ஆவணி மாதமாகும். ஜாதகம் B படி ஜாதகி பிறந்தது சூரியன் மீனத்தில் இருக்கும்  பங்குனி மாதமாகும். மூன்றாவதாக மேலே குறிப்பிட்டிருப்பது ஆய்வு நாளின் கோட்சார நிலையாகும். ஆய்வு நாளின் மாதம் சூரியன் மீனத்தில் இருக்கும் பங்குனி மாதமாகும். இது பிறந்த நாள் B உடன் ஒத்துப்போகிறது. இதனால் இரண்டாவதாக அளிக்கப்பட்ட ஜாதகம்-B தான் சரியானதாகும். எனவே ஜாதகியின் பிறந்தநாள் 28.03.1991 தான் என கணித்தோம். பிற்பாடு இதை தொடர்புடைய நபர் உறுதி செய்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.   

எது சரியான பிறந்த லக்னம்?

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம் கீழே.

இந்த ஜாதகத்தை பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் விபரங்களை குறிப்பிட்டு அனுப்பிய நபர். ஜனன நேரம் உத்தேசமாக இருக்கும் எனவே நேரத்திருத்தம் செய்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். திருமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கும் அவருக்கு வந்த பெண்ணின் ஜாதகம் இது.  லக்னப்புள்ளி மிதுனத்தின் இறுதிப்பாகையை ஒட்டி சந்தியில் இருப்பதாலும் நேரம் உத்தேசமானது என்பதாலும் கடக லக்னமாக ஜாதகி  இருக்கக்கூடும் என அவர் அனுமானித்திருந்தார். 

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த நேரத்திற்கான ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.

லக்னம் கன்னியில் 00.16 பாகையில் இருப்பதாக பிரசன்னம் காட்டுகிறது. லக்னம்  புதனின் வீடுகளில் ஒன்றுதான் என்பதை இது உறுதி செய்வதோடு லக்னப்புள்ளி சந்தியில் அமைத்திருப்பதால் ஜனன ஜாதக லக்னமும் சந்தியில் அமையும் என்பதை சாதாரண பிரசன்னமே சுட்டிக்காட்டுகிறது. கடகத்தை கோட்சார சந்திரன் தொடர்புகொண்டால் கடக லக்னம் என ஐயம் எழலாம். இங்கு கோட்சார சந்திரனும் கன்னியில்தான் உள்ளது எனவே லக்னம் புதனுடைய மிதுனம் அல்லது கன்னி ஆகும். கடகம் அல்ல என்பது உறுதியாகிறது.  ஆனால் மிதுனம் கன்னி இரண்டில் எனது லக்னம் என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால் இங்கு கேள்வியே லக்னம் மிதுனமா? அல்லது கடகமா என்பதுதான். எனவே லக்னம் மிதுனமாகும்.

இதை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் உறுதி செய்வோம் வாருங்கள். 

ஜாமக்கோள் பிரசன்னைத்தில் கும்ப உதயத்தில் உள்வட்டத்தில் புதன் அமைந்துள்ளதால் புதனின் லக்னமே ஜாதகருடையது என்பது புலனாகிறது. உதயம் கன்னி லக்னத்திற்கு 6/8 ஆக (சஷ்டாஷ்டகத்தில்) அமைகிறது. எனவே கன்னி லக்னமல்ல. அதே சமயம் மிதுனத்திற்கு திரிகோணத்தில் அமைந்த புதன் மிதுனத்தில் உள்ள ஜாம (வெளிவட்ட) சனியோடு   பரிவர்த்தனை ஆகிறார். மிதுன சனியோடு பரிவர்தனையாகும் புதன் உதயத்தையும் பரிவர்த்தனை ஆக்குகிறார். எனவே உதயமும் மிதுனத்திற்கு செல்கிறது. ஜாம சனி கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி வரும். உதயமும் உதய தொடர்புகளும் நமது ஐயப்பாட்டிற்கான விடைகளைக்கொண்டிருக்கும். எனவே பரிவர்த்தனைக்குப்பிறகு மிதுனத்திற்கு செல்லும் உதயம் ஜாதகியின் ஜனன லக்னம் மிதுனம் என்பதை உறுதி செய்கிறது. கும்பத்திற்கு பரிவர்த்தனையாகி செல்லும் சனியும் மிதுனத்திற்கு பரிவர்த்தனையாகி வரும் புதனும் ஜனன ஜாதகத்தில் அமைந்த நிலையிலேயே பிரசன்னத்திலும் அமைவதை கவனியுங்கள். இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் உன்னதம். சாதாரண பிரசன்னத்தில் இந்த நுட்பம் வெளிப்படாது. எனவே ஜாதகியின் லக்னம் மிதுனமே ஆகும். கடகம் அல்ல என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. மிதுனம் இரட்டை ராசி என்பதால் பிறப்பு விபரங்களையும் இருவேறு சூழல்களை ஒப்பிடும்படி பிரசன்னம் காட்டியது கண்டு அதிசயயித்தேன். இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திலும் (04.04.2021 – மதியம் 12:26 மணி) கோட்சார லக்னம் மிதுனத்தில் செல்வது பிரம்மிக்க வைக்கிறது. எனது ஜோதிட ஆய்வுக்கான இப்பெருமைகள் யாவும் எனது ஜோதிட ஆசான்களையே சாரும்.

எது சரியான பிறந்த நட்சத்திரம்?

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நட்சத்திர சந்தி உள்ளது. இதனால் சில கணிதங்களில் பெண்ணின் நட்சத்திரம்  பூசம்-4 ஆம் பாதம் எனவும் சில கணிதங்களில் ஆயில்யம் முதல் பாதம் எனவும் வருவதாக என்னிடம் கொடுக்கப்பட்டது. சில அயனாம்ச மாறுதல்களாலும், கணித மாறுதல்களாலும் இரு நட்சத்திரங்களின்  சந்தியில் ஜனன கால சந்திரன் செல்லும்போதும் இந்நிலை ஏற்படும். இதனால் எந்த நட்சத்திரம் கொண்டு ஜாதகிக்கு நட்சத்திர பொருத்தம் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு எனை நாடி வந்திருந்தனர்.

கீழே பெண்ணின் ஜாதகம்.


கொடுக்கப்பட்ட இந்த ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் 16.39 பாகையில் பூச நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளதாகவே எனது கணினி மென்பொருள் காட்டியது. ஆனால் சில நிமிட மாறுதல்களில் அது ஆயில்யம் முதல் பாதம் என காட்டுகிறது. எனவே வந்தவர்களின் நிலை புரிந்தது. இதனால் பிரசன்னம் மூலம் இதை அறிய முயன்றேன்.

கீழே ஆய்வு நேரத்திற்கான பிரசன்ன ஜாதகம்.


கோட்சார சந்திரன் விருட்சிகத்தில் 2.43 பாகையில் கடகத்தின் திரிகோணத்தில் விசாகம்-4 ஆம் பாதத்தில் செல்கிறது. ஒரு பாதம் மாறினால் நட்சத்திரமும் மாறிவிடும். கேள்வி பூசத்தின் 4 ஆம் பாதமா? அல்லது ஆயில்யத்தின் முதல் பாதமா? என்பதே. விசாகம் குருவின் நட்சதிரமானாலும் நட்சத்திர பாதம்-4 தான். கோட்சார சந்திரன் கேட்டையில் இருந்தால் ஜனன நட்சத்திரம் ஆயில்யம் என கூறலாம். எனவே பாத அடிப்படையில் பார்க்கும்போது பெண்ணின்  ஜென்ம நட்சத்திரம் பூசம்-4 தான் ஆயில்யம் அல்ல என்பதை கோட்சார சந்திரன் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. கோட்சார சந்திரன் ஆத்மார்த்தமான நம் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கண்ணாடி ஆகும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 26 March 2021

எதிர்பார்க்கும் வேலை கிடைக்குமா?

 

இன்றைய பொருளாதார சூழலில் நிறுவனங்களில் பணிபுரிவோர் எதிர்கொள்ளும் பணி மாறுதல்கள் தவிர்க்க இயலாதவை. நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னிட்டோ, தங்களது வளர்ச்சியை முன்னிட்டோ அல்லது இதர வகை காரணங்களினாலோ இது அமைகிறது. பணி மாறுதல் என்பது புதியவர்களுக்கு புதிய கோணங்களில் வேலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும். ஆனால் நீண்ட காலம் ஒரு துறையில், ஒரு நிறுவனத்தின் பணிபுரிந்து ஒரு சூழலில் பணிமாறுதலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.  காரணம் பணி மாறுதல் என்பது தனி மனிதனுக்கு சாதாரண மாறுதல் மட்டுமல்ல அது ஒருவரது வாழ்க்கையின் சூழலையே மாற்றியமைக்கக்கூடியது. அத்தகைய மாறுதலின் பொருட்டு ஒருவர் தனது உழைப்பை, சம்பாத்தியத்தை, குடும்பத்தை பணயம் வைக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு பாதுகாப்பான எந்த சூழலும் எப்போதும் ஒருவருக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கிவிடாது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக நிரந்தரமான ஊதியத்தை தரும் என்று சொல்லப்படும் அரசு உத்யோகத்தில் கூட லஞ்ச, லாவண்யங்களாலும், பாலியல் சீண்டல்களாளும், திறமையின்மையினாலும் ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது தனது வேலையை அல்லது வேலை சூழலை ஒருவர் மாற்றவேண்டியது அவசியமாகிறது. இத்தகைய நிலையில் வேலையில்  மாற்றத்தை எதிர்கொள்ளும் மன நிலையில் இருப்போர்க்கு ஜோதிடம் எவ்வாறு உதவ முடியும் என்பதை அலசுவதே இப்பதிவின்  நோக்கம்.

ஜோதிடத்தில் மாற்றத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாவார். சந்திரன் சனியோடு தொடர்புகொள்ளும் சூழலில் ஒருவர் பணி மாற்றத்தை சந்திக்கிறார். ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்த திசை, புக்தி நடந்தாலும் ஏழரை சனியில் குறிப்பாக ஜென்மச்சனியில் ஒருவர் தனது ஜீவன சூழலை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஜீவன காரகன் சனி  தனது ஆதிக்க காலத்தில் மாற்றத்தின் காரகன் சந்திரன் மேல் கோட்சாரத்தில்  செல்லும் காலம் தரும் பணி மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.




1973 ல் பிறந்த இவர் தன் பணியில் தனக்குள்ள தனித்திறமையால் தன் திறமைக்கேற்ற நல்ல சூழலில் வேறு ஒரு நாட்டில் பணிபுரிய விரும்புகிறார். இதற்கேற்ற சூழல் ஜாதகத்தில் உள்ளதா என ஆராய்வோம். ஜாதகத்தில் தனுசு லக்னாதிபதி குரு ஜனன காலத்தை போலவே கோட்சாரத்திலும் நீசமாகி சனியோடு இணைந்து நீச பங்கமும் ஆகியுள்ளார். இது பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சியை தரும் அமைப்பே ஆகும். எனவே ஜாதகர் பொருளாதார ரீதியாக உயர இன்னும் சில காலமாகும். ஜாதகருக்கு சுக்கிர திசையில் குரு புக்தி 2022 இறுதி வரை நடக்கிறது.  சுக்கிரன், குரு இருவரும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திசா நாதனை மீறி புக்தி நாதன் செயல்பட இயலாது. சுக்கிரனும் குருவும் சந்திரனின் சாரத்திலேயே (சுக்கிரன் ரோஹிணி-1, குரு திருவோணம்-3)  உள்ளதால் இவர் பணி மாறுதலை விரும்புகிறார். மேலும் முதலாளி அல்லது முதன்மை நிர்வாகியை குறிக்கும் கிரகமான சூரியன் ஜாதகத்தில் குறைந்த பாகை  பெற்று (சூரியன் 3 பாகை 1௦ விகலை) நிற்கும் ஜாதகத்தினருக்கு தனது நிர்வாகியிடம் எவ்வளவு சிறப்பாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாவச்சக்கரத்தில் சுக்கிரன் வேலை பாவமான 6 க்கு விரையத்தில் 5 ல் மேஷத்தில் நிற்பதால் இவருக்கு தான் பணிபுரியுமிடத்தில் அதிருப்தி உள்ளது. ஆனால் திசை மற்றும் புக்தி நாதர்கள் தற்போது சிறந்த பொருளாதார உயர்வை வழங்கும் நிலையில் இல்லை. எனவே ஜாதகர் அவசரப்பட்டு வேலையை விடுவது நன்மை அளிக்கும் முடிவல்ல.

ஒரு நேர்முகத்தேர்வின் முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளேன். அந்த வேலை கிடைக்குமா என கேட்ட நபருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் ஆரூடமும் கவிப்பும் உள்ளது. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமாகியுள்ளது. இது ஜாதகர் வேலையில் ஒரு உயர்வான நிலையை நோக்கி செல்லும் எண்ணத்தில் உள்ளதை காட்டுகிறது. வேலை கேட்பவர் உதயாதிபதி என்றால் வேலை கொடுப்பவர் 7 ஆமதிபதி ஆவார். உதயாதிபதி செவ்வாய் உள்வட்டத்தில் தடையை குறிக்கும் ராகுவிற்கு நெருக்கமாக சென்றுகொண்டுள்ளார். அதே சமயம் ஜாம செவ்வாய் (வெளி வட்ட செவ்வாய்)   வேலை பாவமான 6 க்கு விரையத்தில் மீனத்தில் நிற்பது ஆகியவை சிறந்த அமைப்பல்ல. வேலை தர தயாராக இருப்பதாக சொல்லும் 7 ஆமதிபதி சுக்கிரன் வெளி வட்டத்தில் விரையத்தில் உள்ளது. உள்வட்டத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 1௦ ஆமதிபதி சூரியனுடன் நெருக்கமாக அஸ்தங்கமாகி நிற்கிறது. 1௦ ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதி சுக்கிரன் ஆகிய இருவருக்கும் இடமளித்த மீனத்தில் அதிபதி குரு உள்வட்டதிலும் வெளி வட்டத்திலும் நீசம் பெற்று நிற்பது, வேலை தருபவர் இவர் எதிர்பார்க்கும் சிறந்த சம்பளத்தை தர மாட்டார் என்றே குறிப்பிடுகின்றன. 1௦ ஆமதிபதி சூரியன் வெளிவட்டத்தில் உச்சமானாலும் உள்வட்ட சூரியனின் பலமே ஜாம சூரியனுக்கு செயல்பாட்டு வலுவைத்தரும். உள்வட்ட சூரியன் வேலை பாவத்திற்கு விரைய  பாவத்தில் நிற்கிறது. இந்த நிலை ஜாதகருக்கு ஊதிய உயர்வை தர தங்கள் நிறுவனத்திற்கு மாறுதலாகி வந்தால் சாத்தியம் என சொல்லும் நபர் ஜாதகரை வேலையை இழக்க வைத்து பிறகு தங்கள் எண்ணப்படி சொல்லும் ஊதியத்திற்கு இணங்க வைக்கும் முயற்சி உடையவராக  இருக்ககூடும் என்பதை தெரிவிக்கிறது. 1௦ ஆமிடத்தில் உள்ள கவிப்பு இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே வேலை அளிப்பதாக சொல்லும் நிறுவனத்தை நம்பி பார்க்கும் வேலையை விட்டுவிட்டால் பிறகு பாதிப்படைவது உறுதி என்பது புலனாகிறது. உச்சமான ஜாம சூரியன் உதயத்தை தொடும் காலத்தில் ஜாதகருக்கு உத்யோக உயர்வு காத்துள்ளது. அதுவரை ஜாதகர் பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் இன்னும் சில மாதங்கள் பொறுமை காக்க சொல்லப்பட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501