ஆடி மாதம் பிறந்ததும்
புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கம் நமது இந்து தர்மத்தில் ஆண்டாண்டு
காலமாகக் கடைபிடிக்கப்படும் அவசியமான ஒரு வழக்கமாகும். ஆடிமாதத்தில் இப்படி ஒரு
நடை முறையை தற்போதைய புதுமணத் தம்பதியரிடம் கூறினால், தற்காலக் கணவன்மார்கள்
யாரிதைக்கூரிய ஜோதிடன் என்று ஜோதிடரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நமது
முன்னோர்கள் தமது வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வை முன்னிட்டே இவ்வழக்கத்தினை
கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப்
போனேன். தற்காலத்தில் இம்மண்ணின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய மரபுகள்
மறைந்து வருவதும் தற்காலத்திய பல குடும்ப அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக
அமைகிறது.
ஆடிமாதம் தம்பதியர் இணைந்தால் சித்திரை
மாதம் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் குழந்தை
பிறந்தால் வெயில் காலத்தில் தாயும் சேயும் சிரமப்படுவர் என்பதால் இத்தகைய ஒரு மரபு
கடை பிடிக்கப்பட்டிருக்கலம் என்பது சாதாரணமாக மக்களின் கருத்து. இதில்
ஜோதிடர்களின் கருத்து என்ன? சித்திரை மாதத்தில் தலைச்சன் குழந்தையாக ஆண்
குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் அது
தகப்பனுக்கு ஆகாது. அப்படிப் பிறந்தால் குழந்தையின் தந்தை எவ்வளவு உயர்ந்த
நிலையில் இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அணைத்தையும் இழந்து
சாதாரண நிலைக்கு வந்து விடுவது கண்கூடு என்பர். இது உண்மையே. ஆனால் இதன் பிண்ணனியை ஜோதிடர்கள் கூட ஆராய்ந்து பார்த்திருப்பார்களா என்பது
சந்தேகம்தான்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க ஜோதிடத்தை கடுமையாக
விமர்சித்துக் கற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்து பார்க்க ஏனையோரை
அழைக்கிறேன்.
படம் விஜய வருடம் சித்திரை மாதம் 12ஆம் தேதி (25.04.2013) அன்று சந்திரன் துலாத்தில் இருப்பதை காட்டுகிறது.
ஜோதிடக் கணக்கீட்டு முறையில் சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு
பாதங்கள் கன்னி ராசி மண்டலத்திலும் 3,4 ஆம் பாதங்கள்
துலாம் ராசி மண்டலத்திலும் அமைந்திருக்கும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ
ராசியில் உச்ச கதியில் இருக்கும் போது மேஷ ராசிக்கு சுகஸ்தான ராசி நாதனான சந்திரன்,
சூரியனின் நீச்ச ராசியான துலாத்தில் சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சூரியனுக்கு கடுமையான பாதிப்புகளை கொடுக்கும். அதாவது சூரியனின் அம்சமான
தந்தை தனது சுகங்களை இழந்துவிடுவார்.அது மட்டுமல்ல சந்திரன் அப்படி அமரும் சித்திரை நட்சத்திரத்திற்கு அதிபதியானவரும்
சூரியனுக்கு வீடு கொடுத்தவருமான செவ்வாயானவர் சந்திரனின் கடக ராசியில்தான் நீச்சமாகிறார்
என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சூரியன் முதன்மைக் கிரகம் என்பதும் தலைமைப் பண்புக்கான கிரகம் என்பதாலும் இந்த விதி முதலாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு (தலைச்சன் ஆண் குழந்தை) மட்டுமே பொருந்தும். இரண்டாவது ஆண் குழந்தையாலோ அல்லது முதல் மற்றும் இரண்டாவது பெண்
குழந்தைகளாலோ தந்தைக்கு இவ்வித பாதிப்பு ஏற்படுவதில்லை. இவ்வரிய உண்மையை நன்கு
ஆராய்ந்தே நம் முன்னோர்கள் தமது சந்ததியினர் இத்தகைய கிரகச் சூழ்நிலையில் குழந்தை
பெற வாய்ப்புள்ள சித்திரை மாதத்தில் குழந்தை பெறாமல் இருக்க ஆடி மாதத்தில்
புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை
உணரலாம். நவீன வசதிகளற்ற அக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் எத்தனை குடும்பங்களை ஆராய்ந்து பார்த்து இத்தகைய உண்மைகளை நமது முன்னோர்கள் நமக்குக் கூறியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இயற்கை அளிக்கும் வாழ்க்கைச் சிக்கலில் இருந்து விடுபட எத்தகைய எளிய
முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து
வியப்படையந்தேன். எனவே நமது சந்ததியினரின் நல்வாழ்வின் பொருட்டு இந்த மரபை விட்டுவிடாது தொடர்ந்து கடை பிடிக்க வழி செய்ய வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.