Sunday 10 February 2013

ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி?


சிறுகதை
   
“ரகு நான் சொல்றதை கேளுடா நம்ம வம்சத்தில் ஒருத்தர் தீர்த்த நாராயணப் பெருமாளை சேவிச்சுண்டு ப்ரோஹிதம் ஜோதிடம் என்று இருப்பதுதான் மரபு. இந்த காவிரிக்கரையில் நமது மூதாதையர்கள் வந்து குடியேறிய பிறகு நமது வம்ச விருத்திக்காகவும் குலம் தழைக்கவும் பெருமாளை வணங்கி நேர்ந்துண்டது. எனக்குப்பிறகு நீயும் அப்படியேதான் தொடரணும். சேஷூ (சேஷகோபாலன்) C.A படித்து ஆடிட்டர் ஆகட்டும் நாளைக்கு உனக்கு அமையும் குடும்பத்தையும் சேர்த்து அவன் பார்த்துப்பான். ஆனால் நாம பெருமாளை கைவிட்டோம் நாம் எல்லோரையும் அவன் கை விட்டுடுவான் என்ற தன் தந்தையின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் தன் தந்தையுடன் கோவில் கைங்கர்யம் செய்துகொண்டு இப்போது ஜோதிடம் கற்க தன் தந்தை வேங்கடகிருஷ்ணனின் பால்ய நண்பனும் தனது தாத்தாவிடம் தன் தந்தையோடு சேர்ந்து ஜோதிடம் படித்தவருமான சந்திரசேகர சர்மாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான் ரகு. பெருமாள் மீது மாறாத அன்பு கொண்ட ஐயங்கார் வகுப்பை சேர்ந்தவன் ரகு.


சந்திரசேகரசர்மா  பால்க்காரன் வராததால் பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார். சர்மா  தமிழ் பிராமண வகையைச் சேர்ந்தவர். அவரது மகள் காயத்திரிக்கு அவளது ஜாதகப்படி தங்கள் குலத்தை விட்டு வேறு குலத்தில் திருமணம் செய்யும் அமைப்பு இருந்ததால் காலம் கடந்த திருமணம் அந்த தோஷத்தை நிவர்த்திக்கும் என்று தனது ஜோதிடத்தின் மூலம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் காயத்திரியின் திருமணத்தை தள்ளிக்கொண்டே வந்தார். எதிர் வீட்டு நாராயணன் தெலுங்கு பிராமண வகையைச் சேர்ந்தவர். 23 வருடங்களுக்கு முன் இவர்களது அக்ரஹாரத்தில் வந்து குடியேரியவர். “ராமு என் குடும்பத்தைப்பற்றி உனக்கும் உன் குடும்பத்தைப்பற்றி எனக்கும்  நன்கு தெரியும். உன் பெண் காயுவை என் மகன் நரேஷுக்கு கொடுத்துவிடு, குழந்தையாக அவளை கொஞ்சிய நான் இப்போது அவளை மருமகளாக எங்கள் பெண்ணாக ஆக்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரது மகன் நரேஷ் MS IT முடித்துவிட்டு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகா அமெரிக்காவில் IBM ல் இருக்கிறான்.

எதிர் வீட்டு சிநேகிதன் என்பதற்காக குலம்விட்டு குலம் கொடுக்க வேண்டுமா?. அதுவும் இல்லாமல் பிராமணன் கடல் கடக்கக் கூடாது என்ற சாஸ்த்ர நியதியை மீறியவன், தமிழும் தெலுங்கும் எப்படி ஒத்து வரும் போன்ற எண்ணங்களைக் கொண்டிருப்பவர்.

தன் மகள் ஒரு தமிழ் பிராமணனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சர்மா.
     
ஆச்சு இன்னும் 7 மாதம்தான் பாக்கி  வரும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அவளது  தோஷம் கழிந்துவிடும் அதன் பிறகு திருமண ஏற்பாட்டைத் துவங்கலாம் என நினைத்தவாறே நடந்து கொண்டு இருந்தார்.
    
வாசலில் ரகு நின்று கொண்டிருப்பதைப்  பார்த்து “அடடே வா ரகு, ஆத்துல எல்லாரும் சௌக்கியமா? என்றார்.

அவரை நமஸ்க்கரித்து “சௌக்யம் மாமா “நீங்க எப்படி இருக்கேள்? என்றான் ரகு.

“உன் அப்பாவை நேத்து கோவில்ல பார்த்தப்ப சொன்னான்  உன்னை ஜோஷ்யம் படிக்க அனுப்பி வைக்கிறேன்னு. “ஏன் உன் தோப்பனார்ட்டயே படிக்கறதில் என்ன சிரமம் உனக்கு? என வினவினார் சர்மா.

“அவர் அதிகமா வைவார் என்றான் ரகு.

“சரி உள்ள வா என்றார் சர்மா.

ஜன்னல வழியே இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த சர்மாவின் மனைவி ஜானகி, அது சரி சிங்கத்திடம் தப்பித்த மான் புலியிடம் அகப்பட்டதாம் என நினைத்தவாறே முட்றத்துக்கு வந்து தன் கணவனிடமிருந்த பாலை வாங்கிக்கொண்டு சமையல் கூடத்திற்குச் சென்றாள்.

பாடம் துவங்கியது.

கடவுள்களை வணங்கி கிரகங்களை போற்றி பிறகு பாடம் துவங்கியது.

“ ஜனனீ  ஜென்ம சௌக்யானாம்... எனச் சென்றது பாடம்.

இடையே காயத்ரி வந்து காபி கொடுத்துவிட்டுச் சென்றாள்.

முடிவில் “அம்பி ஜோசியம் படிக்க வாக்கு பலிதம் வேணும், புத பகவான் அனுக்ரகம் வேணும். நாளை வர்ரச்சே உன் ஜாதகத்தை கொண்டு வா, உனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கணும் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

அவனது வாக்கு நன்றாக இருந்ததோ அல்லது காயத்ரி ஜாதகம் வலுவாக இருந்ததோ தெரியவில்லை ஐந்து மாதங்கள் கழித்து ஒரு நாள்  மாலை கோவிலுக்குச் செல்லும் வழியில் ரகுவை சந்தித்தாள் காயத்ரி.

“எப்படி இருக்கேள்? என ஆரம்பித்தாள் காயத்ரி.

“ம் இருக்கேன் நீங்கதான் பார்க்கறேளே என்றான்.

“ஏன் ஜோதிடம் புடிக்கலியா?

“அது இல்ல, நான் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். அப்பாதான் எங்க  வம்ச வழக்கப்படி பெருமாளை சேவிச்சுண்டு கூடவே ஜோதிடம் படிண்ணார். நேக்கு இஷ்டமே இல்லே என்றான்.

“நேக்கு இஷ்டமிருக்கு என்றாள் காயத்ரி.

“என்ன சொல்றேள். ஜோசியத்தை சொல்றேளா? வேற ஏதாவது சொல்றேளா?”  என்றான் ரகு.

அவள் காபி கொடுக்கும் போது சங்கோஜத்துடன் அவளை பார்க்காத மாதிரிப் பார்க்கும் ரகுவை கவனித்து வைத்திருந்தாள் காயத்ரி.

அவன் புரிந்துகொண்டதை உணர்ந்து நாணி “ரெண்டையுமே என்றாள்.

தெளிவான அவளது பதிலால் அரண்டு போன ரகு “ இத்த.. இத எப்டி ஒத்துப்பா?என தடுமாறினான்.

“உங்காத்துல எப்படி மொதல்ல சொல்லுங்கோ என்றாள் காயத்ரி.

“உன்னை மாதிரி பெண் கிடைத்தால் கட்டாயம் ஒத்துப்பா என்றான்.

“ஆனா நரேஷுக்கு உன்ன கேட்டதுக்கு உங்கப்பா முடியதுன்னுட்டார்னு அம்மா சொல்லிண்டிருந்தாளே என்றான் ரகு.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், அப்பாவோட 2 வது அக்கா அவளுக்கு இஷ்டமானவனை பண்ணிவைக்கலேன்னு காவிரியில விழுந்துட்டா. அதனால அவருக்கு  என் விஷயத்துல பயமுண்டு. நான் அம்மாவிடம் பேசி அவரண்ட சம்மதம் வாங்கிக்கறேன். நீங்க ஜோஸ்யத்த முழுசா படியுங்க சந்தேகமிருந்தால் என்னிடம் கூட கேட்கலாம் என்றாள் காயத்ரி.

“உனக்கு ஜோசியமும் தெரியுமா! என  ஆச்சர்யமுற்றான் ரகு.

24 வருஷமா அப்பா ஜோசியம் சொல்றத கேட்டுண்டிருக்கிறேனே. பொழுது போக வேண்டி அப்பா வைச்சிருக்கிற புஸ்தகங்கள படிச்சு தெரிஞ்சுண்டிருக்கேன். அது மட்டுமில்ல நீங்க அப்பாவண்ட கொடுத்த உங்கள் ஜாதகத்த என்னோடதோட பொருத்தமும் பார்த்து வச்சிருக்கேன். உங்களுக்கு சம்மதம் தானே? என்றாள் காயத்ரி.

சற்றே ஒடிசலான தேகத்துடன் பளீரென்ற அவளது வெண்மை நிற வனப்பை பார்த்து எச்சிலை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டு “ சம்மதம் என்றான் ரகு.

கோவில் மணி ஒலித்தது.

சனிப்பெயர்ச்சிக்கு இன்னும் 2 மாதங்கள் மீதமிருந்தது.


ஆக்கம் 

பழனியப்பன் 

------------------------------------------------------------

பின் குறிப்பு:
Google லில் தேடும்போது தலைப்பைப் பார்த்து எனது வலைப்பூவிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் நான் எழுதிய கதை இது (மண்டபத்துல யாரும் எழுதித்தரவில்லை). சக பதிவர்கள் இதை காப்பி செய்து தங்கள் கதை என உரிமை கோராமல் அவரவர் வலைப்பூக்களின் உள்ளடக்கத்திற்கு தகுந்தார்போல் முயற்சிக்கலாம். இக்கதை எழுத சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி? என்ற சிறுகதை உந்துதலாக இருந்ததை கூற விரும்புகிறேன்.
----------------------------------------------------------


படித்துப் பயனடையுங்கள்.

(இதே இணைய தளத்தில் கிடைக்கும் ஜோதிட மென்பொருள்  மிகச்சிறப்பான ஒரு இலவச மென்பொருளாகும். என் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது. ஒரே குறை அது ஆங்கிலத்தில் இருப்பதுதான். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி ஆராயலாம்.)

தமிழில் இது போன்ற தரமான மென்நூல் எதுவும் இணையத்தில் கிடைக்கவில்லை.எனினும்  அடிப்படை ஜோதிடத்தை பெரும்பாலான ஜோதிட வலைப்பூக்களும், இணைய தளங்களும் வழங்குகின்றன. நடைபாதை கடைகளில் கிடைக்கும் "குடும்ப ஜோதிடம்" எனும் புத்தகம். துவக்க நிலை ஆர்வலர்களுக்குப பயன்படும்.

மறவாதீர்கள் இவை அடிப்படைகள் மட்டுமே. விருப்பத்துடன் கற்றுக்கொண்டு ஜாதக அலசல்களை துவங்குங்கள். மேலும் பல ஜோதிட நூல்கள், எனது வலைப்பூ போன்ற எண்ணற்ற வலைப்பூக்களில் ஜோதிடர்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகளை படித்து வாருங்கள். ஜாதக அலசல்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் 5 ஆண்டுகளில் ஓரளவு ஜோதிடத்தில் தேர்ந்து விட முடியும்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

1 comment:

  1. எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள். ஜோதிடம் பற்றி எனக்கு உயர்ந்த அபிப்பிராயம் உண்டு. ஆனால், சரியான ஜோதிடரைக் கண்டுகொள்வது எப்படி என்பது மட்டும் தெரிவதில்லை. கூடுமானவரை ஜோதிடம் பற்றி அரும் கட்டுரைகளை அவ்வப்பொழுது படிப்பேன். சில விஷயங்கள் புரியும். சில புரியாது.தங்கள் பதிவுகளை இன்றுதான் பார்க்கிறேன். எஞ்சியவற்றையும் படிக்க முயல்கிறேன். நன்றி. - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    http://ChellappaTamilDiary.blogspot.com

    ReplyDelete