Friday 21 October 2016

செவித்திறன்

மருத்துவ ஜோதிடம் - பகுதி1
ஜோதிடத்தில் பல வகைகள்.

நிமித்தம்
சகுனம்
சாமுத்ரிகா லக்ஷணம்
மச்ச சாஸ்திரம்
கௌரி சாஸ்திரம்
கைரேகை
எண் கணிதம் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

இவற்றுள் இயற்கை & அரசியல் நிகழ்வுகளை கணித்தல், மருத்துவ ஜோதிட முறைகள் முக்கியமானவை.

இப்பதிவில் நாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவ ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

மருத்துவ ஜோதிட முறை பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானது. ஒருவரது உடலில் என்ன வகையான நோய் ஏற்படும் அது எந்த திசா-புக்தி & கோட்சாரத்தில் ஏற்படும். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.

பெற்றோரின் சர்க்கரை வியாதி தனக்கு வர வாய்ப்புள்ளதை அறிந்து உணவுக்கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலும் அதை தள்ளிப்போட தவிர்க்க முயற்சி செய்வது போலத்தான் இதுவும்.

பொதுவாக சூரிய கிரகணங்கள் பூமியில் அதிகமாக விழும் உத்ராயணத்தில் பிறந்தவர்கள் சூரிய ஒளி குறைவாக பூமியில் விழும் தக்ஷிணாயனத்தில் பிறந்தவர்களைவிட நல்ல உடல்கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பர். நமது அணியில்தான் இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற ஒல்லிப்பிச்சான்கள். மேற்கிந்திய அணியில் மட்டுமல்ல பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் ஒல்லிப்பிச்சான்களே இல்லை என்பதை அறியவும். அதுபோல் சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.

ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.

கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. சனியின் ஆதிக்க காலங்களான திசா-புக்திகள், கோட்சாங்களில்தான் வியாதியின் வெளிப்பாடு தெரிகிறது. வயதில் மூத்தோர் உடல் ரீதியான சிரமங்களையும் வியாதிகளையும் கொண்டிருப்பதால்தான் அவர்களை சனியின் அம்சங்களாக குறிப்பிடுகிறோம். ராகு நோயின் தீவிரத்தையும் குரு நோயிலிருந்து விடுபடுவதையும் குறிப்பிடுகிறது.

ராசிக்கட்டத்தில் சர ராசிகள் உடலையும், ஸ்திர ராசிகள் உயிரையும், உபய ராசிகள் ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 



ஜாதகத்தில் இரண்டாம் பாவமும் கிரகங்களில் புதனும், ராகுவும் காதுகளை குறிப்பிடுகின்றன. மேற்கண்ட ஜாதகத்தில் புதனின் உச்ச ராசியான கன்னியில் ராகு அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில் மாந்தி அமைந்து இரண்டாம் வீட்டிற்குரிய சுக்கிரன் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியுடன் இணைந்து தன் 2ஆம் வீட்டிற்கு 8ல் அமர்ந்துள்ளார். இத்தகைய அமைப்பு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் காரக கிரகமும் லக்னாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பாதிப்பு குணமடையும் வாய்ப்பும் உள்ளது. லக்னாதிபதிக்கு உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டிக்காக்கும் சக்தி உண்டு என்பது முக்கியமாக அறிய வேண்டிய ஒன்று. 

ஜாதகருக்கு 1996 பிற்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

செவிக்கு உரிய பாவமான இரண்டாம் பாவாதிபதி சுக்கிரனின் திசையில் செவித்திரனுக்கு காரக கிரகமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்துவிட்ட பிணி காரகனும் வியாதியை குறிப்பிடும் பாவமான ஆறாம் பாவாதிபதியுமான  சனியின் புக்தியில் லக்னத்திற்கு பாதகாதிபதியும் அஷ்டமாதிபதியான அறுவை சிகிச்சை காரகன் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் அந்தரத்தில் ஜாதகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இங்கு குரு லக்னத்திற்கு பாதகாதிபதியாகி லக்னாதிபதி புதனுக்கு 12 ல் மறைவு பெற்று கேந்திரத்தில் அமர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டு தோஷத்தை கொடுத்தாலும் வியாதியிலிருந்து குணமடைவதற்கு காரகத்துவம் பெற்றதால் குணமடையவும் வைத்துவிட்டார். அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சைக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் அறுவை சிகிச்சை குரு அந்தரத்தில் நடந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. லக்னாதிபதியின் வீட்டில் அமரும் கிரகம் தோஷத்தை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் லக்னாதிபதியின் பணியையும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதியாகும்.

சனி புக்தி துவங்கிய 1993 பிற்பகுதி முதல் ஜாதகர் செவித்திரனால் பாதிக்கப்பட்டிருந்தார். சனி வியாதியை குறிப்பிடும் ஆறாம் பாவாதிபதி மட்டுமல்ல, வியாதி குணமடைவதை குறிக்கும் ஐந்தாம் பாவத்திற்கும் அதிபதி ஆவதால் குணமடையவும் வைத்தார். நீதிமான் அல்லவா தனது பணியை இரு வகையிலும் செவ்வனே செய்துள்ளார். அது மட்டுமல்ல இரு பாவங்களுக்கு அதிபதியாகும் ஒரு கிரகம் அதன் திசா - புக்தி காலங்களில் இரு பாவ பலன்களையும் கலந்து வழங்காது. முதலில் ஒரு பாவ பலனையும் பிறகு மற்றொரு பாவத்தின் பலனையும் தனித்தனியாகவே வழங்கும். இது பற்றிய எனது பதிவை கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம்

.கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ் 

ஆராய்ச்சி அன்பர்களுக்கு

ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் இணைந்து இரண்டிற்கு எட்டில் மறைந்துள்ள அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சை காரகனுமான செவ்வாயின் திசை  சென்ற மாதம் (செப்டம்பர்-2016) முதல் துவங்கியுள்ளது. தற்போது ஜாதகர் செவித்திரனில் சில சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாதிகளுக்கு ஜோதிட பரிகாரமாக
குறிப்பிட்ட வியாதிக்கான காரக கிரகம் மற்றும் பாவாதிபதி கிரகங்களுக்கான அதிதேவதைகளை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மிகுந்த உதவியாக இருக்கும். இந்த வகையில் குறிப்பிடப்படும் கிரகங்களின் அதிர்வலைகள் கிடைக்கும் திருக்கோவில்களுக்கு  சென்று அவற்றை பெறுவதும் உதவிகரமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட வியாதியை அதிகப்படுத்தும் காரணிகளை தவிர்த்து குணப்படுத்தும் காரணிகளை நோக்கி நாம் உணவு, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் என்ற வகையில் சென்றால் வியாதியிலிருந்து விடுபடவும் வியாதியின் தீவிரத்தை குறைக்கவும் அவை உதவும். 

"அம்மா"வின் ஜாதகத்தை அலசி ஆராயும்படி அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஜோதிடரின் முதுகை பிராண்டிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு,

அடியேன் சிறை செல்ல தயாரில்லை என்பதை அறியவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
அலை பேசி எண்:7871244501.

4 comments:

  1. டியர் சார்
    வணக்கம் .
    மருத்துவ ஜோதிடம் - செவித்திறன் குறித்த ஆராய்ச்சி மிக சிறப்பு . மிகவும் நுணுக்கமான முறையில்6/8/12/5 பாவத்தையும் ,நோய்க்கான கிரகசாரம் & நோய் தீவிரமடைவதும் அதிலிருந்து குணமடைய கிரக நிலைகள் பற்றியும் தெளிவுபடுத்தியுளீர்கள் .
    உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் , ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் .
    தற்போது பல பல்கலைக்கழகங்களில் ஜோதிட பாடம் நடந்து வருகிறது என்பதை அறிவீர்கள் . தாங்கள் VISITING PROFESSOR ஆக செல்வதற்கு முயற்சி செய்யுங்கள் . உச்சம் பெற்ற புதன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர் . வாழ்த்துக்கள் .
    ஆரய்ச்சிகள் தொடரட்டும் ..........
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  2. ஐயா உங்கள் பதிவுகள் அருமை.ஐயா நான் பிறந்த நாள் முதல் இன்று வரை மிகவும் கஷ்ட படுகிறேன்.என் வாழ்வில் அனைத்தும் ஏமாற்றம் மட்டும்மே.அடுக்கு அடுக்காக துன்பம் துயரம்.வாழ்க்கை நரகமாகி விட்டது.எனது படிப்பும் பாதியில் நின்று விட்டது.தொழில்,சரியான வேலையும்,திருமணமும் எதுவும் அமய வில்லை.எனது வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமா? எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.பெயர் சுரேஷ். பி.ஊர்: கருர்.நேரம் 2:00am தேதி:01:08:1985.

    ReplyDelete
  3. தெளிவாக உள்ளது சார் உங்களுடைய ஜோதிட அலசல்.

    ReplyDelete
  4. இலவச பலன் ஒரு கேள்விக்கு என்று ஆரம்பித்து பலன் கூற இயலுமா?

    ReplyDelete