Friday, 17 January 2020

நாடி ஜோதிட முறையில் தொழில்.


இன்றைக்கு ஒருவர் வாழ்வாதாரத்திற்கு ஜாதக அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது நலம். தனது தொழில் கர்மா என்னவென்று தெரியாமல் பல்வேறு துறைகளில் நுழைந்து பிறகு ஒரு துறையில் நிலை பெறுவது என்பது பல காலம் பிடிக்கும். அந்த சிரமத்தை குறைப்பதற்கு ஜாதகம் உதவுகிறது. இதனால் ஒருவர் தனது தொழில் சார்ந்த வகையில் விரைவாக முன்னேற வாய்ப்புண்டு. இன்றைய பதிவில் பிருகு நாடி அடிப்படையில் தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.

பிருகு நாடி முறையில் ஜீவனத்திற்கு சனியை முதன்மையாகக்கொண்டு ஜீவனம் தொடர்பான விஷயங்கள் ஆராயப்படுகிறது. பிருகு நாடி முறையில் ஒரு கிரகத்திற்கு 1,5,9 ல் நிற்கும் கிரகங்கள் முதல் தர கிரகச்சேர்க்கையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்ததாக இரண்டாம் தர கிரகச்சேர்க்கையாக ஒரு கிரகத்திற்கு 3,7,11 ல் நிற்கும் கிரகங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூன்றாவதாக ஒரு கிரகத்திற்கு 2,12 ல் நிற்கும் கிரகங்கள் கிரக சேர்க்கையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்று ஒருவரது தொழிலை ஆராயலாம்.

முதலாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.  

கன்னி லக்ன ஜாதகத்தில் சனி சுக்கிரனோடு கூடி ரிஷபத்தில் நிற்கிறது. சனிக்கு 9 ல் ராகுவோடு கூடி சந்திரன் நிற்கிறது. சனிக்கு 5ல் கிரகம் ஏதும் இல்லை. சனியோடு சுக்கிரன் கூடியுள்ளதால் ஜாதகர் திரைத்துறையில் சம்பாதிக்கிறார். ராகுவோடு சந்திரன் கூடி சனிக்கு 9 ல் நிற்பதால் ஜாதகர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் நெகிழிக்குடுவைகள் (Plastic bottles) உற்பத்தி நிறுவனம் நடத்தி வந்தார். ராகு இயற்கை அல்லாத செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சந்திரன் நீரையும் குறிக்கும் காரக கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கு 3 ல் நிற்கும் கிரகங்களை 2 ம் தர இணைவாக எடுத்துக்கொள்ளலாம் என்றபடி ஜல ராசியில் கடகத்தில் உள்ள கேது, ராகு போன்றே செயற்கை பொருள்களையும் செவ்வாய் உஷ்ணத்தில் செய்யப்படும் பொருளையும் புதன் விற்பனையையும் (புதன் – வியாபாரம்) குறிக்கிறது. சனிக்கு 2 ல் சூரியனை மூன்றாம் தர இணைவாக எடுத்துக்கொள்ளலாம். சனிக்கு 2 ல் உள்ள சூரியன் சுய தொழில், நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கிறது.

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் சனி சூரியன் புதனோடு இணைந்து குரு வீட்டில் குருவின் பார்வையில் நிற்கிறது. சனிக்கு 5 ல் குரு மட்டுமே உள்ளார். ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக இருக்கிறார். சனியோடு சூரியன் அரசுப்பணியையும் புதன்  கல்வித்துறையையும் குறிக்கிறது. சனிக்கு திரிகோணத்தில் உச்சமான குரு போதனையை குறிக்கிறது. சனிக்கு 3 ல் சுக்கிரன் நிற்கிறது. 7 , 11 ல் எந்த கிரகமும் இல்லை. எனவே இதை 2 ம் தர சனி-சுக்கிர இணைவாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் ஜாதகி வாகன பயணத்தின் மூலம் பணிக்கு சென்று வருகிறார் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. (சுக்கிரன் – வாகனம்).


சனிக்கு 12 ல் எந்த கிரகமும் இல்லாத சூழலில் 2 ல் ராகுவோடு சந்திரன் இருக்கிறது. இதனால் ஜாதகி சில காலம் தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார்.  வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக ராகு குறிக்கும் வளைகுடாவும் சென்று வந்தார். ஜாதகி ஆங்கில மொழி ஆசிரியை. ராகு ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளை குறிக்கும். ராகுவும் – சந்திரனும் வெளிநாட்டையும் சனி நிற்கும் மீன ராசி வெளிநாட்டையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

கும்ப லக்ன ஜாதகத்தில் சனிக்கு 5 ல் ராகு நிற்கிறார். சனியோடும் சனிக்கு 9 லும் எந்த கிரகமும் இல்லை. இதனால் ஜாதகர் ராகு குறிக்கும் ஏற்றுமதித்துறையில் பணி புரிகிறார். சனியும் ராகுவும் நீர் ராசியில் நிற்பதால் ஜாதகர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சனிக்கு 3 ல் கிரகம் இல்லை.  7 ல் உள்ள உச்ச சந்திரனும் 11 ல் புதன், கேது, சூரியன் ஆகியார் உள்ளனர். இவற்றை இரண்டாம் நிலை தொடர்பாக எடுத்துக்கொள்ளலாம். சனிக்கு 7 ல் உச்ச சந்திரன் உள்ளதால் ஜவுளி ஏற்றுமதி துறையில் ஜாதகர் உள்ளார். (சந்திரன் – ஜவுளித்துறை). சனிக்கு 11 ல் உள்ள கேது நூல், நெசவு மற்றும் பின்னலை குறிக்கும் காரக கிரகமாகும். புதன் வணிக தொடர்பை குறிக்கும் காரக கிரகமாகும். சூரியன் தலைமைப்பண்பை குறிக்கும் காரக கிரகமாகும். இதனால் ஜாதகர் வெளி நாடு ஒன்றில் ஒரு ஜவுளி  ஏற்றுமதி நிறுவனம் சார்பில் வணிக தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

4 ஆவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

சனி வக்கிர நிலையில் துலாத்தில் உள்ளார். சனி வக்கிரமடைந்து இங்கு பின்னோக்கிச் செல்கிறது. இதனால் சனி கன்னியில் உள்ளதாக கருத வேண்டும். இதனால் கன்னியில் உள்ள சனிக்கு 5 மற்றும் 9 ல் எந்தக்கிரகமும் இல்லை எனக்கருத வேண்டும். 2 ஆம் நிலை இணைவாக கன்னியில் உள்ள சனிக்கு 3 ல் குரு உள்ளார். 7 ல் சுக்கிரனும் செவ்வாயும் உள்ளனர். கன்னிச்சனிக்கு 11 ல் கடகத்தில் எந்த கிரகமும் இல்லை. இதனால் குரு குறிக்கும் கோவில் அர்ச்சகராக உள்ளார். விருச்சிக ராசி கால புருஷனுக்கு 8 ஆவது ராசி என்பதால் அங்கு குரு அமர்ந்தது மறைபொருளை அதாவது கடவுளை ஆராதிக்கும் பணி என எடுத்துக்கொள்ளலாம். மீனத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் செவ்வாய் குறிப்பிடும் வீடு மற்றும் கட்டுமானப்பணி நிறுவனங்களில் ஜாதகர் பணியாற்றுகிறார்.  நீர் ராசிகளான விருசிகத்திலும் மீனத்திலும் சனியுடனான கிரக இணைவுகள் அமைந்ததால் பணி தொடர்பாக சில ஆண்டுகள் வெளிநாட்டிலும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு ஜாதக அமைவிற்கு தக்கவாறு தொழிலை தேர்ந்தெடுத்துவிட்டால் சரியான தொழிலை கண்டுபிடிக்கும்வரை தடுமாறுவது தவிர்க்கப்படும். இப்பதிவில் நாடி அடிப்படையில் தொழிலை அலசினோம் அடுத்த பதிவில் கிரகங்கள்  அடிப்படையில் நமக்கான தொழிலை இனங்காண்பது எப்படி என காண்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501.

3 comments: