Thursday, 23 January 2020

கிரகங்கள் தரும் தொழில்கள்



சென்ற பதிவில் நாடி ஜோதிட முறையில் தொழிலை தேர்ந்தெடுப்பது பற்றி ஆராய்ந்தோம். இப்பதிவில் ஜாதகத்தில் கிரகங்களின் அடிப்படையில் எப்படி ஒருவர் தனக்கான தொழிலை தேர்வு செய்வது எனக்காண்போம். ஆண்டு இறுதித்தேர்வு நெருங்கி வரும் சூழலில் ஒருவர் ஜீவனதிற்காண கல்வியை தேர்ந்தெடுக்கவும், வேலையை, தொழிலை தேர்ந்தெடுக்கவும் இப்பதிவுகள் உதவும் என்பது திண்ணம்.
  
கீழே காண்பது ஒரு பெண்மணியின் ஜாதகம்.

கன்னி லக்னம் புதனின் லக்னம். புதன் பதிவுகள், ஆவணங்கள் போன்றவற்றைக் குறிக்கும் காரக கிரகமாகும். லக்னாதிபதி புதன் 5, 6 க்குரிய சனியின் வீட்டில் பரிவர்த்தனையாகி நிற்கிறார். 6 ஆமதிபதியின் வீட்டில் புதன் நிற்பதால் ஜாதகி வேலைக்குச் செல்ல வேண்டும். சூரியனோடு லக்னாதிபதி புதன் இணைவதால் ஜாதகர் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளவேண்டும். சூரியனோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகிக்கு வருமானம் அரசு வகையில் வரவேண்டும். சூரியன் 5 ஆமிடத்தில் நிற்பதால் அரசு வகை ஆதாயங்களை ஜாதகி அடைய வேண்டும். பரிவர்த்தனைக்குப்பின் சனி சூரியனோடு இணைவதால் ஜாதகரின் ஜீவனம் அரசு வகையை சார்ந்து அமையும். லக்னத்தில் புதன் பரிவர்த்தனைக்குப்பின்  உச்சமாவதால் புதன் சார்ந்த விஷயங்களுக்காகவே ஜாதகி இயங்குவார். செவ்வாய் கன்னியில் அமைவது பூமி வகைகளோடு ஜாதகர் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது. 

சந்திரன் பரிவர்த்தனைக்குப்பின் உச்ச புதனோடு இணைவதால் ஜாதகி கல்வியில் சிறந்து விளங்கி தனது ஜீவன வகை எண்ணங்களை அடைவார். வருமான ஸ்தானமான 2 ஆமிடத்தில் தன காரகர் குரு ராகுவின் சுவாதியில் நின்று கர்ம ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் குருவின் புனர்பூசத்தில்  நிற்கும் ராகுவோடு சார பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். 1௦ ஆவது பாவமும் புதனின் வீடாவதால் ஜாதகிக்கு வருமானம் புதன் சார்ந்த துறைகளில் இருந்து வரவேண்டும். ராகு  1௦ ஆமிடத்தில் தனித்து நிற்பதால் புதனின் வேலையைச் செய்ய வேண்டும். சார பரிவர்தனைக்குப்பின் புதனைப்போன்று செயல்பட வேண்டிய ராகு 2 ஆமிடத்திற்கு வருவதால் ஜாதகி புதனின் காரக தொழிலைச் செய்து  பொருளீட்ட வேண்டும் என்பது கர்மாவாகும்.   ஜாதகி அரசுத்துறையில் பத்திர பதிவுத்துறையில் தலைமைப்  பொறுப்பில் பணிபுரிகிறார்.

இரண்டாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.
கடக லக்னத்தில் கண் பார்வையை குறிப்பிடும் காரக கிரகமான சூரியன்(வலது கண்) நிற்கிறது. 2 ஆவது பாவம் வலது கண்ணையும் 12 ஆமிடம் இடது கண்ணையும் குறிப்பிடும் பாவங்களாகும். இரண்டாவது பாவத்தில் 12 ஆவது பாவாதிபதி புதன் நிற்கிறார். புதன் நரம்புகளை குறிக்கும் காரக கிரகமாகும். 1௦ ஆமதிபதி செவ்வாய் 2 ஆமிடத்தில் நிற்கிறார். செவ்வாய் அறுவைச் சிகிச்சையை குறிப்பிடும் காரக கிரகமாகும். கண் பார்வையில் ஏற்படும் குறைபாடுகளை குறிப்பிடும் கிரகமான பாதகாதிபதி சுக்கிரன்  2 ஆமிடத்தில் நிற்கிறார். சுக்கிரனின் நட்சத்திரம் பூராடத்தில் 6 ஆமிடத்தில் ஜீவன காரகன் சனி வக்கிர நிலையில் நிற்கிறார். இது ஜீவன வகையில் தெளிவான நிலைப்பாட்டில் தனக்கான துறையை ஜாதகர் தெரிவு செய்வதை குறிக்கிறது. 

6 ஆமதிபதி குரு 12 ல் மறைந்து யோகம் தரும் நிலையில் அமைந்து சனியை பார்த்து லக்னாதிபதி சந்திரனையும் பார்ப்பது ஜீவன வகை சிறப்பை குறிப்பிடுகிறது.  கண் பார்வையை குறிப்பிடும் மற்றொரு காரக கிரகமான லக்னாதிபதி சந்திரன் (இடது கண்) லக்னத்திற்கு 4ல் திக்பலத்தில் நின்று தொழில் பாவமான 1௦ ஆமிடத்தை பார்வை செய்கிறார். வருமான ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்கிரனோடு இணைந்து நிற்கும் கேது சிக்கலான நரம்புகளை குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். முக்கியமாக சூரியன், புதன், செவ்வாய், கேது ஆகிய 4 கிரகங்களும் மருத்துவத்துறையை குறிக்கும் காரக கிரகங்களாகும். இதனால் ஜாதகியின் தனவரவு இந்த கிரகங்களை சார்ந்ததாகவே இருக்க வேண்டும். ஜாதகி கண் மருத்துவத்தில் உயர் கல்வி பயின்ற கண்ணொளி மருத்துவர்.  

மூன்றாவது பெண்ணின் ஜாதகம் பின்வருமாறு.

 விருட்சிக ராசியில் நீச நிலை பெற்ற சந்திரனை தொடர்பு ஸ்தானமான 7 ஆம் பாவத்திலிருந்து ராசிக்கு 1௦ ஆமதிபதி சூரியனும் ராசியாதிபதி செவ்வாயும் சுக்கிரனுடன் பரிவர்த்தனையடையும் வக்கிர புதனும்  பார்க்கிறார்கள். நீச சந்திரனை அதன் சப்தம கேந்திரத்திலிருந்து வீட்டதிபதி செவ்வாய் பார்ப்பதால் சந்திரனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது.  ராசியுடனும் ராசி அதிபதியுடனும் 1௦ ஆமதிபதி சூரியன் தொடர்புகொள்வதால் ஜாதகியின் கர்மா சூரியன் மற்றும் செவ்வாய் சார்ந்ததாகும். ராசிக்கு 2 ஆமதிபதியும் தன காரகனுமான குரு நீச வக்கிரம் பெற்று சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நின்று சூரியனையும் செவ்வாயையும் பார்ப்பது ஜாதகிக்கு வருமானம் அரசுவகையை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. 

உச்சனும் நீசனும் ஒரு ஜாதகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற விதிப்படி சனியின் அனுஷத்தில் அமைந்த சந்திரனின் சார நாதன் சனி சூரியனின் வீட்டில் அமைவதால் சந்திரன் ஜாதகிக்கு அரசு வகை வேலை சிந்தனையை ஏற்படுத்துவார் எனலாம். ராசிக்கு 1௦ ல் சூரியனின் வீட்டில் சனி அமைவதே அரசு வகை வேலை சிந்தனையை ஏற்படுத்தும் என்பதோடு சனிக்கு 1௦ ல் சனியின் வீட்டதிபதி சூரியனும் செவ்வாயும் அமைவது சனிக்கு திக்பலத்தை தரும் எனலாம். ஜாதகி, இந்திய காவல்துறையின் உயர் பதவிக்கான IPS தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்தியாவின் முதல் பெண் IPS  ஆனவரும் தனது பணிக்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக தற்போது பாண்டிச்சேரியின் மேதகு ஆளுநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் திருமதி.கிரண் பேடி IPS ஆவார்.

இறுதியாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
துலாம் லக்ன ஜாதகத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியான விருச்சிகமாகும். விருச்சிகம் சாராயம்  காய்ச்சுமிடத்தை நேரடியாகக் குறிப்பிடும் ராசியாகும். வருமான ஸ்தானமான 2 ஆமதிபதி செவ்வாய் மற்றொரு நீர் ராசியான மீனத்தில் நட்பு வீட்டில் நிற்கிறார். ஜீவன காரகன் சனி வக்கிரமடைந்த நிலையில் நீர் ராசியும் தொழிலை குறிப்பிடும் 1௦ ஆமிடத்திற்கு அதிபதியும் முக்கிய நீர் கிரகமுமான உச்ச சந்திரனுடன் லக்னத்திற்கு 8 ல் நின்று 2 ஆமிடத்தை பார்க்கிறார்.  இதனால் ஜாதகர் மதுபானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். சனி, செவ்வாய், சந்திரனை குரு பார்வை செய்தால் ஜாதகர் விஷ முறிவு, மற்றும் திரவ மருந்துகள் சார்ந்த மருத்துவத்துறையில் இருப்பார். இங்கு சனி, செவ்வாய், சந்திரனுக்கு குரு தொடர்பு இல்லாததால் ஜாதகர் மதுபானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கும் நிலைகளை கூர்ந்து ஆராய்ந்தால் ஜாதகர் எந்தத் துறையில் ஈடுபடுவார் என்பதை கண்டுபிடித்துவிட முடியும். பிறகு அத்துறையில் ஜாதகரின் கல்வியையும் அறிவையும் வளர்த்துக்கொள்வது ஜாதகரின் ஜீவனத்திற்கு நலம் பயக்கும்.  இப்பதிவில் கிரகங்கள் தரும் தொழில்களைப் பார்த்த நாம் அடுத்த பதிவில் பாவங்கள் தரும் தொழில்களைப் பற்றி ஆராய்வோம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

2 comments:

  1. அற்புதம் அய்யா

    ReplyDelete
  2. சுய தொழில்? அரசு வேலை? வெளிநாட்டில் வேலை? மகர லக்னம் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் 3ம் பாதம் 2ல் கேது 3ல் குரு 4ல் சனி 5ல் சுக்ரன் 6ல் செவ்வாய் சூரியன் 7ல் புதன் சந்திரன் 8ல் ராகு

    ReplyDelete