Saturday, 29 February 2020

திசா புக்தியும் கோட்சாரமும்.



ஒருவர் தனது வாழ்வில் எவ்விதமான சம்பவங்களை எதிர்கொள்வார் என்பதை அவரது ஜாதகம் தெரிவிக்கும். எப்போது எவ்விதமான சம்பவங்களை எதிர்கொள்வார் என்பதை திசா  புக்திகள் தெரிவிக்கும். இதில் கோட்சாரத்தில் நிகழ்வுகளை நடத்த உரிமை பெற்ற கிரகங்கள் திசா புக்தி கிரகங்களோடு இணைந்து அதில் குறிப்பிட்ட பாவங்களும் தொடர்பாகும்போதுதான் சம்பவங்கள் நடக்கின்றன. திசா புக்தி தொடர்பில்லாமல் குறிப்பிட்ட பாவத்தில் சம்பவங்களை நடத்த உரிமை பெற்ற கிரகங்கள் மட்டும் இணைவதால் சம்பவங்கள் நடக்காது. உதாரணமாக கோட்சார குரு 2 & 7 ஆவது பாவத்தோடு தொடர்புகொள்ளும்போது திருமணம் நடக்கவில்லை எனில் குருவோடு திசா-புக்தி கிரகங்களும் பாவங்களும் தொடர்பற்று இருக்கும் என்பதே உண்மையாக இருக்கும். 


கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

குரு மிதுன லக்னத்தில் திக் பலத்தில் உள்ளார். திக்பல குரு 5,7,9 ஆகிய பாவங்களை பார்ப்பதால் ஜாதகிக்கு கண்டிப்பாக திருமண வாழ்வும் புத்திர பாக்யமும் உண்டு எனலாம். பாவச்சக்கரத்தில் கேது 2 ஆம் பாவத்தில் நிற்கிறது. எனவே 2 ஆம் பாவம் கேதுவின் கட்டுப்பாட்டில் வருகிறது.. ஜாதகிக்கு தற்போது ராகு திசையில் கேது புக்தி நடக்கிறது. ஜாதகிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. தற்போது குழந்தைப்பேற்றை எதிர்நோக்கியுள்ளார். இரண்டாம் பாவ பலன் என்றால் வீட்டிற்கு புது நபர் வந்து இணைவதை குறிக்கும். ஒரு பாவத்தில் நின்று திசா  புக்தி நடத்தும் கிரகம் அந்த பாவக பலனை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் தடைகளை குறிக்கும் கேது 2 ஆம் பாவத்தில் நிற்கையில் 2 ஆம் பாவ பலன் தடைபடும்.  கேது மகம் – 1 ல் சுய சாரம் பெற்று நிற்கிறார்.  கேது குருவை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளார். கேதுவிற்கு முன் லக்னத்தில் உள்ள குருவோடு கேது தொடர்புகொண்டாலும் லக்னம் 2 க்கு விரையம் என்ற வகையில் புத்திர பேற்றை தடை செய்யும் அமைப்பாகும். அதே சமயம் புத்திர காரகனை நோக்கி நகரும் கேது புத்திர பாக்கியத்தை தர வேண்டும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளால் கேது குழந்தைப்பேற்றை கொடுப்பாரா? அல்லது தடை செய்வாரா? என்ற குழப்பம் ஜோதிடர்களுக்கு வரும். லக்னத்தில் நிற்கும் குருவிற்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் வக்ர சனியின் பார்வை கிடைக்கிறது. சனி வக்கிரமாகிவிட்டதால் அதன் திக்பலம் அடிபடுகிறது. அதே சமயம் பாதக ஸ்தானத்தில் நின்று புத்திர காரகன் குருவை பார்க்கும் சனி குரு கொடுக்கும் புத்திரப்பேற்றை கண்டிப்பாக தடைசெய்வார். ஏனெனில் இங்கு சனி மந்தன் என்பதையும் மீறி  பாதக ஸ்தானத்தில் நிற்பதால் பாதக வலுவே கூடுதலாக இருக்கும். இங்கு குருவும் பாதகாதிபதி என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. ஆனால் பாதகாதிபதி சுபர்கள் திரிகோணம் ஏறினால் பாதிகாதிபத்திய தோஷம் அடிபடும் என்ற விதி ஒருபுறமிருக்க குரு திக்பலம் பெறுவது அதனினும் முதன்மையானது என்பதால் இங்கு குருவிற்கு பாதகாதிபத்திய தோஷம் கிடையாது. ஆனால் பாதகத்தில் இருந்து பார்க்கும் சனியினால் தடை உண்டு.


இப்போது கேள்விக்கு வருவோம். கேது புக்தியில் புத்திரம் அமையுமா? என்பதே கேள்வி. இப்போது நான் ஜாதகத்தை ஆய்வு செய்த நாளின் கோட்சாரத்தை காண்போம்.

கோட்சார லக்னம் கடகமாக வருவது நாம் ஆராயும் விஷயம் ஜனன ஜாதகத்தில் கடகத்தோடு தொடர்புடையது என்பதை குறிக்கிறது.


ராகு ஜனன ஜாதகத்தின் 2 ஆம் பாவமான கடகத்தை தாண்டி மிதுனத்தில் உள்ளார். ஜனன லக்னப்பாகை 26 ஆகும். தற்போது ராகு கோட்சாரத்தில் ஜனன லக்னப்பாகையை கடந்து 11 ஆம் பாகையில் உள்ளார். எனவே தற்போது கோட்சார  ராகு-கேதுக்கள் ஜனன 2 ஆம் பாவத்தையும் லக்னத்தையும் தாண்டி ஜனன லக்னத்திற்கு 6 - 12 ல் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சர்ப்பக்கிரகங்கள் இப்படி  6-12 ஆக அமைவது ஜாதகரை ஆசீர்வாதிக்கும் அமைப்பாகும். 2 ஆம் பாவத்திற்கு தற்போது ராகு-கேதுக்களால் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்ததாக புக்தி நாதன் கேதுவிற்கு புத்திரத்தை கொடுக்கும் தகுதி உள்ளதா என்பதை கோட்சாரத்தில் கவனிப்போம். கேது தற்போது கோட்சார குருவோடு இணைந்துள்ளதால் குருவின் சக்தியை தனதாக்கிக்கொண்டு செயல்படும். எனவே தற்போது கேது குருவின் தன்மையோடு செயல்பட்டு ஜாதகிக்கு புத்திரப்பேற்றை கொடுக்க தகுதி உள்ளதாகிறது. ஆனால் இங்கு ஜனன ஜாதகத்தில் பாதக ஸ்தானத்தில் அமைந்து குருவின் காரகங்களை பாதிக்கும் அமைப்பில் அமைந்த சனி தற்போது அந்த பாதிக்கும் அமைப்பில் இருந்து விலகிவிட்டாரா என்பதை கவனிக்காமல் பலன் சொல்லிவிடக் கூடாது. தற்போது சனி கோட்சாரத்தில் குரு மற்றும் கேது தொடர்பிலிருந்து விலகி மகரத்திற்கு சென்றுவிட்டது. எனவே சனியால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது விலகிவிட்டது என எடுத்துக்கொள்ளலாம்.


தற்போது கேது தனது புக்தி முடிவிற்குள் இரண்டாமிட பலனான வீட்டிற்கு குழந்தையை கொண்டு வந்து சேர்க்குமா என்பதை காண்போம். ராகு திசையில் கேது புக்தி தோராயமாக ஒரு வருடம்தான். சரியாகச் சொல்வதானால் கேது புக்தி ஜாதகிக்கு இந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மத்தியில் முடிகிறது. தற்போது பிப்ரவரி. எனவே தற்போது ஜாதகி கருத்தரித்தால்தான் புக்தி முடிவிற்குள் புத்திரம் அமையும். ஜனன மற்றும் கோட்சார குரு வக்கிரமில்லை. எனவே ஜாதகி தானாக புதிரப்பேற்றை தள்ளிப்போட வழியில்லை. தடைகள் விலகிய நிலையில் தற்போது புக்தி நாதன் கேதுவும் 2 ஆம் அதிபதி சந்திரனும் குருவை சேர்ந்துள்ளதாலும் ஜாதகி தற்போது கருவுற்றிருக்க வேண்டும் அல்லது கருவுறும் நிலையில் இருக்க வேண்டும். காரகன் குருவும் 2 ஆம் அதிபதி சந்திரனும் 5 ஆம் அதிபதி சுக்கிரனின் சாரத்தில் நின்று சுக்கிரன் கோட்சாரத்தில் உச்சமாகியுள்ளதால் ஜாதகி கருவுற்றுள்ளார். அது பெண்குழந்தை என்பது தெரிகிறது.


மேற்கண்ட கர்ப்ப நிச்சயத்தை உறுதி செய்ய ஜாமக்கோள் பிரசன்னத்தை பயன்படுத்தலாம்.

 .
உதயம் குருவின் தனுசு வீடாகிறது. உதயாதிபதி குரு கடகத்தில் உச்சமடைகிறார். இதனால் கேள்வியாளர் பலனடைவார். கவிப்பு லாபத்தில் அமைவது சிறப்பு. உதயாதிபதி கிரகமும் உதயதிலிருக்கும் கிரகமும் ஜாதகரின் நிலையை தெளிவாகச் சொல்லும். உச்ச கிரகமான குருவே தற்போது கேள்வியாக (குழந்தை விஷயமாக)  ஜாதகரை இயக்குகிறது. இங்கு உதயாதிபதி ஜனன ஜாதகத்தில் கேள்வியின் பாவமான கடகத்திலேயே உச்சமாகி அந்த பாதிபதி சந்திரனை பார்ப்பது கேள்வியின் நோக்கத்தை தெளிவாக உணர்த்துகிறது.  உதயம் 2 ஆம் பாவமான மகரத்தை  நோக்கி நகருகிறது. மகரத்திற்கு உச்ச ஜாம குருவின் பார்வை உள்ளதால் ஜாதகிக்கு குழந்தைப்பேறு கிட்ட உள்ளது. முக்கியமாக கர்ப்ப நிச்சயத்திற்கு மட்டும் உதயத்தில் பாம்பு இருப்பது சிறப்பான அமைப்பாகும். இது ஜாதகி தற்போதே கற்பமுற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ஜாதகத்தை ஆய்வு செய்துவிட்டு ஜாதகி தற்போது கற்பமுற்றிருக்க வேண்டும் என அலைபேசியில் கூறினேன். எதிர்முனையில் அன்றே அதை உறுதி செய்து தகவல் தெரிவித்தனர்.

ஜாதகத்தை திசாபுக்தி ரீதியாக அலசும்போது கோட்சார ஜாதகத்தை துணைகொண்டு பலன்கூற தெளிவு கிடைக்கும் என்றாலும் அதை உறுதி செய்ய ஜாமக்கோள் ஆருடத்தையும் பயன்படுத்துவது ஜோதிடர்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் நிச்சயம் பெற்றுத்தரும்.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,


பழனியப்பன்.
கைபேசி: 8300124501

No comments:

Post a Comment