Friday, 21 February 2020

வைரச் சுரங்கத்தில் சில வானம்பாடிகள்!


இந்து தர்மம் கோலோச்சிய அன்றைய மன்னர்கள்  காலத்தில் மனிதர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாழ்வியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும், மந்திர, தந்திர ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியுள்ளனர். உளவியல் ரீதியாக மதிப்பு வாய்ந்த பொருட்கள் சுபிட்சத்திற்கு அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் அவற்றை வசதி படைத்தோர் தேடி சேகரித்து தங்களிடம் மதிப்பு வாய்ந்த பொருட்கள் இருப்பதாக காட்டிக்கொள்வதன் மூலம் தங்களையும் மதிப்புமிக்கவர்களாக மற்றையோர் கருத முடியும் என்று எண்ணினர். சாமான்ய மனிதன் தங்கத்தில் மன நிறைவை அடைகிறான்.  சற்று மேம்பட்ட மனிதன் ரத்தினங்களில் மன  நிறைவை அடைகிறான் என்றால் அதனினும் மேம்பட்டவர்கள் விசித்திர பொருட்களில் தங்கள் மன நிறைவை அடைகிறார்கள். இரத்தின மணிகளில் பெருமிதம்கொள்வோர் இன்று அதிகம். காரணம் நல்ல ரத்தினங்கள் அபூர்வமானவை. இந்த அபூர்வ ரத்தினங்களை தனதாக்கிக்கொண்டு தங்களையும் அபூர்வ பிறவிகளாக கருதிக்கொள்பவர்களுக்காகவே ஒரு பெரிய கூட்டம் சுரங்கங்களில் ரத்தினங்களை தேடிக்கொண்டிருக்கிறது. இப்பதிவில் நாம் காணவிருப்பது இத்தகையோருக்கான ஜாதக நிலையைத்தான்.


நூதனப்பொருள் என்ற வகையில் ரத்தினங்களுக்குரிய காரகன் கிரகங்களாக இருப்பவை ராகுவும் கேதுவுமாகும். ரத்தினத்தொழிலில் கோலோச்ச ராகு-கேதுக்களோடு வியாபரக்கிரகம் புதனும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்களால் லாபங்களை அடைய வேண்டும் என்றால் அதற்கு  செவ்வாயில் கருணை அவசியம் தேவை. ரத்தினங்களில் சூரியன் மாணிக்கத்தையும், சந்திரன் முத்தையும், செவ்வாய் பவழத்தையும், புதன் மரகதத்தையும், குரு புஷ்பராகத்தையும், சுக்கிரன் வைரத்தையும், சனி நீலத்தையும், ராகு கோமேதகத்தையும், கேது வைடூரியத்தையும் ஆளுகிறது. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜீவன ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் கேது அமைந்திருப்பது ஜாதகர் ரத்தினத்தொழிலில் ஈடுபட முக்கிய காரணமாகிறது. லக்னமே புதனின் லக்னமாக அமைந்துள்ளது சிறப்பு. தன ஸ்தானமான 2 ஆவது பாவத்தில் ஆட்சியில் உள்ள சுக்கிரனோடு பூமி காரகன் செவ்வாய் உள்ளார். இதனால் இவர்  பூமியில் இருந்து எடுக்கப்படும் சுக்கிரன் குறிக்கும் வைர விற்பனையில் பிரதிநிதியாக உள்ளார். லக்னாதிபதி புதன் தலைமைப்பண்பை குறிக்கும் 12 ஆமதிபதியுடன் இணைந்து நீர் ராசியில் இருப்பதால்  ஜாதகர் வெளிநாட்டில் இந்திய வைர வியாபார நிறுவனம் ஒன்றின் தலைமை விற்பனைப்பிரதிநிதியாக பணியாற்றுகிறார். சனி சுக்கிரனின் வீட்டில் ரிஷபத்தில் அமைந்து சனிக்கு 2 ல் கேது இருப்பது ஜாதகரின் தொழில் சூழல் ரத்தினவகை என்பதை உறுதி செய்கிறது.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


லக்னத்திற்கு 2 லிலும் சனிக்கு 2 லும் ரத்திரனங்களுக்குரிய ராகு-கேதுக்கள் நிற்பதால் இவரும் இரத்தினத்தொழிலில் உள்ளார்.  லக்னாதிபதி சூரியன் உச்ச குருவின் விசாகம் -2 ல் நிற்பதால் லக்னாதிபதி நீசபங்கமடைகிறார். ஜீவன காரகன் சனி பகை வீட்டில் அமர்ந்து லக்னாதிபதியை பார்ப்பதால் சில சிரமங்கள் உண்டு எனினும் லக்னாதிபதி உச்சன் சாரம் பெற்று வலுவடைந்ததாலும் ராசியதிபதி ராசிக்கு 7 ல் லக்னத்தில் திக்பலம் பெற்றதாலும் இது ஒருவகையில் யோக ஜாதகமே. புதன் தனது பகை கிரகம் செவ்வாயுடன் இணைந்து பகைவனின்  வீட்டில் விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் புதன் ஆளுமை செய்யும் மரகத இரத்தின வியாபாரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார். காரணம் ஜாதகத்தில் செவ்வாயைவிட அதிக பாகை சென்று செவ்வாயை வென்று வலுவுடன் புதன் இருந்தாலும் உச்சன் சாரம் பெற்ற சூரியனை புதனைவிட வலுவானதாக கருதவேண்டும். இதனால் சூரியன் குறிக்கும் மாணிக்கக்கற்களே ஜாதகருக்கு நீடித்த வருவாயை தருகிறது. புதனுக்குரிய மரகதகற்கள் வியாபாரம் மாணிக்கக்கற்கள் மூலம் கிடைக்கும் வருவாயைவிட அதிகம் என்றாலும் அதில் நீடித்த வருவாய் இல்லை. காரணம் புதனுக்கு விரையத்தில் நீசபங்கம் பெற்று வலுவடைந்த சூரியனின் நிலையே ஆகும்.

மூன்றாவதாக ஒரு ஜாதகம் கீழே.



இந்த ஜாதகருக்கு ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தில் ஜீவன காரகர் சனியுடன் இரத்தின காரக கிரகம் ராகு உள்ளது. இதனால் இந்த ஜாதகரும் இரத்தின தொழிலில் ஈடுபட்டுள்ளார். சிம்ம ராசி தந்தையை குறிக்கும் சூரியனுடைய ராசியாகும். அதில் அமரும் ராகு தந்தையின் தந்தையை (தாத்தாவை) குறிக்கும் கிரகமாகும். ஜாதகரின் தாத்தாவும் பிறகு தந்தையும் செய்த இரத்தின தொழிலையே ஜாதகரும் தொடர்ந்து செய்து வருகிறார். சிம்ம ராசி சூரியனின் ராசி என்பதால் தொழிலில் சக போட்டியாளர்களைவிட தனித்துவமான துணிச்சலான முடிவுகள் எடுத்து ஜாதகர் தனது தொழிலை  நடத்திக்கொண்டிருக்கிறார். மரகதப்பச்சையை குறிக்கும் புதன் 8 ஆவது பாவமான மிதுனத்தில் தன் ஆட்சி வீட்டில் உள்ளார். 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் இருக்கும் சுக்கிரனும் புதனும் தன ஸ்தானமான 2 ஆவது பாவத்தை பார்ப்பதால் குறிப்பாக புதன் ஆட்சி பெற்று பார்ப்பதால் ஜாதகருக்கு தனவரவு புதன் குறிக்கும் மரகதப்பச்சை இரத்தின வகையில் வருகிறது.  

இவரது தாத்தாவும் தந்தையும் இந்தவகை  ரத்தினத்தின வியாபாரதிற்காகவே புகழ்பெற்றதனால் “பச்சைக்கல்” என்பது இவர்களது குடும்பத்திற்கு ஒரு அடைமொழியாகவே இன்றும் தொடர்கிறது.  தன வரவை குறிப்பிடும் 2 ஆவது பாவத்தில் பாதகாதிபதி சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திரன் மூலம்-2 ல் நிற்பதால் நவாம்சத்தில் உச்சமாகிறார். இதனால் பாதகமும் உச்சமாகவே இருக்கும்.  ஜாதகருக்கு கடந்த 1௦ ஆண்டுகளாக நடந்த சந்திர திசையை சமீபத்தில் முடிந்தது. தனுசு ராசிக்கு ஏழரை சனி நடந்துகொண்டிருக்கும்  சூழலில் பாதகாதிபதி திசையில் ஜாதகர் இந்தத் தொழிலில் மிகக்கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். ஜாதகரின் முயற்சிகள் சிறப்பென்றாலும் தனஸ்தானத்தில் நின்ற வலுவான  பாதகாதிபதி திசை இவரது முயற்சிகளை பலனடைய விடாமல் தடுத்துவிட்டது.

நான்காவதாக மற்றொரு ஜாதகம்.


இந்த ஜாதகம் முந்தைய ஜாதகத்தை ஒத்ததாகவே இருக்கிறது. சந்திர ராசிக்கு 2 ஆமிடத்தில் ரத்தினங்களை குறிப்பிடும் கேது நிற்கிறது. 1௦ ஆவது பாவத்தை புதன் 4 ஆவது பாவத்திலிருந்து பார்க்கிறது. 1௦ ஆவது பாவாதிபதி சூரியன், பூமிகாரகனும் லக்னாதிபதியுமான  செவ்வாயுடனும் உச்ச சுக்கிரனுடனும் இணைந்து 5 ஆவது பாவத்தில் நிற்கிறார். செவ்வாயும் சுக்கிரனும் சூரியனால் அஸ்தங்கமாகியுள்ளன. இதனால் இந்த ஜாதகர் 3 ஆவது ஜாதகத்தை ஒத்த அமைப்பை பெற்றிருந்தாலும் முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கிறார். லக்னாதிபதி அஸ்தங்கமானது இந்த ஜாதகருக்கு தனது முயற்சிகளில் வெற்றியடைய போதிய தகுதி இல்லை என்பதை குறிப்பிடுகிறது.   இந்த ஜாதகத்திலும் பாதகாதிபதி சந்திரன் தன ஸ்தானத்தில் இருந்து திசை நடத்திக்கொண்டிருக்கிறார். சந்திரன் மூலம்-1 ல் அமைந்துள்ளதால் 3 ஆவது ஜாதகத்தை போல நவாம்சத்தில் உச்சமடையாமல் மேஷ நவாம்சத்தில் அமைகிறார். இந்த ஜாதகரும் பாதகாதிபதி சந்திர திசையில் ஏழரை சனியை கடந்துகொண்டிருக்கிறார். ஆனால் 3 ஆவது ஜாதகரை போல கடுமையை அனுபவிக்கவில்லை. காரணம் திசா நாதன் சந்திரன் நவாம்சத்தில் உச்சம்டையவில்லை என்பதே. ராசி கிரகத்தின் செயல்படும் நிலையை நவாம்சம் தெளிவாகக்காட்டும்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

1 comment:

  1. which planetary combination is responsible for cancer?

    ReplyDelete