Monday 3 February 2020

குறுக்கு வழியில் அரசு வேலையா?


குறுக்கு வழியில் அரசு வேலை வாய்ப்புகளை அடைந்தவர்களும் அடைய முயற்சித்தவர்களும் இன்று படும் பாடு அனைவரும் அறிந்ததுதான். திறமை உள்ளவன் தனது கல்வியும் திறமையையுமே தனது வாழ்க்கைக்கான முதலீடாக பயன்படுத்துகிறான். திறமை இல்லாதவன்தான் தான் சார்ந்த ஜாதி , மதம், மொழி, இனம் என்று பாகுபாட்டிற்குள் செல்கிறான். இவற்றையும் மீறி இத்தகையோர்தான் தங்கள் இலக்கை அடைய குறுக்கு வழியில் முயற்சி செய்கிறார்கள். இதனால் நேர்மையாக தனது கல்வியையும் திறமையையும் தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் சாமான்யன் விரக்தியடைகிறான். இந்தகைய விஷ வித்துக்கள் மட்டுமல்ல இவர்களின் பின்னணியில் உள்ளோரும் அகற்றப்படவேண்டியவர்கள். இப்படிப்பட்டோரின் குறுக்கு வழி முயற்சிகளை ஜோதிட ரீதியாக அலசுவதே இப்பதிவின் நோக்கம்.


கிரகங்களில் சுக்கிரனே லஞ்சத்திற்கு காரக கிரகமாகிறது. தராசு ராசிக்குரிய சுக்கிரன் நேர்மையை எண்ணினாலும் குரு பார்வையையோ அல்லது நீதிமான் சுபச்சனியின் பார்வையையோ பெறாது பாதிக்கப்பட்ட சனி உள்ளிட்ட பாவ கிரகங்களின் தொடர்பு சுக்கிரனுக்கு ஏற்படும்போதும் தீய ஆதிபத்தியம் பெற்றாலும் சுக்கிரன் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் மன நிலையை ஏற்படுத்துவார்.  எனது கணிப்பின் துலாம் ராசியை தமிழகதிற்கு உரிய ராசியாக நான் மதிப்பிடுகிறேன். சமீபத்தில் தனுசுவில் இருந்து மகரத்திற்கு பெயர்சியான சனியின் 1௦ ஆம் பார்வை தற்போது துலாம் ராசிக்கு  கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுக்கிரனின் மற்றொரு ராசியான ரிஷபத்தை கோட்சார ராகு நெருங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் லஞ்சம் கொடுத்து தனது தகுதிக்கு மீறிய விஷயங்களை அடைய கடந்த காலங்களிலும் தற்போதும் முயற்சி செய்தோர்  தண்டனைக்குள்ளாவார்கள். துலாம் ராசியை எப்போது சனி பார்த்தாலும் கோட்சாரத்தில் இந்த நிலை ஏற்படும். தங்களது ஜாதகத்தில் பாதிக்கப்பட சுக்கிரன் அமையப்பெற்றவர்களும், சுக்கிர சனி சேர்க்கை பெற்றவர்களும், ஏமாற்றத்தை குறிக்கும் சனி புதன் சேர்க்கை பெற்றவர்களும் தற்போதைய கோட்சாரத்தினால் தண்டனை பெறுவார்.

புதன் இடைத்தரகரை குறிக்கும் காரக கிரகமாகும். பிறப்பு ஜாதகத்தில் புதன் பாதகாதியாகவோ அல்லது புதன் பாதிக்கப்பட்ட அமைப்பிலோ உள்ளவர்களும் இந்த ஏமாற்றுக்காரர்களின் வழியில் விழுந்து தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். தன காரகன் குரு தற்போது தனது நீச்ச ராசியான மகரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். அங்கு சென்று சனியோடு குரு இணையும் போது இந்தகைய குறுக்குவழி ஆசாமிகளின் தோலை உரித்து உலகத்திற்கு சனி காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


மீன லக்ன ஜாதகத்தில் வேலையை குறிக்கும் 6 ஆமதிபதி சூரியன் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி-4 ஆம் பாதத்தில் நிற்கிறது. இதனால் ஜாதகருக்கு அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. லக்னாதிபதி குருவிற்கு பகை கிரகமும்  3 மற்றும் 8 க்கு உரியவருமான சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரமான நிலையில் தனது பகை கிரகமான சூரியனோடு இணைந்து லக்ன பாதகாதிபதியும் இடைத்தரகர்களை குறிக்கும் கிரகமுமான புதனின் சாரத்தில் ரேவதி-2 ல் நிற்கிறார்.     நீதிமான் சனி ராசியில் விரையத்தில் பாதகாதிபதி புதனோடு இணைந்து நிற்பதால் ஜாதகர் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டு தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதியாகிறது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை தன ஸ்தானமான மேஷத்திற்கு பாதக ஸ்தானம் என்பது கவனிக்கத்தக்கது. லக்னாதிபதி குரு வக்கிரமாகி பாதிக்கப்பட்ட நிலையின் பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். தன காரகன் குரு  வக்கிரமாகி பாதக ஸ்தானம் பெற்றதால் ஜாதகருக்கு பாதகம் லக்னாதிபதி என்பதால் ஜாதகரின் தவறான செயலாலும், தன காரகன் என்பதால் தன வகையிலும் ஏற்படும்.  அரசு வகை ஆதாயங்களை குறிக்கும் 5 ஆம் அதிபதி சந்திரன் உச்சமானாலும் தனது 5 ஆவது பாவத்திற்கு பாதகத்தில் உச்சமாகி கேதுவோடு இணைந்துவிட்டதால் இந்த ஜாதகர் அரசு வகை ஆதாயங்களை அடைய தடை உண்டு. சந்திரன் கார்த்திகை – 3 ல் நின்று, கேது சந்திரனின் ரோகிணி – 4 ல் நிற்பதாலும் தடைகளுக்குரிய கேது லக்னதையும் சூரியனையும் தனது 3 ஆவது பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் ஜாதகர் அரசு வகை பயன்களை அடைய முடியாது. 3 ஆமிடத்தில் மனோ காரகன் சந்திரனோடு தொடர்புடைய கேது ஜாதகருக்கு துணிச்சலை மட்டுமே கொடுக்கும். இடத்தரகர்களோடு புதன் நண்பர்களுக்கும் காரக கிரகமாகிறது. இதனால் ஜாதகர் இடைத்தரகர்களாலும் நண்பர்களாலும் பாதிப்படைவார்.

ஜாதகரும் அவரது நண்பர்கள் ஐவரும் கணிசமான தொகையை இடைத்தரகரிடம் கொடுத்துவிட்டு  அரசு வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். அதுவும் புதனைக்  குறிக்கும் 5 என்ற எண்ணிக்கையில் பெரிய 5 எண் கொண்ட தொகையை ஜாதகரம் நண்பர்களும் கொடுத்துள்ளனர்.  ஜாதகருக்கு ராகு திசை நடக்கிறது. ராகு 9 ஆவது பாவத்தில் பாதகாதிபதி புதனின் கேட்டை – 2 ல் நின்று திசை நடத்துகிறது. ராகு ஜீவன பாவமான 1௦ க்கு விரையத்தில் இருந்து திசை நடத்துவதால் ஜாதகருக்கு ஜீவனம் தொடர்பான வகையில் விரையங்களும், புதனின் சாரத்தில் நிற்பதால் நண்பர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமும்  அவ்விரையம் ஏற்படவேண்டும். ஜாதகர் ராகு திசை சனி புக்தியில் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து  இடைத்தரகரிடம் பணம் கொடுத்துள்ளார்.

பாதகாதிபதியை நன்கு ஆராய்ந்தால் ஒருவருக்கு எந்த வகையில் பாதகம் ஏற்படும் என்பதை தெளிவாக அறியலாம். சனி அடித்தட்டு மக்களையும் நேர்மையையும் குறிக்கும் கிரகமாகும். சாமான்ய மனிதர்கள் நேர்மையாக அடைய வேண்டிய பாக்கியங்களை குறுக்கு வழியில் சென்று அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்களை அபகரிக்க முயல்பவர்களுக்கு சனி கடுமையான விளைவுகளை ஜாதகர்களுக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் தருவார் என பல மூல நூல்கள் குறிப்பிடுகின்றன. நான் அப்படி சந்தித்த சில அன்பர்கள் ஜாதகத்தில், சனி அவர்களது இறுதிக்காலத்தில் கடுமையாக செயல்படத்தக்க வகையில் அமைந்திருந்ததையும், அவர்களின் புத்திரர்களின் ஜாதகங்களின் சனி-செவ்வாய் சேர்க்கை இருந்ததையும் காண முடிகிறது. ஒரு அன்பர் அரசுப்பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர். தனது வாழ்க்கைத்துணையை இழந்தவர்.  வசதியாக இருக்கிறார். சர்க்கரை வியாதியில் தவிக்கிறார். ஒரே மகனும் அமெரிக்காவில் சென்று தங்கிவிட்ட நிலையில் தனது சொத்துக்களை யாருக்காக பாதுகாக்கிறோம் எனத்  தெரியாமல் உறவுகளையும் நம்பாமல் தனிமையில் மன உழைச்சலில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார். 

எச்சரிக்கை சனி நேர்மை. நேர்மையானவர்களுக்கு செல்லவேண்டிய பாக்கியங்களை தடுத்து குறுக்கு வழியில் அடைபவர்களை சனி காலம் பார்த்து தண்டிப்பது உறுதி. சனி கொடுக்கும்போதும் சரி, தண்டிக்கும்போதும் சரி யாரும் அதை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501.

No comments:

Post a Comment